Tuesday, 13 February 2018

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-12


ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-12
-
அர்ஜுனன் சொன்னது
-
12.1 இவ்வாறு எப்போதும் யோகத்தில் உறுதிப்பாட்டுடன் உம்மை உபாசிக்கும் பக்தர்கள் மற்றும் பிரம்மத்தை உபாசிக்கும் ஞானிகள் இவர்களில் யோகத்தை நன்கு அறிந்தவர் யார்?
-
(இறைவனை தியானிக்க இரண்டு வழிகள் கூறப்பட்டுள்ளது1.குணமற்ற நிலை 2. குணங்களுடன் கூடிய நிலை. இறைவனை சகல குணங்களுடனும்,சர்வ சக்திகளுடனும் வழிபடும் நிலை குணங்களுடன் கூடிய நிலை.புருவ மத்தியில் மனத்தை வைத்து தியானிப்பவர்களுக்கு குணங்களுடன் கூடிய இறைவனின் காட்சி உருவமில்லாமலோ அல்லது உருவத்துடனோ அவர்கள் விரும்பும் வகையில் கிடைக்கிறது.உலகை ஆளும் ஈஸ்வரனின் இருப்பிடம் அது.உச்சந்தலையில் மனதை வைத்து தியானிப்பவர்களுக்கு குணமற்ற காட்சி ஏற்படுகிறது.இதில் ஸ்ரீகிருஷ்ணர் தன்னை குணங்களுடன் கூடிய சர்வசக்தி வாய்ந்தவராக உலகை ஆள்பவராக கூறுகிறார்.பக்தர்கள் எப்போதும் அந்த நிலையைத்தான் விரும்புவார்கள்.குணமற்றநிலையையை சர்க்கரை என்றால் குணமுள்ள நிலையை அந்த சர்க்கரையை சுவைக்கும் நிலை என்று கூறலாம்)
-
12.2 ஸ்ரீபகவான் சொன்னது
என்னிடம் மனதைவைத்து, யோகத்தில் நிலைத்தவராய், மேலான ச்ரத்தையுடன் கூடியவராய் யார் என்னை உபாசிக்கிறார்களோ அவர்கள் யோகத்தில் நிலைபெற்றவன் என்பது என் கருத்து
-
12.3,4 ஆனால் யார் எங்கும் சமபுத்தியுள்ளவர்களாய், இந்திரியங்களை நன்கு அடக்கிக்கொண்டு சொல்லால் விளக்க முடியாத, தோற்றத்திற்கு அப்பாற்பட்ட, எங்கும் வியாபித்தும் சிந்தைக்கெட்டாததும், நகராததும், நிலைத்திருப்பதுமாகிய அக்ஷரத்தை (பிரம்மத்தை) உபாசித்துக்கொண்டு, எல்லா உயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ள அவர்கள் என்னையே வந்தடைகிறார்கள். (இறைவன் செயல்புரியாமல் இருக்கும்போது பிரம்மம்.பிரம்மத்தை உபாசித்தால் இறைவனின் செயலற்ற நிலையை அடையலாம்)
-
12.5 அவ்யக்தத்தில் (பிரம்மத்தில்) சித்தத்தை வைத்தவர்களுக்கு வழி கடினமானது. ஏனென்றால் உடல் உணர்வு உடையவர்களால் (இந்த உடல் எனது என்ற உணர்வு) அவ்யக்தத்தை அடைவது கடினம்(உலக நினைவு சிறிதும் இருக்கக்கூடாது,உலகைவிட்டு விலகி வாழவேண்டும்)
-
12.6,7 ஆனால் பார்த்தா, யார் எல்லா கர்மங்களையும் என்னிடத்தில் அர்ப்பணித்து என்னையே(குணங்களுடன் கூடியநிலை) மேலான கதியாக கருதி சிதைவுறாத யோகத்தால் என்னையே தியானிக்கிறவர்களாய் உபாசிக்கிறார்களோ, என்னிடத்து செலுத்திய மனதையுடைய அவர்களை மரணத்தோடு கூடிய சம்சார சாகரத்தினின்று விரைவில் கரையேற்றுகிறேன்
-
12.8 என்னிடத்தே மனதை நிறுத்தி வை. என்னிடத்து புத்தியை செலுத்து. பின்பு என்னிடத்தே வசிப்பாய் என்பதில் சந்தேகமில்லை
-
12.9 தனஞ்ஜயா, இனி சித்தத்தை என்னிடத்தில் உறுதியாக நிலைநிறுத்துவதற்கு இயலாவிட்டால், அப்பொழுது அப்பியாச யோகத்தால் (மனதை இறைவனிடம் வைப்பதற்கு தினமும் ஒழுங்குமுறையுடன் பயிற்சி செய்வது) என்னை அடைய விருப்பம்கொள்
-
12.10 அப்பியாசயோகத்தில் உனக்கு திறமை இல்லாவிட்டால், எனக்காக மேலான கர்மத்தை செய்பவனாக இரு. எனக்காக கர்மத்தை செய்வதாலும் சித்தியை (வெற்றியை) அடைவாய்
-
12.11 இனி. இதைச் செய்வதற்கும் சக்தியற்றிருந்தால் பிறகு என்னிடம் சரணடைந்து தன்னடக்கம் பயில்பவனாய் எல்லா கர்ம பலனை தியாகம் செய்.
(சரணடைவது என்றால் எல்லாம் இறைவன் செயல் என்ற நிலையில் வாழ்தல்,அப்போது எந்த துன்பம் வந்தாலும் அதை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இறைவா என்னை ஏன் சோதிக்கிறாய் என்று கூறக்கூடாது.அனைத்தும் இறைவன் செயல் என்பதை புரிந்துகொண்டு.துன்பமும் இறைவனின் பரிசு என்று ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்)
-
12.12 அப்பியாசத்தை காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் விஷேசமானது, தியானத்தைவிட கர்மபலனை தியாகம் செய்வதால் விரைவில் சாந்தி உண்டாகிறது.(கர்மபல தியாகம் என்பது நாம் செய்யும் தொடர்ந்து புண்ணிய செயல்களை செய்ய வேண்டும்.ஆனால் அதனால் வரும் புண்ணிய பலனை இறைவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.புண்ணிய பலனை விரும்பினால் தற்காலிகமாக தேவபதவி கிடைக்கலாம்.அதன்பின் மறுபடி மனிதனாக பிறக்க வேண்டும்)
-
12.13,14 எல்லா உயிர்களிடமும் வெறுப்பின்றி, நண்பனாய், கருணையே உடையவனாய் அகங்காரம் அற்றவனாய், நான் செய்கிறேன் என்ற எண்ணமில்லாமல், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவனாய் பொறுமையுடையவனாய் எப்போதும் சந்தோசமுடையவனாய், யோகியாய், தன்னடக்கமுடையவனாய், திடநிச்சயமுள்ளவனாய் என்னிடம் மனம், புத்தி இவைகளை சமர்ப்பித்தவனாய், யார் என் பக்தனாகிறானோ அவன் எனக்கு பிரியமானவன்
-
12.15 யாரால் உலகம் துன்பப்படுவதில்லையோ. மேலும் யார் உலகத்தால் வரும் துன்பத்தால் பாதிக்கப்படுவதில்லையோ இன்னும் யார் களிப்பு,கோபம், அச்சம்,கலக்கம் இவைகளிலிருந்து விடுபட்டவனோ அவன் எனக்கு பிரியமானவன்
-
12.16 தேவையில்லாதவன், சுத்தமானவன்,திறமையானவன்,பொறுப்புகளற்றவன்,துயரமற்றவன்,பலன்தரக்கூடிய கர்மங்களை துறந்தவன்.யாரோ அவன் என்பக்தன்,அவன் எனக்கு பிரியமானவன்
-
12.17 யார் மகிழ்வடைவதில்லையோ, துன்புறுவதில்லையோ,துயரப்படுவதில்லையோ,ஆசைப்படுவதில்லையோ நன்மை,தீமைகளைவிட்டவனோ அந்த பக்திமான் எனக்கு பிரியமானவன்
-
12.18,19 எதிரியிடமிருந்து அவமரியாதை வரும்போதும் நண்பனிடமிருந்து மரியாதை வரும்போதும் சமமாக இருப்பவன். குளிர், வெப்பம்,சுகம்,துக்கத்தில் சமமாக இருப்பவன். பற்றற்றவன்,புகழ்ச்சி இகழ்ச்சியை சமமாக கருதும் மௌனி, எதைக்கொண்டாவது திருப்தியடைபவன், சொந்த இருப்பிடம் இல்லாதவன்,ஸ்திரபுத்தியுள்ளவன்,பக்திமானாகிய மனிதன் எனக்கு பிரியமானவன்.
-
12.20 நிச்சயமாக எந்த பக்தர்கள் சிரத்தையோடு கூடியவர்களாய் என்னையே குறிக்கோளாக கொண்டு அமிர்தம் போன்ற இந்த தர்மத்தை நன்கு கடைபிடித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் சொல்கிறார்களோ அவர்களே எனக்கு பிரியமானவர்கள்.(பகவானுடைய கருத்துக்களை தான் மட்டும் கேட்டு பயன்பெற்று இன்பமடைபவனைவிட அதை பிறருக்கும் சொல்லி அவர்களையும் உயர்ந்தநிலைக்கு அழைத்துசெல்பவன்  மேலானவன்)
-
அத்தியாயம் 12 நிறைவுற்றது
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழு-9789 374 109
--

No comments:

Post a Comment