அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு-பாகம்-3
-
கணவர் கல்கத்தா சென்றபின் , சியாமா சுந்தரி தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தாள் . ஒரு மாலை வேளை. அருகிலுள்ள குளக்கரையில் ஒரு வில்வ மரத்தடியில் அமர்ந்திருந்தாள் . திடீரென கிண்கிணி நாதம் எழுந்தது . எங்கிருந்து இந்த இனிய நாதம் எழுகிறது என்று சுற்று முற்றும் பார்த்தாள் சியாமா . அப்போது மரங்களின் கிளையிலிருந்து சறுக்கியபடியே வந்தாள் ஓர் அற்புதச் சிறுமி .கொள்ளை அழகு ! சிவப்பு பாவாடை கட்டியிருந்தாள் . இவள் யார் , என்று சியாமா யோசித்து கொண்டிருக்கும் போதே மின்னல் வேகத்தில் வந்து அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டாள் . அந்த ‘ பாலா ’ . இங்கேயும் கழுத்தைதான் கட்டிக் கொண்டாள் . ராமசந்திரரிடம் வந்த அவளும் இவளும் வேறா , என்ன ? கழுத்தைக் கட்டிக் கொண்டவள் கனிந்த குரலில் சொன்னாள் ‘ நான் உன் வீட்டிற்கு வருகிறேன் அம்மா ! ‘ சியாமா சுந்தரிக்கு தாங்கவில்லை . மூச்சறையானாள் அவள் . அங்கே அப்படி எவ்வளவு நேரம் கிடந்தாளோ தெரியாது . தேடி வந்த உறவினர் அவளை வீட்டிற்குத் தூக்கிச் சென்றனர் . சிறிது நேரத்திற்க்குப் பின் கண்விழித்தாள் . என்னவோ , அந்தச் சிறுமி தன் வயிற்றினுள் தங்கிவிட்டது போன்றதோர் உணர்வு நிலைபெற்றது . ராமசந்திரர் திரும்பி வந்ததும் தான் பெற்ற காட்சியை அவரிடம் கூறினாள் சியாமா . தமது கனவை அதனுடன் ஒப்பிட்டு பார்த்தார் ராமசந்திரர் . அவர்களுக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது – ஆதிபராசக்தியின் அருளால் தங்களது சிறிய குடிசையில் தெய்வீகக் குழந்தை ஒன்று பிறக்கப் போகிறது தேவியின் செம்மலர்ப் பாதங்கள் ஜெயராம்பாடியின் இந்தச் சிறு குடிசையில் நடமாடப் போகின்றன என்பதுதான் அது . அந்தத் தெய்வச் சிறுமியின் வரவை எதிர்நோக்கியபடியே நாட்களை நகர்த்தினர் அந்த தெய்வீகத் தம்பதியர் .
-
சியாமா சுந்தரி முதன்முறையாக கருவுற்றாள் . வழக்கமாகவே பெண்கள் கருவுறும்போது அழகாகத் தோன்றுவதாக சொல்வார்கள் . யோகிகள் மனக்குகையில் தங்கும் தேவியை கருக்குகையில் தாங்கிய சியாமாவின் அழகு எப்படி , இருந்திருக்கும் !
-
பின்னாளில் யோகின்மாவிடம் சியாமா சுந்தரி கூறினார் ‘ நான் கருவுற்றிருந்தபோது என்னிடம் வெளிபட்ட அழகை சொல்லி முடியாது . எத்தனை பெண்கள் வந்த எனக்கு புடவைகள் அளித்துச் சென்றனர் தெரியுமா ?
-
” நாட்கள் நகர்ந்தன . ‘ மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் ’ என்று மாதவனே உவந்து கூறிய மார்கழி மாதம் வந்தது . எல்லோருக்கும் இன்பம் பயக்கின்ற காலம் அது . அறுவடை முடிந்து அறுவடைக்கால திருவிழாக்கள் தொடங்கியிருந்தன . இந்துமதப் புராணங்களினபடி ஆறுமாத காலம் துயில் நீங்கி எழும் காலம் . கதிரவன் தன் தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு வடதிசையில் நகரத் தொடங்கும் காலம் . அந்த வேளையில் ஒரு வியாழக் கிழமை கிருஷ்ணபட்ச சப்தமியின் குளிர்நிறைந்த மாலை
வேளை .
இருள் கவிய ஆரம்பித்திருந்தது . உத்திர நட்சத்திரம் உச்சத்திலிருந்து அந்த வேளையில் இரவையும் குளிரையும் கிழித்துக் கொண்டு , ராமசந்திரரின் வீட்டிலிருந்து சங்க நாதம் எழுந்தது . ஆம் , அவர்கள் எதிர்பார்திருந்த அந்த மகள் பிறந்து விட்டாள் . அது 1853 , டிசம்பர் 22 .
-
ஜோதிடர்களை அழைத்து ஜாதகம் கனிக்கப்பட்டது . பொதுவாக வங்காளத்தில் ஒவ்வொருவருக்கும் இரண்டு பெயர்கள் வைப்பது வழக்கம் – ஒன்று ஜாதகத்தின் படிகணிக்கப்படுவது , மற்றொன்று பொதுவாக அழைப்பதற்கு . ராமசந்திரரின் வீட்டில் பிறந்த இந்த குழந்தைக்கு ஜாதக கணப்பின்படி வைத்த பெயர் டாகுர்மணி . சியாமா சுந்தரி விரும்பி வைத்த பெயர் சேஷமங்கரி . ஆனால் என்னவோ இந்த இரு பெயர்களும் அவளுக்கு நிலைக்கவில்லை . அன்று அங்கு சியாமா சுந்தரியின் தங்கை வந்திருந்தாள் . அவளுக்கும் ஒரு பெண்
குழந்தை இருந்தது. அதற்கு அவள் சாரதா என்று பெயர் வைத்திருந்தாள் . சில காலத்திற்கு முன் அந்த குழந்தை இறந்துவிட்டது . எனவே அவள் சியாமா சுந்தரியிடம் , ‘ அக்கா , உன் குழந்தைக்கு சாரதா என்று பெயர் வைத்துவிடு . அப்போது என்மகள் உன் வீட்டிலிருக்கிறாள் என்ற நினைப்பில் என்னை தேற்றிக் கொள்வேன் ’ என்று கேட்டுக் கொண்டாள் . சியாமா சுந்தரியும் அதற்கு ஒத்துக் கொண்டாள் . எனவே டாகுர்மணியாகவும் சேஷமங்கரியாகவும் இருந்தவள் அப்போது முதல் சாரதா ஆனாள் . ராமசந்திரர் – சியாமா சுந்தரி தம்பதியற்கு சாரதா முதல் குழந்தை . அவளைத் தொடர்ந்து காதம்பினி என்ற மகளும் பிரசன்ன குமார் , உமேஷ் சந்திரர் , காளி குமார் , வரத பிரசாதர் , அபய சரணர் என்ற ஐந்து மகன்களும் பிறந்தனர் . இவர்களைப் பற்றியும் இவர்களுடன் அன்னையின் உறவைப் பற்றியும் பின்னால் விரிவாகக் காண்போம் .
தொடரும்..
. அன்னை சாரதாதேவி- ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ் அப் குழு 9003767303
No comments:
Post a Comment