Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-39

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் .பகுதி-39
-----
ஒருமுகப்படுத்தும் இந்த ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன் மனதை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால் மேலும் சிறப்பாகச் செருப்புக்களுக்கு மெருகு பூசுவான். மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில்உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.
---
பிரம்மசரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும் , எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்குமாகக் கீழே இழுத்துச் சென்றுவிடும் நம்மைப் பிளந்துவிடும். அழிந்துவிடும். ஆனால் அடக்கப்பட்டுச் சரியான வழியில் செலுத்தப்பட்ட மனமோ நம்மைக் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலை பெறச் செய்யும்.
---
சிந்தனையின் தொண்ணூறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கபடுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒரு போதும் தவறு செய்வதில்லை.
----
நல்ல எண்ணங்கள் தீய எண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வென்றும் தனித்தனியே வலிமை மிக்க ஆற்றலைப்பெற்றிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அவை நிறைந்திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்து இருந்து வருவதனால் அந்த எண்ணங்கள் செயலுக்குவரும் வரையில் அவை கருத்து வடிவில் இருக்கின்றன. உதாரணமாக, மனிதனின் கையிலுள்ள ஆற்றல், அவன் ஓர் அடிஅடிக்கும் வரையிலும் , அவன் அந்த ஆற்றலுக்குச் செயல் வடிவு தரும் வரையிலும் மறைந்திருக்கிறது. நாம் நல்ல தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம் . நாம் நம்மைத் தூய்மைப்படுத்தி நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொண்டால் அவை நம்முள் நுழைகின்றன. நல்ல ஆன்மா தீய எண்ணங்களை எளிதில் ஏற்ப தில்லை.
----
நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ. அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால் எதிர்காலத்தில் நாம் எப்படி எல்லாம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நாம் நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை . எனவே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
----
மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளை எல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய், பிசாசு என்று கற்பித்துக்கொண்டு,அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள்.
விதி என்னால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே அதன் பொருட்டுத்தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டு வதற்கும் ஒருவருமில்லை.
---
உனது எதிர்காலத்தை நீயே உருவாக்கு. ஏற்கனவே நடந்து முடிந்த தைக் குறித்து வருந்தாதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்து பரந்திருக்கிறது.
---
துரதிர்ஷ்டவசமாக இந்த வாழ்க்கையில் மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் எந்த விதமான ஓர் உயர்ந்த இலட்சியமும் இல்லாமல், இருளடைந்த இந்த வாழ்க்கையில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த இலட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால் இலட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான் என்று நான் உறுதி யாகச் சொல்வேன். எனவே உயர்ந்த ஓர் இலட்சியத்தைக் கொண்டிருப்பது மேலானது.
----
---சுவாமி விவேகானந்தர்(வாட்ஸ்அப் குழு9003767303)

No comments:

Post a Comment