Sunday, 25 February 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-16

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்
-
-part 16
-
மனத்தூய்மை உண்டாகாவிட்டால் இறைக்காட்சி கிடைக்கது. காமம்-பணத்தாசையால் மனம் மாசு படிந்துள்ளது. தூசி படிந்துள்ளத. ஊசியை சேறு மூடியிருக்கும்போது அதை காந்தம் கவராது. சேற்றை கழுவினால் காந்தம் கவரும்.
-
மனத்தின் அழுக்கை கண்ணீரால் கழுவலாம். இறைவா இப்படிப்பட்ட செயலை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்று பச்சாதாபத்துடன் முறையிட்டு அழுதால் மனஅழுக்கை துடைத்துவிடலாம். “நான் செய்கிறேன்” என்ற உணர்வு இருந்தால் இறைக்காட்சி கிடைக்காது
-
பண்டக அறைக்கு பொறுப்பாளியாக ஒருவன் இருக்கும்போது, வீட்டுத்தலைவனிடம் ஐயா, நீங்கள் வந்து பொருட்களை எடுத்துத்தாருங்கள் என்று கேட்டால், தலைவன், பண்டக அறையில் ஏற்கனவே ஒருவன் இருக்கிறானே, நான் வந்து என்ன செய்வது? என்பான். நான் கர்த்தா, நான் செய்கிறேன் என்ற உணர்வு உள்ளவனிடம் இறைவன் வரமாட்டார்
-
இரவு பணியில் செல்லும் போலீஸ்காரன் கையில் லாந்தர் விளக்கு உள்ளது. அவரால் மற்றவர்களை பார்க்க முடியும்.அந்த ஒளியால் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் அவரை மற்றவர்கள் பார்க்க முடியாது. அவரை பார்க்க வேண்டுமானால் யாராவது லாந்தர்விளக்கை உங்கள் முகத்தில் காட்டுங்கள் என்று கேட்கவேண்டும். அதேபோல் இறைவனது ஒளியால் ஒருவரை ஒருவர் பார்க்க முடிகிறது. இறைவனை பார்க்க வேண்டுமானால், அவரிடம், இறைவா, உமது ஞானஒளியை உம்மீது ஒருமுறை திருப்பு, நான் உன்னை பார்க்கிறேன் என்று பிரார்த்திக்க வேண்டும்.
-
தேவி உருவமற்றவள் மட்டுமல்ல, உருவமுள்ளவளும்கூட. அவளுடைய உருவத்தை பார்க்க முடியும். பாவனை-பக்தி மூலம் அவளது ஈடிணையற்ற உருவத்தை பார்க்க முடியும். அவள் பல வடிவங்களில் காட்சி அளிக்கிறாள். ஒருநாள் காவிநிறச்சட்டை அணிந்துகொண்டு என்னிடம் வந்தாள்.மற்றொருநாள் ஒரு முஸ்லீம் பெண்ணின் வடிவத்தில் வந்தாள்
-
புயற்காற்றில் பட்ட எச்சில் இலையை காற்று பல இடங்களில் அலைக்கழிக்கிறது. சில நேரம் பறந்து நல்ல இடத்திலும், சில நேரம் சாக்கடையிலும் விழுகிறது.அதேபோல் இறைவன் எப்படி இயக்குகிறாரோ அப்படி இயங்குகிறேன். அவர் எப்படி பேசவைக்கிறாரோ அப்படி பேசுகிறேன்.
-
இறைவன் குழந்தை இயல்பு கொண்டவர். அதனால் இறைவனை நேசிப்பவருக்கும் குழந்தை இயல்பு வருகிறது.இறைவன் சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணத்திலும் இல்லை.
-
நாம் முன்னேறும் அளவுக்கு இறைவனின் மகிமையில் நாட்டம் குறைந்துவிடுகிறது. சாதகன் முதலில் பத்துக் கைகள் உடைய தேவியின் தரிசனம் பெறுகிறான். இந்த வடிவத்தில் மகிமை அதிகமாக தென்படுகிறது. பிறகு இரண்டு கைகள் கொண்ட காட்சி, பிறகு கோபாலனின் காட்சி. இதில் மகிமைக்கான எந்த அடையாளமும் இல்லை. இதற்கு பிறகும் காட்சி உண்டு. அது ஜோதி தரிசனம்.
மலையடிவாரத்தில் நின்று பார்த்தால் வண்டி,குதிரை, மக்கள் எல்லாம் தெரிகிறது. அதன் உச்சியில் நின்று பார்த்தால் எதிலும் மனம் செல்லாது. எல்லாம் எறும்புபோல் மிகசிறிதாக தென்படும். அதேபோல் மக்கள் வீடு,வாசல்,பணம்,புகழ்,இன்பம் இவற்றை சுற்றிமனம் அலையும். பிரம்மஞானம் கிடைத்தபின் எதிலும் ஆர்வம் இருக்காது.
-
விறகு எரியும்போது முதலில் கடமுட சத்தமும் தீப்பொறியும், எல்லாம் வெளிப்படும். எரிந்து முடிந்தபின் சாம்பல்மட்டுமே மிஞ்சும். எந்த சத்தமும் இல்லை. அதேபோல் உலகியல் பற்றுமறைந்தால் வேகம் மறைகிறது. இறுதியில் முடிவற்ற அமைதி
-
இறைவனை நோக்கி நாம் அருகில் செல்கின்ற அளவிற்கு அமைதி, அமைதி, அமைதி, அளவற்ற அமைதி
-
ஒன்றிற்கு பக்கத்தில் பூஜ்யங்கள் போடபோட மதிப்பு அதிகமாகிறது. ஒன்றை எடுத்துவிட்டால், எத்தனை பூஜ்யங்கள் இருந்தாலும் மதிப்பு இல்லை. அதேபோல் இறைவன் இருப்பதால்தான் இந்த பிரபஞ்சம் இருக்கிறது
-
நூலின் நுனியில் ஓர் இழை பிரிந்திருந்தாலும்கூட. அது ஊசியின் காதில் நளையாது. அதேபோல் மனதில் சிறிதளவு பற்று இருந்தாலும் கடவுளைப் பெற முடியாது
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீக குழுவில் இணைய விரும்பினால் 9789 374 109 அல்லது 9003767303 என்ற வாட்ஸ் அப் எண்ணில் ஸ்ரீராகிருஷ்ணரின் குழுவில் இணைய விருப்பம் என்று மெசேஜ் அனுப்பவும்
-

No comments:

Post a Comment