Sunday, 25 February 2018

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-13

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-13
-
ஸ்ரீபகவான் சொன்னது
-
13.1 குந்தியின் மைந்தா, இந்த உடல் சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. யார் இந்த உடலை அறிகிறானோ அவன் சேத்திரக்ஞன் என்று சொல்லப்படுகிறான்
-
13.2 அர்ஜுனா எல்லா சேத்திரங்களிலும் (உடல்களிலும்) என்னை சேத்திரக்ஞன்(எல்லா உடலையும் அறிபவன்) என்று அறிந்துகொள். சேத்திரம், சேத்திரக்ஞன் பற்றிய அறிவே(உடல் மற்றும் உடலை அறிபவன் பற்றிய அறிவே) ஞானம் என்பது என்னுடைய கொள்கை
-
13.3 அந்த சேத்திரம் யாது, எத்தன்மைகளை உடையது என்றும், என்னனென்ன விரிவுகளை உடையதென்றும், எதிலிருந்து எது உண்டானதென்றும் அந்த சேத்திரக்ஞன் யார் என்றும், என்ன மகிமையுடையவன் என்றும் அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள்
-
13.4 இவ்வுண்மை ரிஷிகளால் விதவிதமான சந்தங்களால் பாங்காக பலவகைகளில் பாடப்பெற்றிருக்கிறது. நிச்சய புத்தியை தந்து பிரம்மத்தை குறிக்கின்ற பதங்களாலும் பாடப்பட்டுள்ளது.
-
13.5,6 மஹாபூதங்கள், அகங்காரம்,புத்தி, அவ்யக்தம், இந்திரியங்கள் பத்து மற்றும் ஒன்று, இந்திரிய விஷயங்கள் ஐந்தும் விருப்பு,வெறுப்பு,சுகம்,துக்கம், உடலை இணைத்திருப்பது,அறிவு,மனவுறுதி இவைகள் வேறுபாடுகளோடு கூடிய சேத்திரம்
-
(மஹாபூதங்கள்(5)- ஆகாயம்,வாயு,அக்கினி,அப்பு,பிருத்துவி, 
-
அகங்காரம்(1)- நான் இருக்கிறேன் என்ற உணர்வு. 
-
புத்தி(1)- மஹத் அல்லது பிரபஞ்சமனம். 
-
அவ்யக்தம்(1)-மூலப்பொருட்கள் தோன்றாநிலை.
-
பத்து இந்திரியங்கள் அதில் ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து  ஞானேந்திரியங்கள்
-
வாக்கு, கை , கால் ,குதம், குறி இந்த 5 கர்மேந்திரியங்கள்.
-
ஞானஇந்திரியங்கள்(5)- கண்,காது,நாக்கு,மூக்கு,தோல் ஆகிய 5 ஞானஇந்திரியங்கள் 
-
இந்திரியார்த்தங்கள் அல்லது தன்மாத்திரிகைள்(5) - சப்த,ஸ்பர்ச,ரூப,ரச,கந்த அதாவது ஒலி,தொடுதல்,ஒளி,சுவை,மணம்  
-
ஒன்று(1) -உடலுள் உறைபவன் அல்லது ஆன்மா அல்லது புருஷன். 
-
இவைகள் சாங்கிய தத்துவம் கூறும் 24 தத்துவங்கள்)
-
ஞானம் எது என்பதை கிருஷ்ணர் விளக்குகிறார்

13.7 தற்பெருமையின்மை, செருக்கின்மை,அஹிம்சை,பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி,தன்னடக்கம்
-
13.8 இந்திரிய போக விஷயங்களில் விருப்பமின்மை (பார்த்தல்,கேட்டல்,சுவைத்தல்,தொடுதல்,நுகர்தல்) அகங்காரமின்மை, பிறப்பு இறப்பு மூப்பு பிணி துயரம் ஆகியவைகளில் உள்ள கேடுகளை எண்ணிப்பார்த்தல்
-
13.9 பற்றின்மை, மகன் மனைவி வீட்டைத் தனதென்று நினையாமலிருத்தல், விருப்பமானவை வரும்போதும், விரும்பாதது வரும்போதும் எப்பொழுதும் மனம் நடுநிலையில் நிற்பது
-
13.10 என்னிடத்திலிருந்து(இறைவனிடமிருந்து) எதையும் எதிர்பார்க்காத யோகத்தால் என்னிடம் தொடர்ந்து பக்திசெய்தல், தனியிடத்தை நாடுதல், மக்கள் கூட்டத்தில் விருப்பமின்மை
-
13.11 ஆத்மஞானத்தில் நிலைபெறுதல், தத்துவஞானத்தின் பலனை ஆராய்தல். இவையாவும் ஞானம் என்று சொல்லப்படுகிறது. எது இதற்கு அன்னியமானதோ அது அக்ஞானம்
-
அதை அறியவேண்டும் அதாவது எது கடவுள் என்பதை கிருஷ்ணர் விளக்குகிறார்
-
13.12 எது ஞேயம்(அறியத்தக்கது) எதை அறிந்து சாகாத்தன்மையை அடைகிறானோ அதை சொல்கிறேன். அது ஆதியில்லாதது,மேலானது,அது பிரம்மம். உள்ளது என்றும் சொல்லமுடியாது,இல்லை என்றும் சொல்லமுடியாதது.
-
13.13 அது எங்கும் கை கால்களை உடையது, எங்கும் கண்.தலை.வாய்களை உடையது. எங்கும் கால்களையுடையது. உலகில் எங்கும் வியாபித்து நிற்கிறது
-
13.14 எல்லா இந்திரியங்கள் மூலமாகவும் ஒளிர்வது, இந்திரியங்கள் எதவும் இல்லாதது. பற்றற்து, அனைத்தையும் தாங்குவது, குணமற்றது,குணங்களை அனுபவிப்பது
-
13.15 அது பூதங்களுக்கு (உலகில் உள்ள அனைத்திற்கும்) உள்ளும் புறமும் அசையாததும்,அசைவற்றதும் ஆகும். சூட்சுமமாக இருப்பதால் அறியமுடியாதது, (அது) தூரத்தில் இருப்பது,(அது) அருகில் இருப்பது
-
13.16 பொருட்களில் சேர்ந்தே இருப்பதாகவும்,பிரிவுபடாதது போலும் இருக்கிறது. பூதங்களைத் தாங்குவதும்,விழுங்குவதும் உண்டுபண்ணுவதும் அது என்று அறி
-
13.17 ஒளிக்கெல்லாம் ஒளியாகிய அது இருளுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படுகிறது.ஞானமாகவும்(அறிவு), ஞேயமாகவும் (அறியப்படும்பொருள்) அறிவினால் அடையப்படுவதுமாகிய அது எல்லோருடைய ஹிருதயத்தில் நிலைத்திருக்கிறது
-
13.18 இவ்வாறு சேத்திரமும் அவ்வாறே ஞானமும் ஞேயமும் சுருக்கமாக சொல்லப்பட்டது. இதை அறிந்து என்பக்தன், என்நிலையை அடைய தகுந்தவனாகிறான்
-
13.19 பிரகிருதியையும்,புருஷனையும் இவ்விரண்டையும் ஆதியில்லாதவைகள் என்று அறிக. பல்வேறு தோற்றங்களும் குணங்களும் பிரகிருதியில் பிறந்தவைகள் என அறிக
-
பிரகிருதி என்பது மேலே சொன்ன எங்கும் கைகள்,எங்கும் கால்கள் கொண்ட(13 முதல்17வரை) செயல்படும் நிலை.அல்லது இயற்கை.இந்த இயற்கை தனியாக இயங்காது அதுபற்றிய ஸ்லோகம் கீழே வருகிறது
-
-
13.20 கார்யத்தையும், காரணத்தையும் உண்டுபண்ணும் விஷயத்தில், பிரகிருதி காரணமென்று சொல்லப்படுகிறது. புருஷன் சுகதுகக்ங்களை அனுபவிப்பதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது
-
13.21 புருஷன் பிரகிருதியில் பிறந்த குணங்களை அனுபவிக்கிறான். அவனுக்கு நலம்,கேடு உடைய யோனிகளில் பிறப்பதற்கு குணப்பற்றுதலே காரணம்
-
13.22 இந்த தேகத்தில் மேலாக இருப்பவன் சாட்சி, அனுமதிப்பவன்,தாங்குபவன், அனுபவிப்பவன்,மஹேச்வரன்,பரமாத்மா இப்படியெல்லாம் சொல்லப்படுகிறான்
-
13.23 யார் இங்ஙனம் புருஷனையும் குணங்களுடன் கூடிய பிரகிருதியையும் அறிகிறானோ, அவன் எவ்வாறு வாழ்பவனாக இருப்பினும் திரும்பவும் பிறப்பதில்லை
-
(இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.அதை கடந்த புருஷனையும் அறியவேண்டும்)
-
13.24 சிலர் தியானத்தால் தன்னை தெளிவாக்கி, தன்னை தனக்குள்ளே காண்கிறார்கள். வேறுசிலர் சாங்கியயோகத்தாலும் இன்னும் சிலர் கர்மயோகத்தாலும்
-
13.24 இன்னும் சிலர் இவ்வாறு அறியாதவர்களானாலும் பிறரிடமிருந்து கேட்டு அறிந்து பின்பற்றுகிறார்கள். அவர்களும் கேட்ட உபதேசத்தில் நம்பிக்கை வைத்து மரணத்தை நிச்சயமாக கடக்கின்றனர்
-
13.26 பரத சிரேஷ்டா, தோன்றியுள்ள,இயங்கும் மற்றும் இயங்காத பொருட்கள் அனைத்தும் சேத்திர சேத்திரக்ஞனுடைய சேர்க்கையால் உண்டானது என்று அறி
-
13.27 எல்லா பூதங்களிலும் (உயிர்கள் உட்பட அனைத்தும்) ஸமமாக இருக்கிறவனும்,அழிவனவற்றுள் அழியாதவனுமாகிய பரமேஸ்வரனை யார் பார்க்கிறானோ அவனே (உண்மையை) பார்க்கிறான்
-
13.28 எங்கும் சமப் பார்வையுடையவன் அனைத்து இடங்களிலும் சமமாக நிலைத்திருக்கும் ஈசுவரனை பார்த்து, தன்னை தன்னால் அழித்துக்கொள்வதில்லை (அவன் அனைத்து இடங்களிலும் தன்னையே காண்கிறான்) அதனால் அவன் மேலான நிலையை அடைகிறான்
-
13.29 பிரகிருதியினாலேயே எல்லா கர்மங்களும் செய்யப்படுகின்றன.மேலும் தான் செயலற்றவன் என்றும் யார் பார்க்கிறானோ அவனே உண்மையை பார்க்கிறான்
-
13.30 எப்பொழுது பல்வேறு உயிர்கள் யாவும் ஒன்றிலிருப்பதையும், அந்த ஒன்றிலிருந்தே விரிவடைந்திருப்பதையும் காண்கிறானோ அப்பொழுது பிரம்மமாக ஆகிறான்
-
13.31 குந்திபுத்திரா. ஆதியில்லாததாலும்,குணமில்லாததாலும்,அந்த அழிவில்லாத பரமாத்மா சரீரத்தில் இருப்பினும் கர்மம் செய்வதில்லை கர்மத்தில் பற்றுவைப்பதில்லை
-
13.32 எப்படி எங்கும் வியாபித்துள்ள ஆகாசம் சூட்சுமமாயிருப்பதால் களங்கமடைவதில்லையோ,அப்படியே எங்கும், உடல்முழுவதும் நிறைந்திருக்கின்ற ஆத்மா களங்கமடைவதில்லை
-
13.33 அர்ஜுனா எப்படி ஒரு சூரியன் இந்த உலகத்தை பிரகாசமடையச்செய்கிறாளோ அப்படி சேத்திரத்தில் வீற்றிருக்கின்ற ஆத்மா சேத்திரம்(உடல்) முழுவதையும் பிரகாசிக்கின்றது
-
13.34 இவ்வாறு சேத்திர சேத்திரக்ஞனுக்கிடையில் உள்ள வேற்றுமைகளையும், உயிர்கள் பிரகிருதியிருந்து விடுதலையடைதலையும் ஞானக்கண்ணால் யார் அறிகிறார்களோ அவர்கள் மேலானதை (பிரம்மத்தை) அடைகிறார்கள்
-
பதிமூன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்-11

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்🌸
-
-part 11
-
🌸உலகியல் மனிதர்களிடம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு,இறைவனிடம் பக்தி செலுத்துங்கள் என்று சொன்னால் ஒருபோதும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.அவர்களுக்கு இறைவனைப்பற்றிய பேச்சு பிடிக்காது.
-
🌸சத்வகுணம் மிக்கவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? அவர்களுடைய வீடு அங்கும் இங்கும் இடிந்து கிடக்கும்.அதை பழுதுபார்க்க மாட்டார்கள்.பூஜையறையில் புறாக்கள் அசுத்தம் செய்யும். முற்றத்தில் பாசி படந்திருக்கும்.மேஜை நாற்காலிகள் பழையவையாக இருக்கும்.உடுத்துவதற்கு ஏதோ ஒரு துணி இருக்கும்.இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்,சாந்தமானவர்கள்,கபடம் இல்லாதவர்கள்,கருணை நிறைந்தவர்கள்,யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள்.இறைவனை நம்பி வாழ்வார்கள்.
-
🌸சத்துவ குண பக்தன் மிகவும் ரகசியமாக தியானம் செய்வான்.பசியை போக்கும் அளவுக்குத்தான் உடல்மீது கவனம் செலுத்துவான்.இவனுக்கு சோறும் கீரையும் கிடைத்தாலே போதும்.சுவையாக சாப்பிடவேண்டும் என்ற எண்ணமே இருக்காது.பிறரை புகழ்ந்துபேசி பணம் சம்பாதிக்க விரும்பமாட்டான்.வீட்டில் உள்ள பொருட்கள் மிகவும் சாதாரணமாகவே இருக்கும்
-
🌸இறைவன் இப்படிப்பட்டவர்தான் என்று சொல்லமுடியாது. அவர் உருவம் இல்லாதவர்,அதேவேளையில் உருவம் உள்ளவரும்கூட.பக்தர்களுக்காக அவர் உருவம் தாங்குகிறார்.யார் ஞானியோ,அதாவது யார் உலகத்தையோ கனவுபோல் காண்கிறானோ,அவர்களுக்கு அவர் உருவம் அற்றவராக உள்ளார்.
-
🌸கங்குகரையற்ற பெருங்கடலில் தண்ணீர்,ஆங்காங்கே உறைந்து பனிக்கட்டிகளாக காட்சி தருகிறது.சூரியன் உதித்ததும் பனிக்கட்டிகள் உருகிவிடும்.அதேபோல் பக்தனின் பக்தி என்ற குளிர்ச்சியால் இறைவன் உருவத்தோடு காட்சி தருகிறார்.ஞானம் என்ற சூரியன் உதித்ததும் உருவம் மறைந்துவிடுகிறது.அப்போது இறைவனை பற்றி வாயால் சொல்ல முடியாது.யார் சொல்வது?யார் சொல்வானோ அவனே இல்லை.அவனது நான்-உணர்வு அழிந்துவிடும்.
-
🌸ஒரு உப்புபொம்மை கடலை அளக்க சென்றது.கடலில் இறங்கியதுமே அதில் கரைந்துவிட்டது.பிறகு செய்தி சொல்வது யார்? அதுபோல் நான் என்ற உப்புபொம்மை சச்சிதானந்தம் என்ற கடலில் இறங்கியதும் அதனுடன் ஒன்றாகிவிடுகிறது.அங்கே வேறுபாட்டு உணர்வே இருக்காது.
-
🌸குளத்திலிருந்து, குடத்தில் தண்ணீர் பிடிக்கும்போது சத்தம் வருகிறது. குளத்து தண்ணீருக்குள் குடம் முழுவதும் மூழ்கிவிட்டால்,சத்தம் வருவதில்லை. அதுபோல் இறைவனைக் காணாதவரை மக்கள் வெற்று வாதங்களில் ஈடுபடுகிறார்கள்.உண்மையை உணர்ந்தவன் மௌனமாகிவிடுகிறான்.
-
🌸பக்தனுக்கு பிடித்தது சகுண பிரம்மம்.அதாவது இறைவன் குணங்களோடு கூடியவர் என்ற கருத்து. அவர் ஒரு மனிதராக உருவம் தாங்கி காட்சி தருகிறார்.பிரார்த்தனைகளை கேட்சிறார்.இந்த பிரபஞ்சத்தைப் படைப்பதும்,காப்பதும்,அழிப்பதும் அவரே.அவர் அளவற்ற ஆற்றல்களைப் பெற்றவர்.
-
🌸ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்கள் இந்துமதம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள்🌸 9789 374 109

வேதாந்த மூளையுடனும் இஸ்லாமிய உடலுடனும் கூடிய வருங்காலத்தின் பரிபூரண இந்தியா

வேதாந்த மூளையுடனும் இஸ்லாமிய உடலுடனும் கூடிய வருங்காலத்தின் பரிபூரண இந்தியா எழுவதை என் மனக்கண் முன்னால் காண்கிறேன்
-
மதம்,சிந்தனை இவற்றின் அறுதிச் சொல் அத்வைதமே. எல்லா மதங்களையும்,நெறிகளையும் அந்த நிலையிலிருந்து மட்டுமே அன்புடன் நோக்க முடியும்.அறிவொளி பெற்ற வருங்கால மனித சமுதாயத்தின் மதமாக இருக்கப்போவது அதுவே என்பது என் நம்பிக்கை.மற்ற இனத்தினருக்கு முன்பே அதை அடையப்பெற்றவர்கள் என்ற பெருமை இந்துக்களுக்கு வரலாம்.அரேபியர்களையும்,ஹீப்ரூக்களையும்விட இந்துக்கள் புனிதமான இனத்தினர்.ஆனாலும் மனித இனம் அனைத்தையும் தனது ஆன்மாவாகவே நோக்கி அதற்கேற்ப வாழ்வதான செயல்முறை அத்வைதம் இந்துக்களிடையே ஒருபோதும் வளரவில்லை. இந்த சமத்துவ நிலையை ஏதாவது மதம் ஓரளவிற்காவது அணுகியிருக்கிறது என்றால் அது முகமதியமதம் மட்டுமே.இது எனது அனுபவம்
-
வேதாந்த கொள்கைகள் எவ்வளவு நேர்த்தியாக சிறப்பாக இருந்தாலும் செயல்முறை முகமதிய மதத்தின் உதவியில்லாமல் மனித இனத்திற்குச் சிறிதும் பயன்இல்லை.வேதங்களோ,பைபிளோ,குரானோ இல்லாத ஓரிடத்திற்கு மனித இனத்தை அழைத்துச்செல்ல நாம் விரும்புகிறோம்.ஆனால் வேதங்களையும் பைபிளையும் குரானையம் சமரசப்படுத்துவதன் மூலம் இது செய்யப்பட வேண்டும். ஒருமை தத்துவமான ஒரே மதத்தின் பல்வேறு வெளிப்பாடுகளே உலக மதங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற நெறியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவே இவ்வாறு பல மதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மனித இனத்திற்குப் போதிக்க வேண்டும். இந்துமதம்,இஸ்லாம் ஆகிய இருபெரும் மதங்களின் சேர்க்கையே,அதாவது வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் நமது தாய் நாட்டிற்கு ஒரே நம்பிக்கை.
-
இந்த குழப்பத்திலிருந்தும் போராட்டத்திலிருந்தும் பெருமை பொருந்தியதாக,யாராலும் வெல்லப்பட முடியாததாக,வேதாந்த மூளையுடனும் இஸ்லாமிய உடலுடனும் வருங்காலத்தின் பரிபூரண இந்தியா எழுவதை என் மனக்கண்ணால் நான் காண்கிறேன்.
-
மனித இனத்தின் உதவிக்காகவும்,முக்கியமாக நமது மிகமிக ஏழைத் தாய்நாட்டின் உதவிக்காகவும் இறைவன் உங்களை ஒரு பெரிய கருவி ஆக்குவாராக என்று எப்போதும் பிரார்த்திக்கிறேன்
-
சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம் புத்தகம் 11 பக்கம் 152

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-7

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-7
சுவாமி வித்யானந்தர்
-
உங்கள் உணவு முறைகள் என்ன? என்று ஒருவர் கேட்டிருந்தார்
-
நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் அவர்களிடம் எப்படிப்பட்ட உணவு வழக்கம் இருந்ததோ அதேதான் என்னிடமும் இருந்தது.வாரத்தில் இரண்டுநாட்கள் சைவம் மீதி நாட்கள் அசைவம் முக்கியமாக மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுவாக வாழும் பெரும்பாலானவர்களின் உணவு பழக்கம் இப்படித்தான் இருக்கிறது.
-
நான் சென்னை ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்த பிறகுதான் முற்றிலும் சைவ உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. கல்கத்தாவில் விவேகானந்தர் ஆரம்பித்த தலைமை மடத்தில் சைவம் அசைவம் என்ற இரண்டு உணவு முறைகளும் உண்டு. சைவம் சாப்பிடுபவர்கள் தனியாகவும், அசைவம்சாப்பிடுபவர்கள் தனியாகவும் அமர்ந்திருப்பார்கள். மீன் அங்குள்ள முக்கிய உணவு. அங்கு வசித்த 2ஆண்டுகளும் மீன் உணவையே உண்டேன்.
-
அதன் பின் படிப்படியாக அசைவ உணவு உண்ணமுடியாத மனநிலை உருவாகிவிட்டது.இந்த நிலை படிப்படியாக உருவானது. தற்போது அசைவ உணவுகளை உண்ண முடிவதில்லை. அசைவ உணவு உண்டால் ஜீரணிப்பதில்லை.அதன் மணம் பிடிப்பதில்லை. அது மட்டுமல்ல, தற்போது பால்,முட்டை,கேக்,பிஸ்கட்,உட்பட சப்பாத்திகூட சாப்பிட முடிவதில்லை. தற்போது பழக்கத்தில் உள்ள 99 சதவீத உணவுகளை என்னால் உண்ண முடிவதில்லை. சுருக்கமாக சொன்னால் விரைவில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ண முடிகிறது.
-
ஒரு இயந்திரத்திலிருந்து எவ்வளவு சக்தியை பெற விரும்புகிறோமோ அதே அளவு எரிபொருளை உள்ளே செலுத்தவேண்டும். உணவுதான் நமது உடலுக்கான எரிபொருள். உடல் அதிக வேலைசெய்ய வேண்டுமானால் அதிகம் சத்துள்ள உணவுகள் தேவை. உடல் உழைப்பு தேவையில்லை என்றால் உணவும் குறைவாக போதும்.
-
உணவு என்பது ஒவ்வொரு மனிதனின் தனி உரிமை. அரசாங்கம் அனுமதித்துள்ள உணவை ஒருவன் உண்ணலாம். தியானம்,தவம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களது உணவு முறைகள் படிப்படியாக மாறிவிடும்.அவர்களால் அசைவ உணவுகளை உண்ண முடியாது.
-
தொடரும்...
-

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-2
-
சீடர். அம்மா! பெரியவை சிறியவை என்று இந்த எண்ணற்ற உயிரினங்கள் எல்லாம் ஒரே நேரத்திலா படைக்கப்பட்டன?
-
அன்னை சாரதாதேவி..ஓவியன் தூரிகையினால் கண்,முகம்,மூக்கு என்று ஒவ்வொன்றாக வரைந்து படத்தை பூர்த்தி செய்வது போல் கடவுளும் ஒவ்வொன்றாகவா அன்னைத்தையும் படைத்தார்? இல்லை. பகவானிடம் விசேச சக்தி உள்ளது. அவர் ”உம்” என்னும்போது எல்லாம் படைக்கப்படுகின்றன. அவர் “உஹும்” என்னும்போது அவை மறைந்துவிடுகின்றன. இருப்பதெல்லாம் ஒரே வேளையில் தோன்றின. ஒன்றன்பின் ஒன்றாக தோன்றவில்லை
ஒரு கல்பத்தின் முடிவிற்கு பிறகு தூக்கத்திலிருந்து விழித்தெழுவதுபோல அனைவரும் தோன்றுகின்றனர்.
-
சீடர்..ஜெபம் மூலம் இறைவனை பெற முடியுமா?
-
அன்னை...ஜெபம் போன்ற ஆன்மீக சாதனைகளின் மூலம் கர்மத்தளைகள் அறுபடுகின்றன.ஆனால் பிரேமபக்தி இல்லாமல் கடவுளைப்பெற முடியாது. ஜபதவங்கள் என்பது என்ன தெரியுமா? இவற்றின்மூலம் புலன்களின் வேகம் தடுக்கப்படுகிறது. இறைவனிடம் கொள்ளும் நெருக்கமான அன்பினால்தான் அவரை பெற முடியும்
பணம் இருப்பவன் பகவானுக்கும் பக்தர்களுக்கும் சேவைசெய்து அவரை வழிபடவேண்டும். அது இல்லாதவன் நாமஜபத்தால் வழிபடவேண்டும்
திருமணம் செய்துகொள்ளாதே. இல்லறத்தில் ஈடுபடாதே. திருமணம் செய்யாவிட்டால் வேறென்ன? எங்கே வாழ்ந்தாலும் சுதந்திரமாகவே இருப்பாய். திருமணம்தான் எல்லா துன்பங்களுக்கும் மூலகாரணம்
-
தொடரும்...

ஸ்ரீமத் பகவத்கீதை-அத்தியாயம்-14

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-14
-
ஸ்ரீபகவான் சொன்னது
-
14.1 முனிவர்கள் எல்லோரும் எதை அறிந்து இங்கு மேலான சித்தியை அடைந்தார்களோ, ஞானங்களுள் உத்தமமான மேலான ஞானத்தை திரும்பவும் சொல்கிறேன்
-
14.2 இந்த ஞானத்தை கடைபிடித்து என்சொரூபத்தை அடைந்தவர்கள் பிரபஞ்சம் வெளிப்படும்போது (சிருஷ்டி) பிறப்பதில்லை, பிரபஞ்சம் ஒடுங்கும்போது (பிரளயத்தில்) துன்புறுவதில்லை
-
14.3 பரதகுலத்தில் உதித்தவனே, மஹத் பிரம்மம் எனது யோனி. அதில் நான் கர்ப்பத்தை வைக்கிறேன். அதிலிருந்து எல்லா உயிர்களின் உற்பத்தி உண்டாகிறது (மஹத்-பிரபஞ்சபுத்தி)
-
14.4 குந்தியின்புத்ரா, எல்லா யோனிகளிலும் எந்த வடிவங்கள் பிறக்கின்றனவோ, அவைகளுக்கு மஹத்பிரம்மம் தான் யோனி(பிறப்பிடம்) நான் பீஜம் வழங்கும் பிதா
-
14.5 மஹாபாகுவே ஸத்வம், ரஜஸ்,தமஸ் என்று பிரகிருதியிலிருந்து உண்டான குணங்கள் தேகத்தில் அழியாத தேகியை பந்தப்படுத்துகின்றன
-
14.6 பாபமற்றவனே, அவற்றுள் சத்வகுணமானது தூய்மையானது, ஒளிபொருந்தியது, தொந்தரவு செய்யாதது. சுகத்தில் பற்றுதலாலும், ஞானத்தில் பற்றுதலாலும் பந்தப்படுத்துகிறது
-
14.7 குந்திபுத்ரா, ரஜோகுணத்தை ஆசை வடிவுடையது என்றும், தீராத தாகத்தையும், பற்றுதலையும் உண்டுபண்ணுவது என்றும் அறி. கர்மபற்றினால் அது தேஹியை பந்தப்படுத்துகிறது
-
14.8 பாரதா, தமோகுணமோ,அக்ஞானத்தில் பிறந்து, எல்லா தேஹிகளுக்கும் மயக்கத்தை உண்டுபண்ணுவது என்று அறி. அரட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் அது பந்தப்படுத்துகிறது
-
14.9 பாரதா சத்துவகுணம் சுகத்தில் சேர்க்கிறது. ரஜோகுணம் கர்மபந்தத்திலும், தமோகுணம் ஞானத்தை மறைத்து கவனமின்மையிலும் இணைக்கிறது
-
14.10 அர்ஜுனா, சத்வம், ரஜசையும் தமசையும் அடக்கி மேலெழுகிறது. ரஜஸ், சத்துவத்தையும் தமசையும் அடக்குகிறது. அங்ஙனம் தமஸ், சத்துவத்தையும் ரஜசையும் அடக்குகிறது
-
14.11 எப்பொழுது. இந்த தேகத்தில் எல்லா பொறிவாயில் வழியாக ஞானத்தின் ஒளி உண்டாகிறதோ அப்பொழுது சத்துவம் ஓங்கியுள்ளது என்று அறியவேண்டும்
-
14.12 பரதசிரேஷ்டா பேராசை,பிரவிருத்தி,புதியகர்மங்களை செய்தல்,அமைதியின்மை, கர்மங்களில் பற்று இவைகள் ரஜோகுணம் மேலெழும்போது உண்டாகிறது
-
14.13 குருகுலத்தில் உதித்தவனே, விவேகமின்மை, முயற்சியின்மை,கவனக்குறைவு.மதிமயக்கம் இவைகள் தமோகுணம் மேலெழும்போது உண்டாகின்றன
-
14.14 எப்பொழுது சத்வகுணம் மேலோங்கியிருக்குமோ, அப்போது தேகத்தை எடுத்தவன் மரணமடைந்தால்,உயர்ந்த , குற்றமற்ற உலகங்களை அடைகிறான்
-
14.15 ரஜோகுணத்தில் மரணமடைந்தால் கர்மப்பற்றுடையவர்களிடத்து மீண்டும் பிறக்கிறான். அப்படியே தமோகுணத்தில் சாகின்றவன் அறிவில்லாதவர்கள் கர்ப்பத்தில் பிறக்கிறான்
-
14.16 நற்கர்மத்தின் பலன் தூய்மை, சாத்வீகம் என்று சொல்கிறார்கள். ரஜோகுணத்தின் பயன் துக்கம். தமோகுணத்தின் பயன் அறிவின்மை
-
14.17 சத்வகுணத்திலிருந்து ஞானம் உதிக்கிறது. ரஜஸிலிருந்து பேராசையும்,தமஸிலிருந்து அக்ஞானமும்,கவனமின்மையும்,மதிமயக்கமும் உண்டாகின்றன
-
14.18 சத்வகுணத்திலுள்ளவர்கள் மேல்நோக்கி போகிறார்கள். ரஜோகுணத்தில் உள்ளவர்கள் மத்தியில் நிற்கிறார்கள். தமோகுணத்தில் இருப்போர் கீழ்நோக்கி செல்லுகின்றனர்
-
14.19 எப்பொழுது காண்போன்(ஞானி) குணங்களே செயல்புரிகின்றன, வேறு செயல்புரிபவன் இல்லை என காண்கிறானோ,குணங்களுக்கு மேலானதையும் அறிகிறானோ. அப்பொழுது அவன் என்சொரூபத்தை அடைகிறான் (இறைசொரூபத்தை அடைகிறான்)
-
14.20 தேகத்தை உண்டாக்குகின்ற இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு,இறப்பு,வயோதிக துன்பத்திலிருந்து விடுபட்ட, தேகமெடுத்தவன் மரணமில்லாத்தன்மையை அடைகிறான்
-
14.21 அர்ஜுனன் சொன்னது
-
பிரபுவே ஜுவன் எந்த அடையாளங்களால் இந்த மூன்று குணங்களையும் கடந்துநிற்பவன் ஆகிறான். அவனுடைய நடத்தை எப்படிப்பட்டது? எப்படி இந்த மூன்று குணங்களை கடக்கிறான்?
-
14.22 ஸ்ரீபகவான் சொன்னது
-
பாண்டவா, ஒளி(சத்வம்) செயல்(ரஜஸ்) மயக்கம் (தமஸ்) இவை வரும்போது அவன் வெறுப்பதில்லை, வராதபோது அதற்காக ஏங்குவதில்லை
-
14.23 உதாசீனனைப்போல் இருந்துகொண்டு,தான் குணங்களால் அசைக்கப்படுவதில்லை. குணங்களே செயல்புரிகின்றன என்று தன்னில் அசையாமல் நிலைத்திருக்கிறான்
-
14.24 துன்பத்தையும், இன்பத்தையும் சமமாக கருதுகிறவன், ஆத்மசொரூபத்திலிருப்பவன், மண்.கல்,பொன் இவைகளை சமமாகக் கருதுபவன். பிரியமானது வரும்போதும், பிரியமில்லாதது வரும்போதும் இரண்டையும் சமமாக கருதுபவன், தீரன், இகழ்ச்சி,புகழ்ச்சியை ஒன்றாக கருதுபவன்
-
14.25 மானத்திலும்,அவமானத்திலும் சமமானவன். நண்பனிடமும்,பகைவனிடமும் ஒரே தன்மையுடையவன், பலன்தரும் கர்மத்தை செய்யாதவன், அவன் குணாதீதன் (குணங்களை கடந்தவன்) என்று சொல்லப்படுகிறான்
-
14.26 யார் என்னை அவ்யபிசாரிணி பக்தியோகத்தால் (இடைவிடாமல் இறைவனை நினைத்தல்) உபாசிக்கிறானோ அவன் இந்த குணங்களை முற்றும் கடந்து பிரம்மம் ஆவதற்கு தகுதியுடையவனாகிறான்
-
14.27 நானே வேதத்திற்கும்,அழியாத மோட்சநிலைக்கும்,அழியாத தர்மத்திற்கும், ஒப்பற்ற சுகத்திற்கும் இருப்பிடம்
-
பதினான்காவது அத்தியாயம் நிறைவுற்றது

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-8

நான் கற்றுக்கொண்டது என்ன? பாகம்-8
சுவாமி வித்யானந்தர்
-
பிற மதத்தினருடன் உங்களுக்கு ஏதாவது பழக்கம் உண்டா?அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா? என்று ஒருவர் கேட்டார்
-
நான் கேபிள்,டி.வி யில் பணியாற்றிய காலத்தில் 2 ஆண்டுகள் இஸ்லாமிக் டி.வி என்ற ஒரு முஸ்லீம் டி.வியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.முதலில் முஸ்லீம்களின் டி.வி க்கு ஏன் செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன் ஆனால், காலசூழ்நிலைகள் என்னை அங்கே கொண்டுவந்து சேர்த்தது. வீடியோ ரிக்கார்டிங் மற்றும் எடிட்டடிங் பணி,டி.வி சேனல் நிகழ்ச்சிகள் ஒழுங்காக ஒளிபரப்பாகிறதா என்பதை கவனிப்பது இதுதான் அங்கு எனது பணி. முஸ்லீம் மத பிரச்சாரகர்கள் பேசுவதை ரிக்கார்டிங்செய்து.எடிட் செய்து, டி.வி யில் ஒளிபரப்ப வேண்டும்.
-
தினமும் 12 மணிநேரம் வேலை. எப்போதும் முஸ்லீம் மதம் தொடர்பான சொற்பொழிவுகளை கேட்க வேண்டியிருக்கும். அவர்கள் பேசுவதை கேட்கவேண்டும்,எடிட்டிங் நேரத்திலும் அதை கேட்க வேண்டும்.டி.வி யில் ஒளிபரப்பாகும் போதும் ஒழுங்காக எடிட்டிங் செய்திருக்கிறோமா என்பதை தெரிந்துகொள்ள மீண்டும் கேட்க வேண்டும். இவ்வாறு ஒரு சொற்பொழிவை குறைந்தது மூன்று முறை கேட்க வேண்டும். அது மட்டுமல்ல டி.வி யில் ஒளிபரப்பாகும் அனைத்து சொற்பொழிவுகளும் சரியாக ஓடுகிறதா என்பதை எப்போதும் கேட்கவேண்டும். அதற்காக என் அருகில் ஒரு டி.வி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். 
-
அது மட்டுமல்ல அங்கு சொற்பொழிவாற்ற வரும் முஸ்லீம் மதகுருக்கள்,மற்றவர்கள் என்று பெரும்பாலானவர்கள் 
அந்த மதத்தில் தீவிர பற்றுகொண்ட முஸ்லீம்கள்தான். எப்படிப்பட்ட சூழ்நிலை அங்கு நிலவும் என்பதை யூகித்து அறிந்துகொள்ளுங்கள். சலாம் மாகிக்கும், அஸ்சலாம் மாலிக்கும்,அல்லாகு அக்பர் போன்ற வார்த்தைகள்தான் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும். அது மட்டுமல்ல தினசரி ஐந்துவேளை தொழுகை எப்போது துவங்கும் என்பதற்கான அட்டவணை இருக்கும்.அதன் படி டி.வியிலும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடி அமைக்க வேண்டும். காலை முதல் இரவு வரை அவர்களின் பழக்க வழக்கங்கள்,பேசும் முறை,பழகும் விதம்.உணவு முறைகள் போன்ற அனைத்தையும் கற்றுக்கொள்ள முடிந்தது. சில நேரங்களில் பள்ளி வாசலுக்கு சென்று அங்கு பேசுபவர்களின் பேச்சை ரிக்கார்டிங் செய்ய வேண்டியிருக்கும்.
-
புதிதாக டி.வி சேனலுக்கு வருபவர்கள் என்னை முஸ்லீம் என்று நினைத்துக்கொண்டு. சலாம் மாலிக் என்பார்கள் பதிலுக்கு நான் அஸ்சலாம் மாலிக் என்று சொல்ல வேண்டும் என்பது விதி.ஆனால் எனது வாயிலிருந்து அந்த வார்த்தை ஒருமுறை கூட வரவில்லை. கைகளால் சலாம் என்று கூறுவேன். அவர்களை அவமரியாதை செய்ய வேண்டும் என்பது எனது நோக்கமல்ல,அந்த வார்த்தை எனது வாயிலிருந்து வரவில்லை,அது ஏன் என்று தெரியவில்லை. நான் விவேகானந்தரை பின்பற்றுபவன் என்பது அங்குள்ள அனைவருக்கும் தெரியும்.அது மட்டுமல்ல ஏற்கனவே மடங்களில் வசித்தவன் என்பதும் தெரியும். அங்கு பணியாற்றும்போது மற்றவர்கள் என்னை அவர்களில் ஒருவனாகவே பார்த்தார்கள்.அவர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன்,அவர்களோடு உணவருந்தியிருக்கிறேன்.நான் அவர்களை எனது நெருங்கிய உறவினர்களாக பார்த்தேன்,அவர்களும் அவ்வாறே பார்த்தார்கள்,பழகினார்கள்.இன்னும் சொல்வதானால் என்னை அதிகம் நம்பிக்கைக்கு உரியவாகவே கண்டார்கள்.
-
நாம் நமது மதத்தில் தீவிரமாக இருந்துகொண்டு, இதேபோல் முஸ்லீம்களுடன் நெருக்கமாக சேர்ந்து வாழ முடியுமா என்பதுதான் கேள்வி. 
-
பெரும்பாலும் மதப்பிரச்சிகைள் ஏன் ஏற்படுகிறது என்றால் நாம் நமது மதத்தை தீவிரமாக பின்பற்றுவது இல்லை. ஏதோ அரைகுறையாக தெரிந்துவைத்துக்கொண்டு, பிறரை வெறுக்க கற்றுக்கொண்டுள்ளோம். இந்தியாவின் மதப்பிரச்சனையை தீர்க்க வேண்டுமானால் இந்துக்கள் அனைவரும் இந்துமதத்தில் இன்னும் ஆழமாக செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் ஆன்மீகவாதிகளாகமாறவேண்டும்.
-
முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகமானால் இந்தியாவில் இந்துமதம் அழிந்துவிடும் என்ற கருத்து உண்மைதான்.பாகிஸ்தானில் இதைதான் நாம் பார்த்தோம். இதற்கு தீர்வு என்ன?
-
ஆன்மீகத்திற்கு ஒரு வலிமை உண்டு. தீவிரவாதத்தை அது அழித்துவிடும். இந்தியாவில் ஆன்மீக கருத்துக்கள் அதிகமாக பின்பற்றப்படும்போது,அதை எதிர்க்கும் தீவிரவாத கருத்துக்கள், அது எந்தமதத்தில் இருந்தாலும் சரி அவைகள் அழிந்துகொண்டே வரும். ஏதாவது ஒரு மதம் தீவிரவாதத்தை போதித்தால்,தீவிரவாதிகளுடன் சேர்ந்து அந்த மதமும் அழிந்துவிடும்.ஆகவே இந்தியாவில் தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட ஆன்மீகத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் நான் கண்ட முடிவு.
-
தொடரும்...

இந்தியாவில் நடக்கும் அடக்குமுறைகள் பற்றி அமெரிக்க சீடர் மேரி ஹேல்க்கு எழுதிய கடிதம்


இந்தியாவில் நடக்கும் அடக்குமுறைகள் பற்றி அமெரிக்க சீடர் மேரி ஹேல்க்கு எழுதிய கடிதம்
-
தற்கால இந்தியாவில் நடைபெறுகின்ற பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரே ஒரு நல்ல காரியம் நடந்தது,ஆனால் அது அவர்களை அறியாமல் நடந்த ஒன்று.அது. அவர்கள் இந்தியாவை மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் கொண்டுவந்தது,வெளியுலகத்தொடர்பை இந்தியாமீது திணித்தது.இந்திய மக்களின் நலலை மேற்கொண்டு அது செய்யப்படவில்லை.ரத்தத்தை உறிஞ்சுவதே அவர்களது முக்கிய நோக்கமாக இருக்கும்போது எந்த நன்மையும் செய்ய முடியாது. 
-
முகமதிய வரலாற்று ஆசிரியரான பெரிஷ்டாவின் கணக்குப்படி 12ம் நூற்றாண்டில் இந்துக்களின் எண்ணிக்கை 60 கோடி தற்போது(அதாவது1899) இருப்பதோ 20 கோடிக்கும் குறைவாகவே உள்ளது.
-
நாட்டை வெற்றிகொள்ள ஆங்கிலேயர் போட்டியிட்டபோது பல நூற்றாண்டுகளாக தலைவிரித்தாடிய அராஜகம்,1857 லும்,1858லும் ஆங்கிலேயர்கள் செய்த படுகொலைகள். பிரிட்டிஷ் ஆட்சியின் தவிர்க்கமுடியாத விளைவாகியுள்ள அவற்றைவிட பயங்கரமான பஞ்சங்கள், சுதேசிகள் ஆட்சிசெய்தபோது ஒருபோதும் பஞ்சம் வந்ததில்லை,இந்த பஞ்சங்கள் காரணமாக இறந்துபோன கோடிக்கணக்கான மக்கள் இவையெல்லாம் இருந்தும் மக்கள்தொகை அதிரிக்கத்தான் செய்கிறது.ஆனால் நாடுமுற்றிலும் சுதந்திரமாக இருந்தபோது அதாவது முகமதியர்கள் ஆட்சிக்கு முன் இருந்த மக்கள் தொகை இன்னும் ஏற்படவில்லை
-
இந்தியர்களின் உழைப்பும் விளைச்சலும் அவர்களிடமிருந்து பறிக்கப்படாமல் இருந்தால் இப்போது இந்தியாவில் உள்ளவர்களைப்போல் ஐந்துமடங்கு மக்களை(100கோடி மக்களை) சுகவசதிகளோடு பராமரிக்க முடியும்.இதுதான் இந்தியாவில் உள்ள நிலைமை
-
கல்வி பரவுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கை சுதந்திரம் ஏற்கனவே பறிக்கப்பட்டுவிட்டது. நீண்ட காலத்திற்கு முன்பே நாங்கள் நிராயுதபாணிகள் ஆக்கப்பட்டுவிட்டோம்.மக்களுக்கு தரப்பட்டிருந்த சிறிது சுயஆட்சியைகூட வேகமாக பறிந்துவருகிறார்கள்.அடுத்து என்ன நிகழுமோ என்று கவனித்தவண்ணம் உள்ளோம் நாங்கள்.குற்றமற்ற முறையில் சில வார்த்தைகள் விமர்சித்து எழுதியதற்காக மக்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படுகிறது, விசாரணை எதுவும் இல்லாமல் சிறையில் இடப்படுகின்றனர். தன் தலை எப்போது போகும் என்று யாருக்கும் தெரியாது
-
சில ஆண்டுகளாக ஒரு பயங்கரமான ஆட்சி இந்தியாவில் இருந்துவருகிறது. ஆங்கிலேயர்கள் எங்கள் ஆண்களை கொன்றும்,பெண்களை பலவந்தப்படுத்தியும் வருகின்றனர். நாங்கள் ஒரு பயங்கரமாக இருள் நிலையில் உள்ளோம். ஆண்டவன் எங்கு உள்ளான் மேரி? இந்த கடிதத்தை வெறுமனே நீ வெளியிடுவதாக வைத்துக்கொள்வோம்.சமீபத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டத்தால் இந்தியாவில் உள்ள ஆங்கிலேய அரசு என்னை விசாரணை இன்றியே கொல்ல முடியும்.இதில் உங்கள்(அமெரிக்க) கிறிஸ்தவ அரசுகள் எல்லாம் மகிழ்ச்சியே அடையும் என்பதும் எனக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் கிறிஸ்தவர் அல்லாத பாவிகள் அல்லவா?
-
வேற்று மதப்பாவிகளை படுகொலை செய்வது கிறிஸ்தவர்களுக்கு நியாயமான பொழுதுபோக்கு. உங்கள் பாதிரிகள் கடவுளைப் பிரச்சாரம் செய்வதற்காக போகிறார்கள்.ஆனால் ஆங்கிலேயர்களுக்கு பயந்துபோய் உண்மைபேசும் தைரியம் இல்லாமல் கிடக்கிறார்கள்.
-
கல்வியை வளர்ப்பதற்காக முன்பிருந்த அரசுகளால் அளிக்கப்பட்ட சொத்து.நிலங்கள் அனைத்தும் விழுங்கப்பட்டுவிட்டன. இப்போதுள்ள அரசு,கல்விக்காக குறைந்த பணமே செலவிடுகிறது.அந்த கல்வியையும்தான் என்னவென்று சொல்வது? சுயசிந்தனையை சிறிது காட்டினாலும் அது நெரிக்கப்பட்டுவிடுகிறது
-
நாங்கள் புதிய பாரதம் ஒன்றை தொடங்கியுள்ளோம்-அது உண்மையான உன்னதமான பாரதம். என்ன நிகழப்போகிறது என்பதை பார்ப்பதற்காக காத்திருக்கிறோம்.
-
விவேகானந்தர், 30-10-1899
-

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-15

ஸ்ரீமத்பகவத்கீதை-அத்தியாயம்-15
-
ஸ்ரீபகவான் சொன்னது
-
15.1 மேலே வேருள்ளதும் கீழே கிளைகள் உள்ளதும் ஆகிய ஆலமரத்தை அழிவற்றது என்று சொல்கிறார்கள். வேதங்கள் அதனுடைய இலைகள். அதை யார் அறிகிறானோ அவன் வேதத்தை அறிபவன் ஆகிறான்.(ஆலமரத்திற்கு வேர்கள் பூமிக்கு கீழே இருக்கும்.ஆனால் மனிதனின் வேர்கள் அதாவது மூளை மேலே இருக்கிறது.இந்த அடிப்படையில் மனிதனையும், பிரபஞ்சத்தையும்  புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.)
-
15.2 அந்த மரத்தினுடைய கிளைகள், குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர்விட்டு,கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மனித உலகத்தில் வேர்கள் கர்மத்தை விளைவிப்பனவாய் கீழ்நோக்கி பரவியிருக்கின்றன
-
15.3 இகத்தில் அந்த மரத்தினுடைய ரூபம் அவ்வாறு புலப்படுவதில்லை. அதற்கு முடிவில்லை.ஆதியில்லை,இருப்புமில்லை. இந்த வலுத்து வேரூன்றிய அசுவத்த மரத்தை திடமான பற்றின்மை என்னும் வாளால் வெட்டவேண்டும்.
-
15.4 எங்கு போய் திரும்பவும் திரும்பி வருவதில்லையோ, யாரிடத்திலிருந்து பண்டைய பிரவிருத்தி பிரபவித்ததோ அதே ஆதிபுருஷனை சரணடைகிறேன்.அந்த மேலானநிலை தேடத்தக்கது
-
15.5 அகங்காரத்தையும்.பகுத்தறிவிமையும் நீங்கியவர்களாய், பற்று என்னும் குற்றத்தை வென்றவர்களாய் ,அத்யாத்ம நிஷ்டர்களாய், காமத்தை போக்கியவர்களாய், சுகதுக்கம் எனப்படும் இருமைகளிலிருந்து விடுபட்டவர்களாய் மடமையை தவிர்த்தவர்கள், அந்த அழிவில்லாத நிலையை அடைகிறார்கள் 
-
15.6 எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, அதை சூரியன் விளக்குவதில்லை.சந்திரனும் விளக்குவதில்லை.தீயும் விளக்குவதில்லை. அது என்னுடைய பரமபதம்
-
15.7 என்றென்னும் எனது அம்சமே ஜீவனாகத்தோன்றி, ஜீவலோகத்தில் பிரகிருதியிலேயே நிற்கின்ற மனதை ஆறாவதாகவுடைய இந்திரியங்களை (போகத்தை நோக்கி) கவர்கிறது
-
15.8 மலர்களிலிருந்து மணங்களை காற்று எடுத்துக்கொண்டு செல்வதுபோன்று, உடலை ஆள்பவன்(ஆன்மா) உடல் எடுக்கும்போதும்,விடும்போதும்.இந்திரியங்களை பற்றிக்கொண்டு போகிறான்
-
15.9 அவன் செவி.கண்,தோல்,நாக்கு.மூக்கு,மனம் ஆகியவைகளை தனதாக்கிக்கொண்டு விஷயங்களை அனுபவிக்கிறான்
-
15.10 ஓர் உடலில் இருந்து இன்னோர் உடலுக்கு செல்லும்போதும், ஓர் உடலில் இருக்கும்போதும் அனுபவிப்பவனை(ஆ்னமாவை), குணத்தோடு கூடியிருப்பவனை,மூடர்கள் காண்பதில்லை. ஞானக்கண்களை உடையவர்கள் பார்க்கிறார்கள்
-
15.11 யோகியாவதற்கு முயல்பவர்கள், அதை(அனுபவிப்பவனை) தங்களுக்குள் வீற்றிருப்பவனாய் பார்க்கின்றனர். முயற்சியுடையவர்களாக இருந்தாலும் பக்குவப்படாதவர்கள், அறிவற்றவர்கள் அதை பார்ப்பதில்லை
-
15.12 எந்த சூரியனிடத்திலுள்ள வெளிச்சம் உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறதோ. சந்திரனிலும்,அக்கினியிலும் எந்த வெளிச்சம் உள்ளதோ அந்த பிரகாசம் என்னுடையதென்று அறிக(இறைவனுடையது)
-
15.13 நான் என் ஓஜஸினால் பூமியினுள் பிரவேசித்து உயிர்களை தாங்குகிறேன். இனிமையான சந்திரனாகவும் ஆகி எல்லா பயிர்களையும் வளர்க்கிறேன்
-
15.14 நான் வைச்வானரன் ஆகி (வயிற்றில் உணவை செரிக்கும் சக்தி) பிராணிகளுடைய தேகத்தில் இருந்துகொண்டு, பிராணனுடனும் அபானனுடனும் கூடி நான்குவிதமான அன்னத்தை ஜீரணம் செய்கிறேன்(நக்கி உண்ணும் உணவு,குடிக்கும் உணவு.கடித்து உண்ணும் உணவு,மென்னுதின்னும் உணவு)
-
15.15 நான் எல்லோருடைய ஹிருதயத்தில் தங்கியிருக்கிறேன். மேலும் என்னிடமிருந்து நினைவும்,மறதியும்,ஞானமும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்படும் பொருள் நானே. வேதாந்தத்தை(வேதத்தின்சாரம்) செய்தவனும்,வேதத்தை அறிந்தவனும் நானே
-
15.16 க்ஷரன் என்றும் அக்ஷரன் என்றும் இந்த இரண்டே புருஷர்கள் உலகில் உண்டு(அழியக்கூடியவன் க்ஷரன்.அழிவில்லாதவன் அக்ஷரன்) . எல்லா உயிர்களும் க்ஷரன். கூடஸ்தன் (அதாவது பல்வேறு மாயகாட்சியை காட்டவல்லவன்) அக்ஷரன் என்று சொல்லப்படுகிறான்.
-
15.17 மற்றும் அக்ஷரத்திற்கும் அன்னியமாக உத்தம புருஷனாக எப்பொழுதும் பரமாத்மா என்று அழைக்கப்படுபவர் யாரோ அவர் உயிர்களின் தலைவர், மாறுபடாதவர் மூவுலகத்திலும் பிரவேசித்து தாங்குகிறார்.(மாயையை தனதாக்கிக்கொண்டு பிரபஞ்சத்தை படைக்கும்போது அது அக்ஷரன்.மாயை இல்லாமல் இருக்கும்போது பிரம்மம் அல்லது பரமாத்மா அல்லது புருஷன்)
-
15.18 நான் க்ஷரத்தை கடந்தவனாக, அக்ஷரத்திற்கும் மேலானவனாக இருப்பதால் உலகத்திலும்,வேதத்திலும்,புருஷோத்தமன் என்று புகழ்பெற்றவனாக இருக்கிறேன்
-
15.19 பாரதா, யார் இங்ஙனம் மயக்கமற்றவனாய் புருஷோத்தமன் என்று என்னை அறிகிறானோ அவன் முழுவதும் அறிந்தவனாய் முழுமனதோடு என்னை வணங்குகிறான்
-
15.20 பாபமற்றவனே. இங்ஙனம் ஆழ்ந்த இந்த சாஸ்திரம் என்னால் உரைக்கப்பட்டது. இதை அறிபவன் புத்திமானாகவும், கிருதார்த்தனும்(செய்ய வேண்டிய கர்மங்களை செய்து முடித்தவனும்) ஆகிறான்
-
அத்தியாயம் பதினைந்து நிறைவுற்றது

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-3

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-3
-
நாம் வளரவளர பாடம் கற்கிறோம்.அந்தோ!முழுவதும் கற்றபின் அரங்கத்தைவிட்டு அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறோம்.இதுதான் மாயை
-
உலகம் நமது ஆன்மாவை தொடமுடியாது. உடல் கிழிபட்டு ரத்தம் வடிந்தாலும், உனது மனத்தின் அடிஆழத்தில் அமைதியை நீ அனுபவிக்கலாம்
-
துன்பம் என்பது யாரையும் நெருங்கக்கூடாது என்று மனமார விரும்புகிறேன்.ஆனால் அதுதான் நம்மை அகத்திற்குள் அழைத்துசெல்கிறது
-
நானாக வேலை செய்யாவிட்டாலும், இளைஞர்களை இந்தியாவெங்கும் அனுப்பி மீண்டும் ஒருமுறை கிளர்ச்சி செய்யப்போகிறேன்
-
இதயத்தை துயரம் வாட்டும்போது,நம்பிக்கை முற்றிலும் நம்மைவிட்டு அகலும் நிலைவரும்போது அகத்தே உள்ள பிரம்மஜோதி ஒளிர்கிறது
-
எதைக்கொடுத்தாவது வாழ்க்கையில் நாம் பெற வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதுதான் அன்பு.எல்லையற்று விரிந்த கடல்போல ஆழமான அன்பு
-
வாழ்க்கை என்பது துக்கம்.துக்கத்தை தவிர வேறில்லை என்பதே நான் கற்றுக்கொண்ட பெரிய பாடம்
-
நான் மீண்டும் ஒருமுறை பிறவி எடுத்து வரவேண்டும் என்று எனக்கு கடவுளாக இருந்த ஒருவர் சொன்னார்.அப்படியே அது நடக்கட்டும்
-
இந்துமதம்,இஸ்லாம் ஆகிய இருபெரும் மதங்களின் சேர்க்கையே நமது தாய் நாட்டிற்கு ஒரே நம்பிக்கை
-
நீண்ட காலத்திற்கு முன்பு வாழ்க்கையை துறந்தபோதே மரணத்தை வென்றுவிட்டேன்.பணியைப்பற்றிய கவலை மட்டும்தான் உள்ளது
-
மனிதனை தெய்வமாக கருதுவது மிகக்கடினம். ஆனால் முயற்சி செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்
-
ரிஷியோ,முனிவரோ, தேவரோ யாருக்கும் சமுதாயத்தின்மீது நியதிகளைத் திணிப்பதற்கு அதிகாரம் கிடையாது
-
தன்னைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக உள்ளவன் அடிக்கடி ஆபத்தில் விழுகிறான்.இது நான் வாழ்க்கையில் கண்டது
-
என்னுடன் சேர்ந்து வேலைசெய்ய விரும்பாதவனுக்கு நான் கூறுவது இதுதான்,“நண்பா நீ உன் வழியில்போய்விடு”
-
தொடரும்..
-