Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 46

வகுப்பு-46  நாள்-28-2-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

நான்குவிதமான வழிபாடுகளைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். 9.25

-

பித்ருக்களை வழிபடுபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்தில் இறந்தவர்களை புதைப்பது வழக்கம்.

அவ்வாறு புதைக்கப்படும் இடங்களைச்சுற்றி இறந்தவர்களின் ஆவி அலைந்துகொண்டிருக்கும் என்று மக்கள் நம்பினார்கள்.

சிலர் இறந்த உடலுடனேயே அந்த ஆவி தூங்கிக்கொண்டிருக்கும் என்று நம்பினார்கள்.

-

மனிதன் சமவெளியை நோக்கி வந்த காலத்தில் இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாக புதைத்தார்கள்.நினைவுச்சின்னங்களை எழுப்பினார்கள். அவ்வப்போது அவர்கள் விரும்பும் உணவுகளை படைத்தார்கள்.

ஆரியர் கலாச்சாரம் விரிவடைய ஆரம்பித்த காலத்தில், இறந்துபோன முன்னோர்கள் இந்த உலகத்தில் தங்கி இருக்கக்கூடாது. மேல் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள்.

எனவே அவர்களது உடலை எரித்தார்கள்.உடல் இருந்தால்தானே பற்று ஏற்படும்.அதை எரித்துவிடுவோம் என்று முடிவு செய்தார்கள்.

எரியூட்டப்பட்ட பிறகு அந்த ஆவி பூமியைவிட சற்று உயர்ந்த உலகத்தில் சென்று இளைப்பாறும் என்று நம்பினார்கள்.

அந்த உலகத்திற்கு பித்ருலோகம் அல்லது முன்னோர்கள் வாழும் உலகம் என்று பெயர்.

சில காலம் அங்கே வசித்துவிட்டு  மறுபடியும் தங்கள் வீடுகளில் பிறப்பெடுப்பார்கள்.

 

-

பூமியில் ஒரு ஆண்டு என்பது பித்ருலோகத்தில் ஒரு நாள்.

இங்கே வருடம் ஒருமுறை முன்னோர்களை நினைத்து,அவர்கள் விரும்பும் உணவுகளைப் படைத்து, பித்ரு தர்ப்பணம் செய்தால்.பித்ருக்கள் தினசரி உணவு உண்பதற்கு சமம்.

ஆனால் எல்லோரும் பித்ருலோகம் செல்வதில்லை.

1. பித்ருலோகம் என்ற ஒன்று இருப்பதை நம்பவேண்டும்.இந்த உலக வாழ்க்கை முடிந்தபிறகு பித்ருலோகம் செல்வோம் என்ற நம்பிக்கை வாழ்க்கை முழுவதும் எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

2.வேதத்தில் கூறப்பட்டுள்ள கடமைகளை வாழ்நாள் முழுவதும் செய்திருக்க வேண்டும்.

3.பித்ருலோகம் செல்வதற்குரிய புண்ணியபலன் இருக்க வேண்டும்.

4.பித்ருலோகம் என்ற ஒன்று இருப்பதாக நாம் மட்டும் நம்பினால் போதாது நம்மைச்சுற்றி இருப்பவர்களும் நம்பவேண்டும்.

சில பித்ருக்கள் காகமாக வந்து தங்கள் வீடுகளில் உள்ள உணவை உண்பதாக கூறுகிறார்கள்.

ஒருவேளை பித்ருலோகம் செல்லும் அளவுக்கு புண்ணியம் செய்யாதவர்கள் காகமாகப் பிறந்து அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கலாம்

 

ஸ்ரீகிருஷ்ணரது காலத்தில் மக்கள் பித்ருலோகத்தை நம்பினார்கள்.

ஆனால் தற்காலத்தில் பலரும் இதை நம்புவதில்லை.

-

மேல் உலகங்கள் ஏழு இருக்கின்றன.

இவைகள் அனைத்தும் சக்திமிக்க ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை.

பலர் சேர்ந்து அப்படி ஒன்று இருப்பதாக தீவிரமாக நம்பினால் அப்படிப்பட்ட உலகம் நீடித்து நிற்கும்.

ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் பித்ருலோகம் என்ற ஒன்று இருப்பதாக நினைத்து,அதற்குரிய கர்மங்களைச்செய்து வரும்வரை பித்ருலோகம் நிலைத்து நிற்கும். ஒருவேளை அந்த நாட்டில் உள்ளவர்கள் அனைவரும் மதம் மாறிவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது பித்ரு கர்மங்களை யாரும் செய்வதில்லை என்பதால் படிப்படியாக பித்ருலோகம் அழிந்துவிடும்.

 

இதே கதிதான் பூலோகத்திற்கும்.

பூலோகம்(பூமி) நீண்டநாட்கள் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் பூலோகத்தை காப்பாற்றினால் மட்டுமே அது நீடித்து நிற்கும். பூமியின்மீது எந்தவித அக்கரையும் இல்லாமல் அதற்கு ஊறுவிளைவிக்கும் நடவடிக்கைகளைச் செய்தால் பூமி அழிந்துவிடும்.

பூமியில் வாழும் அனைத்து மக்களும் ஒருமித்த மனத்துடன் பூலோகத்தின்மீது அன்பு செலுத்தினால் அதன் ஆயுள்கூடும்.

-

இனி அடுத்த வழிபாடு பற்றி அடுத்த வகுப்பில் பார்க்கலாம்...


No comments:

Post a Comment