Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 51

வகுப்பு-50  நாள்-5-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

இறைவனிடம் பக்தி செய்வது எப்படி?

 

ஸ்ரீகிருஷ்ணர்  நான்கு பாதைகள் கூறுகிறார்

-

1.ஞானத்தை பயன்படுத்தி மனத்தை இறைவனிடம் வை. இறைவனைத்தவிர மற்றவற்றை தவிரத்துவிடு(ஞானம்)

2.எப்போதும் இறைவனைக்குறித்து சித்துத்துக்கொண்டே இரு(தியானம்)

3.இறைவனுக்காக வேலை செய்.(கர்மம்)

4.இறைவனிடம் சரணடைந்து வாழ்.(தியாகம்)

 

மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய।

நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஷய:॥ 12.8 ॥

 

12.8 என்னிடத்தே மனதை நிறுத்தி வை. என்னிடத்து புத்தியை செலுத்து. பின்பு என்னிடத்தே வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை

-

அதசித்தம் ஸமாதாதும் ந ஷக்நோஷி மயி ஸ்திரம்।

அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநம்ஜய॥ 12.9 ॥

 

12.9 தனஞ்ஜயா, இனி சித்தத்தை என்னிடத்தில் உறுதியாக நிலைநிறுத்துவதற்கு இயலாவிட்டால், அப்பொழுது அப்பியாச யோகத்தால் (மனதை இறைவனிடம் வைப்பதற்கு தினமும் ஒழுங்குமுறையுடன் பயிற்சி செய்வது) என்னை அடைய விருப்பம்கொள்

-

அப்யாஸே அப்யஸமர்தோ அஸி மத்கர்மபரமோ பவ।

மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி॥ 12.10 ॥

 

12.10 அப்பியாசயோகத்தில் உனக்கு திறமை இல்லாவிட்டால், எனக்காக மேலான கர்மத்தை செய்பவனாக இரு. எனக்காக கர்மத்தை செய்வதாலும் சித்தியை (வெற்றியை) அடைவாய்

-

அதைததப்யஷக்தோ அஸி கர்தும் மத்யோகமாஷ்ரித:।

ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந்॥ 12.11 ॥

 

12.11 இனி. இதைச் செய்வதற்கும் சக்தியற்றிருந்தால் பிறகு என்னிடம் சரணடைந்து தன்னடக்கம் பயில்பவனாய் எல்லா கர்ம பலனை தியாகம் செய்

-

1.ஞானத்தின் மூலம் இறைவனை வழிபடுதல்

-

இறைவன் எங்கும் நிறைந்தவர்,ஆதி அந்தம் இல்லாதவர்,சர்வசக்தி வாய்ந்தவர்,அனைத்து உயிர்களுமாக ஆகியிருப்பவர் என்பதையெல்லாம் உரியமுறையில் படித்து.ஆராய்ந்து முற்றிலும் தெரிந்துகொண்டபின்

புத்தியை இறைவனிடம் வைத்து. இறைவனைத்தவிர மற்ற எண்ணங்களை எல்லாம் விலக்கவேண்டும்.

இதற்கு ஞானம் கலந்த பக்தி என்று பெயர்.இது ஞானி இறைவனை வழிபடும் நிலை

-

2.தியானத்தின் மூலம் இறைவனை வழிபடுதல்

-

இறைவனை மனத்தில் எப்போதும் நிறுத்துவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு எண்ணையை ஊற்றும்போது எப்படி இடைவெளி இல்லாமல் தொடர்ந்து விழுகிறதோ.அதேபோல எப்போதும் இறைவனைக்குறித்து தியானித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு நீண்டநாள் பயிற்சி அவசியம்.

-

3.கர்மத்தின் மூலம் இறைவனை வழிபடுதல்

-

மனிதர்களுக்கு செய்யும் தொண்டு,இறைவனுக்கு செய்யும் தொண்டாக நினைத்து சேவை செய்யலாம். கோவில்.குளங்களை சுத்தப்படுத்தலாம். பக்தர்களுக்கு உணவு வழங்கலாம். எல்லா செயலையும் இறைவனுடன் இணைத்து இறைவனுக்காக செயல்புரிய வேண்டும்.அப்படிசெய்தால் எப்போதும் இறை நினைவு இருக்கும்.

-

4.தியாகத்தின் மூலம் இறைவனை வழிபடுதல்.

-

முற்றிலும் இறைவனை சரணடைந்துவிட வேண்டும்.எல்லா செயலின் பலனையும் துறந்துவிட வேண்டும்.

எவ்வளவு துன்பம் வந்தாலும் அவைகள் அனைத்தும் இறைவனிடமிருந்து வருகின்றன என்ற எண்ணத்தில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் முற்றிறும் சரணடைந்துவிட வேண்டும். பூனைக்குட்டி முற்றிலும் தாய்பூனையை நம்பி இருக்கிறது. சில நேரம் உயரமான இடத்தில் கொண்டு வைக்கும். சிலநேரம் இருட்டான இடத்தில் மறைத்து வைக்கும்.

குட்டிப்பூனை அந்த இடத்தில் அப்படியே இருக்கும். வேறு இடத்திற்கு செல்லவே செல்லாது. மியாவ்,மியாவ் என்று கத்த மட்டுமே செய்யும்.

அதேபோல வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அதைப்பற்றி இறைவனிடம் முறையிடக்கூடாது. இறைவனுக்கு தெரியாததா? இறைவனின் விரும்பம் இல்லாமல் இவைகள் வருமா? எனவே முற்றிலும் சரணடைந்துவிட வேண்டும்.

தன்னிடம் உள்ள அனைத்தும் பறிபோனாலும், உண்பதற்கு உணவு இல்லாவிட்டாலும், தங்கியிருப்பதற்கு இடம் இல்லாவிட்டாலும்.அதைக்குறித்து இறைவனிடம் முறையிடக்கூடாது. இறைவனுக்கு தெரியாமல் எதுவும் நடக்குமா? தனக்கு எது கொடுக்க வேண்டும்,தன்னிடமுள்ள எதை எடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியாதா?

எனவே எதைக்குறித்தும் இறைவனிடம் முறையிடக்கூடாது. எல்லாம் அவனுக்கு தெரிந்தே நடக்கின்றன. அவனது விருப்பப்பட்டியே நடக்கின்றன.

தான் அன்பாக வளர்த்த குழந்தை இறந்துவிட்டதா? அழக்கூடாது. இறைவனின் விருப்பப்படி இது நடந்தது.

கடுமையான நோய் தாக்கி மரணவேதனையை அனுபவிக்க நேர்ந்தாலும். எதையும் முறையிடக்கூடாது.

கடும் பசியுடன் ஒரு புலி எதிரே வந்து நிற்கிறதா? உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் செய்யக்கூடாது.

இறைவனுக்கு தெரியாததா? அவனது விருப்பம் இன்றி எதாவது நடக்குமா?

முழுமனதோடு தன் உயிரை தியாகம் செய்யவும் தாயாராக இருக்க வேண்டும்.

இந்த நிலைதான் சரணாகதி நிலை.

-

ஷ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஷிஷ்யதே।

த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாம்திரநந்தரம்॥ 12.12 ॥

 

12.12 அப்பியாசத்தை காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் விஷேசமானது, தியானத்தைவிட  உயர்ந்தது கர்மபலனை தியாகம் செய்வது. தியாகத்திலிருந்து விரைவில் சாந்தி உண்டாகிறது

-

இதில் நான்கு படிக்கட்டுகள் உள்ளன.

1.தொடர்ந்து சிந்தித்தல்

2.ஞானம்

3.தியானம்

4.தியாகம்

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இறைவனைக்குறித்து தொடரந்து சிந்திக்க வேண்டும்

இறைவனைப்பற்றி தொடர்ந்து நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கே ஞானம் வரும்.

புத்தங்களை படிப்பதால் ஞானம் வராது. இடைவிடாமல் இறைவனை சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஞானம் வந்தபிறகே தியானம் வரும்.

இறைவனைப்பற்றி எதுவும் தெரியாமல் எப்படி தியானம் செய்வது?

ஏதாவது ஒரு உருவத்தை தொடர்ந்து நினைத்துக்கொண்டிருப்பது தியானம் என்று சிலர் நினைக்கிறார்கள்.அது தவறு.

இறைவனின் இயல்புகள் என்ன என்பதைக்குறித்து தெரியாமல் தியானிக்க முடியாது.

ஞானம் உள்ளவர்களால் மட்டுமே எப்போதும் தியானத்தில் ஆழ்நிருக்க முடியும். சிலருக்கு பிறவியிலிருந்தே தியானம் கைக்கூடியிருக்கும். இதற்கு காரணம் முந்தைய பிறவியில் ஞானத்தை பெற்றிருப்பார்கள்.

தியானத்தில் மூழ்கி இறைக்காட்சி பெற்றவர்களுக்கே சரணாகதி என்பது கைக்கூடுகிறது.

சாதாரணமனிதர்களுக்கு சரணாகதி ஏற்படாது.

தன் உயிரைக்கூட துச்சமாக மதிக்கும் இயல்பு யாருக்கு வரும்?

ஏற்கனவே இறைக்காட்சி பெற்றவர்களுக்கே வரும்.

எனவே சரணாகதி என்பது எல்லாவற்றிலும் உயர்ந்த படி.


No comments:

Post a Comment