Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 45

வகுப்பு-45  நாள்-27-2-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

நான்குவிதமான வழிபாடுகளைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்றுந்யாந்தி பித்ருவ்ரதா:।

பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோ அபி மாம்॥ 9.25 ॥

 

9.25 தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களை அடைகிறார்கள் (சுவர்க்கம் செல்கிறார்கள்)

பித்ருக்களை வணங்குபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள் (பித்ருக்கள் வாழும் உலகை அடைகிறார்கள்)

பூதங்களை வணங்குபவர்கள்  பூதங்களை போய் சேர்கிறார்கள் (பூதங்கள் இருள் நிறைந்த நரகத்தில் வாழ்கின்றன) என்னை வணங்குபவர்கள் என்னை அடைகிறார்கள் (முக்திபெறுகிறார்கள்)

-

1.பூதங்களை வணங்குபவர்கள்

2.பித்ருக்களை வணங்குபவர்கள்

3.தேவர்களை வணங்குபவர்கள்

4.இறைவனை வணங்குபவர்கள்

-

மனிதன் இறந்தபிறகு அவனது ஆவி என்னவாகிறது?

சிலர்  உயர்ந்த உலகங்களுக்கு செல்கிறார்கள்

சிலர் தாழ்ந்த நிலையை அடைகிறார்கள்.

சிலர் மறுபடி பிறக்கிறார்கள்

சிலர் ஆழந்த தூக்கத்திற்கு சென்றுவிடுகிறார்கள்.

-

தெய்வவழிபாடுகள் எப்படி பரிணாமம் அடைந்தன என்று பார்ப்போம்

---

ஆதிகாலத்தில் மனிதன் காடுகளில் வாழ்ந்தான் என்று ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மனிதனின் இயல்புக்கு ஏற்ப வழிபாட்டு முறைகளும் மாறுகின்றன.

எல்லோரும் இறைவனை வழிபடுகிறார்கள்.

ஆனால் அவர்களின் வழிபாடுகளில் வேறுபாடு உள்ளது.

காடுகளில் வாழும் மனிதன் வேட்டைக்கு செல்வதற்கு முன்பு தங்கள் இன தெய்வத்தை வழிபடுகிறான்.

தன்னோடு சேர்ந்து வேட்டைக்கு வரவேண்டும் என்றும் மிருகங்களை தன் பக்கம் அனுப்பவேண்டும் என்றும் மிருகங்களால் தனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்றும் வேண்டிக்கொள்கிறான்.

அவன் வேட்டையாடி முடித்ததும் மிருகத்தை கொன்று முதல் பாகத்தை அவன் வழிபடும் தெய்வத்திற்கு படைக்கிறான்.

அந்த காட்டுவாசியைப்பொறுத்தவரை அவன் வழிபடும் தெய்வமே உலகத்தில் உயர்ந்தது.

 இந்த உலகம் அனைத்தையும் படைத்தது அந்த தெய்வம்தான். தன்னையும் தங்கள் இனத்தையும் எப்போதும் காத்துவருவதும் அந்த தெய்வம்தான் என்று நம்புகிறான்.

-

இதேபோல இன்னோரு காட்டுவாசி குழுக்களிலும் வழிபாடு நடக்கிறது.

அவர்களும் அதேபோல ஒரு தெய்வத்தை வழிபட்டுவிட்டே எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

அவர்களைப்பொறுத்தவரை அவர்கள் வழிபடும் தெய்வமே உலகத்தில் உயர்ந்தது.

-

இந்த இரண்டு குழுக்களும் என்றாவது ஒருநாள் சண்டையிட நேரும்போது, ஒவ்வொருவரும் தாங்கள் வழிபடும் தெய்வத்தை வணங்கிவிட்டு சண்டையிடச்செல்கிறார்கள். முடிவில் ஏதாவது ஒரு குழு ஜெயிக்கிறது.

அந்த குழுவினர் தோற்றுப்போன குழுவினர் வணங்கிய தெய்வங்களை அடித்து நொறுக்கி, தாங்கள் வழிபடும் தெய்வத்தை அங்கே நிலைநிறுத்துகிறார்கள்.

-

பழைய தெய்வங்கள் அழிக்கப்பட்டு புதிய தெய்வங்கள் நிலைநிறுத்தப்படுகின்றன

 

இவ்வாறு பல்வேறு குழுக்களும் வழிபட்டு வந்த தெய்வம் எது?

-

அந்த இனத்தின் முன்னோர்களையே அவர்கள் தெய்வங்களாக வழிபட்டு வந்தார்கள்.

ஒரு இனத்தின் தலைவன் இறந்துவிட்டால் அவனை வழிபடும் பழக்கம் முற்காலத்திலேயே இருந்திருக்கிறது.

-

காடுகளிலிருந்து மனிதன் சமவெளியை நோக்கி வந்தபோது அவனிடம் சிறிது நாகரீகம் வளர்ந்தது.

அவர்கள் வணங்கிய தெய்வங்களுடனேயே மனிதன் புது இடங்களுக்கு சென்று குடியேறினான்.

மிருகங்களை வேட்டையாடி கொன்று தின்னும் பழக்கம் குறைந்தது.

விவசாயம் செய்ய ஆரம்பித்தான்.

விவசாயம் செய்வதற்கு முன்பு தெய்வத்தை வணங்குவது வழக்கம்.

விவாசாயம் சிறப்பாக நடந்து முடிந்து அறுவடை ஆனபிறகு அந்த தெய்வங்களுக்கு முதலில் உணவு படைத்து மீதியை மற்றவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்த மக்கள் மாமிச உணவுகளை உண்ண விரும்பவில்லை,அதேபோல அவர்கள் வழிபட்ட தெய்வங்கள் மாமிச உணவு உண்ணாதவர்கள்.

 

மக்களை பாதுகாக்க அரசர்கள் உருவானார்கள்.

மிகப்பெரிய ஆளுமை உள்ள அரசன் இறந்தபிறகு அவன் சாமாதியைச்சுற்றி கோவில்கள் கட்டினார்கள்

கோ-வில்= அரசன் இருக்கும் இடம். முற்காலத்தில் அரசன் புதைக்கப்பட்ட இடங்களை ஒட்டி எழுப்பப்பட்ட வழிபாட்டுத்தலங்களை கோவில் என்று அழைத்தார்கள்.

மன்னனையும் அவரது மனைவியைம் மக்கள் தெய்வங்களாக வணங்கி வந்தார்கள்.

-

ஆண்டுகள் ஆக ஆக மக்கள் வழிபடும் தெய்வங்களில் பல படித்தரங்கள் உருவாக ஆரம்பித்தன.

மிருக பலி கேட்கும் தெய்வ வழிபாடுகள் ஒரு பக்கம் நடந்துவந்தன.

விவசாய நிலங்களில் தெய்வ வழிபாடுகள் நடந்து வந்தன.

விவசாயம் தவிர வேறு தொழில்களைசெய்பவர்களும் தங்கள் தொழிலில் முன்னேறுவதற்காக தெய்வங்களை வணங்கி வந்தார்கள்.

உதாரணமாக மீன் பிடிப்பவர்கள் வணங்கும் தெய்வங்கள் இருந்தன. அந்த தெய்வங்களுக்கு மீன் படைக்கப்பட்டது.

நகை வேலை செய்பவர்கள், சிற்பவேலை செய்பவர்கள், கல்வி கற்றுக்கொடுப்பவர்கள்,மண்பாண்டம் செய்பவர்கள், காவல் காப்பவர்கள் என்று ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு தெய்வ வழிபாடு இருந்தது.

-

இந்த வழிபாடுகள் கற்பனையில் உதித்தவை அல்ல.

இந்த தெய்வங்களுக்கு சக்தி இருந்தது.அவைகளை மனிதர்கள் கண்கூடாக கண்டார்கள் எனவேதான் இந்த வழிபாடுகள் தொடர்ந்து நடந்துவந்தன.

உதாரணம் சிலவற்றை பார்ப்போம்

ஒரு முக்கியமாக பொருளை தொலைத்துவிட்டால். இந்த தெய்வங்களிடம் முறையிடுவார்கள்.

அந்த தெய்வத்தில் அருள் பூஜாரிக்கு வருகிறது. அவர் அந்த பொருள் எங்கே இருக்கிறது.அல்லது யாரிடம் இருக்கிறது என்பதை கூறுவார். அந்த பூஜாரி கூறிய படியே அந்த பொருளை மீண்டும் பெறுவார்கள்.

ஒரு மனிதர்மீது தீயஆவி ஒன்று புகுந்துள்ளது. அதை விரட்டவேண்டும் என்றால் அந்த தெய்வத்திடம் முறையிடுவார்கள். அந்த தெய்வத்தின் அருளால் தீயஆவி விரட்டப்படும்.

ஒருவருக்கு குழந்தை பிறக்கவில்லை. அந்த தெய்வத்திடம் முறையிடுவார்கள் சில பரிகாரங்களை அந்த தெய்வம் தெரிவிக்கும். அதன்பிறகு குழந்தை பிறக்கும்.

இப்படி பல நிகழ்வுகள் நடப்பதை இன்றுகூட நாம் காணலாம்.

இதனால்தான் இப்படிப்பட்ட வழிபாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

-

இந்த தெய்வங்கள் எல்லாம்வல்லது எல்லாம் அறிந்தது என்றே பாமர மக்கள் நினைக்கிறார்கள்.

சில நேரங்களில் அவர்களது நம்பிக்கை தகர்ந்துவிடுகிறது.

-

சில நேரங்களில் வேறு மதங்களில் நம்பிக்கை உள்ள அரசன் பெரும் படையை கொண்டுவந்து இந்த கோவில்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி தரை மட்டமாக்கிவிடுகிறான். பூஜாரிகளைக்கொன்றுவிடுகிறான்.

அப்போது இந்த தெய்வங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சில வேளைகளில் கொள்ளைக்கூட்டத்தினர் கோவில்களில் உள்ளவற்றை திருடிச்செல்கிறார்கள்.

 

மக்களை காப்பாற்றுவதாக நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு பெரிய சந்தேகத்தை அது ஏற்படுத்துகிறது.

தன்னையே காப்பாறிக்கொள் முடியவில்லை. தன் கோவிலை காப்பாற்ற முடியவில்லை. தன்னை நம்பியிருந்த பூஜாரியைக்கூட இந்த தெய்வங்கள் காப்பாற்றவில்லை.

அப்படியானால் இந்த தெய்வங்களில் சக்தி இவ்வளவுதானா?

இந்த தெய்வங்களைவிட அந்த அரசனும்,அரச படைகளும் ,கொள்ளையர்களும் மேலானவர்களா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

சிலர் இந்த வழிபாடுகளை விட்டுவிட்டு  சிந்திக்க தொடங்குகிறார்கள்.

-

சிந்திக்கும் மனிதனுக்கு பழைய வழிபாட்டு முறைகள் திருப்தியாக இல்லை.

அவர்கள் இந்த உலக நிகழ்வுகளிலிருந்து சற்று விலகி ஆழ்ந்து தியானத்தில் மூழ்குகிறார்கள்.

தியானத்தின் முடிவில் சில பேருண்மைகள் வெளிப்படுகின்றன.

உண்மையை அறிவதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

மனிதர்கள் அவர்களை சித்தர்கள்,ரிஷிகள்,மகான்கள்,முனிவர்கள்,தீர்க்கதரிசிகள் என்று அழைத்தார்கள்.

-

தாங்கள் கண்ட பேருண்மைகளை மனிதர்களிடம் எடுத்து கூறுவார்கள்.

 சிலர் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பலர் ஏற்றுக்கொள்வதில்லை.

சீடர்கள் உருவாவார்கள்

அந்த உண்மையை அடிப்படையாக வைத்து புதிய பாதை ஒன்று உருவாகிறது.

இறைவனை வழிபடுவதற்கு புதிய முறைகள் உருவாகின்றன.

அந்த மதம் மக்களிடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அந்த மதத்தை தவிர பிற வழிபாட்டு முறைகள் அனைத்தும் தவறு என்று போதிக்கப்படுகிறது.

-

இவ்வாறு பல்வேறு கால கட்டத்தில் தோன்றிய பல்வேறு ரிஷிகள் அல்லது சித்தர்கள் பல்வேறு மதங்களை உருவாக்குகிறார்கள்.

-

இப்போது முன்பு இருந்ததைவிட இன்னும் அதிக சிக்கல் உருவாகிவிட்டது.

மதச் சண்டைகள் தீவிரமடைகின்றன.

முன்பு சிறிய அளவில் நிகழ்ந்த சண்டைகள் இப்போது பெரிய அளவில் நிகழ்கின்றன.

 

இதில் எதை பின்பற்றுவது எதை விடுவது எது சரி எது தவறு என்று குழப்பம் ஏற்படுகிறது.

 

இதை தீர்ப்பதற்காக தத்துவவாதிகள் உருவானார்கள்.

சித்தர்களின் எண்ணத்தை நன்று அறிந்தார்கள்.

தத்துவங்களை புரிந்துகொண்டார்கள்

பல்வேறு மக்களின் மனநிலைகளையும் வழிபாடுகளையும் புரிந்துகொண்டார்கள்

அவர்கள் இந்த வழிபாட்டுமுறைகளை அனைத்தையும் பல படித்தரங்களில் பிரித்தார்கள்.

-

-

இதைப்பற்றி அடுத்த நாள் இன்னும் பார்க்கலாம்...


No comments:

Post a Comment