Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-10


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-10
-
ஆனால் துவண்ட அந்த நிலையில் பெற்ற தெய்வீகக் காட்சியால் அவள் புத்துணர்ச்சி பெற்றாள்ஜுரத்தின் வேகத்தில் அயர்ந்து படுத்திருந்தாள் சாரதை அப்போது கன்னங்கரிய பெண்ணொருத்தி  அங்கே வந்தாள் . சாரதை வைத்த கண்வாங்காமல் அவளையே பார்த்தாள்இப்படி ஒரு கறுப்பையும்  அவள் கண்டதில்லை கறுப்பில் இப்படியோர் அழகு இருக்க முடியும் என்பதையும் அவள் எண்ணியதில்லை . அப்படியோர் அழகு ! வந்தவள் சாரதையின் தலைமாட்டில் அமர்ந்தாள் , தன் கோமளக் கரங்களால் அவளது தலையையும் தேகத்தையும்  வருடினாள் . சாரதையின் வேதனையும் களைப்பும்  மறைவது போலிருந்தது . ‘ இவள் கைகளில் என்னவோர் அதிசயசக்திஎன்று வியந்த சாரதை அவளிடம் கேட்டாள் – ‘ ஆமாம் , நீ எங்கிருந்து வருகிறாயம்மா ? ’   தட்சிணேசுவரத்திலிருந்து . ’இந்தப் பதில் சாரதையைத் திகைக்க வைத்தது . ‘ என்ன , தட்சிணேசுவரத்திலிருந்தா ? நானும் அங்கே போவேன் அவரைக் காண்பேன் , அவருக்குச் சேவைகள் செய்வேன் , என்றெல்லாம் நினைத்திருந்தேன் . அதற்குள் இந்த பாழும் ஜுரம் வந்துவிட்டது . என் திட்டம் எல்லாம் பாழாகிவிடும்   போலிருக்கிறது . ’ ‘ கலங்காதே . நீ குணமடைந்து , விரைவில் தட்சிணேசுவரம் போவாய் . அவனையும் பார்க்கத்தான் போகிறாய் . உனக்காகத்தான் நான் அவனை அங்கே வைத்திருக்கிறேன் . ’ ‘ ஆகா ,  அப்படியா ? ஆமாம் நீ எங்களுக்கு என்ன உறவு வேண்டும் ? ’ ‘ நான் என் சகோதரி . ’  அதனால்தான் நீ வந்திருக்கிறாயா ? ’ என்று கூறிய சாரதைக்குக் கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது . அப்படியே தூங்கிவிட்டாள் . காலையில் எழுந்தபோது ஜுரம் வெகுவாகத் தணிந்திருந்தது . முந்தின நாள் கண்ட காட்சி மனதிற்குப் புத்துணர்ச்சியை அளித்தது . எனவே புதுவேகத்துடன் பயணத்தைத் தொடங்கினாள் . தெய்வாதீனமாக வழியில் ஒரு பல்லக்கு கிடைத்தது . மீண்டும் ஓரிருமுறை அவளுக்கு ஜுரம் வரவே செய்தது . ஆனால் அது அவ்வளவு தீவிரமாக இல்லை . எனவே தன் தந்தையிடம் அதுபற்றி அவள் கூறவில்லை . நீண்ட பயணம் ஒரு முடிவுக்கு வந்தது . கங்கையைப்படகில் கடந்து தட்சிணேசுவரத்தை அடைந்தபோது இரவு ஒன்பது மணி . படகிலிருந்து இறங்கிய சாரதையின் மனநிலை விவரிக்க முடியாததாக இருந்தது . ‘ பித்தன்என்று ஊரார் பழி கூறியது உண்மையாகுமா , இல்லை தன் இதயத்தில் ஆனந்த நிறைகூடத்தை விட்டுச் சென்ற அதே அன்புருவாக அவர் இருப்பாரா  ? ’ என்றெல்லாம் படபடக்கும் நெஞ்சுடன்  நேராக குருதேவரின் அறைக்கு  விரைந்தாள் . உடன் வந்தவர்கள் நகபத்திற்குச் சென்றார் .  அறையில் நுழைந்தாள் சாரதை . அவளைக் கண்டதுதான் தாமதம் , ‘ ஆகா , நீ வந்துவிட்டாயா ? நல்லது வா , வாஎன்றார்  குருதேவர் . அவர் குரலில்  இழையோடிய  பரிவும் அன்பும் சாரதையின்  சந்தேகங்களை அடியோடு அகற்றிவிட்டது . அன்று ஜெயராம்பாடியில்  கண்ட அந்த  அன்பின் திருவுரு மேலும் கனிந்திருந்ததே  தவிர  குறையவில்லை, மூளைக் கோளாறு  என்ற பேச்சுக்கே  இடமில்லை என்பதை சாரதை கண்டாள் . அதற்குள்  குருதேவர்  அங்கிருந்த ஒருவரிடம்  , ‘ அவள் , அமர ஒரு பாய் போடுஎன்றார் . சாரதை அமர்ந்ததும் வீட்டு விசேஷங்களையும்  உற்றார்  உறவினர்  நல விவரங்களையும்  விசாரித்தார் . பேச்சு வாக்கில் தனக்கு ஜுரம் கண்டதைத் தெரிவத்தாள் சாரதை . அதைக்  கேட்டதும்  அவர் மிகுந்த  கவலையுடன் , ‘ அந்தோ  !  இப்போது  என் மதுர் மட்டும்  இருந்திருந்தால் ...!  மதுரின்  மரணத்துடன் என் வலது    கையே  ஒடிந்தது போலாகிவிட்டது  என்றார் . சாரதைக்கு நெஞ்சு நிறைந்துவிட்டது . அவரது வார்த்தைகளின்  கனிவே அவளுக்கு  அருமருந்தாகியது . மகிழ்ச்சியுடன் எழுத்து சாரதை நகபத்திற்குச் செல்ல ஆயத்தமானாள் . அவளைத் தடுத்த குருதேவர் , ‘ வேண்டாம் , வேண்டாம் . நீ இங்கேயே தங்கு . நகபத்தில் டாக்டர்  வந்து பார்ப்பது  மிகவும் சிரமமாக இருக்கும்என்று  கூறி  அங்கேயே தங்கச் செய்தார் .  இரவு உணவு  முடிந்து  விட்டிருந்ததால்  ஹிருதயன் எல்லோருக்கம் பொரி மட்டும் கொடுத்தான் .  பின்னர் சாரதை ஸ்ரீராமகிருஷ்ணரின்  அறையிலேயே  படுத்துக் கொண்டாள் .  துணைக்கு ஒரு பெண்ணும்  அவளுடன் தங்கினாள் . காலையில் டாக்டர் ஒருவர் வந்து சாரதைக்கு மருந்துகள் கொடுத்தார் . ஓரிரு நாட்களுள்  ஜுரம்  முற்றிலுமாக  நீங்கிவிட்டது . அதன்பின்  அவள் நகபத்தில்  சென்று  வசிக்கத் தொடங்கினாள் . மகளின் மகிழ்ச்சியான வாழ்வைக் கண்ட  ராமசந்திரர்  மனநிறைவுடன்  ஜெராம்பாடி  திரும்பினார் . 
--
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303

No comments:

Post a Comment