Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-8


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-8

பெண்மை தாய்மையில் நிறைவுறுகிறது . தாய்மை என்ற நோக்கத்தைக் கொண்டிருப்பதால் மட்டுமே திருமணம் புனிதம் பெறுகிறது . தாய்மையை நாடாத பெண்மையே  இல்லை.  சாரதையும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. ‘ அம்மாஎன்று தன்னை மழலைகள் அழைக்க விழைந்தது அந்தத் தாயுள்ளம் . தமது மன ஏக்கத்தைப்பற்றிப் பின்னாளில் , ‘ பிள்ளை பேறில்லாத பெண்  எந்த மங்கல காரியங்களும் செய்யத் தகுதியற்றவள் , என்று பலர் கூறுவதை கேட்டிருந்தேன் . அது என் மனத்தை வாட்டியது . “ அப்படியானால் ஒரு பிள்ளைகூட அம்மா என்றழைப்பதற்கு என் தலையில் எழுதவில்லையா ?” என்றெல்லாம் தவித்தேன்என்று அன்னை கூறுவார் .
-
ஆனால் தாய்மை என்பதன் முழுப் பரிமாணத்தையும் சாரதை அறியவில்லை என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டு கொண்டார் . எனவே  தேவியிடம் , ‘ அம்மா , இவளது மனதிலிருந்து காமத்தை வேருடன் களைந்து விடுஎன்று மனமாரப் பிரார்த்தித்தார் . அத்துடன் நில்லாமல் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் உலகின் நிலையாமையை அவர் எடுத்துக் கூறுவார் .வைராக்கியமும் பக்தியுமே ஒருவர் உண்மையில் அடைய வேண்டிய செல்வங்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவார் .
-
சாரதையின் உடன் பிறந்தோருள் பலர் மரணமடைந்த வேளையில் அவளது தாயும் தந்தையும் பட்ட வேதனையயும் , ஏன் , அவளே கொண்ட சோகத்தையும் நினைவுபடுத்துவார். ‘ எதற்கு இந்த வம்பெல்லாம் ? நாய் நரிகளைப்போல் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதும் பிறகு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வது எதற்காக ? உனக்குத் தெரியாதா என்ன எதற்கு இதெல்லாம் ? இவை எதுவும் இன்றியே நீ மகாராணிபோல் இருக்கிறாய் . வாழ்நாள் முழுவதும் இப்படியே இரு  என்று கூறினார் . ஆனால் சாரதை அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை .
-
ஒருநாள் காலையில் சாரதை சாணமிட்டு வீட்டை மெழுகிக் கொண்டிருந்தாள் . ஸ்ரீராமகிருஷ்ணர் வேப்பங்குச்சியால் பல் துலக்கியவாறே கேலியும் கிண்டலுமாக பல்வேறு விஷயங்களைக் கூறிக் கொண்டிருந்தார் . இடையில் , ‘ முதல் குழந்தை பிறந்ததும் ஒரே அமர்க்களம் . ஆடை என்ன , ஆபரணம் என்ன ! ஆனால் அந்த குழந்தை இறக்கட்டும் , கண்ணீரும் கம்பலையும்தான் மிச்சம்என்றார் . வழக்கம்போல் சாரதை எதுவும் கூறாமல் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் .ஸ்ரீராமகிருஷ்ணர் விடாமல் அவளைத் தூண்டுவதற்கேபோல் குழந்தைகள் இறந்து போவதைப் பற்றியே பேசலானார் . அதன்பின்னரும் சாரதையால் பொறுக்க முடியவில்லை. ‘ என்ன , பிறக்கின்ற குழந்தைகள் எல்லாமா இறந்துவிடுகின்றன , ’ என்று மெல்லிய ஆனால் உறுதியான குரலில் கூறினாள் . அவ்வளவுதான் , ஸ்ரீராமகிருஷ்ணர், ‘ ஐயோ அப்பா உண்மை தெரியாமல் நல்ல பாம்பின் வாலை அல்லவா மிதித்து விட்டேன் ! எளிமையானவள் , வெகுளி என்றெல்லாம் நினைத்திருந்தேனே !  இவளோ என்னவென்றால் எப்படி நறுக்கென்று  கேட்கிறாள் , ஆகா ! ’ என்று கூவினார் .சாரதை உடனே அங்கிருந்து அகன்றுவிட்டாள் .
-
அவள் கூறியதை ஸ்ரீராமகிருஷ்ணர் வேடிக்கை செய்து விட்டுவிட்டாலும்  அவளுள் பொங்கிக் கொண்டிருந்த தாய்மையுணர்வை அவர் கவனிக்கத் தவறவில்லை . இவள் வெறும் ஓரிரு குழந்தைக்கு தாயாக பிறந்தவள் இல்லை , உலகனைத்துக்குமே தாயாகி , தாய்மையின் பெருமையை உலகுக்கே காட்டவந்தவள் என்பதை  அவளுக்கு உணர்த்துவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார் அவர் . அந்த வாய்ப்பும் விரையில் வந்தது .
-
தன் மகளும் மருமகனும் உலகியல் ரீதியான  இல்லறம்  நடத்தவில்லை  என்பதைக் கண்ட சியாமாசுந்தரி ஒருநாள் , ‘ அம்மா  என்று ஒரு குழந்தை அழைக்கின்ற விதியை என் மகளின் தலையில் பிரம்மன் எழுதவில்லை போலும்என்று அங்கலாய்த்துக்  கொண்டார் . மாமியாரின் குறையைப் புரிந்துகொண்ட ஸ்ரீராமகிருஷ்ணர் , ‘ ஏன் இப்படிக் கலங்குகிறீர்கள் ? ஒரு குழந்தை என்ன , எதிர்காலத்தில் ஆயிரமாயிரம் குழந்தைகள் அவளை அம்மா , அம்மா என்று அழைக்கின்ற குரலால்  அவள் காதே அடைக்கப் போகிறது , பாருங்களேன்என்று கூறினார் . சியாமா அன்று இதை எவ்வளவு எப்படிப் புரிந்து  கொண்டாரோ , நமக்குத் தெரியாது . ஆனால் இது அப்படியே  உண்மையாவதை அவர் பின்னாளில் கண்டார். 
-
பின்நாளில் அது அப்படியே உண்மையாகியது . ‘ ஒரு குழந்தையல்ல , ஓராயிரம் குழந்தைகள் உன்னை  அம்மா என்றழைக்கும்  என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியது , அவர் நினைத்த மாற்றத்தை சாரதையிடம் ஏற்படுத்தியிருக்க வேண்டும் .அதன்பின் சாரதை வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கினாள்.
-
அந்த பார்வையில் முதலில் பட்டது அவளது தெய்வீகக் கனவர்தான் . இவ்வளவு ஆனந்தத்தில் திளைக்கின்ற , ஆனந்தமே வடிவான இன்னொருவரை அவள் பார்த்ததில்லை . ‘ அவர் முகம் வாடி நான் கண்டதே இல்லை . எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார் . உடனிருப்பவர்கள் சிறுவனோ முதியவரோ  யாராயிருந்தாலும் , சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அவரது மகிழ்ச்சிக்கோ ஆனந்தத்திற்கோ எந்த குறையும் இருக்காதுஎன்று பின்னாளில் அன்னை கூறியதுண்டு . இந்த ஆனந்தத்திற்காகஅவர் புறவுலகை நாடவே இல்லை . அப்படியானால் இந்த ஆனந்தம் அவருள்ளே இருக்கிறது , நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது . எனவே தானும் அதைத் தன்னுள்ளே தேடி அடைய வேண்டும் என்பது அவளுள் உறுதியாகியது .            
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303

No comments:

Post a Comment