Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-4


சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்--பகுதி-4
----
1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார்: நம்புவதற்கே உங்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாள்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு விநாடிகூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எவையும் அறவே எனக்கு இல்லாமற் போய்விட்டன. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன்.
----
மூன்றாம் நாள் இரவு வந்தது. அநேகமாக எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த, செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் என்னிடம் வந்தான்.
--
அவன் என்னிடம், சுவாமிஜி! நீங்கள் மூன்று நாள்களாக உணவு, தூக்கம் எதுவுமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அதனால் என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! மூன்று நாள்களாக ஒரு டம்ளர் தண்ணீர்கூட நீங்கள் குடிக்கவில்லையே! என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என் மனத்தை நெகிழச் செய்தது. நான் அவனிடம், சாப்பிடுவதற்கு நீ எனக்கு ஏதாவது தருகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அவன், நீங்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது தர வேண்டும் என்றுதான் என் மனம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன்; சக்கிலியன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. கோதுமை மாவும் மற்ற பொருள்களும் நான் உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன். நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நான் அவனிடம், பரவாயில்லை. நீயே சமையல் செய்துகொண்டு வா. நான் சாப்பிடுகிறேன் என்றேன். இவ்விதம் நான் கூறியதைக் கேட்டு அவன் நடுங்கிவிட்டான்.
காரணம், சக்கிலியனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தண்டிக்கப்படுவான். ஏன், நாடு கடத்தவும் செய்வார்கள். ஆனால் நான் அவனைச் சமாதானப்படுத்தி, உனக்குத் தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாக நம்பவில்லை. இருந்தாலும் அவனுக்கு என்மீதிருந்த அன்பு காரணமாகச் சப்பாத்தி செய்து கொண்டு வந்தான். அதை நானும் சாப்பிட்டேன். தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரன் ஒரு தங்கக்குவளையில் தேவாமிர்தத்தை எனக்குத் தந்திருந்தால் - அதுகூட அப்போது அவ்வளவு ருசியாக இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் இதயம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. என் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. இதற்கிடையில், விவேகானந்தர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் கொடுத்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்த உயர் சாதியினர் சிலர் கோபம் கொண்டார்கள். அதை அவர்கள் விவேகானந்தரிடமே தெரிவித்தார்கள்.
--
அவர்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டார் விவேகானந்தர். பிறகு அவர்களைப் பார்த்துக் கூறினார்: நீங்கள் என்னை மூன்று நாள்கள் தொடர்ந்து பேச வைத்தீர்கள்!
இடையில் நான் ஏதாவது சாப்பிட்டேனா, ஓய்வெடுத்தேனா என்று ஒருமுறைகூட நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய மனிதர்கள், உயர்ந்த சாதியினர்! ஆனால் இங்கே பாருங்கள், தனக்குத் தண்டனை கிடைக்கும்! என்று தெரிந்திருந்தும், மனிதநேயம் என்ற ஒரே காரணத்தால் அவன் எனக்கு உணவு தந்தான். அவனைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று நீங்கள் ஒதுக்குகிறீர்களே! இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சில நாட்களில் விவேகானந்தருக்கு கேத்ரி மன்னருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது விவேகானந்தர், செருப்புத்தைக்கும் தொழிலாளி தனக்கு உதவியதைப் பற்றி மன்னரிடம் தெரிவித்தார். எனவே மன்னர், உடனடியாகச் செருப்புத்தைக்கும் தொழிலாளியைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தார். தொழிலாளி, என்னை மன்னர் அழைத்திருக்கிறாரே! என் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ! என்று பயந்துகொண்டே வந்தான். ஆனால் கேத்ரி மன்னர் அவனுடைய பயத்தைப் போக்கியதுடன், அவனுடைய செயலைப் புகழ்ந்து பாராட்டினார். மேலும் அரசர் அவனுக்குப் பொன்னும் பொருளும் தாராளமாகக் கொடுத்தனுப்பினார்.
----
--#சுவாமி #விவேகானந்தர் #வாட்ஸ்அப் குழு 900 3767 303)*

No comments:

Post a Comment