Saturday, 30 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 54

வகுப்பு-54  நாள்-11-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

ஊர்த்வமூலமத:ஷாகமஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம்।

சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்॥ 15.1 ॥

 

15.1 மேலே வேருள்ளதும் கீழே கிளைகள் உள்ளதும் ஆகிய ஆலமரத்தை அழிவற்றது என்று சொல்கிறார்கள். வேதங்கள் அதனுடைய இலைகள். அதை யார் அறிகிறானோ அவன் வேதத்தை அறிபவன் ஆகிறான்

-

ஆலமரத்தின் வேர்கள் பூமிக்குள் இருக்கும்.கிளைகள்,இலைகள்,பழங்கள் மேலே இருக்கின்றன.

ஆனால் மனிதனைப்பொறுத்தவரை எது வேர்? தலைதான் வேர்

எது பழம்? ஆண்,பெண் பிறப்புறுப்புகள்

 

பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால்

தூலம்,சூட்சுமம்,காரணம் என்று மூன்று படிகள் இருக்கின்றன.

தூலம் என்பது கண்களால் காணக்கூடிய காட்சிகள்

சூட்சுமம் என்பது மரணத்திற்குபிறகு காணக்கூடிய காட்சிகள்

காரணம் என்பது பிரஞ்சம் தோன்றுவதற்கு காரணமாக இருப்பவை

-

தலைகீழாக வளர்ந்துள்ள மேலே வேர்களையும். இடையில் மரத்தின் கிளைகளையும்,முடிவில் இலைகளையும் கொண்ட ஒரு மிகப்பெரிய மரத்தை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான உலகம் மேலே இருக்கிறது.

சூட்சுமம் உலகம் இடையில் இருக்கிறது.

தூல உலகம் கீழே இருக்கிறது.

-

அந்த மிகப்பெரிய மரத்தின் இலைகள்தான் வேதங்கள்.

வேதம் என்றால் அறிவு

கண்களால் காணும் இந்த உலகத்தில் உள்ள எல்லாமே அந்த மரத்தின் இலைகள்.

இந்த உலகத்தைப்பற்றி அறிந்துகொள்பவன் வேதத்தை அறிந்தவன் ஆகிறான்.

இந்த உலகத்தை அறிவது என்றால் மரம்.செடி,கொடி,விலங்குகள்,மனிதர்கள்,மண்,கல்,கிரகங்கள்,சூரிய,சந்திரர்கள்,உட்பட அனைத்தையும் அறிவது.

-

ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா।

அஷ்வத்தமேநம் ஸுவிரூடமூலம் அஸங்கஷஸ்த்ரேண த்ருடேந சித்த்வா॥ 15.3 ॥

 

15.3 இகத்தில் அந்த மரத்தினுடைய ரூபம் கண்களுக்கு புலப்படுவதில்லை. அதற்கு முடிவில்லை.ஆதியில்லை,இருப்புமில்லை.

இந்த வலுத்து வேரூன்றிய ஆல மரத்தை திடமான பற்றின்மை என்னும் வாளால் வெட்டவேண்டும்.

--

இந்த மரத்திற்கு சம்சாரம் என்று பெயர். இதை வெட்ட வேண்டும்.

பற்றின்மை என்னும் வாளால் வெட்ட வேண்டும்.

எதற்காக வெட்ட வேண்டும்? முக்திக்காக

--

தத: பதம் தத்பரிமார்கிதவ்யம் யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:।

தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே।

யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ॥ 15.4 ॥

 

15.4  எங்கு போய் திரும்பவும் திரும்பி வருவதில்லையோ,

யாரிடத்திலிருந்து ஆதியில் பிரபஞ்சம் வெளிப்பட்டதோ

அதே ஆதிபுருஷனை சரணடை.அந்த மேலானநிலை தேடத்தக்கது

 

முக்தி வேண்டுமானால் ஆதிபுருஷனை சரணடையவேண்டும்.

அவரிடமிருந்துதான் ஆதியில் பிரபஞ்சம் வெளிப்பட்டது.

மீண்டும் பிரபஞ்சம் அவருக்குள்தான் ஒடுங்குகிறது.

இந்த உலகத்தை படைத்து.காத்து,அழிக்கும் ஈஸ்வரனிடம் சரணடைய வேண்டும்.

அப்போது சம்சாரம் என்ற இந்த பந்தத்திலிருந்து விடுபட முடியும்.

அந்த ஆதிபுருஷனை சைவர்கள் சிவன் என்பார்கள். வைணவர்கள் விஷ்ணு என்பார்கள்.


Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

வகுப்பு-53  நாள்-10-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஒவ்வொரு மனிதனும் எல்லா நேரங்களிலும் ஒரேபோல இருப்பதில்லை. குணங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. சில நேரங்களில் நல்ல சிந்தனை ஏற்படுகிறது,சில நேரங்களில்  தீயசிந்தனை வருகிறது,சில நேரங்களில் ஆன்மீக சிந்தனைகள் ஏற்படுகின்றன.

இவைகளுக்கெல்லாம் யார் காரணம்?

சில மனிதர்கள் நல்லவர்களாக இருந்து தீயவர்களாக மாறிவிடுகிறார்கள்

சிலர் தீயவர்களாக இருந்து நல்லவர்களாக மாறுகிறார்கள்.

-

இந்த குணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன?

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

14.5  ஸத்வம், ரஜஸ்,தமஸ் என்று பிரகிருதியிலிருந்து உண்டான குணங்கள்

தேகத்தில் ஆத்மாவை பந்தப்படுத்துகின்றன

-

சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்கள் பிரகிருதியிலிருந்து வெளிப்படுகிறது.பிரகிருதி என்பது இயற்கை,இந்த பிரபஞ்சம்

-

இந்த மூன்றும் பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது

கிரகங்களுக்கிடையில்  ஈர்ப்புவிசை attractive force(தமஸ்) விலக்கு விசை repulsive force (ரஜஸ்) சமன்படுத்துதல் Neutral force (சத்வம்)

சிறிய அணுக்களில் கவர்தல் proton (தமஸ்) விலக்குதல் electron (ரஜஸ்) சமன்படுத்துதல் neutron (சத்வம்)

உடல்களில் மிருக உடல் (தமஸ்),மனித உடல்(ரஜஸ்),தேவ உடல்(சத்வம்)

மனித செயல்களில்  தூக்கம்(தமஸ்) சுறுசுறுப்பு (ரஜஸ்) ஆன்மீக செயல்கள்( சத்வம்)

மனித குணங்களில் வெறுப்பு (தமஸ்) விருப்பு (ரஜஸ்) பற்றற்ற தன்மை (சத்வம்)

-

இந்த மூன்று குணங்களும் எல்லா இடங்களிலும் வெளிப்படுகிறது

இது ஆத்மாவை உடல்மீது பந்தப்படுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனிலும் இந்த மூன்று குணங்களும் அவ்வப்போது வெளிப்படுகின்றன.

சிலருக்கு சில குணங்கள் அதிகமாக வெளிப்படுகிறது.

தூங்கும்போதும்,சோம்பலாக இருக்கும்போதும் தமோகுணம் மேலெழுகிறது.

சுறுசுறுப்பாக தினசரி வேலைகளை செய்யும்போது ரஜோகுணம் மேலெழுகிறது.

ஆன்ம ஆராய்ச்சியில் ஈடுபட்டு. தியானம்,ஜபம்,படிப்பு.ஆழ்ந்த சிந்தனை என்று தனிமையில் இருக்கும்போது சத்வகுணம் மேலெழுகிறது.

-

இரவு நேரங்களில் தமோகுணம் மேலெழுகிறது

பகல் நேரங்களில் ரஜோகுணம் மேலெழுகிறது.

இரண்டும் கலந்த சந்தியா வேளைகளில் சத்வகுணம் மேலெழுகிறது.

-

14.6 சத்வகுணமானது தூய்மையானது, ஒளிபொருந்தியது, தொந்தரவு செய்யாதது.

சுகத்தில் பற்றுதலாலும், ஞானத்தில் பற்றுதலாலும் பந்தப்படுத்துகிறது

-

சத்வ குணம் மேலெழும்போது ஆன்மீகத்தைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கவும்,ஜெபத்தில் ஈடுபடவும்,ஆன்மீகத்தைப்பற்றி பேசவும் விருப்பம் ஏற்படுகிறது.

இது நல்லதுதானே. பிறகு ஏன் இதையும் பந்தம் என்று கூறுகிறார்?

பிரம்மத்தை அடையவேண்டுமானால் மூன்று குணங்களையும் கடந்துசெல்ல வேண்டும்.

சத்வ குணம் என்பது பிரம்மத்தை அடைவதற்கான கடைசி படியில் உள்ளது.

இருந்தாலும் பிரம்மத்தை அடையவிடாமல் தடுக்கிறது.

ஆன்மீகத்தைப்பற்றி நன்கு அறிந்த ஒருவர். கருணையின் காரணமாக  சீடர்களுக்கு அதை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றுதான் விரும்புவார் , பிரம்மத்தில் ஒன்று கலந்து முக்தியடைய விரும்பமாட்டார்.

தயை,கருணை,அருள்,போன்ற மேலான குணங்கள் சத்துவத்திலிருந்து வருகிறது.

சத்வ குணத்தை அடைந்து அதில் நிலைபெற்று வாழ்வது  கடினமானது.

பல ஆண்டுகள் தீவிர தவத்தின் காரணமாகவே சத்வ குணத்தில் நிலைபெற முடியும்

 

14.7 ரஜோகுணத்தை ஆசை வடிவுடையது என்றும், தீராத தாகத்தையும், பற்றுதலையும் உண்டுபண்ணுவது என்று அறி. கர்மபற்றினால் அது தேஹியை பந்தப்படுத்துகிறது

-

பெரும்பாலான மனிதர்கள் காலையிலிருந்து இரவு வரை தொடர்ந்து வேலைசெய்துகொண்டே இருக்கிறார்கள்.

ஏன் இப்படி வேலைசெய்கிறார்கள்?

தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக.

வீடு கட்டவேண்டும்,வீட்டில் பல்வேறு பொருட்கள் வாங்கவேண்டும்.குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்,வசதியான வாழ்க்கை வேண்டும்.

இவை அனைத்திற்கும் பணம் வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக படினமாக உழைக்க வேண்டும்.

ரஜோகுணம் நிறைந்திருப்பவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக வேலைசெய்துகொண்டே இருக்கிறார்கள்.

இது நல்லதுதான்.

ஒரு காலத்திற்கு பிறகு வயதாகிவிடுகிறது. முன்புபோல வேலைசெய்ய முடிவதில்லை.

ஆனால் நிறைவேறாத ஆசைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

அனுபவிக்க வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன என்ன செய்வது?

மனம் அவைகளை எண்ணி எண்ணி குழம்பிக்கொண்டே இருக்கும்.

கடைசி காலத்தில் நிம்மதியின்றி வாழ்வார்கள்

 

14.8  தமோகுணமோ,அக்ஞானத்தில் பிறந்து, எல்லா தேஹிகளுக்கும் மயக்கத்தை உண்டுபண்ணுவது என்று அறி. அரட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் அது பந்தப்படுத்துகிறது

-

மனிதர்களில் சிலர் எந்த வேலைகளையும் செய்ய விரும்புவதில்லை. வேறு யாராவது வேலைசெய்து இவர்களை காப்பாற்ற வேண்டும். குடிப்பழக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். சிலர் பிச்சைஎடுத்து வாழ்வார்கள்

காமம்,களவு,வஞ்சகம் போன்ற தீய பழக்கம் நிறைந்திருக்கும்.

பகல்வேளைகளில் மது அருந்தி போதையில் படுத்திருப்பார்கள்.

இரவு வேளைகளில் களவு.கொலை போன்ற தீய செயல்களை செய்து தீய வழிகளில் பணம் சம்பாதிப்பார்கள்.

 

14.9 சத்துவகுணம் சுகத்தில் சேர்க்கிறது. ரஜோகுணம் கர்மபந்தத்திலும், 

தமோகுணம் ஞானத்தை மறைத்து கவனமின்மையிலும் இணைக்கிறது

-

சத்வ குணத்திலிருந்து அமைதி,சுகம்,ஆனந்தம் போன்றவை உருவாகிறது.

ரஜோ குணத்தினால் நிறைவேறாத ஆசைகளால் மனக்குழப்பம் ஏற்படுகிறது

தமோ குணத்தினால் பெரும்துன்பம் ஏற்படுகிறது

-

14.10  சத்வம், ரஜசையும் தமசையும் அடக்கி மேலெழுகிறது.

ரஜஸ், சத்துவத்தையும் தமசையும் அடக்குகிறது.

அங்ஙனம் தமஸ், சத்துவத்தையும் ரஜசையும் அடக்குகிறது

-

இந்த மூன்று குணங்களும் ஒவ்வொரு மனிதனிடமும் மாறிமாறி செயல்படுகிறது.

மிகவும் தீயவன் என்று கருதும் நபர்களிடம்கூட எப்போதாவது சத்வகுணம் மேலெழுகிறது.அப்போது தாங்கள் செய்த தவறுகளைப்பற்றி சிந்திக்கவும்,தவறு செய்துவிட்டோமே என்ற பச்சாதாபமும் ஏற்படுகிறது.இனிமேல் நல்லவனாக வாழவேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.ஆனால் சத்வகுணம் நெடுநேரம் நீடித்து நிற்பதில்லை. மீண்டும் தவறான வழியில் சென்றுவிடுகிறார்கள்.

அதேபோல ஒவ்வொரு குணமும் பிற குணங்களை அடக்கி மேலெழுகிறது.

சத்வ குணம் நிறைந்த மனிதனிடம்கூட சில நேரங்களில் தமோ குணம் மேலெழுகிறது. தீய சிந்தனைகள் மேலெழுகின்றன.அதனால் பெரும் மனப்போராட்டம் ஏற்படுகிறது.

 

14.11 எப்பொழுது. இந்த தேகத்தில் எல்லா பொறிவாயில் வழியாக ஞானத்தின் ஒளி உண்டாகிறதோ

அப்பொழுது சத்துவம் ஓங்கியுள்ளது என்று அறியவேண்டும்

-

14.12  பேராசை,பிரவிருத்தி,புதியகர்மங்களை செய்தல்,அமைதியின்மை,

கர்மங்களில் பற்று இவைகள் ரஜோகுணம் மேலெழும்போது உண்டாகிறது

-

14.13 விவேகமின்மை, முயற்சியின்மை,கவனக்குறைவு.மதிமயக்கம்

இவைகள் தமோகுணம் மேலெழும்போது உண்டாகின்றன

-

சத்வ குணம் நிறைந்தவன் அதைக்கடந்து பிரம்மத்தை அடைய முடியாமல் மரணமடைந்தால் என்னவாகிறான்?

 

14.14 எப்பொழுது சத்வகுணம் மேலோங்கியிருக்குமோ, அப்போது தேகத்தை எடுத்தவன் மரணமடைந்தால்,

உயர்ந்த, குற்றமற்ற உலகங்களை அடைகிறான்

-

சத்வகுணம் நிறைந்தவன் ஒளி உடலைப்பெறுகிறான். மேல் உலகங்களுக்கு செல்கிறான். அங்கே நீண்ட காலம் வாழ்ந்த பிறகு மீண்டும் முக்தி அடைவதற்காக மனிதனாகப்பிறக்கிறான்

-

14.15 ரஜோகுணத்தில் மரணமடைந்தால் கர்மப்பற்றுடையவர்களிடத்து மீண்டும் பிறக்கிறான்.

அப்படியே தமோகுணத்தில் சாகின்றவன் அறிவில்லாதவர்கள் கர்ப்பத்தில் பிறக்கிறான்

-

ரஜோ குணம் நிறைந்தவன் மரணமடைந்த பிறகு மீண்டும் மனிதனாகப்பிறந்து நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இன்னொரு வாய்ப்பைப்பெறுகிறான்.

தமோ குணம் நிறைந்தவன் மரணமடைந்தால் விலங்குகளாகப்பிறக்கிறான். பேய்,பிசாசுகளாக சுற்றி அலைகிறான்.

அல்லது அறிவற்றவர்களின் குடும்பத்தில் பிறக்கிறான்.

-

14.18 சத்வகுணத்திலுள்ளவர்கள் மேல்நோக்கி போகிறார்கள்.

ரஜோகுணத்தில் உள்ளவர்கள் மத்தியில் நிற்கிறார்கள்.

தமோகுணத்தில் இருப்போர் கீழ்நோக்கி செல்லுகின்றனர்


ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 52

வகுப்பு-52  நாள்-9-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

நமது இந்துமதத்தில் இறைவனைப்பற்றிய மூன்று முக்கிய தத்துவங்கள் இருக்கின்றன.

-

1.அத்வைதம்

2.விசிஷ்டாத்வைதம்

3.துவைதம்

உபநிடதங்களில் இவைகள் தனித்தனியாக விவாதிக்கப்படவில்லை.பிற்காலத்தில் வந்தவர்கள் தனித்தனியாக பிரித்து விவாதித்திருக்கிறார்.

இந்த தத்துவங்களை படித்து புரிந்துகொள்வதால் மனத்தில் உள்ள சந்தேகங்கள் அகல்கின்றன. சந்தேகங்கள் அகன்றால் இறைக்காட்சி கிடைக்கிறது.

ஞானமார்க்கத்தில் செல்லும் ஒருவர் இவைகளைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.

 

அர்ஜுனன் போர் செய்ய விரும்பவில்லை.அனைத்தையும் விட்டுவிட்டு சந்நியாசியாக செல்லப்போவதாக கூறுகிறான்.

கடமையைச் செய்யாமல் அதைவிட்டு விலகுவது பெரும் பாவம் என்றும். அதை எப்படி பற்றில்லாமல் செய்ய வேண்டும் என்றும் உபதேசித்தார்.அத்துடன்

சந்நியாசிகள் பின்பற்றும் ஞான மார்க்கத்தைப்பற்றியும் விவரித்துக்கொண்டிருக்கிறார்

-

பிரம்மம்-பிரகிருதி என்று இரண்டு தத்துவங்கள் உள்ளன.

தத்துவம் என்றால் தத்+துவம்=அது நீயே என்று அர்த்தம்.

அதாவது பிரம்மமும் பிரகிருதியுமாக நீயே இருக்கிறாய்

இந்த இரண்டும் தனித்தனியானவை அல்ல.ஒன்றாக சேர்ந்திருப்பது

இதை விளக்குவதற்காக தனித்தனியாக கூறவேண்டியிருக்கிறது.

-

பிரகிருதி என்பது என்ன?

விரிவடைதல் மற்றும் ஒடுங்குதல்

விதைக்குள்ளே மரம் ஒடுங்கியிருக்கிறது. உரிய முறையில் பாதுகாத்தால் பலகோடி ஆண்டுகளுக்கு பிறகு கூட அந்த விதையிலிருந்து மரம் முளைவிட்டு வெளிப்படும்.காலத்தை தனக்குள்ளே ஒடுக்கிக்கொண்டு நிற்கும் விதைபோல

இந்த பிரபஞ்சம் முழுவதும் தனக்குள்ளே ஒடுங்கி விதைபோல ஆகிறது. அதற்கு ஒடுக்கம் அல்லது அவ்யக்தம் என்று பெயர்

அந்த விதை படிப்படியாக வெளிப்பட்டு  மரமாக வளர்ந்து, பூத்து.காய்த்து. மறுபடியும் விதைகளை உருவாக்குகிறது. இப்படி இந்த பிரபஞ்சத்தின் விதை விரிவடைந்து பல சூரியர்களையும்,சந்திரர்களையும்,கிரகங்களையும், அனைத்தையும் வெளிப்படுத்துகிறது.  காலம்,இடம்,காரணம், உலகத்தை ஆள்பவர்,தேவர்கள்,மனிதர்கள் போன்ற அனைத்தும் வெளிப்படுகிறது. இதற்கு விரிவடைதல் அல்லது பிரகிருதி என்று பெயர்

-

பிரபஞ்சத்தின் ஒடுக்க நிலையில் பிரம்மம் மட்டும் இருந்தது

விரிவடைந்த நிலையில் பிரம்மம் அனைத்துமாக ஆகியிருக்கிறது.

-

மனிதன் தற்போது இருக்கும் விரிவடைந்த நிலையிலிருந்து மீண்டும் ஒடுக்க நிலையை நோக்கி செல்லும்போது பிரம்மஞானம் கிடைக்கிறது. முக்தி கிடைக்கிறது. இந்த பயணத்தில் மூன்று படிகளைக் கடந்து செல்ல வேண்டும்.முதல்படி துவைதம். இரண்டாவதுபடி விசிஷ்டாத்வைதம். மூன்றாவதுபடி அத்வைதம்

-

அத்வைதம்

-

ஆதியில் இந்த உலகம் பிரகிருதியில் ஒடுங்கியிருந்தது.உயிர்கள் அனைத்தும் ஒடுங்கியிருந்தன.

பிரம்மத்தைத்தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

பிரம்மத்தை அடையும் ஒருவர் இந்த உலகத்தையோ,உலகத்தை சார்ந்த எதையும் காண்பதில்லை,உணர்வதில்லை.ஏனென்றால் அவைகள் அனைத்தும் ஒடுங்கிவிடும்.

ஒருவருக்கு அத்வைத அனுபவம் கிடைக்கும்போது பிரம்மத்தைத்தவிர வேறு எதுவும் தெரியாது.

-

விசிஷ்டாத்வைதம்=விஷேச அத்வைதம்

அந்த பிரம்மம் மற்றும் பிரகிருதியும் சேர்ந்து பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாக விரிவடைகிறது அனைத்துமாக ஆகிறது.உயிர்களாகவும்,உலகமாகவும்,அசைவனவாகவும்,அசையாததாகவும் ஆகியிருக்கிறது.

அத்துடன் ஒவ்வொரு உடலையும் ஆள்பவனாக ஒவ்வொருவரின் ஹிருதயத்திலும் பிரம்மம் இருக்கிறது.

 

இவ்வாறு உருவான பிரபஞ்சத்தை படைத்து,காத்து,அழிக்கும் தன்மை ஒன்று எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஒவ்வொரு உயிரும் படைக்கிறது, ஒவ்வொரு உயிரின் தாய்,தந்தை காக்கிறது.ஒவ்வொரு இடத்திலும் அழிவு நடந்துகொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் அங்கே ஒவ்வொரு நொடியும் படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது.

படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் இறைத்தன்மை என்று அழைக்கலாம்.

 

எண்ணற்ற தாய் இருக்கலாம்.ஆனால் தாய்மை என்ற பண்பு ஒன்றுதான் இருக்க முடியும்.

தாய்மை என்ற பண்புக்கு உருவம் இல்லை.ஆனால் அந்த பண்பு வெளிப்படும் தாய்க்கு உருவம் உண்டு.

தாய் இல்லாவிட்டால் தாய்மை என்ற பண்பு இருக்காது.

அதேபோல இறைத்தன்மை என்பது தனியாக இருப்பதில்லை.அது சிலரிடம் வெளிப்படுகிறது..

யாரிடம் அது வெளிப்படுகிறதோ அவர்களுக்கு உருவம் உண்டு.

இறைத்தன்மைக்கு உருவம் இல்லை.ஆனால் அது வெளிப்படும் நபருக்கு உருவம் உண்டு.

 

பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது முதலில் ஒருவரிடம் இறைத்தன்மை(ஈஸ்வர ஸ்வபாவம்) வெளிப்பட்டது.அவருக்கு உருவம் இருந்தது.

அவர் ஆணாகவும் இல்லை.பெண்ணாகவும் இல்லை.இரண்டையும் தன்னுள் அடக்கியவராக இருந்தார்.அவர் முழுமையாக இருந்தார்.

-

துவைதம்

-

முழுமையாக இருந்த இறைவன் தன்னை ஆணாகவும், பெண்ணாகவும் இரண்டாக பிரித்துக்கொண்டார்.

அவர்களுக்கு தனித்தனியாக குணங்கள் இருந்தன.அவர்கள் வாழ்வதற்கு ஒரு உலகம் இருந்தது.

-

மனிதன் முதலில் இறைவனை ஆணாகவும்,பெண்ணாகவும் தனித்தனியாக காண்கிறான்.அவர்களுடன் பேசுகிறான்.

பின்பு இருவர் இல்லை. இரண்டுபேரும் சேர்ந்து ஒருவரே என்பதைக் காண்கிறான்.அத்துடன் இறைவனே அனைத்துமாக இருப்பதையும் காண்கிறான்.

முடிவில் தானும் இறைவனும் ஒன்றே என்ற அத்வைத அனுபவம் ஏற்படுகிறது

-

ஸ்ரீகிருஷ்ணர் இந்த மூன்று தத்துவங்களையும் பற்றி பேசுகிறார்.அவைகளை தனித்தனியாக பிரித்து பேசாமல் சேர்த்து பேசுகிறார்

-

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஷநம்।

ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோ அந்யதா॥ 13.12 ॥

 

13.12 அறியத்தக்கது எது? எதை அறிந்து சாகாத்தன்மையை அடைகிறானோ அதை சொல்கிறேன்.

அது ஆதியில்லாதது,மேலானது,அது பிரம்மம். உள்ளது என்றும் சொல்லமுடியாது,இல்லை என்றும் சொல்லமுடியாதது.

-

பிரம்மத்தை அடைபவன் சாகாத்தன்மையை அடைகிறான்.முக்தி அடைகிறான். பிரம்மத்துடன் ஒன்றாகிறான்.

பிரம்மத்திற்கு துவக்கம் இல்லை.முடிவும் இல்லை.

அது உள்ளது என்றோ.இல்லாதது என்றோ ஏன் சொல்ல முடியாது?

ஏனென்றால் பிரம்மத்தை அடையும் ஒருவனது மனம் முற்றிலும் அழிந்துவிடுகிறது.

மனம் என்ற ஒன்று இருந்தால்தான் அதில் கண்டவற்றைப்பற்றிய பதிவுகளை வைக்க முடியும்.

மனமே இல்லாத நிலையில் பிரம்மத்தைப்பற்றிய செய்தியை எங்கே பதியவைப்பது?

எனவே பிரம்மத்தை கண்டவர்களால் அதைப்பற்றி எதுவும் பேச முடிவதில்லை.

-

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா அம்ருதமஷ்நுதே।

அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே॥ 13.13 ॥

 

13.13 அது எங்கும் கை கால்களை உடையது, எங்கும் கண்.தலை.வாய்களை உடையது.

எங்கும் கால்களையுடையது. உலகில் எங்கும் வியாபித்து நிற்கிறது

-

அந்த பிரம்மமும் பிரகிருதியும் இணைந்து கை,கால்களை உடைய உடல்களாக மாறுகிறது.உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தின் கை.கால்,தலை,வாய் போன்ற அனைத்து உறுப்புகளும் பிரம்மமும் பிரகிருதியும் இணைந்து உருவானவை.

அந்த உருவங்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. கண்ணுக்கு தெரியும் உருவங்களாகவும், கண்ணுக்குத்தெரியாத உருவங்களாகவும் இருக்கிறது.

எங்கெல்லாம் உயிர்கள் இருக்கின்றனவோ அவைகள் அனைத்தும் பிரம்மத்திலிருந்து உருவானவை.

-

ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ அக்ஷிஷிரோமுகம்।

ஸர்வத: ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி॥ 13.14 ॥

 

13.14 எல்லா இந்திரியங்கள் மூலமாகவும் ஒளிர்வது, இந்திரியங்கள் எதுவும் இல்லாதது. பற்றற்றது, அனைத்தையும் தாங்குவது, குணமற்றது,குணங்களை அனுபவிப்பது

-

உருவங்களாக ஆனது மட்டுமல்ல கண்,காது,மூக்கு போன்ற இந்திரியங்கள் மூலமாக இயங்கிக்கொண்டிருப்பதும் அதுதான்.

 கண் மூலமாக காண்பது யார்? பிரம்மம்

காது மூலமாக கேட்பது யார்? பிரம்மம்.

நாக்கு மூலமாக சுவைப்பது யார்? பிரம்மம்

மூக்கு மூலமாக நுகர்வது யார்? பிரம்மம்

தோல் மூலமாக உணர்வது யார்? பிரம்மம்.

 

இவ்வாறு இந்தியங்கள் மூலமாக பிரம்மம் இயங்கினாலும் அதற்கு இந்திரியங்கள் இல்லை.

 

உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் உடல் தாங்கியிருக்கிறது,உயிர்களை பூமி தாங்கி நிற்கிறது,பூமியை சூரிய மண்டலம் தாங்கியிருக்கிறது. சூரிய மண்டலங்களை நட்சத்திர மண்டலங்கள் தாங்கியிருக்கின்றன, நட்சத்திர மண்டலங்களை அதைவிட உயர்ந்தது தாங்கியிருக்கிறது.இவ்வாறு அனைத்தையும் தாங்கியிருப்பது பிரம்மம்.

ஆனாலும் அது அதிலிருந்து தனித்திருக்கிறது.

 

சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களும் பிரம்மம் மற்றும் பிரகிருதியின் சேர்க்கையால் உருவானது.

இந்த மூன்று குணங்களும் கலந்து கவர்தல்,விலக்குதல்,சமன்படுத்துதல்

விருப்பு.வெறுப்பு,அன்பு

போன்ற பல குணங்களாக பரிணமிக்கிறது.

இவ்வாறு பல குணங்களாக அது பரிணமித்தாலும், குணங்கள் அற்றதாகவும் இருக்கிறது

-

ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்।

அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச॥ 13.15 ॥

 

13.15 அது உலகில் உள்ள அனைத்திற்கும் உள்ளும் புறமும் அசையாததும்,அசைவற்றதும் ஆகும்.

சூட்சுமமாக இருப்பதால் அறியமுடியாதது, (அது) தூரத்தில் இருப்பது,(அது) அருகில் இருப்பது

-

பிரம்மம் உலகில் உள்ள அனைத்து அசையக்கூடிய பொருட்களாகவும், அசையாத பொருட்களாகவும் ஆகியிருக்கிறது.

அது மட்டுமல்ல அசையும் மற்றும் அசையாத பொருட்களுக்கு உள்ளே சூட்சுமமாக இயங்கிக்கொண்டிருக்கும் அணுக்களாக இருப்பதும் பிரம்மம்தான்

கோடானகோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் பல கிரகங்களாக இருப்பதும் பிரம்மம்தான். நமக்கு மிக இருகில் இருக்கும் பொருட்களாக இருப்பதும் பிரம்மம்தான்.

-

அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்।

பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச॥ 13.17 ॥

 

13.17 ஒளிக்கெல்லாம் ஒளியாகிய அது இருளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படுகிறது.

ஞானமாகவும்(அறிவு), ஞேயமாகவும் (அறியப்படும்பொருள்) அறிவினால் அடையப்படுவதுமாகிய அது எல்லோருடைய ஹிருதயத்தில் நிலைத்திருக்கிறது.

-

ஒளிக்கெல்லாம் ஒளி எது? பிரம்மம். அங்கே இருள் என்பதே இல்லை.

பிரம்மத்தில் எல்லையற்ற ஒளி வெளிப்படுகிறது.அதற்கு ஒரு முடிவே இல்லை.

அதுவே பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களாகவும், சூரியர்களாகவும் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

-

அறிவு எங்கிருந்து வருகிறது? பிரம்மத்திலிருந்து

அறிவை அறிபவர் யார்? பிரம்மம்

அறிவினால் எதை அடைகிறோம்? பிரம்மத்தை.

அது மனிதர்களிடம் எங்கே இருக்கிறது? ஹிருதயத்தில்

-

-

மேலே கூறப்பட்டுள்ள தத்துவத்தை தங்கள் வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக யார் அறிகிறார்களோ அவர்கள் சாகாத்தன்மையை அடைகிறார்கள்.

வெறுமனே படிப்பதால் அந்த நிலையை அடைய முடியாது.

பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகிறான்.

அந்த நிலையிலிருந்து கீழே வரும்போது தானே உலகமாகவும்.உயிர்களாகவும்.அனைத்துமாகவும் ஆகியிருப்பதை அனுபவத்தில் உணர்கிறான்.

ஸ்ரீகிருஷ்ணர் அதேபோல அனுபவத்தில் உணர்ந்தவர்.

அவரே பிரம்மமாகவும் ஆகியிருக்கிறார்

அவரே உலகமாகவும்,உலகத்திலுள்ள உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்

அவரே கிருஷ்ணர் என்ற தனி உருவமாகவும்,அர்ஜுனனுக்கு நண்பனாகவும் இருக்கிறார்.

-

கிருஷ்ணர் என்ற உருவத்தில் பிரம்மம் இருக்கும் நிலை துவைதம்

பிரம்மமே உயிர்களாகவும் உலகமாகவும் இருக்கின்ற நிலை விசிஷ்டாத்வைதம்

உலகம் முழுவதும் பிரகிருதியில் ஒடுங்கிய நிலையில் பிரம்மமாக இருக்கின்ற நிலை அத்வைதம்


ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 51

வகுப்பு-51  நாள்-6-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

13.1 குந்தியின் மைந்தா, இந்த உடல் க்ஷேத்ரம்  என்று அழைக்கப்படுகிறது.

யார் இந்த உடலை அறிகிறானோ அவன் க்ஷேத்ரக்ஞன் என்று  சொல்லப்படுகிறான்

-

13.2 அர்ஜுனா எல்லா க்ஷேத்ரங்களிலும் (பிரபஞ்சத்திலுள்ள எல்லா உடல்களிலும்)

என்னை க்ஷேத்ரக்ஞன்(எல்லா உடலையும் அறிந்தவன்) என்று அறிந்துகொள்.

க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் பற்றிய அறிவே ஞானம் என்பது என்னுடைய கொள்கை

-

உடலுக்கு க்ஷேத்ரம் என்று பெயர்.

இந்த உடலைப்பற்றிய அறிவு யாரிடம் இருக்கிறதோ அவன் க்ஷேத்ரக்ஞன்

அதேபோல பிரபஞ்சத்தில் கணக்கற்ற உடல்கள் இருக்கின்றன.

இந்த ஒட்டுமொத்த உடல்களையும் அறிந்தவன் யார்?

இறைவன்.

எல்லா உடல்களையும், இறைவனையும் பற்றி அறிவதுதான் ஞானம்

-

13.3 அந்த க்ஷேத்ரம் யாது, எத்தன்மைகளை உடையது என்றும், என்னனென்ன விரிவுகளை உடையதென்றும், எதிலிருந்து எது உண்டானதென்றும் அந்த க்ஷேத்ரக்ஞன் யார் என்றும், என்ன மகிமையுடையவன் என்றும் அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள்

-

13.5,6 மஹாபூதங்கள், அகங்காரம்,புத்தி, அவ்யக்தம், இந்திரியங்கள் பத்து மற்றும் ஒன்று, இந்திரிய விஷயங்கள் ஐந்தும் விருப்பு,வெறுப்பு,சுகம்,துக்கம், வேறுபாட்டு உணர்வுகள்,காலஅறிவு,மனவுறுதி இவைகள் வேறுபாடுகளோடு கூடிய க்ஷேத்ரம்

 

(மஹாபூதங்கள்(5)- ஆகாயம்,வாயு,அக்கினி,அப்பு,பிருத்துவி,

அகங்காரம்(1)- நான் இருக்கிறேன் என்ற உணர்வு.

புத்தி(1)- மஹத் அல்லது பிரபஞ்சமனம்.

அவ்யக்தம்(1)-மூலப்பொருட்கள் தோன்றாநிலை.(பிரபஞ்சத்தின் ஒடுக்கநிலை) 

பத்து இந்திரியங்கள்(10)- கண்,காது,நாக்கு,மூக்கு,தோல் ஆகிய 5 ஞானஇந்திரியங்கள் .

வாக்கு, கை , கால் ,குதம், குறி இந்த 5 கர்மேந்திரியங்கள்.

இந்திரியார்த்தங்கள்(5) - சப்த,ஸ்பர்ச,ரூப,ரச,கந்த அதாவது ஒலி,தொடுதல்,ஒளி,சுவை,மணம் இந்த ஐந்தும் இந்திரியார்த்தங்கள்.

மேலும் ஒன்று(1) -உடலுள் உறைபவன் அல்லது ஆன்மா அல்லது புருஷன்.

இவைகள் சாங்கிய தத்துவம் கூறும் 24 தத்துவங்கள்

-

ஆன்மா உடலோடு பற்றுகொள்ளும்போது அதனிடம்

விருப்பு-வெறுப்பு,சுகம்-துக்கம்,வேறுபாட்டு உணர்வுகள்

கால உணர்வுகள் போன்றவை ஏற்படுகின்றன

-

எல்லா உடல்களைப்பற்றியும், இறைவனைப்பற்றியும் அறிபவன் ஞானி.

அவனது செயல்பாடுகள் எப்படி இருக்கும்?

 

13.7 தற்பெருமையின்மை, செருக்கின்மை,அஹிம்சை,பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி,தன்னடக்கம்

-

13.8 இந்திரிய போக விஷயங்களில் விருப்பமின்மை (பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,தொடுதல்,நுகர்தல்) அகங்காரமின்மை, பிறப்பு இறப்பு மூப்பு பிணி துயரம் ஆகியவைகளில் உள்ள கேடுகளை எண்ணிப்பார்த்தல்

-

13.9 பற்றின்மை, மகன் மனைவி வீட்டைத் தனதென்று நினையாமலிருத்தல், விருப்பமானவை வரும்போதும், விரும்பாதவை வரும்போதும் எப்பொழுதும் மனம் நடுநிலையில் நிற்பது

-

13.10 என்னிடத்திலிருந்து(இறைவனிடமிருந்து) எதையும் எதிர்பார்க்காமல், யோகத்தால் என்னிடம் தொடர்ந்து பக்திசெய்தல், தனியிடத்தை நாடுதல், மக்கள் கூட்டத்தில் விருப்பமின்மை

-

13.11 ஆத்மஞானத்தில் நிலைபெறுதல், தத்துவஞானத்தின் பலனை ஆராய்தல். இவையாவும் ஞானம் என்று சொல்லப்படுகிறது. எது இதற்கு அன்னியமானதோ அது அக்ஞானம்

 

-

மேலே கூறப்பட்டுள்ள குணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவன் ஞானி.

இதை ஞானம் பெறுவதற்கான வழிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்

-

ஞானி பிரம்மத்தைக்குறித்து தியானிக்கிறான். பிரம்மம் என்பது இறைவனின் உருவமற்ற நிலை.

 

ஞானம் பெறுவதற்கான வழிகள் என்ன?

1.தற்பெருமையின்மை

நான் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என்று தற்பெருமை

2.செருக்கின்மை

தன்னைவிட தாழ்ந்தவர்களை அவமதித்தால்,அலட்சியம் செய்தால் அதற்கு பெயர் செருக்கு

3.அஹிம்சை

பிற உயிர்களை கொல்லுவது,துன்புறுத்துவது ஹிம்சை அதற்கு எதிர்பதம் அஹிம்சை

4.பொறுமை

ஒரு செயல் உடனே நடந்துவிட வேண்டும் என்று அவசரப்படக்கூடாது. ஒவ்வொரு செயலும் அதற்குரிய காலத்தில்தான் நடக்கும் அதுவரை காத்திருக்க வேண்டும்

5.நேர்மை

எந்த வேலையைச் செய்தாலும் நேர்மையாக இருக்கவேண்டும்

6.குருசேவை

குருவிடம் பாடம் கற்கும் சீடன் குருசேவை செய்ய வேண்டும்.

7.தூய்மை

உடலையும்,உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

8.விடாமுயற்சி

நல்லது என்று நினைத்து ஒரு செயலை செய்யத்தொடங்கினால்  எக்காரத்தைக்கொண்டும் அதிலிருந்து பின்வாங்கக்கூடாது

9.தன்னடக்கம்

புகழ்வரும்போது அடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்

10.விஷயங்களில் விருப்பின்மை

உலக விஷயங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.நம்மைச்சுற்றி பல கேளிக்கைகள் நடந்துகொண்டிருந்தாலும் அவைகளிலிருந்து விலகியிருத்தல்

11.அஹங்காரமின்மை

இந்த உடல் என்னுடையது என்ற எண்ணத்தைவிட்டுவிட வேண்டும். நான் என்பது உடல் அல்ல.

12.பிறப்பு,இறப்பு,வயோதிகம் பிணி,துயரம் ஆகியவற்றினால் வரும் துன்பங்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மறுபடிமறுபடி பலமுறை பிறந்து பலமுறை இறந்துவிட்டோம். ஒவ்வொரு முறையும் எத்தனை நோய்களை சந்திக்கவேண்டியிருக்கிறது? வயதான காலத்தில் எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருக்கிறது.இவைகளை எப்போதும் நினைத்துப்பார்த்து.இனி மறுபடி பிறக்கக்கூடாது என்ற எண்ணத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

13.பற்றின்மை

இந்த உலகத்திலுள்ள எதனோடும் பற்று வைத்துக்கொள்ளக்கூடாது.சிறிது பற்று இருந்தாலும் மறுபடி பிறக்கவேண்டிய சூழல் ஏற்படும்

14.மகன்,மனைவி,வீட்டை தனதென்று நினைக்காமல் இருத்தல்.

மகன்,மனைவி,வீடு இவைகள் இருக்கலாம். இவைகளை விட்டுவிட்டு செல்ல வேண்டிதில்லை.ஆனால் இவைகள் தன்னுடையவர்கள் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. அப்படியானால் யாருடையவர்கள்? இந்த உலகத்திலுள்ள எல்லாம் இறைவனுக்கு சொந்தமானது. தனக்கு எதுவும் சொந்தம் இல்லை. உடல்கூட தனக்கு சொந்தம் இல்லை

15.விருப்பமானவை வரும்போதும், விரும்பாதவை வரும்போதும் எப்பொழுதும் மனம் நடுநிலையில் நிற்பது.

விருப்பமானவை வரும்போது எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள், விரும்பாத நோய்கள் வரும்போது துன்பப்படுவார்கள். எது வந்தாலும் சரி, சமநிலையில் இருக்கவேண்டும். மகிழ்ச்சியடையவும்கூடாது. துயரப்படவும் கூடாது

16.இறைவனைத்தவிர வேறு எதையும் எண்ணாமல் இருத்தல்

உலகத்திலுள்ள ஒன்றைக்கூட நினைக்கக்கூடாது. எப்போதும் இறைவனை மட்டுமே நினைக்க வேண்டும்.

17.தனிஇடத்தை நாடுதல்

தனி இடம் என்பது வீட்டைத்துறந்து காடுகளில் வசிப்பது என்று அர்த்தம் இல்லை.

வீட்டில் இருந்தாலும் தனியாக இருப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

குடும்பதினருடன் பேசி,மகிழ்ந்து,பொழுதைப்போக்கக்கூடாது. தங்களுக்குரிய அறையில் தனித்திருக்கவேண்டும்.

18.மக்கள் கூட்டத்தை விரும்பாமல் இருத்தல்

திருவிழாக்கள்,பண்டிகைகள்,மேடை நிகழ்ச்சிகள் போன்று மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது.அப்படி சென்றால் மனம் பாதிக்கப்படும்.உலகத்தைப்பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்,

19ஆத்ம ஞானத்தில் நிலைபெற்றிருத்தல்

நமது இயல்பு என்ன? ஆத்மா.

மனத்தை எப்போதும் அதில் வைக்க வேண்டும்.

20.உண்மைப்பொருள் ஆராய்ச்சி

இறைவன் மட்டுமே எப்போதும் நிலையாக இருப்பர். இந்த பிரபஞ்சம் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பது. இது நிலையில்லாதது. இதை நினைத்துக்கொண்டிருந்தால் இறைவனை அடைய முடியாது என்பதை எப்போதும் ஆராய்ந்து மனத்தை உலகியல் விஷயங்களிலிருந்து விலக்கி எப்போதும் இறைவனை நோக்கி செலுத்தவேண்டும்

-

-

தொடரும்..


ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 51

வகுப்பு-50  நாள்-5-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

இறைவனிடம் பக்தி செய்வது எப்படி?

 

ஸ்ரீகிருஷ்ணர்  நான்கு பாதைகள் கூறுகிறார்

-

1.ஞானத்தை பயன்படுத்தி மனத்தை இறைவனிடம் வை. இறைவனைத்தவிர மற்றவற்றை தவிரத்துவிடு(ஞானம்)

2.எப்போதும் இறைவனைக்குறித்து சித்துத்துக்கொண்டே இரு(தியானம்)

3.இறைவனுக்காக வேலை செய்.(கர்மம்)

4.இறைவனிடம் சரணடைந்து வாழ்.(தியாகம்)

 

மய்யேவ மந ஆதத்ஸ்வ மயி புத்திம் நிவேஷய।

நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்வம் ந ஸம்ஷய:॥ 12.8 ॥

 

12.8 என்னிடத்தே மனதை நிறுத்தி வை. என்னிடத்து புத்தியை செலுத்து. பின்பு என்னிடத்தே வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை

-

அதசித்தம் ஸமாதாதும் ந ஷக்நோஷி மயி ஸ்திரம்।

அப்யாஸயோகேந ததோ மாமிச்சாப்தும் தநம்ஜய॥ 12.9 ॥

 

12.9 தனஞ்ஜயா, இனி சித்தத்தை என்னிடத்தில் உறுதியாக நிலைநிறுத்துவதற்கு இயலாவிட்டால், அப்பொழுது அப்பியாச யோகத்தால் (மனதை இறைவனிடம் வைப்பதற்கு தினமும் ஒழுங்குமுறையுடன் பயிற்சி செய்வது) என்னை அடைய விருப்பம்கொள்

-

அப்யாஸே அப்யஸமர்தோ அஸி மத்கர்மபரமோ பவ।

மதர்தமபி கர்மாணி குர்வந்ஸித்திமவாப்ஸ்யஸி॥ 12.10 ॥

 

12.10 அப்பியாசயோகத்தில் உனக்கு திறமை இல்லாவிட்டால், எனக்காக மேலான கர்மத்தை செய்பவனாக இரு. எனக்காக கர்மத்தை செய்வதாலும் சித்தியை (வெற்றியை) அடைவாய்

-

அதைததப்யஷக்தோ அஸி கர்தும் மத்யோகமாஷ்ரித:।

ஸர்வகர்மபலத்யாகம் தத: குரு யதாத்மவாந்॥ 12.11 ॥

 

12.11 இனி. இதைச் செய்வதற்கும் சக்தியற்றிருந்தால் பிறகு என்னிடம் சரணடைந்து தன்னடக்கம் பயில்பவனாய் எல்லா கர்ம பலனை தியாகம் செய்

-

1.ஞானத்தின் மூலம் இறைவனை வழிபடுதல்

-

இறைவன் எங்கும் நிறைந்தவர்,ஆதி அந்தம் இல்லாதவர்,சர்வசக்தி வாய்ந்தவர்,அனைத்து உயிர்களுமாக ஆகியிருப்பவர் என்பதையெல்லாம் உரியமுறையில் படித்து.ஆராய்ந்து முற்றிலும் தெரிந்துகொண்டபின்

புத்தியை இறைவனிடம் வைத்து. இறைவனைத்தவிர மற்ற எண்ணங்களை எல்லாம் விலக்கவேண்டும்.

இதற்கு ஞானம் கலந்த பக்தி என்று பெயர்.இது ஞானி இறைவனை வழிபடும் நிலை

-

2.தியானத்தின் மூலம் இறைவனை வழிபடுதல்

-

இறைவனை மனத்தில் எப்போதும் நிறுத்துவதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு எண்ணையை ஊற்றும்போது எப்படி இடைவெளி இல்லாமல் தொடர்ந்து விழுகிறதோ.அதேபோல எப்போதும் இறைவனைக்குறித்து தியானித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு நீண்டநாள் பயிற்சி அவசியம்.

-

3.கர்மத்தின் மூலம் இறைவனை வழிபடுதல்

-

மனிதர்களுக்கு செய்யும் தொண்டு,இறைவனுக்கு செய்யும் தொண்டாக நினைத்து சேவை செய்யலாம். கோவில்.குளங்களை சுத்தப்படுத்தலாம். பக்தர்களுக்கு உணவு வழங்கலாம். எல்லா செயலையும் இறைவனுடன் இணைத்து இறைவனுக்காக செயல்புரிய வேண்டும்.அப்படிசெய்தால் எப்போதும் இறை நினைவு இருக்கும்.

-

4.தியாகத்தின் மூலம் இறைவனை வழிபடுதல்.

-

முற்றிலும் இறைவனை சரணடைந்துவிட வேண்டும்.எல்லா செயலின் பலனையும் துறந்துவிட வேண்டும்.

எவ்வளவு துன்பம் வந்தாலும் அவைகள் அனைத்தும் இறைவனிடமிருந்து வருகின்றன என்ற எண்ணத்தில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் முற்றிறும் சரணடைந்துவிட வேண்டும். பூனைக்குட்டி முற்றிலும் தாய்பூனையை நம்பி இருக்கிறது. சில நேரம் உயரமான இடத்தில் கொண்டு வைக்கும். சிலநேரம் இருட்டான இடத்தில் மறைத்து வைக்கும்.

குட்டிப்பூனை அந்த இடத்தில் அப்படியே இருக்கும். வேறு இடத்திற்கு செல்லவே செல்லாது. மியாவ்,மியாவ் என்று கத்த மட்டுமே செய்யும்.

அதேபோல வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அதைப்பற்றி இறைவனிடம் முறையிடக்கூடாது. இறைவனுக்கு தெரியாததா? இறைவனின் விரும்பம் இல்லாமல் இவைகள் வருமா? எனவே முற்றிலும் சரணடைந்துவிட வேண்டும்.

தன்னிடம் உள்ள அனைத்தும் பறிபோனாலும், உண்பதற்கு உணவு இல்லாவிட்டாலும், தங்கியிருப்பதற்கு இடம் இல்லாவிட்டாலும்.அதைக்குறித்து இறைவனிடம் முறையிடக்கூடாது. இறைவனுக்கு தெரியாமல் எதுவும் நடக்குமா? தனக்கு எது கொடுக்க வேண்டும்,தன்னிடமுள்ள எதை எடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியாதா?

எனவே எதைக்குறித்தும் இறைவனிடம் முறையிடக்கூடாது. எல்லாம் அவனுக்கு தெரிந்தே நடக்கின்றன. அவனது விருப்பப்பட்டியே நடக்கின்றன.

தான் அன்பாக வளர்த்த குழந்தை இறந்துவிட்டதா? அழக்கூடாது. இறைவனின் விருப்பப்படி இது நடந்தது.

கடுமையான நோய் தாக்கி மரணவேதனையை அனுபவிக்க நேர்ந்தாலும். எதையும் முறையிடக்கூடாது.

கடும் பசியுடன் ஒரு புலி எதிரே வந்து நிற்கிறதா? உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் செய்யக்கூடாது.

இறைவனுக்கு தெரியாததா? அவனது விருப்பம் இன்றி எதாவது நடக்குமா?

முழுமனதோடு தன் உயிரை தியாகம் செய்யவும் தாயாராக இருக்க வேண்டும்.

இந்த நிலைதான் சரணாகதி நிலை.

-

ஷ்ரேயோ ஹி ஜ்ஞாநமப்யாஸாஜ்ஜ்ஞாநாத்த்யாநம் விஷிஷ்யதே।

த்யாநாத்கர்மபலத்யாகஸ்த்யாகாச்சாம்திரநந்தரம்॥ 12.12 ॥

 

12.12 அப்பியாசத்தை காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் விஷேசமானது, தியானத்தைவிட  உயர்ந்தது கர்மபலனை தியாகம் செய்வது. தியாகத்திலிருந்து விரைவில் சாந்தி உண்டாகிறது

-

இதில் நான்கு படிக்கட்டுகள் உள்ளன.

1.தொடர்ந்து சிந்தித்தல்

2.ஞானம்

3.தியானம்

4.தியாகம்

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இறைவனைக்குறித்து தொடரந்து சிந்திக்க வேண்டும்

இறைவனைப்பற்றி தொடர்ந்து நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கே ஞானம் வரும்.

புத்தங்களை படிப்பதால் ஞானம் வராது. இடைவிடாமல் இறைவனை சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஞானம் வந்தபிறகே தியானம் வரும்.

இறைவனைப்பற்றி எதுவும் தெரியாமல் எப்படி தியானம் செய்வது?

ஏதாவது ஒரு உருவத்தை தொடர்ந்து நினைத்துக்கொண்டிருப்பது தியானம் என்று சிலர் நினைக்கிறார்கள்.அது தவறு.

இறைவனின் இயல்புகள் என்ன என்பதைக்குறித்து தெரியாமல் தியானிக்க முடியாது.

ஞானம் உள்ளவர்களால் மட்டுமே எப்போதும் தியானத்தில் ஆழ்நிருக்க முடியும். சிலருக்கு பிறவியிலிருந்தே தியானம் கைக்கூடியிருக்கும். இதற்கு காரணம் முந்தைய பிறவியில் ஞானத்தை பெற்றிருப்பார்கள்.

தியானத்தில் மூழ்கி இறைக்காட்சி பெற்றவர்களுக்கே சரணாகதி என்பது கைக்கூடுகிறது.

சாதாரணமனிதர்களுக்கு சரணாகதி ஏற்படாது.

தன் உயிரைக்கூட துச்சமாக மதிக்கும் இயல்பு யாருக்கு வரும்?

ஏற்கனவே இறைக்காட்சி பெற்றவர்களுக்கே வரும்.

எனவே சரணாகதி என்பது எல்லாவற்றிலும் உயர்ந்த படி.