Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-7


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-7
-
ஸ்ரீராமகிருஷ்ணர் சுமார் இரண்டு வருடங்கள்  காமார்புகூரில் தங்கியிருந்தார் இதற்கிடையில் 1860 டிசம்பரில் , சாரதைக்கு ஏழு வயதாக இருக்கும்போது  ஒருமுறை அவர் ஜெராம்பாடிக்கு வந்தார் . ஆனால் ஓரிரு சம்பவங்களைத் தவிர அந்த இரண்டாம் சந்திப்பின்போது நடந்து வேறெதுவும் சாரதையின் நினைவில் இல்லை. ஏழுவயது சிறுமியாக இருந்தாலும் அவள் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் , கணவனே கண்கண்ட தெய்வம்  என்ற நமது பண்பாட்டு பாரம்பரியம் அந்தப் பிஞ்சு வயதிலேயே  அவளுள் ஊறிப் போயிருந்தது எனவே யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே , ஓடிச் சென்று  ஸ்ரீராமகிருஷ்ணரை உபசரித்து , அவரது பாதங்களைக் கழுவி , அமரச் செய்து விசிறியால் வீசினாள் . சாரதையின் இந்தச் செயல் கூடியிருந்தோர்  அனைவருக்கும் குதூகலத்தை அளித்தது . அவளது தோழிகள் இதற்காக அவளை கேலி செய்தனர் .
-
இதற்கிடையில் ஸ்ரீராமகிருஷ்ணரின் மகன் முறை உறவினனும் , அவருடனே வாழ்ந்து அவருக்குச் சேவைகள் செய்து வந்தவனுமாகிய ஹிருதயன் ஒருநாள் , நாணம் மிக்கவளான சாரதை எவ்வளவோ மறுத்தும் அவளது பாதங்களில் மலரிட்டு வழிபட்டான் . இவையெல்லாமாகச் சேர்ந்து சாரதையின் வீடு அமர்க்களப்பட்டது . இந்த மகிழ்ச்சி ஆரவாரங்களை வைத்து , இதையே திருமணநாள் என்றுசாரதை எண்ணிவிடக் கூடாது என்பதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் அவளை அழைத்து , ’ இதோ பார் , யாராவது கேட்டால் , எனக்கு ஏழாம் வயதில்தான் திருமணம் நடந்தது என்று சொல்லி வைக்காதே . உன் ஐந்தாம் வயதிலேயே நமக்குத் திருமணம் முடிந்துவிட்டதுஎன்று கூறு என்று  அறிவுறுத்தினாராம் . இவையெல்லாம் அன்னை குருதேவருடன்  தமது இரண்டாம் சந்திப்பைப்பற்றி பின்னாளில் நினைவு கூர்ந்தவை .ஒருசில நாட்களுள் ஸ்ரீராமகிருஷ்ணர் தட்சிணேசுவரம் சென்றுவிட்டார் .
-
ஸ்ரீராமகிருஷ்ணர் மனைவி , குடும்பம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டார் . சாரதையின் வாழ்வு எந்தவித அரவாரமும் இன்றி அமைதியாகச் சென்றது . அதன்பின்னர் சாரதை தன் பதிமூன்று  மற்றும் பதிநான்கு  வயதுகளில் காமார்புகூரில் புகுந்த வீடு சென்று சில நாட்கள் தங்கி வந்தாள் . இரண்டாம் முறை  சென்றபோது  ஸ்ரீராமகிருஷ்ணரோ சந்திரமணியோ காமார்புகூரில் இல்லை. அவர்கள் தட்சிணேசுவரத்தில் வாழ்ந்து வந்தனர் .  எனவே ஸ்ரீராமகிருஷ்ணரின்  தமையனான ராமேசுவரர் , அவரது மனைவி மற்றும் உறவினருடன் தங்கிவிட்டு திரும்பினாள் சாரததை .
-
 ஆனந்த நிறைகுடம்
-
 திருமணத்திற்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் தட்சிணேசுவரத்ற்குச் சென்று தீவிரமான ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டார் . அவற்றின் விளைவாக அவரது உடல்நிலை மோசமாகியது. முக்கியமாக அவரது வயிறு சீர்கெட்டது . குலைந்த ஆரோகியத்தைச் சீர்படுத்துவதற்காக அவர் காமார்புகூர் வந்தார் . அவர் வந்ததில்  காமார்புகூர் மக்கள்  மிகவும் மகிழ்ந்தனர் . அவரது இளமை பருவத்திலேயே கிராம மக்கள் அவரிடம் மிகவும் கவரப்பட்டிருந்தனர் . இப்போது அவரது அருகில் இருப்பதில் அவர்கள் சொல்ல முடியாத பேரானந்தத்தை உணர்ந்தார் . எனவே வேலைகளை எல்லாம் அவசர அவசரமாக முடித்துவிட்டு  ஆண்களும் பெண்களும் அவரை மொய்துக் கொள்வார்கள் .
-
கதை , உவமை என்று எளிய முறையில் அந்த எளிய மக்களுக்கு ஆன்மீக வாழ்க்கையின் தேவையை  அவர் புரிய வைப்பார் . இவ்வாறு காமா்புகூரின் அந்த வைக்கோல் குடிசை ஓர் ஆனந்தச் சந்தையாக விளங்கியது . இந்த ஆனந்தத்தில் பங்கு பெறவும் அதனைப் பூரணமாக்கவும் சாரதை அழைத்து வரப்பட்டாள் .
-
சாரதை தன் கணவரை இப்போது சந்திப்பது மூன்றாம்  முறையாகும் . ஆனால் விவரம் தெரிந்த பெண்ணாக  இப்போதுதான் முதன்முறையாக சந்திக்கிறாள். அது 1867 – ஆம் ஆண்டு . அப்போது அவளுக்கு  வயது பதிநான்கு . சாரதைஸ்ரீராமகிருஷ்ணர் திருமணம் ஒரு தெய்வீக நாடகத்திற்கான பூர்வாங்கம் என்று முன்பே கூறினோம் . இந்தச் சந்திப்பில்தான்  அந்த நாடகத்தின் முதல் அங்கம் நிறைவேறியது . இப்போதுதான் சாரதையிடம் ஆன்மீகத்தின் முதல் விதை ஊன்றப்பட்டது .
-
பதிநான்கே வயதான பெண் அதற்கு ஏற்றவளாக இருப்பாளா ? சாரதையின் விஷயத்தில்ஆம்என்பதுதான் பதில் . வாழ்க்கையின் உயர்ந்த லட்சியத்தையும்  பொறுப்புகளையும் உணரும் ஆற்றல் அவளிடம் அரும்பத் தொடங்கியிருந்தது .  பாரதப் பெண்மைக்கே உரித்தான , கணவனை கொண்டாடும் பண்பும் அவளிடம்  பாங்குறப் பொருந்தியிருந்தது .
-
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303

No comments:

Post a Comment