Monday, 21 May 2018

ஸ்ரீராமகிருஷ்ணர் சில நேரம் காளியிடம் கோபித்துக்கொள்வார்


ஸ்ரீராமகிருஷ்ணர் சில நேரம் காளியிடம் கோபித்துக்கொள்வார். உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று கேட்கும் அளவுக்கு அவரது கோபம் அதிகமாக இருக்கும்.
-
இதை எப்படி புரிந்துகொள்வது?
-
ஸ்ரீராமகிருஷ்ணர் மூன்று நிலைகளில் வாழ்ந்தார். நான் காளியின் குழந்தை,அவளது கருவி,அவன் இயக்குவதுபோல் இயங்குகின்றேன் என்ற நிலை ஒன்று. இது துவைதநிலை. இந்த நிலை என்பது தாயை சார்ந்து வாழும் குழந்தையின் நிலைபோன்றது
-
சில நேரங்களில் அவரை பக்தர்கள் காளியாக நினைத்து வழிபடுவார்கள்.அவரது பேச்சு காளியின் பேச்சு என்றே கருதுவார்கள்.. மிக உயர்ந்த ஞானம் அதிலிருந்து வெளிப்படும்.அந்த நிலையில் மற்றவர்களுக்கு ஆன்மீக விழிப்பை உண்டாக்குவார்.நானும் காளியும் ஒன்றுதான் என்ற நிலை.யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய். இந்த நிலையை புரிந்துகொள்ள விசிஷ்டாத்வைத தத்துவத்தை படிக்க வேண்டும்
-
மூன்றாவது நிலையில், உடலில் எந்த அசைவும் இருக்காது.மூச்சுகூட நின்றிருக்கும்.சக்தி மொத்தமும் ஒடுங்கியிருக்கும்.அப்போது சமாதி நிலையில் இருப்பார்.அப்போது காளியையும் கடந்து மேலே சென்றிருப்பார்..இது அத்வைத நிலை.
-
காளியிடம் ஏன் கோபப்பட்டார்? ஸ்ரீராமகிருஷ்ணரின் உடலை காளி ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டாள்.சிலருக்கு உதவவேண்டும் என்று ராமகிருஷ்ணர் நினைப்பார்,காளி அதை தடுத்துவிடுவாள். சிலருக்கு உதவக்கூடாது என்று நினைப்பார்,ஆனால் உதவும்படி ஆகிவிடும்.சிலரிடம் ஏதாவது பேச நினைப்பார் காளி அவரது வாயை மூடிவிடுவாள்.இப்படி காளியின் கட்டளையை மீற முடியாமல் இருப்பார்.
-
காளி அவரை ஓய்வுகொள்ளவிடவில்லை.தொடர்ந்து பக்தர்களை அனுப்பிக்கொண்டே இருந்தாள்.அவர்களிடம் பேசி பேசியே அவருக்கு தொண்டையில் புண் வந்துவிட்டது. நீ அளவுக்கு அதிகமாக வேலைவாங்கினால் இந்த உடலை வீழ்த்திவிட்டு பிரம்மத்தை அடைய தன்னால் முடியும் என்று கோபித்துக்கொள்வார்.மறுகணமே நீயே எல்லாம்,நீ எப்படி இயங்குகிறாயோ அப்படியே இயங்குகிறேன் என்பார்.
-
இந்த உடலை இறைப்பணிக்கு என்று அர்ப்பணித்துவிட்டால்.பின்னர் திரும்பப்பெற முடியாது.நமது விருப்பப்படி நடந்துகொள்ள முடியாது.தியானத்தில் மூழ்கியிருக்கலாம் என நினைத்தால்,அந்த சக்திவிடாது. உடலிலன் மூலம் ஏதாவது பணிகளை செய்ய வற்புறுத்திக்கொண்டே இருக்கும்.
-
ராஜயோகிகள் யாருடைய பாவத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்பதால் நோய் வராது.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் போன்றவர்கள் காளி யாரை அழைத்துவருகிறாளோ,அவர்களது பாவத்தை ஏற்றுக்கொண்டு துன்பப்பட வேண்டியிருக்கும்.காளியின் கட்டளையை மீற முடியாது.
-
காளயின் கட்டுப்பாட்டில் இனி இயங்க முடியாது என்று கூறினால்,அதன்பிறகு வாழமுடியாது. வாழ்க்கை முடிந்துவிடும். முக்தி கிடைத்துவிடும்.
-
யாருக்கு முக்தியில் நாட்டம் இல்லையோ அவர்களைதான் அந்த சக்தி பயன்படுத்திக்கொள்ளும்.ஆனால் அந்த உடல் புனிதமாக,இறைவன் வந்து விளையாடும்,பக்தர்களை சந்திக்கும் வரவேற்பறையாக இருக்க வேண்டும்.
-
சுவாமி வித்யானந்தர்
-

No comments:

Post a Comment