Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-22

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-22
-----
🌿 மனிதனுக்கு வெறும் நம்பிக்கை போதாது, அறிவு பூர்வமான நம்பிக்கை வேண்டும்.
---
🌿 இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், வழிவழியாகத் தாங்கள் பின்பற்றிவரும் மதக் கருத்துக்களைத் தவிர, மற்றவை எதுவும் சரியானவை அல்ல என்ற எண்ணம் இருப்பது, மனிதனின் மனத்தில் இன்னும் பலவீனம் எஞ்சியுள்ளதையே காட்டுகிறது. அத்தகைய கருத்துக்களை விட்டுவிட வேண்டும்.
---
🌿 அத்வைதம் பொதுமக்களிடையே பரவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. முதலில் சில துறவிகள் மட்டுமே அத்வைதத்தை அறிந்திருந்தார்கள். அவர்கள் அதனைக் காட்டிற்கு கொண்டு சென்றுவிட்டார்கள். இந்தியாவை உலோகாயதத்திலிருந்து காப்பாற்றக் கூடியது அத்வைதம் ஒன்றுதான்
----
🌿 புத்தருக்கு முன்னால் இருந்த உலோகாயதம் வளர்ச்சியடையாத, பக்குவப்படாத ஒன்றாக இருந்தது நன்றாகச் சாப்பிடுங்கள், குடித்துக் கும்மாளமிடுங்கள். கடவுள், ஆன்மா, சொர்க்கம் என்றெல்லாம் எதுவும் இல்லை. தீய நோக்கம் கொண்ட புரோகிதர்களின் கட்டுக் கதையே மதம் என்றெல்லாம் அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள் . உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக வாழ வேண்டும், கடன் வாங்கியாவது சாப்பிட வேண்டும். கடனைத் திருப்பிக் கொடுப்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை- இதுதான் பழைய உலோகாயதக்கொள்கை. அன்று இந்தக் கொள்கை மிகவும் அதிகமாகப் பரவியிருந்தது.
----
🌿 புத்தர், வேதாந்தத்தை வெளியே கொண்டுவந்து, மக்களிடையே பரப்பி இந்தியாவைக் காப்பாற்றினார். அவர் மறைந்து ஆயிரம் வருடங்களுக்குப் பின், மீண்டும் எல்லாம் பழையபடியாயிற்று. பாமர மக்கள் கூட்டமும் பல்வேறு இன மக்களும் எல்லோரும் புத்த மதத்தைத் தழுவியிருந்தார்கள். மக்களில் பலர் அறிவற்றவர்களாக இருந்ததால் புத்தரின் போதனைகளுக்குக் காலப்போக்கில் வீழ்ச்சி ஏற்பட்டது.
----
🌿 கடவுள், பிரபஞ்சத் தலைவராகிய இறைவன் என்று எதையும் புத்தர் போதிக்கவில்லை. எனவே மக்கள் சிறிதுசிறிதாக, தங்கள் தெய்வம், பேய் பிசாசுகள் என்று பலவற்றை மறுபடியும் புத்த மதத்தில் புகுத்தி, அதை ஒரு குழப்பக் குட்டையாக்கிவிட்டார்கள். அதன் காரணமாக உலோகாயதம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியது.
----
🌿 அந்த வேளையில் ஆதி சங்கரர் தோன்றி வேதாந்தத் தத்துவத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார்; அதைப் பகுத்தறிவுக்கு ஏற்புடைய ஒரு தத்துவமாகச் செய்தார்.
---
🌿 ஐரோப்பாவில் இன்று உலோகாயதம் தான் வழக்கில் இருக்கிறது. ஐரோப்பாவின் ஆன்மிக விழிப்பிற்கு அறிவுபூர்வமான ஒரு மதம்தான் தேவை. இரண்டற்ற ஒன்றேயான நிர்க்குண பிரம்மக் கருத்தைப் போதிக்கும் அத்வைதம் ஒன்றுதான், அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் மக்களுக்குத் திருப்தி அளிக்ககூடியதாக இருக்கிறது.
---
🌿 தர்மம் மறைந்தது போலாகி, அதர்மம் தலைதூக்குவது போல் தோன்றும் போதெல்லாம் அத்வைதம் வருகிறது. அதனால்தான் அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வேர்பிடித்திருக்கிறது.
----
🌿 புத்தரிடம் உலகத்தையே தழுவக்கூடிய இதயத்தையும் எல்லையற்ற பொறுமையையும் காண்கிறோம். மதத்தைச் செயல்முறைப்படுத்தி வீடுதோறும் கொண்டு சென்றவர் அவர். சங்கரரிடம் மகத்தான அறிவுத்திறனைக் காண்கிறோம். எல்லாவற்றையும் பகுத்தறிவு என்னும் தீவிர ஒளியினால் அவர் ஆராய்ந்தார்.
----
🌿 சங்கரரின் அத்தகைய அறிவுப் பேரொளியும், புத்தரின் அன்பும் கருணையும் நிறைந்து பொங்குகின்ற எல்லையற்றுப் பரந்த அந்த அற்புதமான இதயமும் இணைந்த நிலையே இன்று நமக்குத் தேவைப்படுகிறது.
-----
🌿 எல்லா பொருட்களும் ஒரே சக்தியின் வெளிப்பாடுகளே என்று விஞ்ஞானிகள் சொல்லும்போது, அது உங்களுக்கு உபநிடதங்கள் கூறும் கடவுளை நினைவுபடுத்தவில்லையா?-பிரபஞ்சத்திலுள் நுழையும் ஒரே நெருப்பு, பல உருவங்களாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதைப்போல், பரம்பொருள் ஒவ்வோர் ஆன்மாவின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதோடு, இன்னும் எல்லையற்றமடங்கு உயர்ந்த நிலையிலும் இருக்கிறார். என்று உபநிடதங்கள் கூறுகின்றனவே! விஞ்ஞானம் எந்தப் பக்கம் சாய்ந்து வருகிறது என்று உங்களுக்குப் புரியவில்லையா?
----
🌿 இந்துக்கள் மன ஆராயச்சியின் மூலமும் தத்துவ ஆராய்ச்சியின் மூலமும் நியாயபூர்வமான ஆராய்ச்சிமூலமும் முன்னேறினார்கள். ஐரோப்பியர்கள் புற இயற்கையிலிருந்து தொடங்கினார்கள். இப்போது அவர்களும் அதே முடிவுகளுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.
----
🌿 (சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

No comments:

Post a Comment