Sunday, 25 February 2018

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-18

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-18
-
அர்ஜுனன் சொன்னது
-
18.1 ஹிருஷீகேசா, மகாபாகுவே,கேசிநிஷீதா, சந்நியாசத்தினுடையவும்,தியாகத்தினுடையவும் தத்துவத்தை தனித்தனியே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்
-
18.2 ஸ்ரீபகவான் சொன்னது
ஞானிகள் ஆசையோடு கூடிய கர்மங்களை துறப்பதை சந்நியாசம் என்று சொல்கிறார்கள். தீர்க்கதரிசிகள் எல்லா கர்மத்தின் பலனையும் துறப்பதையே தியாகம் என்று கூறுகிறார்கள்.
-
18.3 சில அறிஞர்கள் எல்லா கர்மங்களும் குற்றமுடையவை எனவே துறக்கப்பட வேண்டியது என்கிறார்கள். இன்னும் சிலர் யக்ஞம்.தானம்,தபம் ஆகிய கர்மங்களை துறக்கக்கூடாது என்கிறார்கள்
-
18.4 பரதகுலத்தில் சிறந்தவனே, புருஷனில் சிறந்தவனே, தியாகத்தை குறித்து என்னுடைய சித்தாந்தத்தை கேள். தியாகமானது மூன்றுவிதமானதென்று சொல்லப்படுகிறது
-
18.5 கர்மயக்ஞம்,தானம்,தபம் ஆகிய கர்மம் துறக்கப்படவேண்டியதில்லை.அது செய்யப்படவேண்டியதே. யக்ஞமும். தானமும்,தபமுமே அறிஞர்களுக்கு தூய்மை தருபவை
-
18.6 பார்த்தா, இந்த கர்மங்கள் அனைத்தையும்கூட பற்றுதலையும், பயனையும் ஒழித்து செய்யப்படவேண்டியவைகள் என்பது என்னுடைய நிச்சயமான உத்தமமான கொள்கை
-
18.7 மேலும். நித்தியகர்மத்தை விடுவது அறிவுடைய செயலல்ல. அறிவின்மையால் அதை துறப்பது தாமஸமென்று கூறப்படுகிறது
-
18.8 உடல் வேலைக்கு அஞ்சி, கர்மத்தை துன்பம் என கருதி அதை விடுவது ராஜஸம். அவன் தியாகத்தின் பலனை அடைவதே இல்லை
-
18.9 அர்ஜுனா, பற்றுதலையும்,பயனையும் தியாகம் செய்து, செய்வதற்குரியதென்று எந்த நித்திய கர்மம் செய்யப்படுகிறதோ. அந்த தியாகமானது சாத்திவிகமானது என்று கருதப்படுகிறது
-
18.10 சத்வம் மேலோங்கப்பெற்றவனும், மேதாவியும், சந்தேகத்தை அகற்றியவனும் ஆகிய தியாகியானவன் துன்பம்தரும் கர்மத்தை வெறுக்கமாட்டான். இன்பம் தரும் கர்மத்தை விரும்பமாட்டான்
-
18.11 உடலெடுத்துள்ள ஜீவனால் எல்லா கரமங்களையும் முற்றிலும் விடுவது சாத்தியமில்லை. ஆனால் யார் வினைப்பயனை துறந்தவனோ அவன் தியாகி என்று சொல்லப்படுகிறான்
-
18.12 தியாகம் பண்ணாதவனுக்கு மரணத்திற்குப்பிறகு, இஷ்டமில்லாதது,இனியது,இவ்விரண்டும் கலந்தது என மூன்றுவிதமான வினைப்பயன் உண்டாகிறது. ஆனால் கர்மத்தை துறந்த தியாகிகளுக்கு ஒருபொழுதும் மூன்றுவித வினைப்பயன் உண்டாவதில்லை
-
18.13 மஹாபாஹோ, கர்மம் இது என்று கூறுகின்ற சாங்கியத் தத்துவத்தில் உள்ள எல்லா கர்மங்களினுடைய நிறைவு சொல்லப்பட்டுள்ளது. இந்த ஐந்து காரணங்களை என்னிடமிருந்து அறிந்துகொள்
-
18.14 (தேகியின்) இருப்பிடமாகிய உடல், கர்த்தா, பலவிதமான இந்திரியங்கள்,பலவிதமான செயல்கள்,ஐந்தாவதாக தெய்வமும் காரணங்களாகின்றன
-
18.15 மனிதன் உடலால்,வாக்கால்,மனத்தால் நியாயமான அல்லது விபரீதமான எக்கர்மத்தை தொடங்கினாலும், இந்த ஐந்தும் அதற்கு காரணங்கள் ஆகும்
-
18.16 அது அப்படியிருக்க. யார் இனி முழுமுதற்பொருளாகிய ஆத்மாவை(தன்னை) கர்த்தாவாக காண்கிறானோ, புத்தி தெளிவில்லாத அவன் உண்மையை பார்ப்பதில்லை
-
18.17 யாருக்கு நான் கர்த்தா என்ற எண்ணம் இல்லையோ, யாருடைய புத்தி பற்றுவைப்பதில்லையோ. அவன் இவ்வுலகத்தாரை கொன்றாலும் கொல்லாதவனே, பந்தப்படாதவனே
-
18.18 ஞானம்(அறிவு), ஞேயம்(அறியப்படும் பொருள்),அறிபவன் என கர்மத்திற்கு தூண்டுதல் மூன்றுவிதம். கருவி, 
கர்மம், கர்த்தா(செய்பவன்) என கர்மபற்றிற்கு இருப்பிடம் மூன்றுவிதம்
-
18.19 ஞானமும், கர்மமும்,கர்த்தாவும் குணபேதத்தினால் மூன்றுவிதம் என்றே குணங்களைப்பற்றி கூறும் சாங்கிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளையும் உள்ளபடி கேள்
-
18.20 வேறுவேறாக உள்ள பூதங்களில், வேறுபடாத அழியாத ஒரு வஸ்துவை(ஆத்மாவை) எதனால் பார்க்கிறதோ அந்த ஞானத்தை சாத்விகமென்று அறி
-
18.21 பின்பு எந்த ஞானமானது எல்லா பூதங்களிலும் வெவ்வேறுவிதமான பல உயிர்களை தனித்தனியாக அறிகிறதோ, அந்த ஞானம் ராஜஸம் என்று அறிந்துகொள்
-
18.22 ஒரு பகுதியை முழுவதும் பற்றிக்கொண்டு,யுக்திக்குப் பொருந்தாததாகவும், உண்மைக்கு ஒவ்வாததாகவும், அற்பமாகவும் உள்ள ஞானம் எதுவோ அது தாமஸம் எனப்படுகிறது
-
18.23 பயனில் விருப்பம் வைக்காதவனால் பற்று இல்லாமல், விருப்பு, வெறுப்பின்றி தனக்காக நியமிக்கப்பட்டுள்ள கர்மத்தை செய்வது, சாத்வீகமானது என்று சொல்லப்படுகிறது
-
18.24 ஆசைவசப்பட்டவனாய், மேலும் அகங்காரம் உடையவனாய், அதிக முயற்சியுடன் எந்த கர்மம் செய்யப்படுகிறதோ, அது ராஜஸமானது என்று சொல்லப்படுகிறது
-
18.25 வினையின் விளைவையும், நஷ்டத்தையும், துன்பத்தையும், தன் திறத்தையும் எண்ணிப்பார்க்காமல் மயக்கத்தால் எக்கர்மம் தொடங்கப்படுகிறதோ அது தாமஸம் எனப்படும்
-
18.26 பற்று நீங்கியவன், அஹங்காரமற்றவன், உறுதியும் ஊக்கமும் உடையவன் வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் இத்தகைய கர்த்தா, சாத்விகமானது என்று சொல்லப்படுகிறது
-
18.27 ஆசையுள்ளவன், வினைப்பயனை விரும்புபவன், பிறர்பொருளை விரும்புபவன், துன்புறுத்தும் தன்மையுடையவன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கொள்பவன், அத்தகைய கர்த்தா ராஜஸன் என்று சொல்லப்படுகிறான்
-
18.28 யோகத்திற்கு ஒவ்வாத மனமுடையவன், அறிவு வளரப்பெறாதவன், முரடன்,வஞ்சகன், பழிகாரன், சோம்பேரி, துயருறுபவன், காலம் நீட்டிப்பவன், இத்தகைய கர்த்தா தாமஸன் என்று சொல்லப்படுகிறான்
-
18.29 தனஞ்சயா, புத்தியினுடையவும், அங்ஙனமேயுள்ள உறுதியினுடையவும் குணங்களுக்கேற்ற மூன்றுவிதமான பேதத்தை தனித்தனியாய் பாக்கியில்லாமல் சொல்கிறேன் கேள்
-
18.30 பார்த்தா, பிரவிருத்தியையும், நிவிர்த்தியையும், செய்யத்தகுந்த காரியத்தையும் செய்யக்கூடாத காரியத்தையும், பயத்தையும், பயமின்மையையும், பந்தத்தையும், மோக்ஷத்தையும் எது அறிகிறதோ அந்த புத்தி சாத்திவிகமானது
-
18.31 பார்த்தா, தர்மத்தையும், அதர்மத்தையும் செய்யக்கூடிய காரியத்தையும், செய்யக்கூடாத காரியத்தையும் சரியாக அறியாத புத்தி ராஜஸமானது
-
18.32 பார்த்தா, அக்ஞான இருளால் மூடப்பெற்ற எந்த அறிவானது அதர்மத்தை தர்மமாகவும், பொருட்களையெல்லாம் விபரீதமாகவும்(அதர்மமாகவும்) நினைக்கிறதோ அது தாமஸமானது
-
18.33 பார்த்தா, ஒருமை மனத்தைக்கொண்டு பிறழாத எந்த உறுதியால் மனம்,பிராணன்,இந்திரியங்களின் செயல்களை ஒருவன் நெறிப்படுத்துகிறானோ, அந்த ஊறுதியானது சாத்வீகமானது
-
18.34 பார்த்தா, எந்த உறுதியினால், அறம்,இன்பம்,பொருள் ஆகியவைகளை காக்கிறானோ, பெரும் பற்றுதலால் பயனை விரும்புபவனாகிறானோ. அந்த உறுதியானது ராஜஸமானது
-
18.35 பார்த்தா, தூக்கத்தையும், பயத்தையும், துயரத்தையும், மனக்கலக்கத்தையும், செருக்கையும் விடாமல் பிடிக்கும் அறிவிலியின் உறுதியானது தாமஸமானது
-
18.36 பார்த்தா, எந்த பயிற்சியால், இன்பமடைகிறானோ, துக்கத்தின் முடிவை அடைகிறானோ,அந்த மூன்றுவிதமான சுகத்தை சொல்கிறேன் கேள்
-
18.37 எது முதலில் விஷம் போலவும் முடிவில் அமிர்தத்திற்கு ஒப்பானதும் ஆகிறதோ அந்த சுகம் சாத்விகம். ஆத்மநிஷ்டையில் தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது
-
18.38 இந்திரியங்கள் மூலம் இந்திரியார்த்தங்களை அனுபவிப்பதால் முதலில் அமிர்தம் போலவும் முடிவில் விஷம் போலவும் வரும் சுகம் எதுவோ அது ராஜஸம் என சொல்லப்படுகிறது
-
18.39 எந்த சுகம் துவக்கத்திலும் முடிவிலும் தனக்கு மயக்கத்தை உண்டுபண்ணுகிறதோ, சோம்பல்,தடுமாற்றம் இவற்றிலிருந்து பிறக்கும் அது தாமஸம் என்று சொல்லப்படுகிறது
-
18.40 பிரகிருதியிலிருந்து உதித்த இந்த மூன்று குணங்களிலிருந்து விடுதலையடைந்த, அந்த சுத்த ஸத்துவம் பூவுலகிலோ அல்லது தேவலோகத்தில் தேவர்களுக்கிடையிலோ இல்லை
-
18.41 எதிரிகளை எரிப்பவனே, பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது
-
18.42 அந்தக்கரணங்களை அடக்குதல், புறக்கரணங்களை அடக்குதல்,தவம்,தூய்மைஈபொறுமைஈநேர்மை,சாஸ்திரஞானம்,விக்ஞானம்,கடவுள் நம்பிக்கை இவையாவும் பிராமணனுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்
-
18.43 சூரத்தன்மை, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டமை,தானம், ஈஸ்வரத்தன்மை இவைகள் சத்திரியங்களுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்
-
18.44 உழவும், கால்நடை காத்தலும், வண்கமும் இயல்பாயுண்டாகிய வைசிய கர்மங்கள். முதலாளி சொல்லும் பணியை செய்வது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டான கர்மம்
-
18.45 அவனவனுக்குரிய கர்மத்தில் இன்புறுகின்ற மனிதன் நிறைநிலையை அடைகிறான். தன் கர்மத்தில் கருத்து வைப்பவன் எப்படி பரிபூரணத் தன்மையை அடைகிறான் அதைக்கேள்
-
18.46 யாரிடத்திலிருந்து உயிர்கள் உற்பத்தியாயினவோ, யாரால் இவ்வையகம் எல்லாம் வியாபிக்கப்பட்டுள்ளதோ அவரை மனிதன் தனக்குரிய கர்மத்தால் அவரை வணங்கி சித்தியடைகிறான்
-
18.47 குறையில்லாத பிறருடைய தர்மத்தைவிட குறையுள்ளதாக இருந்தாலும், தன்னுடைய தர்மம் சிறந்தது. சுவபாவத்தில் அமைந்த கர்மத்தை செய்பவன் கேடு அடைவதில்லை
-
18.48 குந்தியின் மைந்தா, குறை உடையதாக இருந்தாலும். தன்னுடன் பிறந்த கர்மத்தை விடக்கூடாது. ஏனென்றால் தீ புகையால் சூழப்பட்டிருப்பதுபோல் எல்லா கர்மங்களும் குறைகளால் சூழப்பட்டிருக்கிறது
-
18.49 எங்கும் பற்றற்ற புத்தியுடையவனாய், சிந்தையை அடக்கியவனாய், ஆசையற்றவனாய், சந்நியாசத்தால் உயர்ந்த கர்மமற்ற நிலையை அடைகிறான்
-
18.50 குந்தியின் மகனே, செயலற்ற நிலையை அடைந்தவன் எப்படி ஞானத்தின் மேலான வடிவாகிய பிரம்மத்தை அடைகிறானோ, அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள்
-
18.51 பரிசுத்தமான புத்தியுடன் கூடியவனாய், உறுதியுடன், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, சப்தம் முதலிய இந்திரிய விஷயங்களை துறந்து விருப்பு, வெறுப்பை துறந்து
-
18.52 தனித்திருப்பவனாய், குறைவாக உண்பவனாய், வாக்கையும், உடலையும் மனத்தையும் அடக்கியவனாய், எப்பொழுதும் தியான யோகத்தில் விருப்பமுள்ளவனாய், வைராக்கியத்தை அடைந்தவனாய்,
-
18.53 அகங்காரம், வன்மை, செருக்கு, காமம், குரோதம்,தனக்கென்று எதுவும் இல்லாமல், நான் செய்கிறேன் என்ற எண்ணமின்றி, சாந்தமாக இருப்பவன் பிரம்மமாவதற்கு தகுந்தவனாகிறான்
-
18.54 பிரம்மஞானத்தில் உறுதிபெற்று தெளிந்த மனமுடையவன் துயருறுவதில்லை, ஆசைப்படுவதில்லை, எல்லா உயிர்களிடத்தும் ஸமமாக இருப்பவன் என்னிடத்தில் மேலான பக்தியை அடைகிறான்
-
18.55 நான் எத்தன்மையுடையவனாக இருக்கிறேன் என்று பக்தியினால் உள்ளபடி அறிகிறான். அதன்பிறகு என்னை உள்ளபடி அறிந்து, விரைவில் என்னிடம் ஐக்கியமாகிறான்
-
18.56 எப்பொழுதும் எல்லா கர்மங்களையும் செய்தபோதிலும், என்னை சரணடைகிறவன் எனது அருளால் நித்தியமாயிருப்பதும், அவ்யயம் ஆகிய நிலையை அடைகிறான்
-
18.57 விவேகத்தால் கர்மங்களையெல்லாம் என்னிடம் ஒப்படைத்து, என்னை குறிக்கோளாகக்கொண்டு, புத்தியோகத்தை சார்ந்திருந்து எப்பொழுதும் சித்தத்தை என்னிடம் வைத்தவனாக இரு
-
18.58 நீ சித்தத்தை என்னிடம் வை, எனது அருளால் எல்லா இடஞ்சல்களையும் தாண்டி செல்வாய். அகங்காரத்தால் கேட்காமல் இருந்தால் கேடு அடைவாய்
-
18.59 அகங்காரத்தை அடைந்து போர்புரியமாட்டேன் என்று நினைத்தால், உன்னுடைய துணிவு பொய்யாகி போகும். உன் இயல்பு உன்னை போரிபுரிய பிணைத்து இழுக்கும்
-
18.60 குந்தியின் மகனே மோஹத்தால் எதைச் செய்ய மறுக்கிறாயோ, உன் இயல்பில் பிறந்த கர்மத்தால் கட்டுண்டவனாய், உன் வசமில்லாதவனாய் அதையே செய்வாய்
-
18.61 அர்ஜுனா, ஈஸ்வரன் எல்லா உயிர்களையும் மாயை என்னும் எந்திரத்தில் ஏற்றி ஆட்டிவைத்துக்கொண்டு, உயிர்களுடைய ஹிருதயத்தில் இருக்கிறார்
-
18.62 பாரதா, எல்லா வகையிலும், அவனையே சரணடை, அவருடைய கருணையால் மேலான சாந்தியையும் நிலையான வீடுபேற்றையும் அடைவாய்
-
18.63 இங்ஙனம் ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமான ஞானம் உனக்கு. என்னால் சொல்லப்பட்டது. இதை முழுவதும் ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படி செய்
-
18.64 என்னுடைய எல்லா ரகசியங்களிலும், மேலான வார்த்தைகளை திரும்பவும் கேள். எனக்கு பிடித்தமானவனாய் இருக்கிறாய். ஆகையால் உனக்கு நலத்தை தருகிறேன்
-
18.65 என்னிடம் மனதை வைத்தவனாய், என்னிடம் பக்தி செலுத்தியவனாய் என்னை வணங்கு, என்னையே அடைவாய். நான் உனக்கு உண்மையாக உறுதியாக கூறுகிறேன். எனக்கு பிரியமானவனாய் இருக்கிறாய்
-
18.66 எல்லா தர்மங்களையும் துறந்துவிட்டு என்னையே சரணடைவாயாக. நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே
-
18.67 இந்த உபதேசத்தை, பக்தியில்லாதவனுக்கும், சேவை செய்யாதவனுக்கும், என்னை நிந்திக்கிறவனுக்கும் சொல்லாதே
-
18.68 யார் மிக ஆழ்ந்த இந்த தத்துவத்தை என் பக்தர்களிடம் போதிக்கிறானோ, என்னிடம் மேலான பக்தி செய்பவன், சந்தேகமில்லாமல் என்னையே அடைவான்
-
18.69 மனிதர்களுள் யார் எனக்கு பிரியமானதை செய்கிறானோ, அவனைவிட எனக்கு அதிக பிரியமானவன் இந்த புவியில் யாரும் இல்லை
-
18.70 மேலும், யார் நமது இந்த தர்மம் நிறைந்த உரையாடலை கற்றறிகிறானோ, அவனால் நான் ஞானயக்ஞத்தால் ஆராதிக்கப்பெற்றவன் ஆகிறேன். இது எனது கருத்து
-
18.71 சிரத்தையுடையவனாகவும், அவமதிப்பில்லாதவனாகவும் எம்மனிதன் கேட்கிறானோ, அவனும் விடுதலையடைந்தவனாய் புண்ணிய கர்மம் செய்பவர்களுடைய நல்லுலகங்களை அடைவாய்
-
18.72 பார்த்தா, உன்னால் ஒருமை மனத்துடன், இது கேட்கப்பட்டதா? உன்னுடைய அறியாமையிலிருந்து உதித்த குழப்பம் அழிந்ததா?
-
18.73 அர்ஜுனன் சொன்னது
அர்சுதா, மயக்கம் ஒழிந்தது. உமது அருளால் அறிவு வந்துள்ளது. உறுதி வந்துள்ளது. சந்தேகங்கள் போய்விட்டன. உமது சொற்படி செய்வேன்
-
18.74 ஸஞ்சயன் சொன்னது
நான் இங்ஙனம், வாசுதேவருக்கும் மகாத்மாவான பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான உரையாடலை கேட்டேன்
-
18.75 நான் வியாச பகவானுடைய அருளால் இந்த மேலான ரகசியத்தை, தாமே சொல்லுபவராகிய யோகேஷ்வரனாகிய கிருஷ்ணரிடமிருந்து நேரே கேட்டேன்
-
18.76 அரசே கேசவருக்கும், அர்ஜுனனுக்கும் நடந்த புண்ணியமும் அற்புதமும் கலந்த உரையாடலை நினைத்து நினைத்து திரும்பத்திரும்ப மகிழ்வடைகிறேன்
-
18.77 அரசே ஹரியினுடைய அந்த அற்புத வடிவத்தை எண்ணி எண்ணி எனக்கு இன்னும் பெரும் வியப்பு உண்டாகிறது. மேலும் மேலும் மகிழ்வடைகிறேன்
-
18.78 யோகேஷ்வரக் கிருஷ்ணனும் தனுசைத் தாங்கிய பார்த்தனும் எங்கு உள்ளனரோ அங்கு, ஸ்ரீயும்,வெற்றியும்,பெருக்கும், நிறைந்த நியாயமும் இருக்கும் என்பது என்னுடைய கொள்கை
-
அத்தியாயம் பதினெட்டு நிறைவுற்றது
-
பகவத்கீதை நிறைவுற்றது

No comments:

Post a Comment