Tuesday 13 February 2018

ஸ்ரீமத் பகவத்கீதை-அத்தியாயம்-14


ஸ்ரீமத் பகவத்கீதை-அத்தியாயம்-14
-
ஸ்ரீபகவான் சொன்னது
-
14.1 முனிவர்கள் எல்லோரும் எதை அறிந்து இங்கு மேலான சித்தியை அடைந்தார்களோ, ஞானங்களுள் உத்தமமான மேலான ஞானத்தை திரும்பவும் சொல்கிறேன்
-
14.2 இந்த ஞானத்தை கடைபிடித்து என்சொரூபத்தை அடைந்தவர்கள் பிரபஞ்சம் வெளிப்படும்போது (சிருஷ்டி) பிறப்பதில்லை, பிரபஞ்சம் ஒடுங்கும்போது (பிரளயத்தில்) துன்புறுவதில்லை
-
14.3 பரதகுலத்தில் உதித்தவனே, மஹத் பிரம்மம் எனது யோனி. அதில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன். அதிலிருந்து எல்லா உயிர்களின் உற்பத்தி உண்டாகிறது (மஹத்-பிரபஞ்சபுத்தி)
-
14.4 குந்தியின்புத்ரா, எல்லா யோனிகளிலும் எந்த வடிவங்கள் பிறக்கின்றனவோ, அவைகளுக்கு மஹத்பிரம்மம் தான் யோனி(பிறப்பிடம்) நான் பீஜம் வழங்கும் பிதா(பிரம்மம்)
-
14.5 மஹாபாகுவே ஸத்வம், ரஜஸ்,தமஸ் என்று பிரகிருதியிலிருந்து உண்டான குணங்கள் தேகத்தில் அழியாத தேகியை பந்தப்படுத்துகின்றன
-
14.6 பாபமற்றவனே, அவற்றுள் சத்வகுணமானது தூய்மையானது, ஒளிபொருந்தியது, தொந்தரவு செய்யாதது. சுகத்தில் பற்றுதலாலும், ஞானத்தில் பற்றுதலாலும் பந்தப்படுத்துகிறது
-
14.7 குந்திபுத்ரா, ரஜோகுணத்தை ஆசை வடிவுடையது என்றும், தீராத தாகத்தையும், பற்றுதலையும் உண்டுபண்ணுவது என்றும் அறி. கர்மபற்றினால் அது தேஹியை பந்தப்படுத்துகிறது
-
14.8 பாரதா, தமோகுணமோ,அக்ஞானத்தில் பிறந்து, எல்லா தேஹிகளுக்கும் மயக்கத்தை உண்டுபண்ணுவது என்று அறி. அரட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் அது பந்தப்படுத்துகிறது
-
14.9 பாரதா சத்துவகுணம் சுகத்தில் சேர்க்கிறது. ரஜோகுணம் கர்மபந்தத்திலும், தமோகுணம் ஞானத்தை மறைத்து கவனமின்மையிலும் இணைக்கிறது
-
14.10 அர்ஜுனா, சத்வம், ரஜசையும் தமசையும் அடக்கி மேலெழுகிறது. ரஜஸ், சத்துவத்தையும் தமசையும் அடக்குகிறது. அங்ஙனம் தமஸ், சத்துவத்தையும் ரஜசையும் அடக்குகிறது
-
14.11 எப்பொழுது. இந்த தேகத்தில் எல்லா பொறிவாயில் வழியாக ஞானத்தின் ஒளி உண்டாகிறதோ அப்பொழுது சத்துவம் ஓங்கியுள்ளது என்று அறியவேண்டும்
-
14.12 பரதசிரேஷ்டா பேராசை,பிரவிருத்தி,புதியகர்மங்களை செய்தல்,அமைதியின்மை, கர்மங்களில் பற்று இவைகள் ரஜோகுணம் மேலெழும்போது உண்டாகிறது
-
14.13 குருகுலத்தில் உதித்தவனே, விவேகமின்மை, முயற்சியின்மை,கவனக்குறைவு.மதிமயக்கம் இவைகள் தமோகுணம் மேலெழும்போது உண்டாகின்றன
-
14.14 எப்பொழுது சத்வகுணம் மேலோங்கியிருக்குமோ, அப்போது தேகத்தை எடுத்தவன் மரணமடைந்தால்,உயர்ந்த , குற்றமற்ற உலகங்களை அடைகிறான்
-
14.15 ரஜோகுணத்தில் மரணமடைந்தால் கர்மப்பற்றுடையவர்களிடத்து மீண்டும் பிறக்கிறான். அப்படியே தமோகுணத்தில் சாகின்றவன் அறிவில்லாதவர்கள் கர்ப்பத்தில் பிறக்கிறான்
-
14.16 நற்கர்மத்தின் பலன் தூய்மை, சாத்வீகம் என்று சொல்கிறார்கள். ரஜோகுணத்தின் பயன் துக்கம். தமோகுணத்தின் பயன் அறிவின்மை
-
14.17 சத்வகுணத்திலிருந்து ஞானம் உதிக்கிறது. ரஜஸிலிருந்து பேராசையும்,தமஸிலிருந்து அக்ஞானமும்,கவனமின்மையும்,மதிமயக்கமும் உண்டாகின்றன
-
14.18 சத்வகுணத்திலுள்ளவர்கள் மேல்நோக்கி போகிறார்கள். ரஜோகுணத்தில் உள்ளவர்கள் மத்தியில் நிற்கிறார்கள். தமோகுணத்தில் இருப்போர் கீழ்நோக்கி செல்லுகின்றனர்
-
14.19 எப்பொழுது காண்போன்(ஞானி) குணங்களே செயல்புரிகின்றன, வேறு செயல்புரிபவன் இல்லை என காண்கிறானோ,குணங்களுக்கு மேலானதையும் அறிகிறானோ. அப்பொழுது அவன் என்சொரூபத்தை அடைகிறான் (இறைசொரூபத்தை அடைகிறான்)
-
14.20 தேகத்தை உண்டாக்குகின்ற இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு,இறப்பு,வயோதிக துன்பத்திலிருந்து விடுபட்ட, தேகமெடுத்தவன் மரணமில்லாத்தன்மையை அடைகிறான்
-
14.21 அர்ஜுனன் சொன்னது
பிரபுவே ஜுவன் எந்த அடையாளங்களால் இந்த மூன்று குணங்களையும் கடந்துநிற்பவன் ஆகிறான். அவனுடைய நடத்தை எப்படிப்பட்டது? எப்படி இந்த மூன்று குணங்களை கடக்கிறான்?
-
14.22 ஸ்ரீபகவான் சொன்னது
பாண்டவா, ஒளி(சத்வம்) செயல்(ரஜஸ்) மயக்கம் (தமஸ்) இவை வரும்போது வெறுப்பதில்லை, வராதபோது அதற்காக ஏங்குவதில்லை
-
14.23 உதாசீனனைப்போல் இருந்துகொண்டு, குணங்களால் அசைக்கப்படுவதில்லை. குணங்களே செயல்புரிகின்றன என்று தன்னில் அசையாமல் நிலைத்திருக்கிறான்
-
14.24 துன்பத்தையும், இன்பத்தையும் சமமாக கருதுகிறவன், ஆத்மசொரூபத்திலிருப்பவன், மண்.கல்,பொன் இவைகளை சமமாகக் கருதுபவன். பிரியமானது வரும்போதும், பிரியமில்லாதது வரும்போதும் இரண்டையும் சமமாக கருதுபவன், தீரன், இகழ்ச்சி,புகழ்ச்சியை ஒன்றாக கருதுபவன்
-
14.25 மானத்திலும்,அவமானத்திலும் சமமானவன். நண்பனிடமும்,பகைவனிடமும் ஒரே தன்மையுடையவன், பலன்தரும் கர்மத்தை செய்யாதவன், அவன் குணாதீதன் (குணங்களை கடந்தவன்) என்று சொல்லப்படுகிறான்
-
14.26 யார் என்னை அவ்யபிசாரிணி பக்தியோகத்தால் (இடைவிடாமல் இறைவனை நினைத்தல்) உபாசிக்கிறானோ அவன் இந்த குணங்களை முற்றும் கடந்து பிரம்மம் ஆவதற்கு தகுதியுடையவனாகிறான்
-
14.27 நானே வேதத்திற்கும்,அழியாத மோட்சநிலைக்கும்,அழியாத தர்மத்திற்கும், ஒப்பற்ற சுகத்திற்கும் இருப்பிடம்
-
பதினான்காவது அத்தியாயம் நிறைவுற்றது

No comments:

Post a Comment