ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம் -11
-
அர்ஜுனன் சொன்னது
-
11.1 என்னைக் என்னை காத்து அருள்வதற்கு உம்மால் உரைக்கப்பட்ட மேலானதும் மறைபொருளுமாகிய ஆத்மதத்துவத்தை பற்றிய மொழியால் என் மயக்கம் ஒழிந்தது
-
11.2 கமலக்கண்ணா, உயிர்களின் பிறப்பு. இறப்பு விரிவாக உம்மிடம் என்னால் கேட்கப்பட்டன, உமது முடிவற்ற மஹிமையும் கேட்கப்பட்டது
-
11.3 பரமேசுவரா. நீங்கள் உம்மைப்பற்றி சொல்லியவை முற்றிலும் சரியே. புருஷோத்தமா உமது ஈசுவர வடிவத்தைக் காண விரும்புகிறேன்
-
11.4 பிரபுவே, அதைப் பார்க்க எனக்கு இயலும் என்று எண்ணுவீராயின், யோகேஷ்வரா, உமது அழிவற்ற உருவத்தை காட்டிருள்வீராக
-
11.5 ஸ்ரீ பகவான் சொன்னது
பலவகைப்பட்ட, பல நிறங்களும் வடிவங்களும் உடைய எனது தெய்வீக உருவங்களை நூறுநூறாய், ஆயிரம் ஆயிரமாய், இனிப் பார் பார்த்தா
-
11.6 ஆதித்யர்களையும், வஸுக்களையும்,ருத்திரர்களையும், அச்வினிகளையும் அங்ஙனம் மருத்துக்களையும் பார்த்தா பார், முன்பு காணாத அதிசங்கள் பலவற்றைப் பார்
-
11.7 அர்ஜுனா, எனது இவ்வுடலில் ஒன்று சேர்ந்துள்ள அசையும் , அசையாத உலகங்களை முழுவதையும் பார், மேலும் பார்க்க விரும்பும் வேறு எதையும் இப்பொழுது காண்
-
11.8 ஆனால் உனது இந்த ஊனக்கண்ணால் என்னை நீ காண இயலாது. உனக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். எனது ஈசுவர யோகத்தைப் பார்
-
11.9 ஸஞ்ஜயன் சொன்னது
வேந்தே, யோகத்திற்குப் இறைவனான ஹரியானவர் இங்ஙனம் உரைத்த பின்பு பார்த்தனுக்கு தம் மேலாம் ஈசுவர வடிவத்தைக் காட்டியருளினார்
-
11.10 அந்த வடிவம் அநேக முகங்கள், அநேக கண்கள் உடையது. பல அதிசயக் காட்சிகள் கொண்டது. தெய்வீக ஆபரணங்கள் பல அணிந்து, தெய்வீக ஆயுதங்கள் பல ஏந்தியது
-
11.11 திவ்யமான மாலைகளும் ஆடைகளும் அணிந்தது, திவ்விய கந்தம் பூசியது. பெரும் வியப்பூட்டுவது. பிரகாசமுடையது, முடிவற்றது, எங்கும் முகமுடையது
-
11.12 வானத்தில் ஆயிரம் சூரியன்களுடைய ஒளியானது ஒரேநேரத்தில் உதித்ததுபோல், அது அம் மஹாத்மாவின் ஒளிக்கு ஒப்பாகும்
-
11.13 அப்பொழுது பலவாய்ப் பிரிந்துள்ள உலகம் யாவும் தேவ தேவனுடைய தேகத்தில் ஒன்றுகூடியிருப்பதை பாண்டவன் பார்த்தான்
-
11.14 பின்பு தனஞ்ஜயன் வியப்படைந்து, உரோமம் சிலிர்த்து, தேவனைத் தலையால் வணங்கிக் கைக்கூப்பிக் கூற தொடங்கினான்
-
11.15 அர்ஜுனன் சொன்னது
தேவா, உமது உடலில் தேவர்களெல்லாரையும், உயிர்த்தொகுதிகள் அனைத்தையும், தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரம்மாவையும் சகல ரிஷிகளையும் திவ்யமான சர்ப்பங்களையும் பார்க்கிறேன்
-
11.16 உலக வடிவுடைய உலகநாயகா, எண்ணற்ற கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் உடைய உமது அளவில்லா உருவத்தை எங்கும் பார்க்கிறேன். மேலும் உமது முடிவையோ இடையையோ துவக்கத்தையோ காணமுடியவில்லை
-
11.17 கிரீடம் தரித்து, கதை தாங்கி .சக்கரம் ஏந்தியவராய், எங்கும் வீசும் ஒளிப்பிளம்பாய், காண்பதற்கரியவராய், சுடும் சூரியாக்கினி போன்றவராய், அளப்பரியவராய் உள்ள உம்மை நான் எங்கும் காண்கிறேன்
-
11.18 தாம் அழியாப் பரம்பொருள்,அறியத்தகுந்தவர், இவ்வுலகுக்கு ஒப்பற்ற உறைவிடம் நீர், மாறாதவர், ஸநாதன தர்ம ரக்ஷகர், என்னென்றுமுள்ள பரமாத்மா தாம் என என்னால் அறியப்படுகிறீர்
-
11.19 ஆதி நடு அந்தம் இல்லாதவரும், முடிவற்ற சக்தியுடையவரும், எண்ணற்ற கைகளை உடையவரும், சந்திர சூரியர்களைக் கண்களாக உடையவரும், வெந்தழல் வாய் படைத்தவரும், உமது தேஜஸினால் உலகம் யாவையும் எரிக்கின்றவரும் ஆகிய உம்மை காண்கிறேன்
-
11.20 மஹாத்மாவே, விண் மண் உலகின் இடைவெளியும் மற்ற திசைகள் யாவும் உம்மாலே நிரம்பப்பெற்றிருக்கின்றன. உமது அற்புதமான இந்த உக்கிர வடிவத்தைக் கண்டு மூவுலகும் நடு நடுங்குகிறது
-
11.21 இந்த வானவர் எல்லோரும் உன்னிடம் புகுகின்றனர். சிலர் அஞ்சிக் கைகூப்பி நின்னைப் புகழ்கின்றனர். மஹரிஷி சித்தர் கூட்டத்தார் வாழ்கவென்று நிறைபுகழ் புரிந்து நின்னைப் போற்றுகின்றனர்
-
11.22 உருத்திரர்,ஆதித்தியர், வசுக்கள், சாத்தியர், விசுவேதேயர், அசுவினிதேவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இவர்கள் கூடி வியப்படைந்து உம்மையே பார்க்கிறார்கள்
-
11.23 நெடுந்தோளாய், பல முகங்கள், கண்கள், பல கைகள், துடைகள், பாதங்கள், பல வயிறுகள், பயமுறுத்தும் பல வளைந்த பற்கள் உடைய உமது பேருருவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. நானும் நடுங்குகிறேன்.
-
11.24 விஷ்ணுவே. வான் அளாவிப் பல நிறங்களுடன் பிரகாசிக்கின்ற, திறந்த வாய்களை உடைய கனல் வீசும் விசாலக் கண்களையுடைய உம்மைக் கண்டு கலங்கிய நான் தைரியத்தையும் அமைதியையும் காணவில்லை
-
11.25 தேவர் தலைவா, அச்சமூட்டும் கோரப் பற்களுடன் ஊழித் தீக்கு ஒப்பான உமது முகங்களைக் கண்டதும் எனக்கு திசைகள் தெரியவில்லை. அமைதியும் அடையந்திலேன். ஜகந்நிவாஸ, அருள்புரிய
-
11.26,27 திருதராஷ்டிர புத்திரர் எல்லோரும் பார் ஆளும் வேந்தர் கூட்டத்துடனும், பீஷ்மர், துரோணர்,சூதபுத்திரர்களுடன், நம் பக்கத்து முக்கியமான வீரர்களுடனும் பயங்கரமான கோரப்பற்களையுடைய உமது வாய்க்குள் பரபரப்புடன் பிரவேசிக்கின்றனர். சிலர் பொடிபட்ட தலைகளோடு உமது பல் இடுக்குளில் அகப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்
-
11.28 பெருக்கெடுத்து விரைந்தோடும் பல நதிகள் , கடலை நோக்கிப் பாய்வது போன்று, யாண்டும் வெந்தழல் வீசும் உமது வாய்க்குள் இவ்வையக வீரர்கள் புகுகின்றனர்
-
11.29 நாசமடைவதற்கு விட்டில்பூச்சிகள் வெந்தழலில் விரைந்து வீ்ழ்வதுபோல், உலக மக்கள் நாசமடைவதற்கே உம் வாய்க்குள் நுளைகின்றனர்
-
11.30 வெங்கதிர் வாய்களால் உலகனைத்தையும் விழுங்கி எல்லா பக்கத்திலும் நக்கி ருசி பார்க்கிறீர். விஷ்ணுவே, உமது கொடுஞ்சுடர்கள் வையகம் முழுவதையும் கதிர்களால் நிரப்பி சுடுகின்றன
-
11.31 பயங்கர மூர்த்தியாகிய தாம் யார் என்று எனக்கு இயம்பும். உம்மை வணங்குகிறேன். தேவர் தலைவா, அருள்புரிக. முதல்வனாகிய தம்மை அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் உம்செயல் எனக்கு விளங்கவில்லை
-
11.32 ஸ்ரீ பகவான் சொன்னது
-
உலகங்களை அழிக்கவல்ல காலம் நான். உலகங்களைச் சம்ஹாரம் செய்ய புறப்பட்டிருக்கிறேன். நீ போரிலிருந்து பின்வாங்கினாலும், எதிர்த்துள்ள சேனைகளில் அணிவகுத்து நிற்கும் போர்வீரர்கள் எல்லோரும் வாழமாட்டார்கள்
-
11.33 ஆகையால் நீ எழுந்திரு, புகழை பெறு, எதிரிகளை வென்று செல்வம்நிறைந்த ராஜ்யத்தை அனுபவி. இவர்கள் எல்லோரும் ஏற்கனவே என்னால் கொல்ப்பட்டிருக்கிறார்கள். இடது கையால் அம்பு எய்தும் வீரா, நீ நிமித்தமாத்திரம் இரு
-
11.34 என்னால் கொலையுண்ட துரோணரையும், பீஷ்மரையும்,ஜயத்ரதனையும், கர்ணனையும் அங்ஙனம் மற்ற போர்வீரர்களையும் நீ கொல். அஞ்சி வருந்தாதே, போரில் பகைவர்களை வெல்லுவாய், போர்புரி
-
11.35 ஸஞ்ஜயன் சொன்னது
கேசவருடைய இம்மொழிகேட்டுக் அர்ஜுனன், நடுங்கி கைக்கூப்பி நமஸ்கரித்து அஞ்சி நன்கு வணங்கி, மீண்டும் கிருஷ்ணரிடம் கூறினான்
-
11.36 அர்ஜுனன் சொன்னது
ஹரிஷீகேசா, உமது புகழில் உலகம் இன்புற்று மகிழ்கிறது, ராக்ஷசர்கள் அஞ்சி நாலாபக்கமும் ஓடுகிறார்கள். சித்தர் கணங்கள் எல்லாரும் உம்மை வணங்குகிறார்கள். இவையாவும் பொருத்தமானவைகள் தான்
-
11.37 மஹாத்மாவே, அந்தமில்லாதவரே, தேவேசா, ஜகந்நிவாசா, பிரம்மாவுக்கும் பெரியவரே, முதற்காரணமே உம்மை ஏன் அவர்கள் நமஸ்கரிக்கமாட்டார்கள்? தோன்றியதும் தோன்றாமலும் அவ்விரண்டுக்கும் அப்பாற்பட்டதும் அழியாப்பொருளும் நீரே
-
11.38 எண்ணில்லா வடிவங்களையுடையோனே, முதற்பொருளே! ஆதிநாயகா இவ்வுலகுக்கு மேலான இருப்பிடமும் தாமேயாவீர். அறிபவரும், அறியப்படுபொருளும், அருட்பெருநிலமும் ஆவீர். உம்மால் உலகம் யாவும் நிறைந்துள்ளது
-
11.39 வாயு,யமன்,அக்கினி,வருணன்,சந்திரன். பிரஜாபதி,முப்பாட்டனார் ஆகிய எல்லாம் ஆனவர் நீர். உமக்கு பன்முறை நமஸ்காரம்.ஆயிரம் தடவையும் அதற்கு மேலும் நமஸ்காரம்
-
11.40 எல்லாமானவரே, உமக்கு முன்புறத்திலும் பின்புறத்திலம் நமஸ்காரம். எல்லா பக்கங்களிலும் உமக்கு நமஸ்காரம். அளவற்ற வீரியத்தையும் எண்ணிறந்த பராக்கிரமத்தையும் உடைய நீர் அனைத்திலும் நன்கு வியாபித்திருக்கிறீர். ஆதலால் நீரே யாவுமாயிருக்கிறீர்
-
11.41,42 உமது இப்பெருமையை அறியாது, கவனமின்றி அன்பால் தோழன் என்று கருதி “ஏ கிருஷ்ணா, ஏ யாதவா ஏ கூட்டாளி” என்று பணிவின்றி எது பகரப்பட்டதோ, அச்சுதா! விளையாடிய பொழுதும், படுத்திருந்த பொழுதும், அமர்ந்திருந்தபொழுதும், உணவருந்துகையிலும், தனித்தோ பிறர் பார்வையிலோ இருந்தபொழுதும்,ஏளனமாக எங்ஙனம் அவமதிக்கப்பட்டீரோ. அதையெல்லாம், பெருந்தன்மையுடன் மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
-
11.43 ஒப்பற்ற பெருமையுடையவரே, தாம் இந்த சராசர லோகத்துக்குத் தந்தை, போற்றுதற்குரியவரும் குருவுக்கு குருவும் ஆகின்றீர். மூவுலகிலும் உமக்கு ஒப்பானவர் இல்லை. உம்மைவிட பெரியவர் யார்?
-
11.44 ஆதலால். தேவா, நான் உடலால் வீழ்ந்து வணங்கிப் போற்றத்தக்க ஈசனாகிய உமது அருளை வேண்டுகிறேன். மைந்தனுக்குத் தந்தைபோன்றும் தோழனுக்கு தோழன் போன்றும், காதலிக்கு காதலன் போன்றும் பொறுத்தருளக்கடவீர்
-
11.45 தேவா, முன்பு காணாததைக் கண்டு மகிழ்தவனாயிருக்கிறேன் மேலும் மனது அச்சத்தால் நடுங்குகிறது. முன்னைய இனிய வடிவத்தையே எனக்குக் காட்டுக. தேவேசா, ஜகந்நிவாஸா, அருள் புரிக
-
11.46 முன்போலவே கிரீடமும் கதையும் கையில் சக்கரமும் உடையவராய் உம்மைக் காண விரும்புகிறேன். ஆயிரம் கைகளையுடைய விசுவமூர்த்தியே நான்னு கைகளுடைய அந்த வடிவத்தில் மட்டும் இருப்பீராக
-
11.47 ஸ்ரீபகவான் சொன்னது
அர்ஜுனா, அருள் நிறைந்த என்னால் யோகவலிவைக்கொண்டு இந்த ஒளி நிறைந்ததும், முடிவில்லாததும், முழு முதலானதும் ஆகிய எனது மேலான விசுவரூபம் உனக்குக் காண்பிக்கப்பட்டது. உன்னைத் தவிர வேறு யாரும் இதை முன்பு கண்டதில்லை
-
11.48 குருகுலப் பெருவீரா, மனுஷ்ய லோகத்தில் உன்னைத்தவிர வேறு யாராலும் இவ்வடிவத்தை காணவில்லை, வேதம் ஓதி அறிவதாலும், யாக்ஞத்தாலும், தானங்களாலும், கிரியைகளாலும், உக்கிர தவங்களாலும் இவ்வடிவத்தை காண முடியாது
-
11.49 இப்படிப்பட்ட எனது கோர ரூபத்தைக்கண்டு உனக்கு கலக்கமும் மயங்கிய மனநிலையும் வேண்டாம். அச்சம் நீங்கி. மகிழ்ந்த மனத்துடன் திரும்பவும் எனது பழைய வடிவத்தைப் பார்ப்பாயாக
-
11.50 ஸஞ்ஜயன் சொன்னது
வாசுதேவர் இங்ஙனம் அர்ஜுனனுக்கு கூறிய பின்பு தமது சொந்த வடிவத்தை அப்படியே காண்பித்தார். மஹாத்மாவானவர் இனிய வடிவெடுத்து அஞ்சினவனைத் திரும்பவும் தேற்றினார்
-
11.51 அர்ஜுனன் சொன்னது
ஜநார்தனா, உமது இந்த இனிய மானிட வடிவம் கண்டு இப்பொழுது நான் மனம் தெளிந்து என் இயல்பை அடைந்தவனாய் இருக்கின்றேன்
-
11.52 ஸ்ரீபகவான் சொன்னது
தரிசிப்பதற்கரிய எனது இந்த ரூபத்தை நீ தரிசித்திருக்கிறாய். இந்த ரூபத்தைத் தரிசிக்கத் தேவர்களும் எப்பொழுதும் விரும்புவார்கள்
-
11.53 நீ என்னை எவ்வாறு தரிசித்தாயோ அவ்வாறு நான் வேதங்களாலும் தவத்தாலும் தானத்தாலும் யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன்
-
11.54 எதிரிகளை வாட்டவல்ல அர்ஜுனா, மாறாத பக்தியாலேயே இவ்விதம் என்னை உள்ளபடி உணரவும் காணவும் அடையவும் முடியும்
-
11.55 பாண்டவா, எனக்காகக் கர்மம் செய்கிறவனும், என்னைக் குறிக்கோளாகக்கொண்டு, என்னிடத்து பக்தி செலுத்துபவனும், பற்ற்றவனும் எல்லா உயிர்களிடத்தும் வெறுப்பற்றவனும் எவனோ அவன் என்னை அடைகிறான்
-
பதினொன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது
-
No comments:
Post a Comment