Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-4


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-4
-
             இளமை
-
சாரதை பிறந்ததும் வளர்ந்ததும் ஒரு சாதாரண ஏழையின் வீட்டில் . எனவே உலகியல் வாழ்க்கையைப்  பொறுத்தவரை ஒரு சராசரி இந்தியப் பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்புகளே அவளுக்குக் கிடைத்தன . அதிலும் ஏழை குடும்பத்தில் மூத்த பெண் என்றால் அவள் தாயாகவே செயல்படவேண்டியுள்ளது  இளைய பிள்ளைகளுக்குக் கிடைக்கின்ற சிறுசிறு வசதிகளையும் கூட மூத்தவள் இழக்க நேர்கிறது . சாரதையின் வாழ்விலும் இதை நாம் காண்கிறோம் . சிறு வயதிலேயே தாய்க்குச் சமையலில் உதவுதல் , தம்பி  தங்கைகளைக் கவனித்துக் கொள்ளுதல் என்று எல்லா வேலைகளிலும் அவள் ஈடுபட்டாள் . பூணூல் செய்து விற்பது ராமசந்திரரின் தொழில்களுள் ஒன்று என்பதை ஏற்கனவே கண்டோம் . அதற்காக அவர் பருத்தி சாகுபடி செய்திருந்தார் . பருத்தி கொல்லைக்கு சியாமா செல்லும்போது குழந்தை சாரதையும் எடுத்துச் செல்வாள் . ஓர் ஓரமாக அவளைக் கிடத்திவிட்டு பஞ்சுக் காய்களைச் சேகரிப்பாள் . சிறிது வளர்ந்தபின் சாரதையும் காய்கள் சேகரிப்பதிலும் பூணூல் செய்வதிலும் தாய்தந்தையாருக்கு உதவி செய்து வருவாயை வளர்ப்பதில் பங்கெடுத்துக் கொண்டாள் . தாய் பிற அலுவல்களில் ஈடுபடும்போது சமையலைக் கவனிப்பதும் உடன் பிறந்தோரைக் கவனிப்பதும் சாரதையின் முக்கிய வேலையாக இருந்தது . குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வருவதும் அவள்தான் . இந்தச் சாக்கில் நீச்சலும் கற்றுக் கொண்டாள் . பின்னாளில் காமார்ப்புகூரில் அவ்வப்போது தங்கியபோது நீச்சலுடன் பாட்டு , தையல் போன்றவற்றையும் கற்றுக் கொண்டாள் . வீட்டின் பிற வேலைகளையும் செய்து வந்தாள் . அந்த நாட்களைப்பற்றி பின்னாளில் அன்னை கூறினார் . மிகச்சிறு வயதிலேயே நான் சமைக்கத் தொடங்கிவிட்டேன் . பெரிய பானைகளை அடுப்பில் ஏற்றவும் இறக்கவும் அப்பா உதவுவார் . தம்பி தங்கையாரைக் கவனித்துக் கொள்வதும் நான்தான் . அவர்களை கூட்டிக் கொண்டு கங்கையில் குளிக்கப் போவேன் கங்கையில் என்றால் எங்கள் கங்கையில்ஆம் , ஆமோதரைத்தான் சொல்கிறேன் . போகும்போது  உண்பதற்குப் பொரி  எடுத்துச் செல்வோம் .  துவைத்து குளித்து பின்னர் கரையில் அமர்ந்து பொரியை உண்போம் . அதன் பிறகு எல்லோருமாக வீடு திரும்புவோம் . அது என்னவோ தெரியவில்லை . கங்கை என்றால் எனக்கு அப்படியோர் அலாதி ஈடுபாடு . ‘ சில வேளைகளில் கழுத்தளவு நீரில் இறங்கி புல் வெட்டுவேன் . வயலில் வேலை செய்பவர்களுக்குப் பொரி கொண்டு போவேன் . ஒருமுறை வெட்டுக்கிளிகள் கூட்டம்கூட்டமாக வந்து பயிர் முழுவதையும் நாசம் செய்து விட்டன . அப்போது வயல் வயலாகச் சென்று கீழே கிடந்த நெல் மணிகளை எல்லாம் பொறுக்கிச் சேகரித்தேன் . ’ தன் அக்காவைப்பற்றி காளிமாமா பின்னாளில் கூறினார். ‘எங்களை எப்படியெல்லாம் அக்கா பார்த்துக் கொண்டாள் ! எவ்வளவு சிரமங்களையெல்லாம் தாங்கிக் கொண்டாள் . நெல் குத்துவது , பூணூல் செய்வது , மாட்டுக்குத் தீவனம் வைப்பது , சமைப்பது எல்லாம் அவள்தான் . சுருக்கிச் சொன்னால் வீட்டுவேலை முழுவதையும் செய்வது அவள்தான் . ’சாரதையின் இந்த செயல்கள் , வயதுக்கு மீறிய இத்தகைய பொறுப்புணர்வு , எல்லாம் சிலவேளைகளில் ஊரில் உள்ளோருக்குத் திகைப்பை ஊட்டும் . இவள் ஒருத்தியால் எப்படி இவ்வளவு வேலைகளைச் செய்ய முடிகிறது என்று பிரமித்தனர் அவர்கள் .
-
பெண்கள் பள்ளிக்குச் செல்வது குற்றமாகவே கருதப்பட்ட அந்த நாட்களில் பெண்கல்வி கற்க வேண்டும் என்று துணிந்து செயல்பட்டாள் சாரதை . தம்பி தங்கையரைக் கவனிப்பதிலேயே நாளின் பெரும்பகுதி கழிந்துவிடும் . கிடைக்கின்ற ஏதோ சொற்ப நேரத்தில் திண்ணைப் பள்ளிக்குத் தம்பியருடன் செல்வாள் . ஆனால் இவள் என்ன சாதிக்க போகிறாள் என்று கருதியோ என்னவோ , யாரும் அவளுக்கு ஆர்வத்துடன் உதவ முன்வரவில்லை . சாரதையின் ஆர்வம் திருமணத்திற்குப் பின்னரும்  தொடர்ந்தது .வீட்டுவேலைகளில்தான்  ஏறக்குறைய சாரதையின் நாள்முழுவதும் கழிந்தது என்று பார்த்தோம் . அவளிடம்இதைச் செய் , அதைச் செய்என்று யாரும் சொல்ல வேண்டாம் . தேவையான அனைத்தையும் அவளே பார்த்துப்பார்த்துப் பொறுப்பாகச் செய்வாள். இதில் சியாமா சுந்தரிக்குப் பெருமைதான் . ‘ இவள் மட்டும் இப்படி இல்லாவிட்டால் வேலைகளும் பிள்ளைகளுமாக நான் எத்தனை அல்லாடியிருப்பேன் ! என் பெண் என்றால் பெண்தான்என்று பெருமையும் கொள்வாள் .
-
தொடரும்..
. அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303
-

No comments:

Post a Comment