Saturday, 15 December 2018

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-13


அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-13
-
குருதேவரின்  தெய்வீக  நிலைகள்  சாரதையின் உள்ளத்தில்  பெரியமாறுதல்களை  ஏற்படுத்தின  வாழ்க்கையின்  ஒரு புதிய  பரிமாணத்தை அவளுக்குக் காட்டின . இந்த மானிட  உலகில்   வாழ்ந்தாலும்  அதன்  நிழல்கூடப் படியாமல்  ஓர் உயர்ந்த உலகில்   எப்போதும் குருதேவர்  திளைப்பது  அவள் மனத்தில் மாறாத  பதிவை ஏற்படுத்தியது .  தன் வாழ்விலும்  இத்தகைய நிலைகள் வருமா  என்று அவள்  உள்ளம் ஏங்கியது . முதல் சந்திப்பின்போது   ஸ்ரீராமகிருஷ்ணர் சாரதையிடம்  உயர்வாழ்க்கையின்  உன்னதத்தை விளக்கி , ஒரு குழந்தைக்கு  ஆசைப்படாமல் உலகனைத்துக்கும்  தாயாக  இருக்கின்ற நிலையை  எடுத்துக் கூறி  அந்த  லட்சியத்தை  அவளுள்  பதித்ததைக் கண்டோம்  .  அவள் அந்த  உணர்விலேயே  ஒன்றவிட்டிருப்பதை , ‘ நான்  உங்களை  உலகியலுக்கு இழுப்பதற்காக வரவில்லை  என்ற அவளது பதிலிலிருந்து  நாம் அறிந்து கொள்ள முடிகிறது .  அடுத்த  படிக்கு அவள் தயாராக இருப்பதை  உணர்ந்துகொண்ட  ஸ்ரீராமகிருஷ்ணர், அவளைத் தமது  அறையிலேயே தங்கச் செய்து தமது உயர் ஆன்மீக நிலைகளைக் காணும்படிச் செய்தார் .  அந்த நிலைகளை  அனுபவிப்பதற்கான  ஆசை  அவளுள்  எழுந்தாலும் அவளை அதற்கு தகுதி  பெறச் செய்ய அதாவது , அவளுக்கு  அவளது  உண்மை இயல்பை  உணர்த்த எண்ணினார் .  அதற்கான  வாய்ப்பை  எதிர்நோக்கியிருந்தார் .  அப்படியொரு  தருணமாக  வந்து வாய்த்ததே  ஷோடசி பூஜை .
              10 . தேவி
அது 1873 , மே 25-ஆம்நாள் . பலஹாரிணி காளி தேவியின்  வழிபாட்டிற்கு  உகந்த  அமாவாசை  தினம் .  அன்று தட்சிணேசுவரக் காளிகோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும் . குருதேவரும்  காளியைப் பூஜிக்க விஷேச  ஆயத்தங்கள்  செய்திருந்தார் .  இந்த ஆயத்தங்கள்   கோயிலில் செய்யப்படாமல் ரகசியமாக  அவரது அறையில் செய்யப்பட்டன . மாலை வேளை ஆயிற்று . அமாவாசை மையிருட்டு மெள்ளமெள்ள எங்கும் கவிந்தது .  ஹிருதயன்  கோயிலில்  காளிபூஜை  செய்ய வேண்டியிருந்ததால் , குருதேவரின்  அறையில் பூஜைக்கு வெண்டிய  உதவிகளைச் செய்துவிட்டுக் கோயிலுக்குச் சென்றான் .  ராதாகோவிந்தர்  ஆலயத்தில்  இரவுகாலப் பூஜையை  முடித்துக்கொண்டு   அந்தக் கோயிலின்  பூஜாரியான  தீனு  குருதேவருக்கு  உதவி செய்ய  வந்திருந்தான் .  அயத்தங்கள்  யாவும்  செய்து முடிக்கப்பட்டபோது  இரவு  மணி ஒன்பது . பூஜையில்  கலந்து கொள்ள வருமாறு  குருதேவர் சாரதைக்குச் சொல்லியிருந்தார் .  அவளும்  குருதேவரின்  அறைக்கு வந்து சேர்ந்தாள் .  கோலங்கள்  வரைந்த  அழகு  செய்யப்பட்டிருந்த மணை ஒன்று  தேவியின்  ஆசனமாக  பூஜாரியின் வலப்புறம்  இடப்பட்டது . குருதேவர்  தமது  ஆசனத்தில்  அமர்ந்தார் .  பூஜை ஆரம்பமாயிற்று .  பூஜைப் பொருட்கள்  மந்திரங்களால்  தூய்மைப்படுத்தப் பட்டன . ஆரம்பச் சடங்குகள்  நிறைவுற்றதும்  , குருதேவர் சாரதையிடம்  அந்த மணையில்  அமருமாறு சைகை   செய்தார் .  பூஜையைக் கவனித்துக் கொண்டிருந்த சாரதை ஏற்கனவே  புறவுலக நினைவை  இழந்த பரவசநிலையில்  ஆழ்ந்துகொண்டிருந்தாள் . தாம்  என்ன செய்கிறோம்  என்றே புரியாமல் , ஏதோ
மந்திரத்தால் கட்டுண்டவள்போல் , மெள்ள எழுந்து  அந்த மணையின்மீது குருதேவருக்கு வலப்புறமான  வடக்கு நோக்கி  அமர்ந்தாள் .  சாஸ்திர விதிகளுக்கு  ஏற்ப குருதேவர் , தம் முன்னால் வைக்கப்பட்டிருந்த  கலசத்திலிருந்து , மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட நீரை  சாரதையின்மீது தெளித்து , மந்திரங்களை  ஓதி பின்வருமாறு  பிரார்த்தித்தார் .    
அன்னையே , எல்லா ஆற்றல்களுக்கும்  தலைவியான  திரிபுர சுந்தரியே ! முழு நிறைவாம் கதவினைத் திறப்பாய் ! இவளது ( சாரதையின் உடலையும் உள்ளத்தையும் புனிதப்படுத்துவாய் ! இவளில் எழுந்தருளிளி அருள்பாலிப்பாய் !          
அதன்பின் குருதேவர் சாரதையின்  உடலில் மந்திரங்களை உருவேற்றி அவளை  சாட்சாத் தேவியாக எண்ணி பதினாறு வகையான பொருட்களால் பூஜித்தார் .  பின்னர் நைவேத்தியம்  செய்து , தம் கைகளால் சாரதையின் வாயில் ஊட்டினார் . சாரதை  புறவுலக  நினைவை இழந்து சமாதி நிலையை அடைந்து விட்டிருந்தாள் ! குருதேவரும் மந்திரங்களை ஓதியவாரே சமாதியில் ஆழ்ந்தார் . சமாதி நிலையில்  ஆழ்ந்துவிட்ட  தேவியுடன் , சமாதி நிலையில் இருந்த பூஜாரியும் ஒருவரோடு  ஒருவர் இரண்டறக் கலந்து ஆன்ம நிலையில் ஒன்றுபட்டனர் .  
-
தொடரும்..

அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு https://wa.me/919003767303
-

No comments:

Post a Comment