Monday, 23 March 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-5


ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-5
-வகுப்பு-5 நாள்-21-12-2019
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.12 ॥

நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த ஒரு காலம் என்று எதுவும் இல்லை.
நாம் எக்காலத்திலும் இருக்கிறோம்.
எதிர்காலத்திலும் நாமெல்லோரும் இல்லாமலிருக்கவும் போவதில்லை.

தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥

எப்படி உடலில் குடியிருப்பவனுக்கு, இந்த உடலில் குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதுமைப்பருவம்
 ஏற்படுகிறதோ அதேபோல்தான்  வேறு உடலை எடுப்பதும் அமைகிறது. தீரன் இதைகுறித்து குழப்பமடைவதில்லை

வாழ்க்கையில் மிகப்பெரிய பயம் மரணபயம்.
ஒருவேளை நாம் இறந்துவிட்டால் என்ன செய்வது?
நமது குடும்பத்தில் உள்ள யாராவது இறந்துவிட்டால் என்ன செய்வது?
இந்த பயம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது.
இதற்கு காரணம் அறியாமை.
முதல் அணுவிலிருந்து படிப்படியாக பரிணமித்து நாம் மனித உடலை அடைந்திருக்கிறோம்.
இந்த லட்சக்கணக்கான பிறவிகளில் மரணபயம் நம்மை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
அவ்வளவு எளிதில் இது விலகாது.யாருக்கு இது கடைசி பிறவியோ அவர்களுக்குத்தான் மரணபயம் அகலும்

நாம் இறந்துவிட்டாதக மனதில் கற்பனை செய்தால் எப்படி இருக்கும்?
நமது ஆவி இறந்த உடலை பார்த்துக்கொண்டிருக்கும்.
உறவினர்கள் உடலைச்சுற்றி அழுதுகொண்டிருப்பார்கள் அதை நாம் ஆவியாக இருந்து பார்த்துக்கொண்டிருப்போம்.
இது உண்மை.நமது எதிர்காலம் நமது கற்பனையின்படிதான் நடக்கிறது.
அப்போதுகூட உடல்தான் அழிகிறதே தவிர நாம் ஆவி உடலில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.
மறுபடி மனித உடலில் பிறப்போம்.பழைய படி ஆவி உடல் கிடைக்கிறது.
இதேபோல் மனிதன் பல முறை மனித உடலுக்கும் ஆவி உடலுக்கும் சென்றுகொண்டே இருக்கிறான்
-
இதற்கு முடிவே இல்லையா?
இருக்கிறது. ஞானம் கிடைக்கும்போது,நான் ஆத்மா என்பதை உணரும்போது மறுபிறவி ஒரு முடிவுக்கு வருகிறது.அப்போதும் நாம் வாழ்ந்துகொண்டுதான் இருப்போம்.
ஞானிக்கு மரணபயம் இல்லை. ஞானம் அடையும்வரை மரண பயம் இருக்கும்.
இதுபற்றி ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்
-
அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥

எதனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறதோ, அது அழியாதது என்று உறுதியாக தெரிந்துகொள். 
மாறாத தன்மையுள்ள அதை யாராலும் அழிக்க இயலாது

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥

எப்போதும் இருக்கும், அழியாத, அளவிடமுடியாத உடலில் குடியிருக்கும் அதற்கு(ஆன்மாவிற்கு), சொந்தமான உடல்கள் அழியக்கூடியது, ஆனால் ஆத்மாவிற்கு அழிவில்லை . ஆகவே பாரதா, யுத்தம் செய்

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥

ஆத்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஒரு முறை இருந்து பிறகு அவன் இல்லாமல் போவதுமில்லை.
அவன் பிறப்பற்ற, நித்தியமான, என்றும் நிலைத்திருக்கும், மரணமற்ற, மிகப்பழையவனாவான்.
உடல் அழிக்கப்படுவதால் அவன் அழிக்கப்படுவதில்லை.

எதனால் இந்த உலகம் வியாபிக்கப்பட்டுள்ளது? ஆத்மாவால்
நமக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன?நானே ஆத்மா. அஹம் ஆத்மா
ஆத்மாவை உணர்ந்தவன் இவ்வாறு கூறிக்கொள்வான்
நானே இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறேன்.
நான் அழியாதவன்.என்னை யாராலும் அழிக்க முடியாது.

உடல்கள் அழியக்கூடியது.ஆனால் எனக்கு அழிவில்லை.
அதேபோல பிறரது உடல்களும் அழியக்கூடியது.ஆனால் அவர்களுக்கும் அழிவில்லை.
ஏனென்றால் அவர்களும் ஆத்மா
-
முதலில் இந்த ஞானத்தைப்பெற வேண்டும்.
இதைக்குறித்து மீண்டும் மீண்டும் சிந்தனை செய்ய வேண்டும்.
நான் ஆன்மா அல்லது ஆத்மா (இரண்டிற்கும் ஒரே அர்த்தம்தான்)
நான் உடல் அல்ல. நான் மனம் அல்ல. நான் ஆத்மா
நான் பிறப்பற்றவன்.இறப்பற்றவன். எக்காலத்திலும் இருக்கக்கூடியவன்
இவ்வாறு ஆத்மாவைக்குறித்து எப்போதும் சிந்தித்துவரவேண்டும்
படிப்படியாக அக்ஞானம் மறைந்து ஞானம் உதிக்கும்
எப்போதெல்லாம் வாழ்க்கையில் மரணபயம் வருகிறதோ,
எதிரிகளால் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் இதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்
அஹம் ஆத்மா. நான் ஆத்மா
-
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி।
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥

பழையவற்றைக் களைந்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே,
பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.

No comments:

Post a Comment