Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 16

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்-பகுதி 16
-----
ஆரம்பக் காலத்தில் உலகம் முழுவதிலும் பிராமணர்கள் மட்டுமே இருந்தார்கள் அவர்கள் இழிவடைய ஆரம்பித்த பின்னரே பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்தனர், இந்தச் சுழற்சி ஒரு சுற்று முடியும்போது எல்லோரும் மீண்டும் பிராமணர்களாகி விடுவர் என்று மகாபாரதத்தில் படிக்கிறோம். இந்த யுகச் சுழற்ச்சி இப்போது ஒரு சுற்றை நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
----
நாம் ஒவ்வொரு வரும் ஆன்மீகத்தை நாட வேண்டும் வேதாந்த மதத்தின் நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும், லட்சிய பிராமணர்களாக வேண்டும். ஜாதிப் பிரச்சனைக்குத் தீர்வு இவ்வாறுதான் ஏற்பட முடியும்.
---
நாட்டுப்பற்று உடையவர்களாக இருங்கள். கடந்த காலத்தில் இவ்வளவு மகத்தான காரியங்களைச் செய்த இந்த இனத்தை நேசியுங்கள்.
---
ஒரு கண்டனச் சொல்கூட வேண்டாம். உதடுகளை மூடிக்கொள்ளுங்கள், உங்கள் உள்ளங்கள் திறக்கட்டும் உங்கள் ஒவ்வொருவரின் தோள்மீதுதான் முழுப் பொறுப்பும் இருப்பதாக எண்ணி, இந்த நாட்டின் மற்றும் உலகம் முழுவதன் நற்கதிக்காகப் பாடு படுங்கள்.
---
வேதாந்தத்தின் ஒளியையும் வழியையும் ஒவ்வொரு ஆன்மாவிலும் மறைந்துள்ள தெய்வீகத்தை விழித் தெழச் செய்யுங்கள். இதன்பிறகு எந்த அளவிற்கு உங்களுக்கு வெற்றி கிடைத்தாலும், நீங்கள் ஒரு மகத்தான லட்சியத்திற்காக வாழ்ந்தீர்கள், உழைத்தீர்கள் என்ற மனநிறைவோடு இறந்து போகலாம்.
---
இங்கே இந்தியாவிலோ நாட்டின் இதயமே மதத்தால்தான் உருவாகியுள்ளது. இதுவே முதுகெலும்பு,இதுவே அடிப்படை, இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் நமது தேசிய வாழ்வாகிய கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது.
----
காளான்கள் போல் எத்தனையோ நாடுகள் தோன்றிமறைகின்றன. சூன்யத்திலிருந்து அவை எழுகின்றன ஏதோ சில காலம் ஆர்ப்பரிக்கின்றன, பின்னர் மறைந்தும் விடுகின்றன. ஆனால் நமது மாபெரும் நாடோ இதுவரை எந்த நாட்டிற்கும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டிராத அளவிற்கு பெரும் சோதனைகள், ஆபத்துக்கள் சூழ்நிலை மாற்றங்கள் என்று எத்தனையோ துரதிர்ஷ்டங்களைத் தாங்கியுள்ளது; இருந்தும் பிழைத்திருக்கிறது. ஏன்? ஏனெனில் அது துறவு என்ற பக்கத்தை எடுத்துள்ளது. துறவு இல்லாவிட்டால் மதம் ஏது ?
----
நான் இந்தியாவை நேசிக்கிறேன், தேசப் பற்றுடையவன் நான், முன்னோர்களிடம் மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனாலும் நாம் பிற நாடுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை எவ்வளவோ உள்ளன என்று நினைப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை. பிறருடைய காலடியில் அமர நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் நமக்கு மகத்தான பாடங்களைப் போதிக்க முடியும். இதை மறக்கக் கூடாது.
----
சுவாமி விவேகானந்தர் வாட்ஸ்அப்குழுவில் இணைய --வாட்ஸ்அப்-9003767303 --- அட்மின் சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment