Sunday, 25 February 2018

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-16

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-16
-
பகவான் சொன்னது
-
16.1 அஞ்சாமை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்,தானம்,தமம்(உடலை அடக்குதல்) யக்ஞம்,சாஸ்திரங்களை படிப்பது,தபம்,நேர்மை
-
16.2 அஹிம்சை, சத்தியம்(உண்மை பேசுதல்) போகமின்மை,துறவு,அமைதி,கோள்சொல்லாமை, உயிர்களிடத்து இரக்கம், பிறர்பொருளை விரும்பாமை,மிருதுத்தன்மை,நாணம்.மனபலம்
-
16.3 தைரியம், மன்னிக்கும் குணம்,உறுதி,தூய்மை,வஞ்சகமின்மை,செருக்கின்மை இவைகள் அனைத்தும் தெய்வசம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பானவை
-
16.4 பார்த்தா, பகட்டு ,இறுமாப்பு, தற்பெருமை, சினம்,கடுமை, அறிவின்மை. இவைகள் அசுரகுணத்துடன் பிறந்தவனுக்கு உண்டு
-
16.5 தெய்வ சம்பத்தானது மோஷத்தின் பொருட்டு. அசுர சம்பத்து பந்தப்படும் பொருட்டு என்றும் கருதப்படுகிறது. பாண்டவா.வருந்தாதே தெய்வசம்பத்தை பெற்றுப் பிறந்தவனாய் இருக்கிறாய்
-
16.6 பார்த்தா இந்த உலகத்தில் தெய்வீகம் என்றும் அசுரம் என்றும் இருவகை உயிர்ப்பிறப்புகள் உள்ளன. தெய்வஇயல்பு குறித்து விரிவாக சொல்லப்பட்டது. அசுர இயல்பை சொல்கிறேன் கேள்
-
16.7 அசுர ஜனங்கள், செய்யக்கூடிய செயல்கள் குறித்தும், செய்யக்கூடாத செயல்கள் குறித்தும் அறியமாட்டார்கள். அவர்களிடத்தில் தூய்மையில்லை. நல்லொழுக்கம் இல்லை. சத்தியமும் இல்லை
-
16.8 உலகம் சத்தியமில்லாதது.தர்மம் இல்லாதது.ஈஸ்வரன் இல்லை,ஆண்,பெண் இணக்கத்தால் காமத்தால் உண்டானது. அதுதவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள்
-
16.9 அற்பு புத்தியுடையவர்கள் இந்த கொள்கையை பிடித்துக்கொண்டு தன்னை நஷ்டப்படுத்திக்கொண்டவர்களாய் கொடூர செயல்புரிபவர்களாய் உலகத்தின் எதிரிகளாய் அழிவதற்கென்று தோன்றியிருக்கின்றனர்
-
16.10 நிறைவேறாத ஆசையுடையவர்களாய், ஆடம்பரமும் ,தற்பெருமையும்,இறுமாப்பும் உடையவர்களாய்,மதிமயக்கத்தால் கெட்டஎண்ணங்களை கிரகித்துக்கொண்டு தீயதீர்மானங்களுடன் செயல்பரிகிறார்கள்
-
16.11 சாகும்வரையில் அளவுகடந்த கவலை அடைந்தவர்களாய், காம நுகர்ச்சியையே அனைத்திலும் மேலானதாக கருதி. மற்றொன்று இல்லை என்று தீர்மானம் செய்தவர்களாய்
-
16.12 நூற்றுக்கணக்கான ஆசைக்கயிறுகளால் தளைக்கப்பட்டவர்களாய் காமக்குரோதங்களில் வசப்பட்டவர்களாய் காமபோகத்தின் பொருட்டு நியாயமற்ற வழியில் பொருள் தேடமுயல்கின்றனர்
-
16.13 இன்று என்னால் இது அடையப்பட்டது. இந்த விருப்பத்தை நிறைவேற்றுவேன்.இது இருக்கிறது மேலும் எனக்கு இந்த செல்வம் வந்துசேரும்
-
16.14 அந்த பகைவன் என்னால் கொல்லப்பட்டான், மற்றவர்களையும் கொல்லுவேன், நான் ஆளுபவன், போகத்தை அனுபவிப்பவன், நான் வெற்றிபெறுவேன்,இன்புறுவேன்
-
16.15 செல்வமுடையவன். உயர்குலத்தவனாக இருக்கிறேன். எனக்கு சமமானவன் வேறு யார் இருக்கிறார். யாகம் செய்வேன், தானம் செய்வேன், மகிழ்ச்சியடைவேன். இப்படி அக்ஞானத்தில் மயங்கியவர்கள்
-
16.16 பல எண்ணங்களில் குழப்பமடைந்தவர்கள் மோஹவலையில் மூடப்பட்டவர்கள் காமபோகங்களில் பற்றுடையவர்கள் பாழ்நரகில் வீழ்கின்றனர்
-
16.17 தற்புகழ்ச்சியுடையவராய், வணக்கமில்லாதவர், செல்வசெருக்கும் மதமுடையவர், பெயரளவில் யாகத்தை விதிவழுவி ஆடம்பரத்திற்காக செய்கின்றனர்
-
16.18 அகங்காரம். பலம்.இறுமாப்பு,காமம், குரோதம் இவைகளையுடையவர்கள் தங்கள் தேகத்திலும்,பிறர் தேகத்திலுமுள்ள என்னை வெறுத்து அவமதிக்கின்றனர்
-
16.19 துவேஷமுடையவர்களை,கொடியவர்களை,கடையவரை,இழிந்தோரை,பிறந்து இறந்து உழலும் உலகில் அசுரப்பிறிவிலேயே திரும்பத்திரும்ப நான் அவர்களை தள்ளுகிறேன் 
-
16.20 குந்தியின் மகனே, மூடர்கள் பல பிறவிகளில் அசுரயோனிகளில் பிறந்து என்னை அடையாமல் இன்னும் கீழான கதியை அடைகிறார்கள்
-
16.21 காமம்,குரோதம்,லோபம் ஆகிய மூன்றுவிதமான வாயிலையடையது நரகத்தின் வாயில்.ஆத்மாவுக்கு நாசத்தை உண்டுபண்ணுவது. ஆகையால் இந்த மூன்றையும் துறத்தல் வேண்டும்
-
16.22 அர்ஜுனா.இம்மூன்று நரக வாயில்களிலிருந்து விடுபட்டவன் தனக்கு நலன் செய்துகொண்டு. பின்பு மோஷத்தை அடைகிறான்
-
16.23 காமத்தின் வசப்பட்டு சாஸ்திரத்தின் ஆணையைமீறி நடப்பவன் எவனோ, அவன் பரிபூரணத் தன்மையை அடைவதில்லை. சுகத்தை அடைவதில்லை.மோக்ஷத்தை அடைவதில்லை
-
16.24 ஆகையால் செய்யத்தகுந்தது, செய்யத்தகாதது எது என்பதை நிச்சயிப்பதில் உனக்கு சாஸ்திரம் பிரமாணமாகிறது. இங்கு சாஸ்திரம் சொல்வதை அறிந்து கர்மம் செய்ய கடமைப்பட்டிருக்கிறாய்
-
அத்தியாயம் பதினாறு நிறைவுற்றது

No comments:

Post a Comment