Tuesday, 13 February 2018

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-6


ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-6
ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது.
-🌸
6.1 யார் கர்மபலனை சாராமல் செய்ய வேண்டிய கர்மத்தை செய்கிறானோ அவன் சந்நியாசியும் யோகியும் ஆகிறான். அக்கினியை ( சந்நியாசிகள் பிச்சையேற்றுதான் உண்ணவேண்டும். தானே சமைத்து உண்ணக்கூடாது) பயன்படுத்தாதவனும். கர்மத்தை (சந்நியாசிகளுக்கு எந்த கடமையும் இல்லை. எனவே வேலைசெய்யக் கூடாது என்பது விதி) செய்யாதவனும் சந்நியாசி அல்ல
-🌸
6.2 பாண்டவா, எதை சந்நியாசம் என்று சொல்கிறார்களோ, அதையே யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை (சங்கல்பம் என்பது ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற ஆசையால், எழும் உறுதியான எண்ணம்) துறக்காதவன் யோகியாவதில்லை
-🌸
6.3 யோகத்தை அடையவிரும்புகின்ற முனிவனுக்கு கர்மம், அதற்கான வழியாக அமைகிறது. யோகத்தை அடைந்தவனுக்கு செயலின்மை சிறந்தது என்று சொல்லப்படுகிறது
-🌸
6.4 எப்பொழுது இந்திரிய விஷயங்களில் பற்றுவைப்பதில்லையோ, கர்மம் செய்வதில் விருப்பம் இல்லையோ, எல்லா சங்கல்பங்களையும் விட்டுவிடுகிறானோ, அப்பொழுதுதான் யோகாரூடன் (யோகநிலையை அடைந்தவன்) என்று சொல்லப்படுகிறான்
-🌸
6.5 தன்னைத்தானே உயர்த்திக்கொள். தன்னை தாழ்த்திக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் தனக்கு தானே நண்பன், தனக்கு தானே பகைவன்
-🌸
6.6 யார் தன்னைத்தானே ஜெயித்தவனோ. அவன் தனக்குதானே உறவினன். ஆனால் தன்னை தானே ஜெயிக்காதவன் தனக்குதானே பகைவன்போல், பகைமையை எதிர்கொள்ள வேண்டிவரும்
-🌸
6.7 தன்னை வென்றவனுக்கு, மனம் தெளிந்தவனுக்கு குளிர்,வெப்பம், சுகம்,துக்கம், மான அவமானம் போன்றவை வரும்போது பரமாத்மாவில் நிலைத்திருப்பான்
-🌸
6.8 ஞான விக்ஞானத்தில் திருப்பியடைந்தவன் (ஞானம் என்பது அறிவு. விக்ஞானம் என்பது அந்த அறிவை நடைமுறையில் பின்பற்றுவது.தன்னை அனைத்து உயிர்களிலும் கண்டால் விக்ஞானம்) அசையாதவன், இந்திரியங்களை ஜயித்தவன், மண்,கல்,பொன் இவைகளை சமமாக பார்ப்பவன் யோகி. இவன் யுக்தன் என்று சொல்லப்படுகிறான்.(யோகத்தில் வெற்றிபெற்றவன் யுக்தன்)
-🌸
6.9 நல்லெண்ணமுடையவர், நண்பர், பகைவர், வெறுப்புக்குரியவர், சுற்றத்தார், சாதுக்கள், பாபிகள் போன்ற அனைவரிடமும் சமமான மனதையுடையவன் (உயர்வுதாழ்வு காணாதவன்) சிறந்தவன்
-🌸
6.10 யோகி, யாருக்கும் தெரியாதவனாக தன்னந்தனியாக இருந்துகொண்டு சித்தத்தையும், தன்னையும் அடக்கிக்கொண்டு, ஆசையற்றவனாய், பொருட்கள் எதுவும் இல்லாதவனாய், எப்பொழுதும் தன்னை ஒன்றுபடுத்த வேண்டும் (தன்னில் நிலைபெற்றிருக்க வேண்டும்)
-🌸
6.11 சுத்தமான இடத்தில், உறுதியானதும், அதிக உயரமில்லாததும்(உயரமான இடத்தில் அமர்ந்தால் கீழே விழலாம்), மிக தாழ்வல்லாத (தாழ்வான இடத்தில் அமர்ந்தால் பூச்சிகள் தொந்தரவு செய்யலாம்), துணி,தோல், தர்ப்பை இலைகளை மேலே விரித்து அமர்ந்து, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
-🌸
6.12 அந்த ஆசனத்தில் அமர்ந்து மனதை ஒருமைப்படுத்தி சித்தம், இந்திரியம் இவைகளின் செயல்களை அடக்கி, தன்னை தூய்மைப்படுத்துவதற்காக யோகம் பயிலவேண்டும்.
-🌸
6.13 உடல், தலை, கழுத்து இவைகளை நேராகவும் அசையாமலும் வைத்துக்கொண்டு உறுதியாய் இருந்துகொண்டு, தன்னுடைய மூக்குநுனியை பார்த்துக்கொண்டு,வெளிஉலகை பாராமல் இருக்க வேண்டும்.
-🌸
6.14 அமைதியான உள்ளத்தையுடையவன், பயம் நீங்கியவன், பிரம்மச்சர்யத்தில் நிலைபெற்றவன். மனதை அடக்கி, சித்தத்தை என்பால் வைத்தவன், என்னையே குறிக்கோளாக கொண்டு, யுக்தனான(ஏற்கனவே கர்மயோகத்தை நிறைவுசெய்தவனாக) அமர்ந்திருக்க வேண்டும்.
-🌸
6.15 இவ்விதம் எப்பொழுதும் மனதை தியானத்தில் நிறுத்தி உள்ளத்தையடக்கிய யோகியானவன், என்மேலான நிலையான, நிர்வாணத்தை பெற்று சாந்தியை அடைகிறான்
-🌸
6.16 அர்ஜுனா, அதிகமாக உண்பவனுக்கு யோகம் கைக்கூடுவதில்லை. ஒன்றுமே உண்ணாதவனுக்கும் யோகம் கைக்கூடுவதில்லை. அதிகநேரம் தூங்குபவனுக்கும் அதிகமாக விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை
-🌸
6.17 உண்பதிலும், உடல்வேலைகள் செய்வதிலும் அளவுடன் இருப்பவனுக்கு, கர்மங்களை செய்வதில் யுக்தனாக இருப்பவனுக்கு, உறங்குவதிலும், விழித்திருப்பதிலும் முறையாக இருப்பவனுக்கு யோகமானது, துன்பத்தை போக்குவதாக அமைகிறது
-🌸
6.18 எப்பொழுது. நன்றாக அடக்கப்பட்ட சித்தம் தன்னிலேயே நிலைபெற்றிருக்கிறதோ, அப்பொழுது எல்லா கர்மங்களிலிருந்தும் ஆசை நீங்கியவனாகிறானோ, அப்பொழுது யுக்தன் என்று சொல்லப்படுகிறான்
-🌸
6.19 காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட தீபமானது எப்படி அசையாமல் இருக்குமோ அப்படியே, தன்னை(ஆத்மாவை) தியானிக்கின்ற யோகியின் அடங்கிய மனம் அசையாமல் இருக்கும்.
-🌸
6.20,21 எப்பொழுது யோகப்பயிற்சியால் நன்கு அடக்கப்பட்ட சித்தம் அமைதிபெறுமோ, மேலும் எப்பொழுது தன்னிடமே தன்னைக்கண்டு தான் மகிழ்வுறுகிறானோ , புத்தியினால் உணரக்கூடியதும், இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதும், முடிவேயில்லாததும் எதுவோ, அந்த சுகத்தை இவன் (யோகி) அறிகிறான். இன்னும் எங்கும் நிலைத்தவனாய், தன்ஸ்வரூபத்திலிருந்து அவன் அசைவதில்லை. (தான் எங்கும் நிறைந்திருப்பதையும் தன்னில்தானாக நிலைத்திருப்பதையும் உணர்கிறான்)
-🌸
6.22,23 யதை அடைந்து, அதைவிடவும் அதிகமான வேறு லாபத்தை மனம்விரும்புவதில்லையோ, எதில் நிலைத்திருந்து மிகப்பெரிய துன்பத்தாலும் அசைக்கப்படுவதில்லையோ, அதை , துக்கத்தின் சேர்க்கையிலிருந்து பிரிந்த நிலையையே யோகம் என்று சொல்லப்பட்டதாக அறிந்துகொள். கலங்காத நெஞ்சத்துடன் அந்த யோகத்தை நிச்சயமாக பயிலவேண்டும்.
-🌸
6.24,25 சங்கல்பத்திலிருந்து பிறந்த எல்லா ஆசைகளையும் பாக்கியில்லாமல் துறந்துவிட்டு, மனதாலேயே எல்லா இடங்களிலிருந்தும் இந்திரியங்களை நன்கு அடக்கிக்கொண்டு, உறுதியான புத்தியினால் மனதை தன்னிடத்தில் நிற்கச்செய்து, சிறிதுசிறிதாக அமைதிபெற வேண்டும். வேறு ஒன்றையும் சிந்திக்கக்கூடாது
-🌸
6.26 சஞ்சலமானதும், அசையக்கூடியதான மனமானது எக்காரணத்தினால் அலைகிறதோ, அதை அதிலிருந்து எடுத்து, அடக்கி, தன்வசத்தில் கொண்டுவர வேண்டும்.
-🌸
6.27 சாந்தமான மனதையுடையவன், ரயோகுணத்தின் வேகம் தணிந்தவன், பாபம் அற்றவன், பிரம்மமானவன்( எல்லா உயிர்களையும் தனதாக காண்பவன்) இப்படிப்பட்ட யோகியைத்தான் உயர்ந்த சுகம் வந்தடைகிறது
-🌸
6.28 இவ்விதம் எப்பொழுதும் மனதை தன்னிடமே நிலைநிறுத்திய பாபம் நீங்கப்பெற்ற யோகியானவன், எளிதில் பிரம்மத்தை அடைவதால்வரும் பேரானந்தத்தை அடைகிறான்
-🌸
6.29 யோகத்தில் நிலைபெற்றவன் எங்கும் சமமான பார்வையுடையவன், தன்னை எல்லா உயிர்களிடத்திலும், எல்லா உயிர்களையும் தன்னிடத்திலும் காண்கிறான். (தானே எல்லா உயிர்களாகவும் ஆகியிருப்பதை காண்கிறான்)
-🌸
6.30 யார் என்னை எல்லாவற்றிலும் (என்னை எங்கும்) காண்கிறானோ,அதேபோல் எல்லாவற்றையும் என்னிடத்தில் ( பிரபஞ்சத்தை எனக்குள்) காண்கிறானோ, அவனுக்கு (அவன் பார்வையிலிருந்து) நான் மறைவதில்லை. அவனும் எனக்கு (எனது பார்வையிலிருந்து) மறைவதில்லை.
-🌸
6.31 யார் எல்லா உயிர்களிடமும் இருக்கும் என்னை, ஒருவனே என்ற எண்ணத்தில் (உல்லா உயிரிலும் இருப்பது ஒருவனே) நிலைத்திருந்து போற்றுகின்றானோ, அந்த யோகி எந்த நிலையில் இருந்தாலும், என்னிடத்திலேயே இருக்கிறான்.
-🌸
6.32 அர்ஜுனா, யார் எங்கும், தானே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருப்பதாக கண்டு, அனைவரின் சுகத்தையும், துக்கத்தையும் சமமாக பார்க்கிறானோ, அந்த யோகி மேலானவன் என்று கருதப்படுகிறான்.
-🌸
6.33 அர்ஜுனன் சொன்னது
மதுசூதனா, சமமாக பார்த்தல் என்ற நீர் சொல்லும், இந்த யோகமானது, அலைகின்ற என் மனத்திற்கு உறுதியான இருப்பை தரும் என்று தோன்றவில்லை.
-🌸
6.34 கிருஷ்ணா, நிச்சயமாக மனமானது அலையும் தன்மையடையது. உள்ளே கலங்கியிருப்பது,பலமானது, அடங்காதது, அதை அடக்குவது என்பது காற்றை அடக்குவது போல இயலாதது என்று நான் நினைக்கிறேன்.
-🌸
6.35 ஸ்ரீபகவான் சொன்னது
அர்ஜுனா, மனமானது அடக்க முடியாதது. அலைந்து திரிவது. இதில் சந்தேகமில்லை. ஆனால் குந்தியின்மைந்தா, தொடர்ந்த பயிற்சியினாலும், உலகியல் பற்றின்மையாலும் அடக்கமுடியும்.
-🌸
6.36 மனதை அடக்க முடியாதவனால் யோகமானது அடைய முடியாதது என்பது என் கருத்து. தன்னை வசப்படுத்தியவனால், பல வழிகளில் முயற்சி செய்பவனால், அடக்க இயலும்
-🌸
6.37 அர்ஜுனன் சொன்னது. கிருஷ்ணா சிரத்தை (செய்து முடிக்கவேண்டிய பணியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பது சிரத்தை) உடையவனாக இருந்தும், கவனமின்மையால் யோகத்திலிருந்து தவறிய மனதையுடையவன் யோகத்தில் வெற்றி பெறாமல், என்ன முடிவை அடைகிறான்?
-🌸
6.38 கிருஷ்ணா, வேதத்தின் பாதையிலிருந்து தவறியவன், ஆதரவின்றி இரண்டிலிருந்தும் வழுவியவன் (இவ்வுலகம், மேல் உலகம்) சிதறி செல்லும் மேகம்போல் அழிந்துபோவானா?
-🌸
6.39 கிருஷ்ணா, என்னுடைய இந்த சந்தேகத்தை அறவே நீக்கத்தகுந்தவர் நீரே, உம்மையன்றி வேறு யாரும் இந்த சந்தேகத்தை நீக்க முடியாது
-🌸
6.40 பார்த்தா, இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு அழிவென்பது இல்லை. அப்படியே நன்மை செய்பவர்கள் யாரும் கீழ்நிலை அடைவதில்லை
-🌸
6.41 யோகத்திலிருந்து வழுவியவன் புண்ணியம் செய்தவர்களுடைய உலகங்களை அடைந்து நீண்ட வருடங்கள் வாழ்ந்து, நன்னெறியுள்ள, செல்வமுள்ளவர்களுடைய வீட்டில் மீண்டும் பிறக்கிறான்.
-🌸
6.42 அல்லது ஞானிகளுடைய, யோகிகளுடைய குலத்திலேயே பிறக்கிறான். இதுபோன்ற பிறப்பு எதுவோ, அது நிச்சயமாக இந்த உலகத்தில் பெறுவதற்கு அரிது
-🌸
6.43 குருவம்சத்தில் பிறந்தவனே, அந்த பிறவியில் முற்பிறவியில் உண்டான, அந்த யோகத்தை பற்றிய அறிவை திரும்பவும் பெறுகிறான். மேலும் அதைவிடவும் அதிகமாக பூரணநிலையை அடைவதற்காக முயற்சிசெய்கிறான்.
-🌸
6.44 அவன் முயற்சி செய்யாவிட்டாலும் அந்த பூர்வஜென்ம பழக்கத்தால் (யோகசாதனையை நோக்கி) இழுக்கப்படுகிறான். யோகத்தின் ஆரம்பநிலையில் உள்ளவன்கூட சப்த பிரம்மத்தை (வாக்கை) கடந்து செல்கிறான்.
-🌸
6.45 ஆனால் ஈடுபாட்டோடு முயற்சிக்கின்ற யோகியானவன், பாபங்களிலிருந்து விடுபட்டு, பல பிறவிகளில் பக்குவமடைந்திருப்பதால் ,பிறகு (இப்பிறவியில்) மேலான நிலையை அடைகிறான்.
-🌸
6.46 யோகி தவம் செய்பவர்களைவிட மேலானவன். கல்வியறிவாளர்களை விட மேலானவன். கர்மம் (
வேதத்தில் சொல்லப்பட்ட கர்மங்களை) செய்பவர்களைவிட மேலானவன், ஆகையால் அர்ஜுனா யோகியாவாயாக
-🌸
6.47 யார் சிரத்தையுள்ளவனாய் என்னிடம் மனதை செலுத்தியவனாய், அந்தராத்மாவில் (தனக்குள்ளே) என்னை பூஜிக்கின்றானோ, அவன் எல்லா யோகிகளுக்கிடையே மேலானவன் என்பது என் கருத்து.
-
🌸ஆறாவது அத்தியாயம் நிறைவுற்றது🌸
-
🌸HINDUMATHAM WHATSAPP GROUP 9789 374 109🌸

No comments:

Post a Comment