Tuesday, 13 February 2018

ஸ்ரீமத் பகவத்கீதை=அத்தியாயம்-8


ஸ்ரீமத் பகவத்கீதை=அத்தியாயம்-8
-
அர்ஜுனன் சொன்னது,
-
8.1 புருஷோத்தமா, அந்த பிரம்மம் எது? அதிபூதம் எது?அத்யாமம் எது? கர்மம் என்பது எது? அதிபூதம் என்று எது சொல்லப்படுகிறது.
-
8.2 மதுசூதனா, இங்கே இந்த தேகத்தில் யார் எப்படி அதியயக்ஞனாக இருக்கிறார்? மரணகாலத்தில் தன்னடக்கம் பழகியவர்களால் எங்ஙனம் அறியப்படுபவர் ஆகின்றீர்?
-
8.3 ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது
அழிவற்றதாகவும் மேலானதாகவும் இருப்பது பிரம்மம். ஸ்வபாவம் (குணங்கள்) அத்யாத்மம் என்று சொல்லப்படுகிறது. உயிர்களை உண்டுபண்ணி நிலைத்திருக்கச்செய்வதாகிய வேள்வி கர்மம் எனப்படுகிறது.
-
8.4 அர்ஜுனா, அழியும் பொருள் அதிபூதம் என்று சொல்ப்படுகிறது.(உடல் அதிபூதம்) புருஷன் அதிதெய்வம் எனப்படுகிறான். இனி தேகத்தினுள் நானே அதியக்ஞமாகிறேன் (நான் உணர்வையும் கடந்த நிலை,நான் உணர்வை தியாகம் செய்யும் நிலை அதியக்ஞம்)
-
8.5 மரணகாலத்திலாவது என்னையே நினைத்துக்கொண்டு, உடலைவிட்டு போகிறவர்கள், என் சொரூபத்தை அடைகிறான். இதில் சந்தேகமில்லை
-
8.6 குந்தியின் புதல்வா, மரணதருவாயில் எந்த எந்த பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை விடுகிறானோ, எப்பொழுதும் அப்பொருளையே நினைத்துக்கொண்டிருப்பவனாகிய அவன் அதையே அடைகிறான்.
-
8.7 ஆகையால் எல்லா காலமும் என்னை நிதை்து யுத்தம் செய். மனம் புத்தியை என்னிடம் அர்ப்பணம் செய்வதால், சந்தேகமின்றி என்னையே அடைவாய்
-
8.8 பார்த்தா, வேறு விஷயங்களில் செல்லாத மனத்துடன்,யோகத்தை அப்பியாசம் செய்து (அப்பியாசம் என்பது தொடர்து செய்யும் பயிற்சி) சித்தத்தால் திவ்யமான மேலான புருஷனை சிந்தனை செய்பவன் அதை அடைகிறான்.
-
8.9,10 முற்றும் உணர்ந்தவனை,ஆதிகாலத்தவனை, அனைத்தையும் ஆளுபவனை, அணுவைவிட நுண்மையானவனை, அனைத்தையும் தாங்குபவனை, சிந்தனைக்கு எட்டத வடிவானவனை, சூரியனைப்போல் ஒளிர்பவனை, இருளுக்கு அப்பாற்பட்டவனை, மரணகாலத்தில், பக்தியோடும், யோகபலத்தோடும், புருவத்தின் மத்தியில் பிராணனை முழுவதும்வைத்து, யார் நினைக்கிறானோ, அவன் மேலான திவ்யபுருஷனை அடைகிறான்.
-
8.11 வேதத்தை அறிந்தவர்கள், எதை அழிவற்றது என்கின்றனர்? பற்று நீங்கிய சந்நியாசிகள் எதனுள் புகுகிறார்கள். எதை விரும்பி பிரம்மச்சர்யத்தை கடைபிடிக்கின்னரோ அந்தநிலையை உனக்கு சுருக்கமாக சொல்கிறேன்.
-
8.12,13 எல்லா துவாரங்களையும் அடக்கி (கண்,காது உட்பட 9துவாரங்களை) மனதை ஹிருதயத்தில் நிறுத்தி தன் பிராணனை உச்சந்தலையில் வைத்து யோகசாதனையில் நிலைபெற்று ஓம் என்கின்ற ஓரெழுத்து அழிவற்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, உடலைவிட்டு யார் போகிறாரோ அவன் மேலான நிலையை பெறுகிறான்.
-
8.14 பார்த்தா, வேறு எண்ணமின்றி யார் என்னை எப்போதும் இடைவிடாமல் நினைக்கிறானோ, யோகத்தில் நிலைபெற்ற அவனுக்கு நான் எளிதில் அகப்படுகிறேன்.
-
8.15 மேலான பக்குவப்பட்ட மகாத்மாக்கள் என்னை அடைந்து, துன்பத்திற்கு இருப்பிடமான, நிலையற்றதான மறுபிறப்பை எடுப்பதில்லை
-
8.16 அர்ஜுனா, பிரம்மலோகம்வரை உள்ள உலகங்கள் மறுபிறப்பை உடையவை. ஆனால் குந்தியின் புதல்வா, என்னை அடைந்தால், மறுபிறப்பு இல்லை
-
8.17 ஆயிரம் யுகங்களை உடையது வேதத்தின் ஒரு பகல். ஆயிரம் யுகங்கள் இரவு. இதனை அறிபவர் இரவு பகல் பற்றிய தத்துவத்தை அறிந்தவர் (வேதத்திலிருந்தே படைப்பு துவங்குகிறது)
-
8.18 பகல் வரும்பொழுது தோன்றா நிலையிலிருந்து எல்லா தோற்றங்களும் வெளிப்படுகின்றன. இரவு வரும்பொழுது ஒடுங்குகிறது, அதனுள்ளேயே மறைகின்றன.
-
8.19 அர்ஜுனா, அதே இந்த பூதங்கள் எல்லாம் (பஞ்சபூதங்களால் ஆன உயிர்கள் மற்றும் எல்லாம்) பிறந்து பிறந்து இரவு வரும்போது ஒடுங்குகிறது. பகல்வரும்போழுது தன்வசமின்றி வெளிப்படுகிறது
-
8.20 ஆனால் அந்த அவ்யக்தத்தை காட்டிலும் மேலான அவ்யக்தமாய் எப்பொழுதும் இருப்பது எது உள்ளதோ, அது எல்லா பூதங்களும் அழியும்போதும் (பிரளயகாலத்திலும்) அழிவதில்லை (சாங்கியதத்துவத்தை படித்து அவ்யக்தத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.பிரளயகாலத்தில் எல்லா பூதங்களும் அவ்யக்தம் என்ற மூலப்பொருளுடன் ஒடுங்குகிறது.இந்த மூலப்பொருள் எப்போதும் இருப்பது.அழியாதது.எந்த மூலப்பொருளும் அல்லாத இன்னொன்று உள்ளது. அது பிரம்மம்.பிரம்மமும் எப்போதும் இருப்பது.அழியாதது)
-
8.21 அவ்யக்தம் அழியாதது என்று சொல்லப்படுகிறது. அதை பரமகதி என்று சொல்லுவர். எதை அடைந்துதிரும்பி வருவதில்லையோ அது என்னுடைய பரமபதம். ( இரண்டு நிலைகள் கூறப்படுகின்றன.ஒன்று அவ்யக்தத்தை அடைதல். இன்னொன்று பிரம்மத்தை அடைதல்.அவ்யக்தத்தை அடைந்தவர் தேவைப்பட்டால் மீண்டும் பிறக்கலாம்.)
-
8.22 அர்ஜுனா, பூதங்கள் எவனுள் இருக்கின்றனவோ, எவனால் இவையாவும் வியாபிக்கப்பட்டும் இருக்கின்றனவோ அந்த பரமபுருஷன் அனன்யபக்தியால் (எதையும் எதிர்பார்க்காத பக்தி) அடையப்படுகிறான்
-
8.23 அர்ஜுனா,எக்காலத்தில் உடலைவிடுகின்ற யோகிகள் திரும்பிவரமாட்டார்கள்,அதேபோல் எக்காலத்தில் உடலைவிடும் யோகிகள் திரும்பிவருவார்கள் என்பதை சொல்கிறேன்.
-
8.24 தீ, ஒளி, பகல், சுக்லபக்ஷம்(வளர்பிறை15 நாட்கள்), உத்தராயணம் ஆறுமாதம் (ஆண்டின் 6மாதம்) அதில் உடலைவிடும் பிரம்மஞானிகள் பிரம்மத்தை அடைகிறார்கள்
-
8.25 புகை, இரவு அங்ஙனம், கிருஷ்ணபக்ஷம் (தேய்பிறை 15 நாட்கள்),தக்ஷிணாயனத்தின் ஆறுமாதம் (ஆண்டின் கடைசி 6 மாதங்கள்) அதில் உடலைவிடும் யோகியானவன், சந்திரலோகத்தை அடைந்து திரும்பிவருகிறான். (சந்திரலோகம் என்பது முன்னோர்கள் வாழும் மேல் உலகம்)
-
8.26 ஒளியும் இருளும் ஆகிய இவ்விரண்டு வழிகள் இயற்கையில் என்றென்றும் உள்ளன. ஒன்று மீண்டும் பிறவாமைக்கு அழைத்து செல்கிறது. மற்றொன்று மறுபிறப்பைத் தருகிறது.
-
8.27 பார்த்தா, இவ்விரண்டு வழிகளையும் அறிகின்ற எந்த யோகியும், மோகத்தை அடைவதில்லை. ஆகையால் எப்பொழுதும் யோகத்தில் நிலைத்திருப்பவனாக இரு 
-
8.28 வேதங்களை ஓதுவதிலும், யக்ஞம் செய்வதிலும், தவம் செய்வதிலும், தானங்கள் கொடுப்பதிலும்கூட எந்த புண்ணியபலனாது சொல்லப்பட்டிருக்கிறதோ, அதை அறிந்து யோகியானவன் அதையெல்லாம் கடந்து செல்கிறான் (புண்ணியபலன்களை துறந்துவிடுகிறான்) ஆதிநிலையை (பிரம்மத்தை) அடைகிறான்.
-
எட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது

No comments:

Post a Comment