Sunday, 25 February 2018

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-15

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-15
-
ஸ்ரீபகவான் சொன்னது
-
15.1 மேலே வேருள்ளதும் கீழே கிளைகள் உள்ளதும் ஆகிய ஆலமரத்தை அழிவற்றது என்று சொல்கிறார்கள். வேதங்கள் அதனுடைய இலைகள். அதை யார் அறிகிறானோ அவன் வேதத்தை அறிபவன் ஆகிறான்.(ஆலமரத்திற்கு வேர்கள் பூமிக்கு கீழே இருக்கும்.ஆனால் மனிதனின் வேர்கள் அதாவது மூளை மேலே இருக்கிறது.இந்த அடிப்படையில் மனிதனையும், பிரபஞ்சத்தையும்  புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.)
-
15.2 அந்த மரத்தினுடைய கிளைகள், குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர்விட்டு,கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மனித உலகத்தில் வேர்கள் கர்மத்தை விளைவிப்பனவாய் கீழ்நோக்கி பரவியிருக்கின்றன
-
15.3 இகத்தில் அந்த மரத்தினுடைய ரூபம் அவ்வாறு புலப்படுவதில்லை. அதற்கு முடிவில்லை.ஆதியில்லை,இருப்புமில்லை. இந்த வலுத்து வேரூன்றிய அசுவத்த மரத்தை திடமான பற்றின்மை என்னும் வாளால் வெட்டவேண்டும்.
-
15.4 எங்கு போய் திரும்பவும் திரும்பி வருவதில்லையோ, யாரிடத்திலிருந்து பண்டைய பிரவிருத்தி பிரபவித்ததோ அதே ஆதிபுருஷனை சரணடைகிறேன்.அந்த மேலானநிலை தேடத்தக்கது
-
15.5 அகங்காரத்தையும்.பகுத்தறிவிமையும் நீங்கியவர்களாய், பற்று என்னும் குற்றத்தை வென்றவர்களாய் ,அத்யாத்ம நிஷ்டர்களாய், காமத்தை போக்கியவர்களாய், சுகதுக்கம் எனப்படும் இருமைகளிலிருந்து விடுபட்டவர்களாய் மடமையை தவிர்த்தவர்கள், அந்த அழிவில்லாத நிலையை அடைகிறார்கள் 
-
15.6 எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, அதை சூரியன் விளக்குவதில்லை.சந்திரனும் விளக்குவதில்லை.தீயும் விளக்குவதில்லை. அது என்னுடைய பரமபதம்
-
15.7 என்றென்னும் எனது அம்சமே ஜீவனாகத்தோன்றி, ஜீவலோகத்தில் பிரகிருதியிலேயே நிற்கின்ற மனதை ஆறாவதாகவுடைய இந்திரியங்களை (போகத்தை நோக்கி) கவர்கிறது
-
15.8 மலர்களிலிருந்து மணங்களை காற்று எடுத்துக்கொண்டு செல்வதுபோன்று, உடலை ஆள்பவன்(ஆன்மா) உடல் எடுக்கும்போதும்,விடும்போதும்.இந்திரியங்களை பற்றிக்கொண்டு போகிறான்
-
15.9 அவன் செவி.கண்,தோல்,நாக்கு.மூக்கு,மனம் ஆகியவைகளை தனதாக்கிக்கொண்டு விஷயங்களை அனுபவிக்கிறான்
-
15.10 ஓர் உடலில் இருந்து இன்னோர் உடலுக்கு செல்லும்போதும், ஓர் உடலில் இருக்கும்போதும் அனுபவிப்பவனை(ஆ்னமாவை), குணத்தோடு கூடியிருப்பவனை,மூடர்கள் காண்பதில்லை. ஞானக்கண்களை உடையவர்கள் பார்க்கிறார்கள்
-
15.11 யோகியாவதற்கு முயல்பவர்கள், அதை(அனுபவிப்பவனை) தங்களுக்குள் வீற்றிருப்பவனாய் பார்க்கின்றனர். முயற்சியுடையவர்களாக இருந்தாலும் பக்குவப்படாதவர்கள், அறிவற்றவர்கள் அதை பார்ப்பதில்லை
-
15.12 எந்த சூரியனிடத்திலுள்ள வெளிச்சம் உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறதோ. சந்திரனிலும்,அக்கினியிலும் எந்த வெளிச்சம் உள்ளதோ அந்த பிரகாசம் என்னுடையதென்று அறிக(இறைவனுடையது)
-
15.13 நான் என் ஓஜஸினால் பூமியினுள் பிரவேசித்து உயிர்களை தாங்குகிறேன். இனிமையான சந்திரனாகவும் ஆகி எல்லா பயிர்களையும் வளர்க்கிறேன்
-
15.14 நான் வைச்வானரன் ஆகி (வயிற்றில் உணவை செரிக்கும் சக்தி) பிராணிகளுடைய தேகத்தில் இருந்துகொண்டு, பிராணனுடனும் அபானனுடனும் கூடி நான்குவிதமான அன்னத்தை ஜீரணம் செய்கிறேன்(நக்கி உண்ணும் உணவு,குடிக்கும் உணவு.கடித்து உண்ணும் உணவு,மென்னுதின்னும் உணவு)
-
15.15 நான் எல்லோருடைய ஹிருதயத்தில் தங்கியிருக்கிறேன். மேலும் என்னிடமிருந்து நினைவும்,மறதியும்,ஞானமும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்படும் பொருள் நானே. வேதாந்தத்தை(வேதத்தின்சாரம்) செய்தவனும்,வேதத்தை அறிந்தவனும் நானே
-
15.16 க்ஷரன் என்றும் அக்ஷரன் என்றும் இந்த இரண்டே புருஷர்கள் உலகில் உண்டு(அழியக்கூடியவன் க்ஷரன்.அழிவில்லாதவன் அக்ஷரன்) . எல்லா உயிர்களும் க்ஷரன். கூடஸ்தன் (அதாவது பல்வேறு மாயகாட்சியை காட்டவல்லவன்) அக்ஷரன் என்று சொல்லப்படுகிறான்.
-
15.17 மற்றும் அக்ஷரத்திற்கும் அன்னியமாக உத்தம புருஷனாக எப்பொழுதும் பரமாத்மா என்று அழைக்கப்படுபவர் யாரோ அவர் உயிர்களின் தலைவர், மாறுபடாதவர் மூவுலகத்திலும் பிரவேசித்து தாங்குகிறார்.(மாயையை தனதாக்கிக்கொண்டு பிரபஞ்சத்தை படைக்கும்போது அது அக்ஷரன்.மாயை இல்லாமல் இருக்கும்போது பிரம்மம் அல்லது பரமாத்மா அல்லது புருஷன்)
-
15.18 நான் க்ஷரத்தை கடந்தவனாக, அக்ஷரத்திற்கும் மேலானவனாக இருப்பதால் உலகத்திலும்,வேதத்திலும்,புருஷோத்தமன் என்று புகழ்பெற்றவனாக இருக்கிறேன்
-
15.19 பாரதா, யார் இங்ஙனம் மயக்கமற்றவனாய் புருஷோத்தமன் என்று என்னை அறிகிறானோ அவன் முழுவதும் அறிந்தவனாய் முழுமனதோடு என்னை வணங்குகிறான்
-
15.20 பாபமற்றவனே. இங்ஙனம் ஆழ்ந்த இந்த சாஸ்திரம் என்னால் உரைக்கப்பட்டது. இதை அறிபவன் புத்திமானாகவும், கிருதார்த்தனும்(செய்ய வேண்டிய கர்மங்களை செய்து முடித்தவனும்) ஆகிறான்
-
அத்தியாயம் பதினைந்து நிறைவுற்றது

No comments:

Post a Comment