Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-36

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-36
-----
சமுதாயம்தான் உண்மையை மதித்து நடக்க வேண்டும். இல்லையென்றால் அந்தச் சமுதாயத்திற்கு அழிவு நிச்சயம். உண்மையின் அடிப்படையில் தான் சமுதாயங்களை அமைக்க வேண்டும். சமுதாயத்தின் தேவைக்கேற்ப உண்மை மாற முடியாது. சுயநலமின்மையைப் போன்ற ஓர் உயர்ந்த உண்மையைச் சமுதாயத்தில் பின்பற்ற முடியவில்லையென்றால், மனிதன் சமுதாயத்தை விட்டுவிட்டுக் காட்டிற்குப் போய்விடுவதே நல்லது.
---
🌿 மீன், நீரிலுள்ள தன் எதிரிகளிடமிருந்து தப்பிக்க விரும்புகிறது. அது எப்படித் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது? இறக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு பறவையாவதன் மூலம்தான்.
🌿 நீரையோ காற்றையோ அந்த மீன் மாற்றவில்லை; மாற்றம் அதனிடமே உண்டாகிறது. மாற்றம் எப்பொழுதும் அகச்சார்பு உடையது. பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், எல்லா உயிர்களும் தங்களை மாற்றிக் கொள்வதன்மூலமே இயற்கையை வெல்கின்றன என்பதை அறிகிறோம்.
---
🌿 கோபத்தின் வசப்படாதிருக்கப் பழகிவிட்டால் எனக்குக் கோபம் வராது. வெறுப்பு என்னை அணுகாமல் பார்த்துக் கொண்டால் வெறுப்பே எனக்கு வராது. ஏனெனில் அவை என்னைத் தொடவே முடியாது.
வெற்றியடைவதற்கு இதுதான் வழி; அதாவது அகச் சார்பின்மூலம் நம்மை நாமே முழுமையாக்கிக் கொள்வதுதான்.
---
பவுதீக விஞ்ஞானம் மற்றும் ஒழுக்கக் கோட்பாடு ஆகியவற்றின் தற்கால ஆராய்ச்சிகளுடன் ஒத்துப்போவது மட்டுமல்லாமல், அவற்றிற்கு ஒரு படி மேலேயும் போயிருக்கும் ஒரே நெறி அத்வைதம்தான் என்று நான் தைரியமாகச் சொல்வேன். அதனால்தான் தற்கால விஞ்ஞானிகளை அத்வைதம் கவர்கிறது. பழைய துவைதக் கருத்துக்கள் அவர்களுக்குப் போதவில்லை, திருப்தி அளிக்கவில்லை.
---
🌿 இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், வழிவழியாகத் தாங்கள் பின்பற்றிவரும் மதக் கருத்துக்களைத் தவிர, மற்றவை எதுவும் சரியானவை அல்ல என்ற எண்ணம் இருப்பது, மனிதனின் மனத்தில் இன்னும் பலவீனம் எஞ்சியுள்ளதையே காட்டுகிறது. அத்தகைய கருத்துக்களை விட்டுவிட வேண்டும்.
---
🌿 ஐரோப்பாவில் இன்று உலோகாயதம் தான் வழக்கில் இருக்கிறது. ஐரோப்பாவின் ஆன்மிக விழிப்பிற்கு அறிவுபூர்வமான ஒரு மதம்தான் தேவை. இரண்டற்ற ஒன்றேயான நிர்க்குண பிரம்மக் கருத்தைப் போதிக்கும் அத்வைதம் ஒன்றுதான், அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் மக்களுக்குத் திருப்தி அளிக்ககூடியதாக இருக்கிறது.
---
🌿 தர்மம் மறைந்தது போலாகி, அதர்மம் தலைதூக்குவது போல் தோன்றும் போதெல்லாம் அத்வைதம் வருகிறது. அதனால்தான் அது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வேர்பிடித்திருக்கிறது.
---
🌿 கடவுள், பிரபஞ்சத்திற்கு வெளியே சொர்க்கத்தில் எங்கேயோ இருக்கிறார் என்று துவைதம் சொல்கிறது.
நம்முடைய ஆன்மாதான் கடவுள் என்றும், அவர் நமக்கு வெளியே இருக்கிறார் என்று சொல்வது தெய்வநிந்தை என்றும் அத்வைதம் கூறுகிறது.
----
🌿 நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் இரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லா விட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.
----
🌿 நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.
---
#சுவாமி #விவேகானந்தர் #வாட்ஸ் அப் குழு 9003767303 )

No comments:

Post a Comment