Sunday, 25 February 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-13

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்
-
-part 13
-
சமாதி நிலையை அடைந்த பிறகு அனேகமாக உடல் நிலைப்பதில்லை. ஏதோ சிலரது விஷயத்தில்,உலகிற்கு போதிப்பதற்காக உடல் நீடிக்கிறது.இத்தகைய மகாபுருஷர்கள் மக்களின் துயரத்தில் துடிக்கிறார்கள்.தாங்கள் ஞானம் பெற்றால் போதும் என்று நினைக்கின்ற சுயநலவாதிகள் அல்ல இவர்கள்.
-
இறைக்காட்சிக்கு பிறகு பக்தனுக்கு அவருடைய திருவிளைடல்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது
-
எல்லோரும் வயிற்றிற்காக ஓடுகிறார்கள். யாரும் கடவுளை நினைக்க விரும்பவில்லை.
-
உலகில் வாழ்வது மிகக் கடினமானது. பல சாதனைகள் செய்து, இறையருள் பெற்ற ஒரு சிலரால்தான் வெற்றிபெற முடிகிறது.பெரும்பாலோரால் முடிவதில்லை. வாழவாழ அதில் மேலும் கட்டுண்டுவிடுகிறார்கள்.மேலும்மேலும் மூழ்குகிறார்கள்.மரண வேதனையை அனுபவிக்கிறார்கள்
-
இல்லறத்தானுக்கு கடமை உள்ளது. கடன் உள்ளது. தேவர்களுக்கும்,முன்னோர்களுக்கும்,ரிஷிகளுக்கும் மட்டுமின்றி குடும்பத்திற்கும் அவன் கடன்பட்டவன்.கற்புடைய மனைவியாக இருந்தால் அவன் அவளை காப்பாற்ற வேண்டும். குழந்தைகள் தக்க வயது வரும்வரை அவர்களை காப்பாற்றியே தீர வேண்டும்.சாதுக்கள் மட்டுமே சேர்த்துவைக்க கூடாது. இல்லறத்தார்கள் சேர்த்து வைக்கலாம்.
-
தீவிர வைராக்கியம் ஒருமுறை ஏற்பட்டு இறையனுபூதி பெற்றுவிட்டால், பிறகு பெண்ணிடம் பற்று ஏற்படுவதில்லை. குடும்பத்தில் தங்கியிருந்தாலும் பெண்ணிடம் மனம் செல்லாது. அவர்களால் எந்த பயமும் இல்லை. ஒரு காந்தம் பெரியது ஒரு காந்தம் சிறியது. எது முதலில் இரும்பைக்கவரும்? பெரியதுதானே. இறைவன் பெரிய காந்தம்.
-
எந்த பார்வையால் பெண்ணை பார்த்தால் பயம் ஏற்படுமோ அந்த பார்வையால் பெண்களை பார்க்கமாட்டான்,இறையனுபூதி பெற்றவன்.பெண்கள் தேவி பராசக்தியின் அம்சம் என்பதை அவன் தெளிவாகக் காண்கிறான்.எனவே எல்லா பெண்களையும் தேவி என்றே அவன் வழிபடுவான்.
-
ஆச்சாரியனுடைய வேலை மிகக்கடினமானது.இறைவனிடமிருந்து நேரடி ஆணை இல்லாமல் மக்களுக்கு போதிக்க முடியாது. இறையாணை பெறாமல் போதிப்பீர்களானால் மக்கள் கேட்க மாட்டார்கள்.முதலில் சாதனைகள் செய்து இறையனுபூதி பெறவேண்டும். அவருடைய ஆணை கிடைத்த பிறகு லெக்சம் செய்யவேண்டும்.
-
இறைவனிடமிருந்து ஆணையைப் பெறுபவன் அவரிடமிருந்து சக்தியையும் பெறுகிறான்.அப்போதுதான் கடினமான இந்த ஆசாரிய வேலையை செய்யமுடியும். மனிதன் சாதாரணமானவன். இறைவனுடைய நேர்முகச் சக்தியைப் பெறாவிட்டால், ஆசாரியனாக இருக்கின்ற கடினமான வேலையை அவனால் ஒருபோதும் செய்ய முடியாது.
-
உலக பந்தத்திலிருந்து ஒரு மனிதனை விடுவிக்க மற்றொரு மனிதனுக்கு என்ன சக்தி இருக்கிறது? உலகை மயக்குவதான இந்த மாயை யாருடையதோ, அவர்தான் இந்த மாயையிலிருந்து விடுவிக்க முடியும். சச்சிதானத்த குருவைத்தவிர வேறு வழியில்லை. யாருக்கு இறையனுபூதி கிடைக்கவில்லையோ அவர்களால் மக்களை எப்படி சம்சாரபந்தத்திலிருந்து விடுவிக்க முடியும்?
-

No comments:

Post a Comment