Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தர் கூறிய கதைகள் -பகுதி-2

சுவாமி விவேகானந்தர் கூறிய கதைகள் -பகுதி-2
----
ஒரு பணக்காரனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்பேறி. அவன் வேலையே செய்ய மாட்டான். ஆனால் யஜமானன் தோட்டத்திற்கு வந்தால் போதும்; உடனே எழுந்துபோய் கைகூப்பி வணங்கியபடி யஜமானனிடம், ஓ, என் யஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று புகழ் பாடி, அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான். மற்றொரு வேலைக்காரன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் அவன் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, நீண்ட தூரத்தில் வசிக்கும் தன்னுடைய யஜமானனின் வீட்டிற்குச் சுமந்துகொண்டு செல்வான். இந்த இரண்டு தோட்டக்காரர்களில் யாரை யஜமானன் அதிகம் விரும்புவார்? சிவபெருமான்தான் அந்த யஜமானன். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள் - ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளும், பலவீனர்களுமான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர்.
இவர்களில் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். தந்தைக்குச் சேவை செய்ய விரும்புவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும். இறைவனின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் மிகச் சிறந்த தொண்டர்கள் என்று, சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள்; உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நல்ல செயல். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மையடையும். அதனால் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் உங்களிடம் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோருடைய இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நாம் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அஞ்ஞானமும் தீய குணங்களும்தாம் நம் இதயம் என்ற கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியும் அழுக்குமாகும்.
----
-----#சுவாமி #விவேகானந்தர் #வாட்ஸ்அப் குழு 900 3767 303)*

No comments:

Post a Comment