சிவலிங்கம் பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் நிலவுகின்றன.இதுபற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து என்ன?
-
அதர்வணவேத சம்ஹிதையில் யூகஸ்தம்பம் பற்றிய வர்ணனை காணப்படுகிறது.இது முதலும் முடிவுமற்ற ஒரு தூணைப்பற்றி விளக்குகிறது.பௌத்தர்கள் நினைவுச்சின்னமாக ஸ்தூபிகளை பிரதிஷ்டை செய்வது வழக்கம்.சிலர் பெரிய ஸ்தூபிகளை நாட்டமுடியாமல் சிறியதாக நாட்டினார்கள்.வட இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட சிறிய ஸ்தூபிகளைக் காணலாம்.இதுவே பிற்காலத்தில் லிங்கவழிபாடாக மாறியது -சுவாமி விவேகானந்தர் புத்தகம்11-466
-
பழைய காலத்தில் சித்தர்கள் சமாதி அடைந்தால் அவர்களின் நினைவிடத்தில் ஸ்தூபிகள் நடுவது வழக்கம்.அதனை சுற்றி நினைவு மண்டபம் கட்டப்பட்டது. பிற்காலத்தில் அந்த ஸ்தூபிகள் வழிபாட்டிற்குரிய பொருளாக கருதப்பட்டு,அடிப்பாகத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
-
லிங்கம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு உடல் என்ற அர்த்தமும் உண்டு.ஆண்குறி என்ற அர்த்தமும் உண்டு.இரண்டையம் சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது.இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் மூன்றுவித உடல்களாக பிரிக்கிறார்கள் வேதகாலத்தவர்கள்.அவை பும்லிங்கம்(ஆண்உடல்) ஸ்திரீலிங்கம்(பெண்உடல்) இவை இரண்டும் இல்லாமல் நபூம்சக லிங்கம்(ஜடப்பொருளாலான உடல்) வெறும் லிங்கம் என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.அப்படி உள்ளது ஒன்றே ஒன்றுதான் அது பிரபஞ்சத்தின் அவ்யக்த நிலை.அதாவது ஒடுக்கநிலை. இந்த பிரபஞ்சம் ஒட்டுமொத்தமும் ஒடுங்கும்போது, பும்லிங்கம்,ஸ்திரீலிங்கம்,நபூம்சகலிங்கம் மூன்றும் ஒடுங்கி லிங்கமாகிறது.
-
ஆகவே லிங்கம் என்பது இந்த உலகத்தை சார்ந்தது அல்ல. சித்தர்கள் தனது உடலை, லிங்கமாக மாற்றுகிறார்கள்.அதாவது இயக்கமற்ற நிலைக்கு கொண்டுவருகிறார்கள்.அவ்வாறு லிங்க நிலைக்கு அவர்கள் வந்தால் பிரம்மஞானம் ஏற்படுகிறது.அதுதான் முக்தி
-
இவ்வாறு சித்தர்கள் சமாதி அடையும்போது அவர் லிங்கமாக மாறிவிட்டார் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காக அவர் சமாதியடைந்த இடத்தில் ஒரு ஸ்தூபியை நடுவார்கள்.அதற்கு லிங்கம் என்று பெயர்.
-
சித்தர்கள் சமாதியடைந்த இடத்தில் புனிதமான சூழல் நிரம்பியிருப்பதால் அந்த இடம் வழிபடும் இடமாக மாற்றப்பட்டது.அந்த லிங்கம் வழிபடும் பொருளானது.பிற்காலத்தில் இந்த லிங்கம் பல மாறுதல்களை பெற்று,பல பெயர்களையும் பெற்றுள்ளது.
-
உண்மையில் நாம் இப்போது பயன்படுத்தும் லிங்கம் என்பது ஆண்குறியை குறிக்க பயன்படுத்தப்பட்ட சின்னம் அல்ல. பிரபஞ்சத்தின் ஒடுக்கநிலையை குறிக்க,உடலின் இயக்கமற்ற நிலையை குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒன்று
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர்(28.5.2018)
-
No comments:
Post a Comment