Saturday, 24 September 2016

விடாமுயற்சி கடைசியில் வெற்றி தரும்

ஈசாப்பின் கதைகளில் ஒன்று உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏரியில் தன்னுடைய பிரதிபலிப்பைப் பார்த்துக் கொண்டது ஒரு கலைமான். அதைத் தன் குட்டியிடம் காட்டி, நான் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவன்! என்னுடைய அழகான தலையைப் பார். உரம்மிக்க வலுவான என் உடம்பைப் பார். அது மட்டுமா? என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியும் தெரியுமா? என்று பெருமையடித்துக் கொண்டிருந்தது. அப்போது சற்று தொலைவில் வேட்டை நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. அவ்வளவுதான், எடுத்தது ஓட்டம். பல மைல் தூரம் ஓடிவிட்டு, மூச்சுத் திணறத் திரும்பி வந்தது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த குட்டி அதனிடம், நீ மிகவும் சக்தி வாய்ந்தவன் என்று இப்போதுதான் என்னிடம் சொன்னாய்! நாய் குரைக்கும் சத்தம் கேட்டதும் இப்படி ஓடிவிட்டாயே. அது எப்படி? என்று கேட்டது. நீ சொல்வதெல்லாம் சரி, மகனே; ஆனால் நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் என் தைரியமெல்லாம் பறந்துவிடுகிறது என்று பதிலளித்தது அந்தக் கலைமான். நம் நிலையும் அதுபோல்தான் இருக்கிறது.
---
நாம் மனித குலத்தைப்பற்றி உயர்வாக நினைக்கிறோம். நாம் மிகவும் பலமும் தைரியமும் வாய்ந்தவர்கள் என்று நினைக்கிறோம். பல அரிய தீர்மானங்களைச் செய்து கொள்கிறோம். ஆனால் துன்பம் மற்றும் ஆசைகளாகிய நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்கும்போது, கதையில் கண்ட மானைப் போலவே நடந்து கொள்கிறோம். நிலைமை இதுவானால், இந்தப் போதனைகளால் எல்லாம் என்ன பயன்? நிச்சயம் பெரும் பயன் இருக்கிறது. விடாமுயற்சி கடைசியில் வெற்றி தரும் என்பதே அது. ஒரே நாளில் எதையும் சாதிக்க முடியாது.
---
ஆன்மாவைப்பற்றி முதலில் கேள்விப்பட வேண்டும். பிறகு அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். பிறகு அதைத் தியானம் செய்ய வேண்டும்.
---
தரையில் ஊர்ந்து செல்லும் புழு முதற்கொண்டு எல்லோருடைய கண்ணிற்கும் நீலவானம் தெரிகிறது. ஆனால் அது எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது! நாம் அடைய வேண்டிய லட்சியமும் அப்படித்தான். அது வெகுதூரத்தில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அதை நாம் அடைந்தே தீரவேண்டும்.
----
சுவாமி விவேகானந்தர்
----
வாட்ஸ் அப் குழு 9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment