Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-32

வகுப்பு-32  நாள்-11-2-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

யோக மார்க்கம், சந்நியாச மார்க்கம் என்று இரண்டு பாதைகளைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் விவரித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த பாதைகளில் சென்று முக்தி பெறுவதற்கு சிலருக்கு ஒரு பிறவி ஆகலாம்.சிலருக்கு பல பிறவிகள் ஆகலாம்.

ஒருவேளை இந்த பாதையில் செல்லும் ஒருவர் இலக்கை அடையாமல் பாதியில் இறந்துவிட்டால் என்னவாகும்?

அடுத்த பிறவியில் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டுமா?

முற்பிறவியில் செய்த தவம் நியாபகத்தில் இருக்குமா?

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஷாஷ்வதீ: ஸமா:।

ஷுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே॥ 6.41 ॥

 

6.41 யோகத்திலிருந்து வழுவியவன் புண்ணியம் செய்தவர்களுடைய உலகங்களை அடைந்து நீண்ட வருடங்கள் வாழ்ந்து, நன்னெறியுள்ள, செல்வமுள்ளவர்களுடைய வீட்டில் மீண்டும் பிறக்கிறான்.

-

அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்।

ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஷம்॥ 6.42 ॥

 

6.42 அல்லது ஞானிகளுடைய, யோகிகளுடைய குலத்திலேயே பிறக்கிறான். இதுபோன்ற பிறப்பு எதுவோ, அது  நிச்சயமாக இந்த உலகத்தில் பெறுவதற்கு அரிது

-

தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்।

யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந॥ 6.43 ॥

 

6.43 குருவம்சத்தில் பிறந்தவனே, அந்த பிறவியில் முற்பிறவியில் உண்டான, அந்த யோகத்தை பற்றிய அறிவை திரும்பவும் பெறுகிறான். மேலும் அதைவிடவும் அதிகமாக பூரணநிலையை அடைவதற்காக முயற்சிசெய்கிறான்.

-

பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஷோ அபி ஸ:।

ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஷப்தப்ரஹ்மாதிவர்ததே॥ 6.44 ॥

 

6.44 அவன் முயற்சி செய்யாவிட்டாலும் அந்த பூர்வஜென்ம பழக்கத்தால் (யோகசாதனையை நோக்கி) இழுக்கப்படுகிறான். யோகத்தின் ஆரம்பநிலையில் உள்ளவன்கூட சப்த பிரம்மத்தை (வாக்கை)  கடந்து செல்கிறான்.

-

ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஷுத்தகில்பிஷ:।

அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்॥ 6.45 ॥

 

6.45 ஆனால் ஈடுபாட்டோடு முயற்சிக்கின்ற யோகியானவன், பாபங்களிலிருந்து விடுபட்டு, பல பிறவிகளில் பக்குவமடைந்திருப்பதால் ,பிறகு (இப்பிறவியில்)  மேலான நிலையை அடைகிறான்.

-

இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டே, உலக கடமைகளை செய்துகொண்டே முக்தி அடையும் வழியைக்கூறுகிறது யோக மார்க்கம்.

மனிதன் ஆன்மாவை உணர்வதற்கு பல பிறவிகள் தேவைப்படுகிறது. நமக்கு முன்னால் இருக்கும் கடமைகளை பற்றற்ற மனநிலையில் செய்துகொண்டே சென்றால் மிக விரைவில் ஆன்மாவை உணரலாம்.

ஒரு வேளை இந்த பிறவியில் உணர முடியாவிட்டால்.அடுத்த பிறவியில் உணரலாம்.

அடுத்த பிறவியில் முடியாவிட்டால் அதற்கு அடுத்த பிறவியில் முடியலாம்.பிறவிகளுக்கு கணக்கே இல்லை.மனிதன் செல்லும் வேகத்தைப்பொறுத்து பிறவிகளின் எண்ணிக்கை அமைகிறது.

-

சந்நியாச மார்க்கம் அப்படிப்பட்டது அல்ல.

-

மனித பிறவி கிடைக்க வேண்டுமானால் அதிக புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

-

முதன் முதலில் மனிதப்பிறவி கிடைக்கும் மனிதன் முற்பிறவியில் எப்படி புண்ணியம் செய்திருப்பான்? அதற்கு முன்பு மிருகமாக அல்லவா பிறந்திருப்பான்?

உண்மைதான்.

வீடுகளில் வளர்க்கப்படும் பசு, நாய் போன்ற மிருகங்கள்தான் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்கிறது.

நாம் பசுவுக்கு அதிக நன்மைகள் செய்திருக்கிறோமோ அல்லது பசு நமக்கு அதிக நன்மைகள் செய்திருக்கிறதா என்று யோசித்துப்பார்த்தால் பசுதான் நமக்கு அதிக நன்மைகள் செய்திருக்கும் எனவே அது மனிதனாக பிறக்க தேவையான புண்ணியம் பெறுகிறது.

அதேபோல நன்றியுள்ள பிற உயிரினங்களும்.

விலங்குகளைக்கொன்று உண்ணக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு.

எந்த விலங்கை கொல்கிறோமோ அந்த விலங்கு மனிதனுடைய புண்ணியத்தைப்பெற்று அடுத்த பிறவியில் மனிதனாகப்பிறக்கிறது. விலங்குகளைக்கொல்பவன் அதனுடைய பாவத்தைப்பெற்று மிருகமாகப்பிறக்கிறான்.

-

சந்நியாச மார்க்கத்தில் செல்பவன் உலகத்திலிருந்து விலகி வாழ்கிறான்.எல்லா கர்மங்களையும் துறக்கிறான். பிறரிடமிருந்து உணவை யாசகமாகப்பெற்று உண்கிறான் .

யாரிடமிருந்தெல்லாம் உதவியைப்பெறுகிறானோ அவர்களுக்கெல்லாம் தன்னுடைய புண்ணிய பலனைக்கொடுக்கிறான்.

பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதால் பாவ கர்மங்கள் நீங்கிக்கொண்டே வருகின்றன. பிறரிடமிருந்து உணவைப்பெறுவதால் புண்ணிய பலன் குறைந்துகொண்டே வருகிறது. பாவம்புண்ணியம் இரண்டும் நீங்கியபின் முக்தி கிடைக்கிறது.

ஒருவேளை இந்த லட்சியத்தில் வெற்றி கிடைக்காவிட்டால், அடுத்த பிறவியில் மனிதனாகப்பிறக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனென்றால் மனிதனாகப்பிறக்க ஓரளவு புண்ணிய பலன் வேண்டும். சந்நியாச மார்க்கத்தில் செல்பவர்களிடம் அது இருக்காது.

-

-

எனவே யோக மார்க்கம் என்பது எப்போதும் நன்மை தரக்கூடியது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் யோக மார்க்கத்தை பின்பற்றினால் ,அது அந்த குடும்பத்திற்கு நல்லது.

பலர் யோக மார்க்கத்தை பின்னபற்றினால் அது அந்த நாட்டிற்கு நல்லது.

-

ஒரு காலத்தில்  யோக மார்க்கத்தில் பாரதம் நன்கு முன்னேறியிருந்தது.

அதன் பிறகு சந்நியாச மார்க்கத்தை நோக்கி சென்றது.

இனிவரும் காலத்தில் யோக மார்க்கத்தை நோக்கி செல்லும்.

அதன் பிறகு மீண்டும் சந்நியாச மார்க்கம் முக்கியத்துவம் பெறும்.

இவ்வாறு மாறி மாறி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த உலகத்திற்கு இந்த இரண்டும் தேவைப்படுகிறது.

 

யோக மார்க்கத்தில் செல்லும் ஒருவன் இயற்கையை அடக்கி ஆளும் வல்லமையைப்பெறுகிறான்.

அந்த நிலையை அடைந்த ஒருவன் அவைகளை விட்டுவிட்டு,புண்ணிய பலனை துறந்து முழுத்துறவு நிலையை அடைய வேண்டும்.ஆனால் பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை.

பல்வேறு சக்திகளைப்பெறுவார்கள்.மற்றவர்களை அடக்கி ஆள அவைகளை பயன்படுத்துவார்கள்.

தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொள்வார்கள்.உலகத்தை அழிப்பார்கள்.

 

சந்நியாச மார்க்கம் பிரபலமாகும்போது ஏற்றத்தாழ்வுகள் நீங்குகிறது.

 சக்தி அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆனால் அதில் உள்ள முக்கிய குறைபாடு , நாடு படிப்படியாக ஏழ்மை நிலைக்கு சென்றுவிடும். பிற நாடுகளை எதிர்க்ககூட சக்தி இல்லாமல் அழிவை நோக்கி சென்றுவிடும்.

-

யோக மார்க்கம், சந்நியாச மார்க்கம் இந்த இரண்டையும் ஒரு நாடு ஏற்றுக்கொண்டு. இரண்டிற்கும் தேவையான முக்கியத்துவத்தை கொடுக்குமானால் சிறப்பாக இருக்கும்.


No comments:

Post a Comment