தினம் ஒரு மகானின் வாழ்க்கை வரலாற்றை அறிவோம்
-
சைதன்யர்
-
மகாபிரபு என்று போற்றப்படும் கிருஷ்ண சைதன்யர். கி.பி. 1486 பிப்ரவரி 18 அன்று மேற்கு வங்கம் நதியா மாவட்டத்திற்கு அருகே மாயாபூரில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் சந்திரகிரகணம் நடக்கும் போது சைதன்யர் அவதரித்தார். அப்போது மக்கள் ஹரிபோல் ஹரிபோல் என்று கூவியபடி பாகீரதி நதியில் நீராடிக் கொண்டிருந்தனர். இந்த நிகழ்வே அவரது வாழ்க்கைப் பணியின் ஓர் அடையாளத்தைக் குறிக்கிறது. சைதன்யரின் தந்தை ஜகந்நாத மிஸ்ரர். தாயார் சசிதேவி. தாத்தாவானவர் குழந்தையின் தெய்வீக தேஜசைக் கண்டு இவன் பிற்காலத்தில் மிகப் பெரிய மகானாக விளங்குவான் என்று ஆருடம் கூறி, விஸ்வம்பர் என்று அக்குழந்தைக்குப் பெயரிட்டார். குழந்தையின் பொன்னிற மேனியைக் கண்டு அவ்வூர்ப் பெண்கள் கவுர்ஹரி என்ற பெயரிட்டார்கள். அவரது தாய் நிமாய் என்று அழைப்பார். அவரது குழந்தைப் பருவத்தில் நடந்த பல அசாதாரணமான நிகழ்வுகள் குறிக்கப்பட்டுள்ளன. குழந்தை அழுதால் ஹரி போல் என்றால் போதும் அழுகையை நிறுத்தி, சிரிக்க ஆரம்பிக்கும்.
பாலகனான விஸ்வம்பர் தனது தெய்வீக மகிமையை உணர்ந்தே இருந்தான். ஒருமுறை அவனது இல்லத்திற்கு விருந்தாளியாக வந்த ஓர் அந்தண யாத்திரிகர், உணவு சமைத்து இறைவனுக்கு நிவேதித்துவிட்டு, தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது நிமாய் அங்கு வந்து நிவேதனத்தை உண்டான். அந்தணர் மீண்டும் சமைத்து நிவேதித்தபோதும் அவன் உண்டான். மூன்றாம் முறையும் அப்படியே நடந்தபோது அந்த அந்தணர் நிமாயமாக அவதரித்திருப்பது சாட்சாத் கிருஷ்ணரே என்பதை அப்போது கிடைத்த தரிசனத்தில் உணர்ந்து கொண்டார். இதுபோன்று பல நிகழ்வுகள் நடந்தன. பெரியோர்கள் நிமாயைத் தெய்வமாகவே போற்ற ஆரம்பித்தனர். தமது 13- வது வயதிலேயே வியாகரணம், அலங்காரம், நியாயம் போன்ற சாஸ்திரங்களையும் ஸ்மிருதிகளையும் தெளிவாகக் கற்றுவிட்டார். நிமாய், அவ்வூரிலே அவர் தலைமைப் பண்டிதராக விளங்கினார்.
-
நிமாய்க்கு திருமணம் நடந்திருந்தாலும் அவருக்கு இல்லறத்தில் சிறிதும்கூட நாட்டமில்லை. 16-வது வயதில் அவர் கயை க்ஷேத்திரத்தில் ஈஸ்வரபுரி என்ற வைணவத் துறவியிடம் தீக்ஷை பெற்றார். விளைவு அவர் கிருஷ்ண பக்தராகி, கிருஷ்ண பிரேமை வளர்ந்து அதன் வடிவமே ஆனார். அதன்பின் பகவானின் மகிமையைப் பாடி, பக்தியைப் பரப்புபவராகவும் ஆனார் நிமாய். இரவு நேரங்களில் கீர்த்தனை சபையில் பகவத் நாம பித்தேறி நர்த்தனம் ஆடுவார். வீதிகளில் அவர் சங்கீர்த்தனம் செய்துகொண்டே மெய் மறந்து செல்வார். திடீரென்று மூர்ச்சையாகி கீழே விழுவார். உணர்வுபெற்று எழுந்தபின் அடியார்களிடம், நீங்கள் என் மிகப் பிரியமான நண்பர்கள். உங்களுக்கு எனது பிரார்த்தனை இதுவே. உங்கள் வீட்டில் கிருஷ்ண சங்கீர்த்தனம் எப்போதும் செய்யுங்கள். கிருஷ்ண நாமம் ஜபியுங்கள். அவனது லீலைகளைப் பாடுங்கள். அவனை வழிபடுங்கள் என்று வேண்டுவார்.
-
நிமாய் தமது 24- ஆம் வயதில் ஆதிசங்கரர் பரம்பரையில் வந்த கேசவபாரதி என்ற துறவியிடம் சன்னியாச தீக்ஷை பெற்று, கிருஷ்ண சைதன்யர் என்ற நாமம் பெற்றார். பல பண்டிதர்களுக்கும் அறிஞர்களுக்கும் பக்தியின் மகிமையைப் புரிய வைத்தார். பலர் சைதன்யருக்குச் சீடர்களாயினர். அவர்கள் கோசுவாமிகள் என்று போற்றப்படுகிறார்கள். வீடுவிடாகச் சென்று ஹரிநாமத்தைப் பரப்புங்கள் என்பதே அவர் தம் சீடர்களுக்கு இட்ட கட்டளை. பாரத தேசமெங்கும் யாத்திரை மேற்கொண்டு பக்தியைப் பரப்பினார் சைதன்யர். யாத்திரையின்போது பவுத்தர், ஜைனர், மாயாவாதிகள் போன்றோரை வாதங்களில் வென்று அவர்களை வைணவர்களாக்கினார்.
சைதன்யர் பகவத் பக்தியின் மூலம் ஜாதி, மத வேறுபாடுகளை அறவே ஒழித்தார். பகவானின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதை விளங்க வைத்தார். ஒருமுறை ஆந்திராவிலுள்ள கூர்ம க்ஷேத்திரத்திற்கு சைதன்யர் வந்தார். அங்கு வாசுதேவன் என்ற அந்தணன் குஷ்ட நோயால் துன்புற்று வந்தான். புழுக்கள் அவன் அழுகிய சதையிலிருந்து கீழே விழும்போது அதனைப் பொறுக்கி, தன் சதை மீதே வைத்துவிடுவான். காரணம் அவை துன்புற்று இறந்துவிடக்கூடாதே என்ற எண்ணம் அவனது கருணை உள்ளத்தைக் கண்டு சைதன்யர் அவனைத் தழுவி கொண்டார். உடனே அவனது நோயும் துயரமும் மறைந்து அவன் உடல் அழகோடு விளங்கியது. அந்த அந்தணன், உங்கள் அருளால் என் நோய் நீங்கிவிட்டது. இப்போது இந்த அழகின் காரணமாக எனக்கு அகங்காரம் வந்துவிடுமோ என அஞ்சுகிறேன் என்றான். அதற்கு சைதன்யர், உன்னை அகங்காரம் அண்டாது. கிருஷ்ண நாமத்தை எப்போதும் கூறு. அவரைப் பற்றி மக்களுக்குப் போதித்து அவர்களை உய்வடையச் செய் என்று அருளினார்.
-
சைதன்யரால் மனிதர்கள் மட்டுமல்ல, கானக விலங்குகள்கூட ஹரிநாம சங்கீர்த்தனத்தில் பித்தேறி நடனமாடின. ஒருமுறை அவர் பிருந்தாவனத்திற்கு பலபத்ர பட்டாச்சாரி என்பவருடன் யாத்திரை சென்றார். காட்டு வழியில் கிருஷ்ண நாமத்தைப் பாடிக் கொண்டே சென்றார். புலிகளும் யானைகளும் மற்ற விலங்களும் அவர் செல்வதற்கு வழிவிட்டன. ஒருநாள் பாதையில் மெய்மறந்த நிலையில், படுத்திருந்த ஒரு புலியை அவர் மிதித்துவிட்டார். அதனிடம், கண்ணனின் நாமத்தைப் பாடு என்றார். உடனே புலி ஆடத் தொடங்கியது. இவ்வாறே, யானை, புலி, மான் போன்ற கூட்டங்களிலும் நடந்தது. எல்லா விலங்குகளுமே அவரோடு சேர்ந்து நடனமாடின. மரங்களும் செடிகளும் ஆனந்த வசப்பட்டன.
-
கோதாவரி நதிக்கரையில் ராமானந்தர் என்பவருக்கு சைதன்யர் தமது ராதாகிருஷ்ண வடிவினைக் காட்டி அருள்புரிந்தார். இப்படிப் பல பக்தர்களுக்குத் தமது கிருஷ்ண ரூபத்தைக் காட்டி அவர்களை ஆட்கொண்டார். தமது 48- வது வயதில் சைதன்யர் புரி க்ஷேத்திரத்தில் மகாசமாதி அடைந்தார். சைதன்யர் தமது சீடர்கள் மூலம் துவக்கிவைத்த பக்தி அமைப்பானது பல கிளைகளாகப் பரவி உலகில் பக்தியைப் பரப்பி வருகிறது. உனது உலகக் கடமைகளைத் தார்மீக நெறிப்படி செய்து வா. ஆனால் அவற்றில் பற்றுக்கொண்டு சிக்கிக் கொள்ளாதே. நெஞ்சில் பக்தியை வைத்தபடி வெளியில் உனது கடமைகளைச் செய். கிருஷ்ணன் உன்னை எல்லா பந்தங்களிலிருந்தும் ஆட்கொள்வான் என்பது அவரது உபதேசங்களில் ஒன்று. சுவாமி பரமாத்மானந்தர், கண்ணனும் ராதையும் ஒருங்கே அவதரித்த வடிவமே கிருஷ்ண சைதன்ய வடிவம். கோபியர்களின் அன்பையும், ராதையின் உயர்ந்த நிலையையும், உபதேசத்தாலும் அனுபவத்தாலும் உலகிற்கு எடுத்துக்காட்டி, அதன் உண்மையை நிலைநாட்டும் நோக்கத்துடன் அவர் வட இந்தியாவில் அவதரித்தார்.
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழு
No comments:
Post a Comment