Saturday, 24 September 2016

சுவாமி விவேகானந்தர் கூறிய கதைகள் -பகுதி-4

சுவாமி விவேகானந்தர் கூறிய கதைகள் -பகுதி-4
----
பொன்னிறச் சிறகுகள் கொண்ட இரு பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தன. மேற்கிளையில் இருந்த பறவை, அமைதியாக, கம்பீரமாகத் தனது மகிமையில் ஆழ்ந்திருந்தது. கீழ்க் கிளையில் இருந்த பறவை பரபரப்பாக இருந்தது. அது சிலவேளை இனிப்பான பழங்களைத் தின்று மகிழ்கிறது, சிலவேளைகளில் கசப்பான பழங்களைத் தின்று வருந்துகிறது. ஒருமுறை அது மிகக் கசப்பான பழம் ஒன்றைத் தின்ன நேர்ந்தது. அப்போது அது சற்று நிதானத்துடன், மேற்கிளையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பறவையைப் பார்த்து, நானும் அவனைப் போல் ஆவேன் என நினைத்தது. ஆனால் சிறிது நேரத்தில் அந்தப் பறவையைப் போல் ஆகும் ஆசையை மறந்துவிட்டு, மீண்டும் மரத்தில் இருந்த இனிப்பு மற்றும் கசப்புப் பழங்களைத் தின்று இன்பத்திலும், துன்பத்திலும் மாறி மாறி உழன்றது. மறுபடியும் அது மிகக் கசப்பான பழம் ஒன்றைத் தின்ன நேர்ந்தது. உடனே அது சற்று பறந்து, சில கிளைகளைக் கடந்து மேலே உள்ள பறவையின் அருகே சென்றது. இப்படிப் பல முறை நடந்தது. இறுதியில் கீழேயிருந்த பறவை மேலே இருந்த பறவைக்கு மிக அருகே சென்று அமர்ந்தது. அந்த மேற்பறவையின் ஒளி அதன் கண்களைக் கூசச் செய்தது; அந்த ஒளி அப்படியே தன்னை முழுக்காட்டுவதுபோல அது உணர்ந்தது. இறுதியில் பார்த்தால் இருந்தது ஒரு பறவை மட்டுமே. தான் எப்போதும் அந்த மேற்பறவையாகவே இருந்திருக்கிறோம், இப்போது அதனை உணர்ந்துள்ளோம் என்பதைக் கீழ்ப் பறவை அறிந்து கொண்டது. பின்னர் தனது மகிமையிலேயே அது ஆழ்ந்தது.
இந்த உபநிடதக் கதையைக் கூறி, சுவாமி விவேகானந்தர் மேலும் விளக்குகிறார்: நமது உடலிலும் இரு பறவைகள் உள்ளன. அவையும் சேர்ந்தே உள்ளன. அவற்றுள் ஒன்று மனித ஆன்மா எனும் ஜீவாத்மா, மற்றது இறைவன் எனும் பரமாத்மா. பரமாத்மா நமது ஆன்மாவின் ஆன்மா. அவர் நல்லது, கெட்டது எதையும் ஏற்பதில்லை, சாட்சியாக இருந்து அவற்றைப் பார்க்க மட்டும் செய்கிறார். ஆனால் மனிதனாகிய ஜீவாத்மா தன்னைப் பலவீனன் என்றும், சிறியவன், அற்பன் என்றெல்லாம் கருதுகிறான், ஏதேதோ கூறுகிறான், செய்கிறான், இன்ப துன்பங்களில் உழல்கிறான். அதே மனிதன் யோகியாகி இறைவனைக் காணும்போது, இறைவன் என்று நான் அழைத்தது என் மகிமையையே. என்னைச் சிறியவனாக எண்ணிக் கொண்டு துன்பத்தில் உழன்றது வெறும் மாயை. அப்படி ஒன்றே கிடையாது. நான் ஒருபோதும் ஆணாகவோ, பெண்ணாகவோ வேறு எதுவாகவோ இருந்ததில்லை என்றுணர்ந்து இன்ப துன்பங்களுக்கு அப்பால் சென்றுவிடுகிறான்.
----
---#சுவாமி #விவேகானந்தர் #வாட்ஸ்அப் குழு 900 3767 303)*

No comments:

Post a Comment