கங்கையில் குளித்தால் புனிதம், முக்தி என்றெல்லாம் பேசப்படுகிதே! இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா?
-
இதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்துக்கள் குறிப்பிடும் தன்மாத்திரைகள் என்ற ஒரு கருத்தை பற்றி சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
-
ஒரு பூவிலிருந்து நறுமணம் அதன் அருகில் நிற்கும் ஒருவனுக்கு வருகிறது. அது எப்படி வருகிறது? காற்றில் வருகிறது என்று எளிதாக சொல்வீர்கள். ஆனால் இன்னும் ஆழமாக விவரிக்க வேண்டும். பூவின் மீதுள்ள நுண்துகள்கள் காற்றில் கலந்து மனிதனின் மூக்கை அடைந்து, அவனது மூக்கில் உள்ள நுண்பகுதிக்குள் செல்கிறது. அதன் பின்னர் தான் மனிதன் அதை உணர்கிறான்.
-
பாடல் எவ்வாறு மனிதனை அடைகிறது. இசைக்கருவியிலிருந்து எழும் அதிர்வு அலைகள் காற்றை அதிரவைக்கின்றன.அவைகள் தொடர்ந்து அதிர்ந்து அதிர்ந்து மனிதனின் காதில் படுகிறது. அங்கே காதின் நுண்உறுப்பு அதிர்கிறது, அந்த பாடலை உணர்கிறது.
-
சூரியனிலுள்ள ஒளிக்கதிர்கள் எவ்வாறு நமது கண்களை அடைகின்றன? அதிலிருந்து புறப்படும் வெப்பம் அருகில் உள்ள அணுக்களை ஒளிரச்செய்கிறது,அது அடுத்த அணுவை ஒளிரச்செய்கிறது.இப்படியே நுண்ஒளிகள் பல லட்சம் மைல்கள் பயணம் செய்து நமது கண்ணை அடைகின்றன.
-
இவ்வாறு கண்களுக்கு ஒளியும், காதுகளுக்கு ஒலியும், மூக்கிற்கு மணமும், நாக்கிற்கு சுவையும், தோலிற்கு உணர்ச்சியும் என்று ஐந்து தன்மாத்திரைகள் உள்ளன. இந்த ஐந்தும் மனிதனை அடைகிறது.
-
இவைகளை சாதாரண கண்களால் காணமுடியாது. ஒளி ஒரு பொருளில் படும்போது தான் அதை நம்மால் காணமுடியும். ஒலி காதுகளை அடைந்த பிறகு தான் அதை கேட்க முடியும், அதை போல் மணமும் மூக்கை அடைய வேண்டும். இவ்வாறே மற்றவையும். இவ்வாறு இந்த பிரபஞ்சம் முழுவதும் ஐந்து தன்மாத்திரைகள் நிறைந்துள்ளது.
-
அதே போல் ஒவ்வொரு மனிதனும், ஐந்து தன்மாத்திரைகளை தன்னிடமிருந்து வெளியிடுகிறான். அவன் ஒளியை வெளியிடுகிறான். காற்றை வெளியிடுகிறான், ஒலியை, மணத்தை அதேபோல் உணர்ச்சியை வெளியிடுகிறான். அவைகள் பிரபஞ்சத்தில் கலந்து மற்றவர்களை அடைகிறது. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் அதே போல் தன்னை சுற்றி இவ்வாறு வெளியிடுகின்றன.இவைகளை யாராலும் தடுக்க முடியாது.
-
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தொடும்போதோ, அல்லது இவன் எச்சில் இன்னொரு மனிதனில் படும்போதோ, ஒருவனது உடல் அணுக்கள் இன்னொருவனை அடைகிறது. ஒரு மனிதனின் உடலில் உள்ள தோல்களிலிருந்து லட்சக்கணக்கில் அணுக்கள் வெளிப்பட்டு பிரபஞ்சத்தில் கலக்கின்றன. இவ்வாறே உலகிலுள்ள எல்லா உயிர்களிலுமுள்ள அணுக்கள் பிரபஞ்சத்தில் கலந்து பயணிக்கின்றன.
-
இவைகள் ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலை அடைகின்றன. நல்லவன் வாழும் இடத்தில் ஒரு தீயவன் சில நாட்கள் வாழ்ந்தால், அவன் படிப்படியாக நல்லவனாக மாறுகிறான்.இவன் அவர்களிடம் எதையும் பேசவேண்டியதில்லை.அவர்களும் இவனிடம் எதையும் பேச வேண்டியதில்லை.நல்லவர்களது உடல் அணுக்கள் தீயவனின் உடலில் கலந்து,அவனது குணத்தை மாற்றுகிறது.அதேபோல் தீயவனின் உடல் அணுக்களால் நல்லவனுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.அளவுக்கு அதிகமாக இதை நீட்டியதன் விளைவாக தீண்டாமை என்ற கோட்பாடு உருவாகியது.
-
இப்போது கங்கை விசயத்திற்கு வருவோம்.
-
கங்களை நதி ஆரம்பமாகும் இடங்களில் பல துறவிகளும், புண்ணியவான்களும் வாழ்கிறார்கள்.அது மட்டுமல்ல கங்கை நதி பாய்ந்து வரும் பல்வேறு இடங்களில் பல்வேறு புனித இடங்கள் இருக்கின்றன.இங்கேயும் பலர் தவ வாழ்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் தினமும் கங்கையில் குளிப்பது வழக்கம். இவர்களது உடல் அணுக்கள் கங்கையில் கலந்து பயணிக்கிறது.
-
ஒரு மனிதனின் கண்களால் காணமுடியாத நுண்அணுக்களை, DNA வை எடுத்து பல மனிதர்களை உருவாக்க முடியும் என்பது தற்கால விஞ்ஞானம். அப்படியானால் இந்த ஒவ்வொரு செல்களிலும் ஒரு மனிதனின் குணங்கள் படிந்துள்ளன என்று ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்? கங்கையில் குளிக்கும் மகானின் உடலிலிருந்து வெளிப்படும் உடல்அணுக்களில் அவரது குணம் இருக்காது என்று நீங்கள் எதை வைத்து கூறுகிறீர்கள்? ஆகவே விஞ்ஞானத்தின் படி பார்த்தால், ஒவ்வொரு மனிதலிருந்தும் கோடிக்கணக்கான அணுக்கள் உடலிலிருந்து வெளிப்படுகிறது. அவைகளில் அவனது குணமும் படிந்திருக்கிறது.
-
புண்ணியவான்களின் உடலிலிருந்து வெளிப்படும் அணுக்களில் புண்ணியமும், பாவிகளின் உடலிலிருந்து வெளிப்படும் அணுக்களில் பாவமும் நிறைந்திருக்கும் என்று நமது முன்னோர்கள் சொல்வது சரிதான்.
-
அப்படியானால் கங்கையில் வாழும் மீன்களும் மற்ற உயிர்களும் புண்ணியவான்களாகியிருக்க வேண்டுமே என்று நீங்கள் கேட்கலாம்.
-
இந்த உலகில் எத்தனையோ தன்மாத்திரைகள் பயணம் செய்கின்றன. அவைகள் தங்களுக்கு ஏற்ற இடத்தை அடையும் வரை தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கும். ஒரு பூச்சியின் ஓசைகளையோ, மணத்தையோ மனிதனால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம், அல்லது அவனது காதுகளுக்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் அதை சார்ந்துள்ள இன்னொரு பூச்சி அதை அறிந்து கொள்ளும். ஒரு மனிதனின் உணர்வுகளை இன்னொரு மனிதன் தான் அறந்துகொள்ள முடியுமே தவிர மற்ற விலங்குகளால் புரிந்துகொள்ள முடியாது.
-
கங்கையில் தொடர்ந்து பயணிக்கும் புனித தன்மாத்திரைகள்,அதில் குளிக்கும் மனிதர்களை அடைந்து அவர்களை புனிதப்படுத்துகிறது.
-
ஆனால் இங்கே தற்போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் ஒன்று உள்ளது.
-
கங்கையால் எப்படி புனிதத்தை தாங்கி செல்ல முடியுமோ, அதே போல் பாவத்தையும் தாங்கி செல்ல முடியும். புண்ணிவான்கள் எண்ணிக்கையில் குறைந்து பாவிகள் எண்ணிக்கையில் அதிகரித்தால், கங்கையில் குளிப்பதால் புண்ணியம் கிடைப்பதற்கு பதிலாக பாவம் கிடைக்கலாம். ஏனென்றால் கோட்பாடு ஒன்று தான். கங்கை மனித உடல் அணுக்களை சுமந்துவருகிறது. அதில் குளிப்பவர்கள் எப்படியோ அவர்களை பொறுத்து அதன் தன்மை மாறுகிறது.
-
தற்போது கங்கையில் பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் கலக்கின்றன. குப்பைகள் கொட்டப்படுகின்றன. இயற்கை சூழ்நிலை மாசுபட்டுள்ளது. இந்த நிலையில் கங்கையின் புனிதத்தன்மை கெட்டுபோய் உள்ளது. தற்போது கங்கையில் குளிப்பவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. முற்காலத்தில் இருந்தது போல அதன் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட்டால், அதில் குளிப்பவர்களுக்கு புண்ணியம் கிடைக்கலாம். முக்திகூட கிடைக்கலாம். ஆனால் அதற்கு கங்கை காரணமல்ல. அதில் நீராடும் புண்ணியவான்கள் தான் காரணம்.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(15-12-2016)
என்வீட்டு கிணற்றுத்தண்ணீரும் கங்கையின் தண்ணீரும்ஒன்றுதான். குளிப்பது என்பது இரண்டிலும் ஒன்றுதான். தண்ணீரில் புனிதம் என்ற கருத்தை தள்ளுங்கள். அங்கு நல்ல தெய்வீக எண்ணங்கள் இருக்கும் என்ற அளவில் ஒப்புக் கொள்ளலாம்.வீழ்ந்து விட்ட காலங்களில் வீழ்ச்சி அடைய வைத்த எண்ணங்கள் நம்பிக்கைகள் சம்பிராதயங்கள் அடையாளாம் காணப்பட்டு எடுத்து விளக்கப்பட வேண்டும். பத்மாசனத்தில் அமா்ந்து மந்திரங்கள் ஜெபித்தல் பாராயணம் செய்தல் பாடல்கள் பாடுதல் என்று சமயம் இருந்தால் போதுமானது.கங்கையில் குளித்தால் புண்ணியமாக என்ற கேளவியே முட்டாள்தனமானது.
ReplyDelete