Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 52

வகுப்பு-52  நாள்-9-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

நமது இந்துமதத்தில் இறைவனைப்பற்றிய மூன்று முக்கிய தத்துவங்கள் இருக்கின்றன.

-

1.அத்வைதம்

2.விசிஷ்டாத்வைதம்

3.துவைதம்

உபநிடதங்களில் இவைகள் தனித்தனியாக விவாதிக்கப்படவில்லை.பிற்காலத்தில் வந்தவர்கள் தனித்தனியாக பிரித்து விவாதித்திருக்கிறார்.

இந்த தத்துவங்களை படித்து புரிந்துகொள்வதால் மனத்தில் உள்ள சந்தேகங்கள் அகல்கின்றன. சந்தேகங்கள் அகன்றால் இறைக்காட்சி கிடைக்கிறது.

ஞானமார்க்கத்தில் செல்லும் ஒருவர் இவைகளைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.

 

அர்ஜுனன் போர் செய்ய விரும்பவில்லை.அனைத்தையும் விட்டுவிட்டு சந்நியாசியாக செல்லப்போவதாக கூறுகிறான்.

கடமையைச் செய்யாமல் அதைவிட்டு விலகுவது பெரும் பாவம் என்றும். அதை எப்படி பற்றில்லாமல் செய்ய வேண்டும் என்றும் உபதேசித்தார்.அத்துடன்

சந்நியாசிகள் பின்பற்றும் ஞான மார்க்கத்தைப்பற்றியும் விவரித்துக்கொண்டிருக்கிறார்

-

பிரம்மம்-பிரகிருதி என்று இரண்டு தத்துவங்கள் உள்ளன.

தத்துவம் என்றால் தத்+துவம்=அது நீயே என்று அர்த்தம்.

அதாவது பிரம்மமும் பிரகிருதியுமாக நீயே இருக்கிறாய்

இந்த இரண்டும் தனித்தனியானவை அல்ல.ஒன்றாக சேர்ந்திருப்பது

இதை விளக்குவதற்காக தனித்தனியாக கூறவேண்டியிருக்கிறது.

-

பிரகிருதி என்பது என்ன?

விரிவடைதல் மற்றும் ஒடுங்குதல்

விதைக்குள்ளே மரம் ஒடுங்கியிருக்கிறது. உரிய முறையில் பாதுகாத்தால் பலகோடி ஆண்டுகளுக்கு பிறகு கூட அந்த விதையிலிருந்து மரம் முளைவிட்டு வெளிப்படும்.காலத்தை தனக்குள்ளே ஒடுக்கிக்கொண்டு நிற்கும் விதைபோல

இந்த பிரபஞ்சம் முழுவதும் தனக்குள்ளே ஒடுங்கி விதைபோல ஆகிறது. அதற்கு ஒடுக்கம் அல்லது அவ்யக்தம் என்று பெயர்

அந்த விதை படிப்படியாக வெளிப்பட்டு  மரமாக வளர்ந்து, பூத்து.காய்த்து. மறுபடியும் விதைகளை உருவாக்குகிறது. இப்படி இந்த பிரபஞ்சத்தின் விதை விரிவடைந்து பல சூரியர்களையும்,சந்திரர்களையும்,கிரகங்களையும், அனைத்தையும் வெளிப்படுத்துகிறது.  காலம்,இடம்,காரணம், உலகத்தை ஆள்பவர்,தேவர்கள்,மனிதர்கள் போன்ற அனைத்தும் வெளிப்படுகிறது. இதற்கு விரிவடைதல் அல்லது பிரகிருதி என்று பெயர்

-

பிரபஞ்சத்தின் ஒடுக்க நிலையில் பிரம்மம் மட்டும் இருந்தது

விரிவடைந்த நிலையில் பிரம்மம் அனைத்துமாக ஆகியிருக்கிறது.

-

மனிதன் தற்போது இருக்கும் விரிவடைந்த நிலையிலிருந்து மீண்டும் ஒடுக்க நிலையை நோக்கி செல்லும்போது பிரம்மஞானம் கிடைக்கிறது. முக்தி கிடைக்கிறது. இந்த பயணத்தில் மூன்று படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.முதல்படி துவைதம். இரண்டாவதுபடி விசிஷ்டாத்வைதம். மூன்றாவதுபடி அத்வைதம்

-

அத்வைதம்

-

ஆதியில் இந்த உலகம் பிரகிருதியில் ஒடுங்கியிருந்தது.உயிர்கள் அனைத்தும் ஒடுங்கியிருந்தன.

பிரம்மத்தைத்தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

பிரம்மத்தை அடையும் ஒருவர் இந்த உலகத்தையோ,உலகத்தை சார்ந்த எதையும் காண்பதில்லை,உணர்வதில்லை.ஏனென்றால் அவைகள் அனைத்தும் ஒடுங்கிவிடும்.

ஒருவருக்கு அத்வைத அனுபவம் கிடைக்கும்போது பிரம்மத்தைத்தவிர வேறு எதுவும் தெரியாது.

-

விசிஷ்டாத்வைதம்=விஷேச அத்வைதம்

அந்த பிரம்மம் மற்றும் பிரகிருதியும் சேர்ந்து பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாக விரிவடைகிறது அனைத்துமாக ஆகிறது.உயிர்களாகவும்,உலகமாகவும்,அசைவனவாகவும்,அசையாததாகவும் ஆகியிருக்கிறது.

அத்துடன் ஒவ்வொரு உடலையும் ஆள்பவனாக ஒவ்வொருவரின் ஹிருதயத்திலும் பிரம்மம் இருக்கிறது.

 

இவ்வாறு உருவான பிரபஞ்சத்தை படைத்து,காத்து,அழிக்கும் தன்மை ஒன்று எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஒவ்வொரு உயிரும் படைக்கிறது, ஒவ்வொரு உயிரின் தாய்,தந்தை காக்கிறது.ஒவ்வொரு இடத்திலும் அழிவு நடந்துகொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் அங்கே ஒவ்வொரு நொடியும் படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது.

படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் இறைத்தன்மை என்று அழைக்கலாம்.

 

எண்ணற்ற தாய் இருக்கலாம்.ஆனால் தாய்மை என்ற பண்பு ஒன்றுதான் இருக்க முடியும்.

தாய்மை என்ற பண்புக்கு உருவம் இல்லை.ஆனால் அந்த பண்பு வெளிப்படும் தாய்க்கு உருவம் உண்டு.

தாய் இல்லாவிட்டால் தாய்மை என்ற பண்பு இருக்காது.

அதேபோல இறைத்தன்மை என்பது தனியாக இருப்பதில்லை.அது சிலரிடம் வெளிப்படுகிறது..

யாரிடம் அது வெளிப்படுகிறதோ அவர்களுக்கு உருவம் உண்டு.

இறைத்தன்மைக்கு உருவம் இல்லை.ஆனால் அது வெளிப்படும் நபருக்கு உருவம் உண்டு.

 

பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதலில் ஒருவரிடம் இறைத்தன்மை(ஈஸ்வர ஸ்வபாவம்) வெளிப்பட்டது.அவருக்கு உருவம் இருந்தது.

அவர் ஆணாகவும் இல்லை.பெண்ணாகவும் இல்லை.இரண்டையும் தன்னுள் அடக்கியவராக இருந்தார்.அவர் முழுமையாக இருந்தார்.

-

துவைதம்

-

முழுமையாக இருந்த இறைவன் தன்னை ஆணாகவும், பெண்ணாகவும் இரண்டாக பிரித்துக்கொண்டார்.

அவர்களுக்கு தனித்தனியாக குணங்கள் இருந்தன.அவர்கள் வாழ்வதற்கு ஒரு உலகம் இருந்தது.

-

மனிதன் முதலில் இறைவனை ஆணாகவும்,பெண்ணாகவும் தனித்தனியாக காண்கிறான்.அவர்களுடன் பேசுகிறான்.

பின்பு இருவர் இல்லை. இரண்டுபேரும் சேர்ந்து ஒருவரே என்பதைக் காண்கிறான்.அத்துடன் இறைவனே அனைத்துமாக இருப்பதையும் காண்கிறான்.

முடிவில் தானும் இறைவனும் ஒன்றே என்ற அத்வைத அனுபவம் ஏற்படுகிறது

-

ஸ்ரீகிருஷ்ணர் இந்த மூன்று தத்துவங்களையும் பற்றி பேசுகிறார்.அவைகளை தனித்தனியாக பிரித்து பேசாமல் சேர்த்து பேசுகிறார்

-

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஷநம்।

ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோ அந்யதா॥ 13.12 ॥

 

13.12 அறியத்தக்கது எது? எதை அறிந்து சாகாத்தன்மையை அடைகிறானோ அதை சொல்கிறேன்.

அது ஆதியில்லாதது,மேலானது,அது பிரம்மம். உள்ளது என்றும் சொல்லமுடியாது,இல்லை என்றும் சொல்லமுடியாதது.

-

பிரம்மத்தை அடைபவன் சாகாத்தன்மையை அடைகிறான்.முக்தி அடைகிறான். பிரம்மத்துடன் ஒன்றாகிறான்.

பிரம்மத்திற்கு துவக்கம் இல்லை.முடிவும் இல்லை.

அது உள்ளது என்றோ.இல்லாதது என்றோ ஏன் சொல்ல முடியாது?

ஏனென்றால் பிரம்மத்தை அடையும் ஒருவனது மனம் முற்றிலும் அழிந்துவிடுகிறது.

மனம் என்ற ஒன்று இருந்தால்தான் அதில் கண்டவற்றைப்பற்றிய பதிவுகளை வைக்க முடியும்.

மனமே இல்லாத நிலையில் பிரம்மத்தைப்பற்றிய செய்தியை எங்கே பதியவைப்பது?

எனவே பிரம்மத்தை கண்டவர்களால் அதைப்பற்றி எதுவும் பேச முடிவதில்லை.

-

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா அம்ருதமஷ்நுதே।

அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே॥ 13.13 ॥

 

13.13 அது எங்கும் கை கால்களை உடையது, எங்கும் கண்.தலை.வாய்களை உடையது.

எங்கும் கால்களையுடையது. உலகில் எங்கும் வியாபித்து நிற்கிறது

-

அந்த பிரம்மமும் பிரகிருதியும் இணைந்து கை,கால்களை உடைய உடல்களாக மாறுகிறது.உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தின் கை.கால்,தலை,வாய் போன்ற அனைத்து உறுப்புகளும் பிரம்மமும் பிரகிருதியும் இணைந்து உருவானவை.

அந்த உருவங்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. கண்ணுக்கு தெரியும் உருவங்களாகவும், கண்ணுக்குத்தெரியாத உருவங்களாகவும் இருக்கிறது.

எங்கெல்லாம் உயிர்கள் இருக்கின்றனவோ அவைகள் அனைத்தும் பிரம்மத்திலிருந்து உருவானவை.

-

ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ அக்ஷிஷிரோமுகம்।

ஸர்வத: ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி॥ 13.14 ॥

 

13.14 எல்லா இந்திரியங்கள் மூலமாகவும் ஒளிர்வது, இந்திரியங்கள் எதுவும் இல்லாதது. பற்றற்றது, அனைத்தையும் தாங்குவது, குணமற்றது,குணங்களை அனுபவிப்பது

-

உருவங்களாக ஆனது மட்டுமல்ல கண்,காது,மூக்கு போன்ற இந்திரியங்கள் மூலமாக இயங்கிக்கொண்டிருப்பதும் அதுதான்.

 கண் மூலமாக காண்பது யார்? பிரம்மம்

காது மூலமாக கேட்பது யார்? பிரம்மம்.

நாக்கு மூலமாக சுவைப்பது யார்? பிரம்மம்

மூக்கு மூலமாக நுகர்வது யார்? பிரம்மம்

தோல் மூலமாக உணர்வது யார்? பிரம்மம்.

 

இவ்வாறு இந்தியங்கள் மூலமாக பிரம்மம் இயங்கினாலும் அதற்கு இந்திரியங்கள் இல்லை.

 

உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் உடல் தாங்கியிருக்கிறது,உயிர்களை பூமி தாங்கி நிற்கிறது,பூமியை சூரிய மண்டலம் தாங்கியிருக்கிறது. சூரிய மண்டலங்களை நட்சத்திர மண்டலங்கள் தாங்கியிருக்கின்றன, நட்சத்திர மண்டலங்களை அதைவிட உயர்ந்தது தாங்கியிருக்கிறது.இவ்வாறு அனைத்தையும் தாங்கியிருப்பது பிரம்மம்.

ஆனாலும் அது அதிலிருந்து தனித்திருக்கிறது.

 

சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களும் பிரம்மம் மற்றும் பிரகிருதியின் சேர்க்கையால் உருவானது.

இந்த மூன்று குணங்களும் கலந்து கவர்தல்,விலக்குதல்,சமன்படுத்துதல்

விருப்பு.வெறுப்பு,அன்பு

போன்ற பல குணங்களாக பரிணமிக்கிறது.

இவ்வாறு பல குணங்களாக அது பரிணமித்தாலும், குணங்கள் அற்றதாகவும் இருக்கிறது

-

ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்।

அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச॥ 13.15 ॥

 

13.15 அது உலகில் உள்ள அனைத்திற்கும் உள்ளும் புறமும் அசையாததும்,அசைவற்றதும் ஆகும்.

சூட்சுமமாக இருப்பதால் அறியமுடியாதது, (அது) தூரத்தில் இருப்பது,(அது) அருகில் இருப்பது

-

பிரம்மம் உலகில் உள்ள அனைத்து அசையக்கூடிய பொருட்களாகவும், அசையாத பொருட்களாகவும் ஆகியிருக்கிறது.

அது மட்டுமல்ல அசையும் மற்றும் அசையாத பொருட்களுக்கு உள்ளே சூட்சுமமாக இயங்கிக்கொண்டிருக்கும் அணுக்களாக இருப்பதும் பிரம்மம்தான்

கோடானகோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் பல கிரகங்களாக இருப்பதும் பிரம்மம்தான். நமக்கு மிக இருகில் இருக்கும் பொருட்களாக இருப்பதும் பிரம்மம்தான்.

-

அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்।

பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச॥ 13.17 ॥

 

13.17 ஒளிக்கெல்லாம் ஒளியாகிய அது இருளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படுகிறது.

ஞானமாகவும்(அறிவு), ஞேயமாகவும் (அறியப்படும்பொருள்) அறிவினால் அடையப்படுவதுமாகிய அது எல்லோருடைய ஹிருதயத்தில் நிலைத்திருக்கிறது.

-

ஒளிக்கெல்லாம் ஒளி எது? பிரம்மம். அங்கே இருள் என்பதே இல்லை.

பிரம்மத்தில் எல்லையற்ற ஒளி வெளிப்படுகிறது.அதற்கு ஒரு முடிவே இல்லை.

அதுவே பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களாகவும், சூரியர்களாகவும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

-

அறிவு எங்கிருந்து வருகிறது? பிரம்மத்திலிருந்து

அறிவை அறிபவர் யார்? பிரம்மம்

அறிவினால் எதை அடைகிறோம்? பிரம்மத்தை.

அது மனிதர்களிடம் எங்கே இருக்கிறது? ஹிருதயத்தில்

-

-

மேலே கூறப்பட்டுள்ள தத்துவத்தை தங்கள் வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக யார் அறிகிறார்களோ அவர்கள் சாகாத்தன்மையை அடைகிறார்கள்.

வெறுமனே படிப்பதால் அந்த நிலையை அடைய முடியாது.

பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகிறான்.

அந்த நிலையிலிருந்து கீழே வரும்போது தானே உலகமாகவும்.உயிர்களாகவும்.அனைத்துமாகவும் ஆகியிருப்பதை அனுபவத்தில் உணர்கிறான்.

ஸ்ரீகிருஷ்ணர் அதேபோல அனுபவத்தில் உணர்ந்தவர்.

அவரே பிரம்மமாகவும் ஆகியிருக்கிறார்

அவரே உலகமாகவும்,உலகத்திலுள்ள உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்

அவரே கிருஷ்ணர் என்ற தனி உருவமாகவும்,அர்ஜுனனுக்கு நண்பனாகவும் இருக்கிறார்.

-

கிருஷ்ணர் என்ற உருவத்தில் பிரம்மம் இருக்கும் நிலை துவைதம்

பிரம்மமே உயிர்களாகவும் உலகமாகவும் இருக்கின்ற நிலை விசிஷ்டாத்வைதம்

உலகம் முழுவதும் பிரகிருதியில் ஒடுங்கிய நிலையில் பிரம்மமாக இருக்கின்ற நிலை அத்வைதம்


No comments:

Post a Comment