Saturday, 24 September 2016

அனைத்திலும் ஒருமை

வாழ்வின் ஒருமை, அனைத்தின் ஒருமை- இது வேதாந்தத்தின் மற்றுமோர் உயர்ந்த கருத்தாகும்.

---
அறியாமைதான் எல்லா துன்பங்களுக்கும் காரணம். என்பதை வேதாந்தம் எப்படி விளக்குகிறது என்பதைப் பார்ப்போம். பன்மைக் கருத்துதான் இந்த அறியாமை. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில், நாட்டிற்கும் நாட்டிற்கும் இடையில், சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில், சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் வேறுபாடு காண்பதுதான் இந்த அறியாமை.
--
ஓர் அணுவிற்கும் மற்றோர் அணுவிற்கும் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்தும் இந்த உணர்ச்சிதான் எல்லா துன்பங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. இந்த வேறுபாடுகள் இல்லை, அவை உண்மையல்ல என்று வேதாந்தம் கூறுகிறது. பார்வைக்கு அப்படித் தெரிகிறது. அது வெறும் தோற்றமே.
--
எல்லாவற்றின் அடிப்படையில் அந்த ஒருமை இருக்கவே செய்கிறது. மேல்மட்டத்திற்குக் கீழே சென்று பார்ப்போமானால் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில், இனங்களுக்கு இடையில், உயர்ந்தவனுக்கும் தாழ்ந்தவனுக்கும் இடையில், பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையில், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையில் அந்த ஒருமை நிலவுவதைக் காணலாம்.
--
இன்னும் ஆழமாகப் போனால், எல்லாமே ஒரே பரம்பொருளின் வேறுபாடுகளே என்பது தெரியும். எல்லாம் ஒன்றே என்ற இந்த ஞானம் பெற்றவனுக்கு மனமயக்கம் இல்லை. எது அவனை மதிமயங்கச் செய்ய முடியும்? அவன் எல்லாவற்றின் ரகசியத்தையும் அறிகிறான்,
--
அதன்பின் அவனுக்கு ஏது துன்பம்? அவனுக்கு ஏது ஆசை? எல்லாவற்றின் உண்மை, எல்லாவற்றின் மையம், எல்லாவற்றின் ஒருமை இறைவனே, நிலையான சச்சிதானந்தப் பரம்பொருளே என்பதை அவன் ஆராய்ந்து உணர்ந்துவிட்டான்.
---
அங்கே நோய் இல்லை. மரணம் இல்லை. துன்பமோ துயரமோ இல்லை, அதிருப்தி இல்லை. அங்கே முழுமையான இரண்டற்ற நிலையும், முழுமையான ஆனந்தமும்தான் இருக்கின்றன. அவன் யாருக்காக வருந்த வேண்டும்? அந்த உண்மைநிலையில் மரணம் இல்லை, துன்பம் இல்லை. கவலைப்படுவதற்கோ, கலங்குவதற்கோ அங்கே காரணம் இல்லை.
--
தூயவனான, உருவமற்ற, உடலற்ற, மாசற்ற, எல்லாம் அறிந்த, மகோன்னதமான கவிஞனான, எதன் சார்புமில்லாமல் தானாகவே விளங்குகின்ற அந்த இறைவனே எல்லாவற்றையும் ஊடுருவியிருக்கிறார்.
--
சுவாமி விவேகானந்தர்
----
வாட்ஸ் அப் குழு 9003767303 அட்மின்-சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment