Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-24

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-24
------
🌿 அழியாதபேரின்பத்தின் வாரிசுகளே ஆம் உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள் புனிதமானவர்கள் பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம்.
---
🌿 இந்து வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன்வசப்பட்ட சாதராணவாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வு உண்டு என்றால் ,அவன் அவற்றை நேருக்குநேர் காண விரும்புகிறான். ஜடப் பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான்.
----
🌿 கருணையே வடிவான எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான் அவன் அவரைக் காண வேண்டும் அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும்.
---
🌿 ஆன்மா இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடிய சிறந்த சான்று நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன். நான் கடவுளைக் கண்டுவிட்டேன் என்று அவர் கூறுவதுதான். நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி.
---
🌿 இந்து சமயம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து சமயம்.
---
🌿 இந்துக்களின் சமயம்.நிறைநிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான் .பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அவனுடன் பேரானந்தத் தில் திளைக்கிறான்.
---
தீமை செய்கின்ற ஆயிரம் பேரைக் கொல்வதன் மூலம் தீமையை உலகத்திலிருந்து நீக்க முயல்வதால் உலகத்தில் தீமைதான் அதிகமாகும். ஆனால் அறிவுரைகளின் மூலம் மக்கள் தீமை செய்யாமல் தடுக்கப்பட்டால் உலகத்தில் தீமையே இருக்காது.
---
நீ உன் மனைவியோடு வாழலாம்; அவளைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஆனால் அவளிடம் கடவுளைக் காண வேண்டும். உங்கள் குழந்தைகளில் இறைவனைக் காணுங்கள். எல்லாவற்றிலும் இப்படியே. வாழ்விலும் சாவிலும் இன்பத்திலும் துன்பத்திலும் எல்லாவற்றிலுமே இறைவன் சமமாக நிறைந்திருக்கிறார். உலகம் முழுவதும் இறைவன்தான் நிறைந்திருக்கிறார். கண்களைத் திறவுங்கள், அவரைப் பாருங்கள். வேதாந்தம் இதைத்தான் போதிக்கிறது.
----
நாம் நமது கற்பனையால், நமது அனுமானத்தால் உருவாக்கிக் கொண்டிருக்கும் உலகத்தைத் துறந்துவிட வேண்டும்.
இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவனில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில் இருப்பதும் அவரே, தீயவரில் இருப்பதும் அவரே, பாவத்தில் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார்.
வேதாந்தம் இந்தக் கருத்தைத்தான் பிரச்சாரம் செய்ய, செயலில் காட்ட விரும்புகிறது, போதிக்க விரும்புகிறது.
----
(சுவாமி விவேகானந்தர் வாட்ஸ் அப் குழு 9003767303 )

No comments:

Post a Comment