வேதாந்த மூளையுடனும் இஸ்லாமிய உடலுடனும் கூடிய வருங்காலத்தின் பரிபூரண இந்தியா எழுவதை என் மனக்கண் முன்னால் காண்கிறேன்
-
மதம்,சிந்தனை இவற்றின் அறுதிச் சொல் அத்வைதமே. எல்லா மதங்களையும்,நெறிகளையும் அந்த நிலையிலிருந்து மட்டுமே அன்புடன் நோக்க முடியும்.அறிவொளி பெற்ற வருங்கால மனித சமுதாயத்தின் மதமாக இருக்கப்போவது அதுவே என்பது என் நம்பிக்கை.மற்ற இனத்தினருக்கு முன்பே அதை அடையப்பெற்றவர்கள் என்ற பெருமை இந்துக்களுக்கு வரலாம்.அரேபியர்களையும்,ஹீப்ரூக்களையும்விட இந்துக்கள் புனிதமான இனத்தினர்.ஆனாலும் மனித இனம் அனைத்தையும் தனது ஆன்மாவாகவே நோக்கி அதற்கேற்ப வாழ்வதான செயல்முறை அத்வைதம் இந்துக்களிடையே ஒருபோதும் வளரவில்லை. இந்த சமத்துவ நிலையை ஏதாவது மதம் ஓரளவிற்காவது அணுகியிருக்கிறது என்றால் அது முகமதியமதம் மட்டுமே.இது எனது அனுபவம்
-
வேதாந்த கொள்கைகள் எவ்வளவு நேர்த்தியாக சிறப்பாக இருந்தாலும் செயல்முறை முகமதிய மதத்தின் உதவியில்லாமல் மனித இனத்திற்குச் சிறிதும் பயன்இல்லை.வேதங்களோ,பைபிளோ,குரானோ இல்லாத ஓரிடத்திற்கு மனித இனத்தை அழைத்துச்செல்ல நாம் விரும்புகிறோம்.ஆனால் வேதங்களையும் பைபிளையும் குரானையம் சமரசப்படுத்துவதன் மூலம் இது செய்யப்பட வேண்டும். ஒருமை தத்துவமான ஒரே மதத்தின் பல்வேறு வெளிப்பாடுகளே உலக மதங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற நெறியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவே இவ்வாறு பல மதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மனித இனத்திற்குப் போதிக்க வேண்டும். இந்துமதம்,இஸ்லாம் ஆகிய இருபெரும் மதங்களின் சேர்க்கையே,அதாவது வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் நமது தாய் நாட்டிற்கு ஒரே நம்பிக்கை.
-
இந்த குழப்பத்திலிருந்தும் போராட்டத்திலிருந்தும் பெருமை பொருந்தியதாக,யாராலும் வெல்லப்பட முடியாததாக,வேதாந்த மூளையுடனும் இஸ்லாமிய உடலுடனும் வருங்காலத்தின் பரிபூரண இந்தியா எழுவதை என் மனக்கண்ணால் நான் காண்கிறேன்.
-
மனித இனத்தின் உதவிக்காகவும்,முக்கியமாக நமது மிகமிக ஏழைத் தாய்நாட்டின் உதவிக்காகவும் இறைவன் உங்களை ஒரு பெரிய கருவி ஆக்குவாராக என்று எப்போதும் பிரார்த்திக்கிறேன்
-
சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம் புத்தகம் 11 பக்கம் 152
No comments:
Post a Comment