Sunday, 25 February 2018

ஸ்ரீராமகிருஷ்ணர்-புதிய தொடர் பாகம்-1

ஸ்ரீராமகிருஷ்ணர்-புதிய தொடர் பாகம்-1
--
வங்காள மாநிலத்தில் ஹுக்ளி மாவட்டத்தில் காமார்புகூர் என்ற கிராமத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்தார். கதாதரர் என்பது அவரது இயற்பெயர்.
நாமும் வளர்ந்து பெரியவனாகும் வரை அந்த பெயரிலேயே அழைப்போம்.
-
ஹுதிராமுக்கும், சந்திராவுக்கும் மகனாக 1836 பிப்ரவரி 17 புதன்கிழமை கதாதரர் பிறந்தார்.
கதாதரர் குழந்தையாக இருந்த போதே காண்போரை சுண்டியிழுக்கும் கவர்ச்சி நிறைந்தவனாக காணப்பாட்டான்.
அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லாம் சந்திராதேவியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து அந்த குழந்தையை காண்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
பக்கத்து கிராமத்து பெண்கள் கூட கதாதரனை காண சந்திராவின் வீட்டிற்கு வருவதுண்டு. சந்திரா ஏன் எல்லோரும் அடிக்கடி இங்கு வருகிறீர்கள் என்று கேட்கும் போது, என்ன செய்வது உனது மகனை பார்க்கும் போது எங்களுக்கு ஆனந்தம் ஏற்படுகிறது, அவனை பார்க்காமல் எங்களால் இருக்க முடியவில்லை என்று பதில் சொல்வார்கள்.
ஹுதிராம் சிறுவயதில் பெரிய செல்வந்தராக வாழ்ந்து வந்தார்.ஆனால் ஜமீன்தார் ஒருவரின் சூழ்ச்சியின் காரணமாக அனைத்து சொத்துக்களையும் இழந்து ஏழ்மைநிலையில் குடிசையில் வாழக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஏழையாக இருந்தாலும் அவர் நல்லவராகவும், இறைவன்மீது பக்தி கொண்டவராகவும்.இரக்கசிந்தனை உடையவராகவும் இருந்தார்.
-
கதாதரனின் தாயார் சந்திராவும் அதே போல் இறைவனிடம் பக்தியும், நற்குணங்களும் பெற்றிருந்தார். அவர்களுக்கு ,ராம்குமார்(1805), காத்யாயினி(1810),ராமேஸ்வரர்(1826),கதாதரன்(1836), சர்வமங்களா (1840)என ஐந்து குழந்தைகள்.
கதாதரன் வளர வளர அவனது அறிவுக்கூர்மையும் நினைவாற்றலும் வளர்ந்தன. அவனது அபார அறிவாற்றல் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது.
ராமாயணம், மகாபாரதம் உட்பட அனைத்து தேவதேவியரின் கதைகளையும் தந்தை அவனுக்கு எடுத்துக்கூறுவார். கதாதரன் அவற்றை நன்றாக மனதில் பதியவைத்து, அவற்றை திருப்பிச்சொல்லும் திறமையும் பெற்றிருந்தான். ஆனால் கணிதத்தில் கூட்டல், பெருக்கல் போன்றவை அவனுக்கு பலமுறை சொல்லிக்கொடுத்தும், அதில் ஆர்வம் இல்லை என்பதை தந்தை கண்டார். எனவே பள்ளிக்கு அனுப்பிவைக்க முடிவெடுத்தார்.
கதாதரன் வளரவளர அவனுக்கு குறும்புகளும் கூடவே வளர்ந்தன. பள்ளிக்கு செல்வதற்கு பதிலாக கிராமத்திற்கு வெளியே சென்று விருப்பம்போல் விளையாடுவான். யாத்ரா எனப்படும் திறந்தவெளி நாடகத்திற்கு யாரிடமும் சொல்லாமல் சென்றுவிடுவான்.
-
தொடரும்...
-

No comments:

Post a Comment