Sunday, 25 February 2018

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-7

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-7
சுவாமி வித்யானந்தர்
-
உங்கள் உணவு முறைகள் என்ன? என்று ஒருவர் கேட்டிருந்தார்
-
நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் அவர்களிடம் எப்படிப்பட்ட உணவு வழக்கம் இருந்ததோ அதேதான் என்னிடமும் இருந்தது.வாரத்தில் இரண்டுநாட்கள் சைவம் மீதி நாட்கள் அசைவம் முக்கியமாக மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாக வாழும் பெரும்பாலானவர்களின் உணவு பழக்கம் இப்படித்தான் இருக்கிறது.
-
நான் சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்த பிறகுதான் முற்றிலும் சைவ உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. கல்கத்தாவில் விவேகானந்தர் ஆரம்பித்த தலைமை மடத்தில் சைவம் அசைவம் என்ற இரண்டு உணவு முறைகளும் உண்டு. சைவம் சாப்பிடுபவர்கள் தனியாகவும், அசைவம்சாப்பிடுபவர்கள் தனியாகவும் அமர்ந்திருப்பார்கள். மீன் அங்குள்ள முக்கிய உணவு. அங்கு வசித்த 2ஆண்டுகளும் மீன் உணவையே உண்டேன்.
-
அதன் பின் படிப்படியாக அசைவ உணவு உண்ணமுடியாத மனநிலை உருவாகிவிட்டது.இந்த நிலை படிப்படியாக உருவானது. தற்போது அசைவ உணவுகளை உண்ண முடிவதில்லை. அசைவ உணவு உண்டால் ஜீரணிப்பதில்லை.அதன் மணம் பிடிப்பதில்லை. அது மட்டுமல்ல, தற்போது பால்,முட்டை,கேக்,பிஸ்கட்,உட்பட சப்பாத்திகூட சாப்பிட முடிவதில்லை. தற்போது பழக்கத்தில் உள்ள 99 சதவீத உணவுகளை என்னால் உண்ண முடிவதில்லை. சுருக்கமாக சொன்னால் விரைவில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ண முடிகிறது.
-
ஒரு இயந்திரத்திலிருந்து எவ்வளவு சக்தியை பெற விரும்புகிறோமோ அதே அளவு எரிபொருளை உள்ளே செலுத்தவேண்டும். உணவுதான் நமது உடலுக்கான எரிபொருள். உடல் அதிக வேலைசெய்ய வேண்டுமானால் அதிகம் சத்துள்ள உணவுகள் தேவை. உடல் உழைப்பு தேவையில்லை என்றால் உணவும் குறைவாக போதும்.
-
உணவு என்பது ஒவ்வொரு மனிதனின் தனி உரிமை. அரசாங்கம் அனுமதித்துள்ள உணவை ஒருவன் உண்ணலாம். தியானம்,தவம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களது உணவு முறைகள் படிப்படியாக மாறிவிடும்.அவர்களால் அசைவ உணவுகளை உண்ண முடியாது.
-
தொடரும்...
-

No comments:

Post a Comment