Tuesday, 13 February 2018

பகவத்கீதை கூறும் நான்கு விதமான வழிபாடுகள்


பகவத்கீதை கூறும் நான்கு விதமான வழிபாடுகள்.1.தேவர் 2.பித்ரு 3.பூதம் 4. இறைவன்
-
தேவர்களை வணங்குபவர்கள் தேவர்களை அடைகிறார்கள்.பித்ருக்களை(முன்னோர்களை) வணங்குபவர்கள் பித்ருக்களை அடைகிறார்கள்.பூதங்களை வணங்குபவர்கள் பூதங்களை அடைகிறார்கள்.என்னை வணங்குபவர்கள் என்னை அடைகிறார்கள்.கீதை 9.25
-
தேவர்களை வழிபடுதல் 
-
தேவர்கள் என்பவர்கள் யார்? மனிதனாக வாழ்ந்து பல புண்ணிய செயல்களை செய்பவர்கள் தேவர்கள்.பொதுவாக மக்களுக்கு நன்மை செய்த அரசர்கள்,மதகுருமார்கள் இறந்த பிறகு தேவர்களாக அதாவது ஒளியுடல் பெற்று வேறு உலகத்தில் வாழ்கிறார்கள்.இவர்கள் செய்திருக்கும் புண்ணியத்தின் பலனை பொறுத்து இவர்கள் வாழும் உலகங்களும் மாறுபடும்.இவர்கள் வாழும் உலகம் ஒளி உலகம்,அங்கு இருள் என்பதே இருக்காது என்பதால் தேவர்களுக்கு இமை இருக்காது. உண்பதற்கு எதுவும் தேவையில்லை என்பதால் வயிறு மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் இருக்காது.அவர்களது பாதம் தரையில் படாது.தேவர் , தேவி என இருபாலரும் அங்கே வசிப்பார்கள். தற்காலத்தில் இந்திரன்,வருணன் போன்ற தேவர் வழிபாடு பரவலாக இல்லை,இதற்கு புத்தர் காரணம்.ஆனால் அதற்கு பதிலாக வேறுவிதமான வழிபாடுகள் தற்காலத்தில் உள்ளன.மதகுருமார்களை தேவர்கள் நிலைக்கு உயர்த்தி வழிபடுகிறார்கள். சொர்க்கத்தில் இந்த மதகுருமார்களுடன் வாழலாம் என நினைக்கிறார்கள்.இதைப்பற்றி தனியாக விவரிக்கலாம்
-
பித்ருக்களை வழிபடுதல்
-
வீட்டில் உள்ள பெரியவர்கள், நல்ல வாழ்க்கை வாழ்ந்து இறந்த பிறகு, அடுத்த பிறவி எடுப்பதற்கு முன் சிறிது வருடங்கள் சூட்சும உடலில் வாழ்வதாக மக்கள் நினைக்கிறார்கள். காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்த பிறகு அதே குடும்பத்தில் மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்,அதற்கான காலம் வரும்வரை காத்திருப்பார்கள்,அல்லது வேறுபிறவி கிடைக்கும்வரைகாத்திருப்பார்கள். இவ்வாறு வீட்டில் முன்பு வாழ்ந்து மறைந்த பெரியவர்களை வணங்கினால் அது பித்ரு வழிபாடு.பித்ருக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கனவில் வந்து சில அறிவுரைகள் சொல்லலாம்.
-
பூதங்களை வழிபடுதல்
-
சிலர் அற்ப ஆயுளில் இறந்திருப்பார்கள்,வாழும்போது தீயவர்களாக இருந்திருப்பார்கள், அவர்கள் அருவருப்பான பூத உடலை அடைகிறார்கள்.அவர்களால் வெளிச்சத்தை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் இருள்நிறைந்த இடங்களில் வசிக்கிறார்கள்.இரவில் வெளியே சுற்றுவதை விரும்புவார்கள்.இந்த பூத உடலில் வசிப்பவர்களை சிலர் வழிபடுகிறார்கள்.கிருஷ்ணரின் காலத்திலிருந்து தற்காலம் வரை இந்த பூத வழிபாடு உள்ளது. கிராமங்களில் பெரும்பாலும் இந்த பூதங்களை வழிபடுகிறார்கள்.சுடலைமாடன்,வண்ணாரமாடன்,சங்கிலிபூதம்,இசக்கி,நீலி என்று பல பொதுவான பெயர்களில் வழிபடுகிறார்கள்.ஒவ்வொரு ஊரிலும் தனித்தனியாக பல சுடலைமாடன் கோவில் இருக்கும்.ஒவ்வொரு கோவிலிலும் ஒரு பூதம் குடியிருக்கும்.ஆனால் மக்கள் அனைத்து கோவிலிலும் உள்ள சுடலை மாடன் ஒருவர்தான் என நினைக்கிறார்கள், இது தவறு.பெயர்தான் ஒன்றுபோல இருக்கிறது ஆனால் அங்கே இருப்பது வேறு வேறு.இதை ஒரு உதாரணம் கொண்டு விளக்குகிறேன்.நான்கு ஊரில் உள்ள சுடலைமாடன் கோவிலில் ஒரே நேரத்தில் பூஜை செய்தால் நான்கு இடங்களிலும் தனித்தனியாக அந்த அந்த இடங்களில் சிலரின்மிது அந்தபூதங்கள் உட்புகுந்து ஆடும்,அதை சாமி ஆட்டம் என்பார்கள்.ஒரே பூதம் நான்கு இடங்களுக்கும் செல்வதில்லை. நான்கும் வேறு வேறு. சிலர் இந்த பூதங்களை கட்டுப்படுத்தி தீய செயல்களை செய்ய பயன்படுத்துவார்கள். இந்த பூதங்களுக்கு அன்பு,இரக்கம்,கருணை இருக்காது, யார் தன்னை வழிபடுகிறார்களோ,அவர்களின் கட்டளையை ஏற்று,மற்றவர்களுக்கு தீங்கு செய்யவும் தயங்காது. 
-
பெரும்பாலான மகான்கள் இந்த பூதவழிபாட்டை தடுத்திருக்கிறார்கள்.இந்துமதத்தின் மிகப்பெரிய சாபக்கேடு இந்த பூதவழிபாடுதான்.இப்படிப்பட்ட வழிபாடுகளை இந்துமதம் ஆதரிப்பதில்லை.அதேநேரத்தில் இப்படி வழிபடுபவர்கள் எல்லா காலங்களிலும் இருப்பார்கள் என்பதையும் நாம் மறக்ககூடாது. ஆன்மீகத்தை பற்றி தெரியாத மனிதர்கள் பூதவழிபாடுகள் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.பூதங்களை வழிபடுவது எளிது என்பதாலும்,உடனடியாக அவைகள் வந்துவிடுவதாலும் மக்கள் இவைகளை பின்தொடர்ந்து ஓடுகிறார்கள். இவைகளை வழிபடுபவர்கள் இறந்த பிறகு பூதங்களாக மாறிவிடுவார்கள்,என்பதால் இந்த வழிபாடுகளை ஆதரிக்ககூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை.
-
இறைவனை வழிபடுபவர்கள் இறைவனை அடைகிறார்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் தன்னை இறைவன் என்று கூறுகிறார். தான் பிறக்கவில்லை,இறப்பும் எனக்கு இல்லை,பிறவாத என்னை மானிட உடல் எடுத்திருப்பதாக நினைத்து அவமதிக்கிறார்கள் என்று சொல்வதன் மூலம் தனக்கு பிறப்பு இறப்பு இல்லை என்பதை தெளிவாக பல இடங்களில் விவரிக்கிறார். இறைவனுக்கு பிறப்பு, இறப்பு இல்லை என்பதை இங்கே புரிந்துகொள்ள வேண்டும். அந்த இறைவனை அடைபவர்கள் அதேபோல் பிறப்பு இறப்பு இல்லாத முக்தி நிலையை அடைந்துவிடுவார்கள். உருவவழிபாடு என்பது முக்தியை அடைவதற்கான படியில் உள்ளது, அது முடிவல்ல,தானும் இறைவனும் வேறுவேறல்ல என்று உணர்ந்து இறைவனுடன் ஒன்றுபடுவதுதான் கடைசிநிலை
-
கட்டுரை--சுவாமி வித்யானந்தர் (29-1-2018)
-
இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைய 9789 374 109

No comments:

Post a Comment