Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-6


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-6

-
6 . திருமணம்
-
ஸ்ரீராமகிருஷ்னர்சாரதாதேவியின் திருமணம் ஒரு நாடகத்திற்கான பூர்வாங்கம் . இதை ஏன் நாம் மீண்டும்மீண்டும் சொல்கிறோம் என்றால்  இந்தத் திருமணத்திற்கு உலகியல் ரீதியான  எந்த விளக்கத்தையும் காண முடியாது. இல்லற இன்பமோ சந்தான விருத்தியோ இதன் நோக்கமாக இருக்கவில்லை. இருக்கவும் முடியாது. ஏனெனில் திருமணத்தின்போது சாரதைக்கு வயது ஐந்து. காதல், காமம் என்பதெல்லாம் அறியாப்பருவம்.  ஸ்ரீராமகிருஷ்னரோ தனது உடல் , உள்ளம் , உயிர் எல்லாவற்றையும் தேவியின் திருப்பாதங்களில் சமர்பித்து அவளது தரிசனத்தைப் பெற்றவர். அவளைத் தவிர வேறெதையும் நாடாதவர் . எனவே சென்ற அத்தியாயத்தில்  கண்டதுபோல்  உயர்    நோக்கங்களுக்காகவே இந்தத் திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் . இந்தக் கூற்றை மெப்பிப்பதுபோல் இரு நிகழ்ச்சிகளை நாம் காண்கிறோம் . ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த ஊராகிய காமார்ப்புகூரில் ஜெயராம்பாடிக்கு அருகிலுள்ள சாந்திநாத சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது . பெரிய கோயிலாக இல்லையென்றாலும் கலையழகுடன் கட்டப் பெற்றது . கீர்த்தனை, கதாகாலட்சேபம், தெருக்கூத்து என்று அமர்களப்படுகின்ற அந்த விழா நாட்களில் காமார்புகூர் , ஜெயராம்பாடி போன்ற கிராமத்துமக்களெல்லாம் அங்கு திரள்வது வழக்கம் . அப்படி ஒருமுறை ஜெயராம்பாடியிலிருந்து சாரதையின் வீட்டினர் சிறுமியான சாரதையுடன் வந்தனர் .கீர்த்தனை கேட்பதற்காக அவர்கள் ஒரு கீர்த்தனைக்  குழுவில் சென்று அமர்ந்தனர் . அப்போது உறவினளான முதியவள் ஒருத்தி சாரதையை தூக்கி மடிமீதமர்த்திக்கொண்டு , வழக்கமாக கிழவிகள்  கேட்பதுபோல், ‘ அம்மா சாரதா , நீ யாரைக் கட்டிக் கொள்ளப்போகிறாய் ? ’ என்று கேட்டாள் . சிறுமியான சாரதை அதில் எதைப் புரிந்து கொண்டாளோ நமக்குத் தெரியாது . ஆனால் தன் பிஞ்சுக் கைகளைத் தூக்கி அந்தக் கூட்டத்திலிருந்த வாலிபர் ஒருவரைச் கூட்டிக் காட்டினாள் . அவ்வளவுதான் , கேட்ட முதியவளுக்கு ஏந்தான் கேட்டோம் என்றாகிவிட்டது . மற்ற உறவினர்களும் இந்த நிகழ்ச்சியால் சற்றே அதிர்ச்சி அடைந்தனர் என்றுதான்  சொல்ல வேண்டும் . ஏனெனில் அவள் சுட்டியது ஸ்ரீராமகிருஷ்ணரை . அன்று அவர் சாதாரண உலகியல் மனிதர்களின் கண்ணுக்குபைத்திய கதாயியாகத் தெரிந்தார் . பிழைக்கத்தெரியாத மனிதர் , திடீரென ஆடைகளைக் கழட்டிவிட்டு அலைகிறார் , திடீரென அம்மா அம்மா என்று அலறுகிறார் , தரையில் விழுந்து புரண்டு , முகத்தைத் தேய்த்துக் கொள்கிறார் . மொத்தத்தில் பைத்தியம்போல் வாழ்கின்ற ஒருவரை இந்தப் பெண் சுட்டிக் காட்டிவிட்டாளே என்று அனைவரும் ஆதங்கப்பட்டனர் . ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வின் இருபதாம் வயது முதல் முப்பத்து ஐந்தாம் வயது வரையுள்ள பகுதியை சாதனைக் காலம் என்று வகுக்கிறார் சாரதானந்தர் . ஆன்மீகச் சூராவளியில் சிக்கிச் சுழன்றார் என்றுதான் சொல்ல வேண்டும் . ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ சாதனைகள் , அதைத் தொடர்ந்த எத்தனையெத்தனையோ அனுபவங்கள் என்று அவரது அக வாழ்க்கை தீவிரமான மாறுதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது .புற வாழ்க்கை என்று ஒன்று  இருப்பதாகக் கூட அவருக்கு நினைவில்லை . உணவு , உடை எதிலும் அவருக்கு நாட்டமில்லை . அல்லும் பகலும் அவர் தேவியுடன் வாழ்ந்தார் . ஒரு கணம் அவளைப் பிரிய நேர்ந்தாலும் துடித்தார் . தரையில் உருண்டு புரண்டுஅம்மா அம்மாஎன்று அரற்றினார் . மீண்டும் அவளது காட்சி பெறும்வரை , அவள் வந்து அணைத்துத் தேற்றும்வரை அழுது புரண்டார் . அவரது அக வாழ்க்கையைக் காண இயலாத சாதாரண மனிதர்கள் , அவரது புற வாழ்க்கையைப் பார்த்து , அவரைப் பைத்தியம் என்று முடிவுகட்டினர் . தங்களால் புரிந்துகொள்ள இயலாத ஒன்றை மடத்தனம் , பைத்தியம் என்று முடிவுக்கட்டி விடுவது உலகின் இயல்புதானே ! எனவே ஸ்ரீராமகிருஷ்ணரை பைத்தியம் என்று முடிவு செய்ததிலும் வியப்பில்லை . இந்தச் செய்தி காமார்புகூரில் ஸ்ரீராமகிருஷ்ணரின் தாயான சந்திரமணிக்கு எட்டியது . வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தவள் அவள் . தள்ளாத இந்த வயதில் தன் செல்லப்பிள்ளையைப்பற்றி கேள்விப்பட்ட செய்தி பேரிடியாக அவள் தலையில் இறங்கியது . உடனே ஸ்ரீராமகிருஷ்ணரை காமார்புகூருக்கு அழைத்து வரச் செய்து பல்வேறு சிகிச்சைகள் செய்வித்தாள் . அங்கு வந்தபின் அவரது தெய்வீகப் பித்து சற்று  தணிந்தது . தான் செய்வித்த  சிகிச்சைகளால்தான் அவர் தெளிவுற்றதாக தாயுள்ளம் மகிழ்ந்தது . ஆனால் மீண்டும் நிலைமை மாறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் ? அவரை இந்த நிலமையிலேயே வைத்திருக்க வேண்டுமானால் உலகியலில் கட்டி வைக்க வேண்டும் . அதற்குத் திருமணம் மிகவும் அவசியம் என்று தாயும் உறவினரும் முடிவு செய்தனர் . பெண் தேடும் படலம் தொடங்கியது . ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் தெரிந்தால் அவர் மறுக்கக்கூடும் என்று கருதி அவருக்குத் தெரியாமலே பெண் தேடினார்கள் . ஏனோ எந்த இடமும் ஒத்துவரவில்லை . எல்லோரும் கவலையால் சோர்ந்தனர் . அப்போது ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் பரவச நிலையில் , ‘ மணப்பெண்ணுக்காக அங்கும் இங்கும் அலைவதில் பயனில்லை . ஜெயராம்பாடியில் ராமசந்திரரின் வீட்டில் எனக்காக ஒரு பெண் வைக்கோல் சுற்றிக் காக்கப்பட்டு வருகிறாள் . அங்கே சென்று கேளுங்கள்என்று கூறினார் . ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியதில்  அவரது தாய்க்கும் தமயனுக்கும் பெரிய நம்பிக்கை ஏற்படவில்லை . எனினும் ஜெயராம்பாடிக்கு ஆளனுப்பி விசாரித்தனர் . பெண் மிகவும் சிறியவள் ஐந்தே வயதுதான் . எனினும் சந்திரா இசைந்தாள் . வரதட்சிணையும் சந்திராவின் ஏழ்மைக்கு ஏற்ற வகையில் குறைவாகவே இருந்தது . பால்ய விவாகம் அல்லது இளமை மணம் என்பது அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்தது . மிகச்சிறு வயதிலேயே திருமணம் நடைபெற்றுவிட்டாலும் பெண் பருவம் எய்திய பின்னரே பெண்ணும் பிள்ளையும் சேர்ந்து வாழ்வர் . எனவே சாரதைக்கு ஐந்து வயதில் திருமணம் என்பது ஆச்சிரியத்திற்குரிய ஒன்றாக  நமக்குப் படவில்லை . ஆனால் பிள்ளையின் வயது இருபத்து மூன்று எனும்போதுதான் அங்கு தெய்வீகத்தின் கைகளை நாம் தேட வேண்டியுள்ளது . எப்படியோ திருமணப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் ஓரிரு நாட்களில் முடிந்தன . பிள்ளை வீட்டார் வரதட்சிணையாக ரூ– 300 கொடுத்தனர் . 1859 , மே மாதம்  நல்ல நாளில்  சாரதைஸ்ரீராமகிருஷ்ணர் திருமணம் மிகவும் எளிமை முறையில்  நடைபெற்றது . காமார்புகூரிலிருந்து ஸ்ரீராமகிருஷ்ணருடன் அவரது தமயனான  ராமேசுவரர்  சென்றார் .  திருமணம் முடிந்தபின் , அன்று மாலையில் எல்லோரும் காமார்புகூர் திரும்பினர் . சாரதையை அவளது சித்தப்பாவான  ஈசுவர முகர்ஜீ தோளில் தூக்கிச் சென்றார் . அவளை அன்புடன் வரவேற்றாள் சந்திரமணி . ஓரிரு நாட்கள்  அமைதியாகக் கழிந்தன . அப்போது ஒரு பிரச்சிணை எழுந்தது . ஏழ்மையின் காரணமாக , மணமகளுக்குப் புதிய நகைகள் அணிவிக்க சந்திராவால் முடியவில்லை . எனினும் ஆர்வத்தால் , சிலவற்றை இரவல் வாங்கி அணிவித்திருந்தாள். இப்போது அவற்றைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால் சாரதையோ அந்த நகைகளைத் தனதாகவே எண்ணி பூரித்துப் போயிருந்தாள் . அவற்றை அந்தச் சிறுமி யிடமிருந்து  எப்படி கழற்றுவது? நொந்து போய்விட்டாள் சந்திரா . தாயின் துயரைப் புரிந்துகொண்டார் ஸ்ரீராமகிருஷ்ணர் . சாரதை தூங்கிக் கொண்டிருந்தபோது அவள் அறியா வண்ணம் மெதுவாக நகைகளை எல்லாம் கழற்றி தாயிடம் கொடுத்தார் . காலையில் விழித்த சாரதையால் துக்கத்தைத் தாங்க முடியவில்லை . காது , மூக்கு , கழுத்து  என்று ஒவ்வோர் அங்கமாகத் தொட்டுக் காட்டி , அங்கிருந்த நகைகள் எங்கே என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டாள் . சந்திரா வேதனையுடன் சாரதையை வாரியணைத்துக் கொண்டு , கண்களில் நீர் ததும்ப , ‘ என் கண்ணே , இவையென்ன பெரிய நகைகள் . இவற்றைவிட எவ்வளவோ நல்ல நகைகளை கதாயி உனக்குச் செய்து கொடுக்கப்  போகிறான் பாரேன்என்று கூறித் தேற்றினாள் . சாரதையும் அப்போதைக்கு ஒருவாறு சமாதானப்பட்டாள் . ஆனால் ஈசுவர முகர்ஜீ  அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. கோபத்துடன் சாரதையை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். தாயின் ஆற்றாமையைக் கண்டு , ‘ நீ ஏன் இப்படி கலங்குகிறாய் ? நடந்த திருமணத்தை யாராலும் மாற்ற முடியாது அல்லவா  என்று கூறினார் . பின்னர் நிலைமை சீராகியது .
-
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303

No comments:

Post a Comment