மனத்தை கட்டுப்படுத்த எளிய வழி
-
மனத்தை அடக்க முடியுமா? எண்ணங்களை நிறுத்த முடியுமா? கண்டிப்பாக முடியும் என்று பகவத்கீதை கூறுகிறது.அது மட்டுமல்ல பலர் அவ்வாறு மனத்தை அடக்கியிருக்கிறார்கள்
-
ஒரு பயிற்சி
-
மாலை வேளையில் தியானம் செய்ய அமர்கிறீர்கள்.அப்போது உங்கள் மனத்தில் எண்ணங்கள் எழுகின்றன.அவைகளை அடக்க நினைக்கிறீர்கள் ஆனால் முடியவில்லை. ஏன் முடியவில்லை?
-
முதலில் மனத்தை அடக்க முயற்சிக்க கூடாது.மனத்தில் எழும் எண்ணங்களை கவனிக்க ஆரம்பிக்க வேண்டும்.இது புத்தியை விழிப்புணர்த்தும் பயிற்சி.ஆரம்பத்தில் நீங்கள் மனத்தில் எழும் எண்ணங்களை கவனிக்க ஆரம்பிக்கிறீர்கள் ஆனால் ஒரு நிமிடம் கழிந்தபின் உங்களை அறியாமலேயே அந்த விழிப்புணர்வை மறந்து,மனத்தின் எண்ணத்துடன் அடித்து செல்லப்பட்டுவிடுவீர்கள். சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு தான் அடடா! மனத்தை கவனிக்க மறந்துவிட்டேனே என்று தோன்றும்
-
பாதகமில்லை. கடைசியில் எந்த எண்ணம் வந்தது என்பதை பாருங்கள்.அது கண்டிப்பாக நினைவில் இருக்கும்.அது ஏன் வந்தது என்று யோசியுங்கள்.அதற்கு முந்தைய சிந்தனை படிப்டியாக நியாபகம் வரும்,இன்னும் அதற்கு முந்தைய சிந்தனை என்ன என்று யோசியுங்கள்.இப்படியே ஆரம்பத்தில் எதை யோசித்தீர்கள் என்பதை கண்டுபிடியுங்கள்.ஐந்து நிமிடம் முழுவதும் நினைத்த எண்ணங்களை உங்களால் நினைவில் கொண்டுவர முடிந்தால் நீங்கள் நன்றாக முன்னேறியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்
-
இப்படி தொடர்ந்து சில வருடங்கள் இதை தினமும் பயிற்சி செய்தால்,உங்கள் விருப்பம் இன்றி மனம் எதையும் சிந்திக்காது. ஏனென்றால் உங்கள் புத்தி விழிப்படைந்துவிட்டது. புத்தியின் அனுமதி இல்லாமல் மனத்தால் எதையும் சிந்திக்க முடியாது. இவ்வாறு மனத்தை அடக்கிவிடலாம்
-
சரி இதற்கு முன்பு ஏதாவது பயிற்சி இருக்கிறதா? இருக்கிறது
-
நீங்கள் ஒரு மெஷின் ஆப்பரேட்டர் என்று வைத்துக்கொள்வோம்.ஆரம்பத்தில் அந்த தொழிலை கற்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள்.அதன்பிறகு அது எளிதாக இருக்கும்.கிட்டத்தட்ட அனிச்சை செயலாக மாறியிருக்கும். அந்த தொழிலில் நீங்கள் ஒரு திறமையானவராக தவறே வராத அளவுக்கு வேலை செய்யக்கூடிய நிலைக்கு வந்திருப்பீர்கள்.இதுவரை உங்கள் மனம் அந்த தொழிலில் மிக கவனமாக இருந்தது.எப்போது அந்த தொழில் அனிச்சை செயலாக மாறிவிட்டடோ அப்போது மனம் வேறு எதையெல்லாமோ சிந்திக்க ஆரம்பித்திருக்கும்
-
இங்கேதான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அந்த வேலையிலிருந்து மனத்தை வேறு எண்ணத்திற்கு செல்ல அனுமதிக்ககூடாது. தொழில் அனிச்சை செயலாக மாறியபின்,மனத்தில் எண்ணங்கள் எதுவும் இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.மாலை வேளையில் தியானம் செய்யும்போதுதான் மனத்தை அடக்க வேண்டும் என்பது அல்ல. எந்த வேலையை செய்துகொண்டிருந்தாலும் மனத்தை அடக்கலாம்.
-
சிலர் சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போது எதையெதையோ சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.ஆனால் ஆரம்பத்தில் வாகனம் ஒட்டிப் பழகும்போது மனத்தை அதில் நிறுத்தி பழகினோம் அந்த பழக்கம் அனிச்சை செயலாக தவறே நடக்காதபடி இயல்பாக மாறிய பின் மனம் எதையெதையோ சிந்திக்க அதை விட்டுவிட்டோம்.இது தவறு. அந்த வாகனத்தை ஓட்டும்போது மனத்தை எண்ணங்கள் இல்லாமல் வைத்துக்கொள்ள பயிற்சி எடுக்க வேண்டும்
-
இவ்வாறு நாம் எந்த தொழிலை செய்தாலும் மனமற்ற நிலையில் அதைச் செய்ய முடிந்தால் அதுதான் யோகம். கர்மயோகத்தின் ரகசியம் இதுதான். இவ்வாறு மனமற்ற நிலையில் ஒரு செயலை செய்ய முடிந்தால் நீங்கள் கர்மயோகத்தில் வெற்றிபெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்.
-
கர்மயோகத்தில் வெற்றி பெற்ற பின் தானாகவே தியானம் கைக்கூடும். மனம் எளிதாக உணர்வு கடந்த நிலைக்கு செல்லும்.பிரபஞ்சத்தின் ரகசியங்கள் எல்லாம் படிப்படியாக வெளிப்படும்.
-
----இவைகள் எனது அனுபவ வார்த்தைகள்----
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர் (13.5.2018)
-
No comments:
Post a Comment