நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை உயிரை கொல்கிறீர்கள்? நாம் எந்த உணவுகளை உண்பது?
-
உணவிலிருந்து உயிர்கள் உருவாவதாக வேதம் கூறுகிறது.
-
நமது உடல் அணுக்களால் ஆனது.இந்த அணுக்கள் ஒன்றுசேர்ந்து பல்வேறு உடல் பாகங்களாக மாறுகிறது. இந்த அணுக்களை தூலம்,சூட்சுமம் என்று இரண்டாக பிரிக்கலாம். கண்ணுக்கு தெரிபவை தூலம்.கண்ணுக்கு தெரியாதவை சூட்சுமம்.மனம் என்பது சூட்சும உடலால் ஆனது. நாம் பிறக்கும்போது நம்மிடம் சூட்சும அணுக்களால் ஆன உடல் உடல் இருந்தது.அத்துடன் பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட தூல அணுக்களால் இந்த உடல் உருவாகியுள்ளது
-
நாம் உண்ணும் உணவு உடலில் அணுக்களாக சேர்ந்து உடல் வளர்ச்சிக்கு காரணமாகின்றன. உண்ணும் உணவைப்பொறுத்து உடல் மாறுகிறது.உதாரணமாக ஒரு கோழி இறைச்சியை ஒருவன் உண்டால்,அதில் உள்ள அணுக்கள் மனித உடலில் சேர்ந்து,அதனுடன் ஒன்றாகிறது.அதேபோல் ஒரு கேரட் சாப்பிட்டால் அதன் அணுக்கள் உடலுடன் ஒன்றாகிறது.
-
இதனால்தான் என்ன உணவு உண்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.அந்த உணவு தூல உடலை மட்டும் மாற்றாது.சூட்சும உடலையும் மாற்றிவிடும்
-
எப்படிப்பட்ட உணவு உண்ண வேண்டும்? எது ஆன்மீகத்தில் நம்மை முன்னேற்றும்?
-
பிற உயிரிடமிருந்து பறிக்கப்படாத,பிற உயிரை கொல்லாத.பாவப்படாத, தூய்மையான உணவுதான் தூலஉடலை தூய்மைப்படுத்தி,மனத்தை தூய்மைப்படுத்த உதவுகிறது.அதுதான் ஆன்மீகத்தில் ஒருவனை முன்னேற்றும்
-
நாம் பொதுவாக கோழி,ஆடு,போன்ற உயிரினங்களை கொல்வது பாவம்,அது உயிரை பறிக்கும் செயல் என்கிறோம்.உண்மைதான்.அதேபோல தாவர உணவிலும் உயிரை பறிக்கும் உணவுகள் உள்ளன. உதாரணமாக கேரட்டை எடுத்துக்கொள்வோம்.மண்ணிலிருந்து பிடு்ங்கி எடுக்கப்படுவதால் அது உயிரை இழக்கிறது.அது பாவமா?பாவம்தான்.மண்ணிலிருந்து எடுக்கப்படும் உணவான கேரட்,முள்ளங்கி,உருளைக்கிழங்கு,வெங்காயம்,பூண்டு,கடலை,மரவள்ளிக்கிழங்கு,சேளைகிழங்கு போன்ற பல உணவுகள் உண்பதால் பாவம் வருகிறது.அது அந்த உயிரை கொன்று எடுக்கப்படுகிறது.
-
உயிரை பறிப்பது பாவம்.அதேபோல் உயிர்களுக்கு துன்பம் தருவதும் பாவம்தான். உயிர்களுக்கு துன்பம் தராத உணவை உண்ணவேண்டும். கீரையை பறிக்கும் போது அதற்கு துன்பம் ஏற்படுகிறது.அது தன் உடலின் சில பகுதிகளை இழக்கிறது.பீன்ஸ்,வெண்டைக்காய் உட்பட அனைத்துவிதமான காய்களும் அந்த உயிர்களை துன்புறுத்தி பெறப்படுபவைதான்.அதனால் அதை உண்பவர்களுக்கு பாவம் வருமா? வரும்.
-
மனிதன் மிக மேலானவன் அதனால் அவன் மற்ற விலங்குகளை கொன்று தின்னலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.அவர்கள் சிறிதே நாகரீகம் பெற்றவர்கள்.சிலர் ஊர்வன.நடப்பன,குதிப்பன,நீந்துவன போன்றவற்றை கொல்லாதீர்கள் தாவரங்களை கொல்லுங்கள் அதுதான் நமக்கு ஏற்ற உணவு என்கிறார்கள்.அவர்கள் சற்று அதிகம் நாகரீகமானவர்கள்.
-
அப்டியானால் எதை உண்பது?
-
பழங்கால ரிஷிகள் மரத்திலிருந்து விழும் பழங்களை மட்டுமே உண்டு வாழ்ந்தார்கள்.அதன் விதைகளை எடுத்து புதிய இடத்தில் வைத்துவிட்டு,அந்த பழங்களை சாப்பிட்டார்கள்.இவர்கள்தான் உணவின் உண்மைத்தன்மையை அறிந்தவர்கள்.இவ்வாறு செய்வதால் அந்த மரம் இவர்களை வாழ்த்துமேதவிர.சபிக்காது. ஒரு உயிரை துன்புறுத்தியோ.கொன்றோ,அதன் அனுமதி இல்லாமலோ பறிக்கப்பட்ட உணவு சாபம் நிறைந்தது. அந்த சாபம் உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும்.
-
கோடியில் ஒருவர் மட்டுமே இப்படி வாழ முடியும் என்பது நமக்கு தெரிகிறது.மற்றவர்கள் ஏதோ ஒருவிதத்தில் பாங்களை சுமந்துகொண்டுதான் அலைகிறோம்.இதற்கு என்னதான் முடிவு?
-
பிற உயிர்களை கொல்லக் கூடாது என்பதை தங்கள் வாழ்க்கையின் நோக்கமாக வைத்திருப்பவர்கள்,மக்கள் வாழும் சமுதாயத்தைவிட்டு விலகி காடுகளில் ரிஷிகள் வாழ்ந்ததுபோல வாழ்ந்து மறைந்துவிட வேண்டும்.அவர்களுக்கு முக்தி கிடைத்துவிடும்.சைவ உணவு சைவ உணவு என்று கூச்சலிடுபவர்கள் அரைகுறை அறிவு உள்ளவர்கள் ,குழப்பத்தை உண்டு பண்ணுபவர்கள்
-
உங்களுக்கு முக்தி வேண்டுமா?உயிர்களை கொல்க்கூடாது என்பது உங்கள் எண்ணமா உடனே காடுகளுக்கு ஓடி செல்லுங்கள். சமுதாயத்தில் உங்களுக்கு என்ன வேலை?
-
போராட்டம்தான் வாழ்க்கை நீ பிற உயிரை கொன்று வாழவேண்டும் அல்லது பிற உயிர் உன்னைக்கொன்று வாழும்.இது தான் சமுதாயத்தின் விதி. சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட்.தகுதி வாய்ந்தது வாழும் மற்றது பிற உயிருக்கு உணவாகிவிடும்.
-
நமது உணலுக்குள் பல நல்ல பாக்டீரியாகக்ள் இருக்கின்றன.இதன் வேலை தீய பாக்டீரியாக்களை கொல்வதுதான்.நமக்குள்ளே ஒவ்வொரு நொடியும் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த யுத்தத்தில் பல கோடி பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன.அந்த நல்ல பாக்டீரியாக்கள் மற்றவற்றை கொலை செய்ய மறுத்தால்.அவைகள் கொலை செய்யப்படும்.நீங்கள் மரணித்துவிடுவீர்கள்.
-
நமக்கு உள்ளே வெளியே என்று எங்குமே போராட்டமும்,கொலைகளும்,மரணமும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.இதை உங்களால் தடுக்கவே முடியாது. வாழ்க்கையே இப்படித்தான் இருக்கிறது.
-
ஒருவேளை ஒரு நாடு, மாமிச உணவை தவிர்த்து, தூய்மையான காய்கறி உணவை உண்டு உயர்ந்த நாகரீகத்தை அடைந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம் அங்கே மக்கள் அனைத்து வசதிகளும் பெற்று நல்லவர்களாக நீதி நிறைந்தவர்களாக யாரும் யாரையும் கொலை செய்யாதவர்களாக அனைத்து உயிர்களுக்கும் மருத்துமனைகள் அமைப்பவர்களாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். பிறகு என்ன நடக்கும்?
-
இந்த நாட்டுக்கு வெளியே வேறு எங்கேயோ, நாகரீகம் இல்லாத மாமிசங்களை உண்டு உடலை வளர்ந்த பலர் கொடிய ஆயுதங்களுடன் வந்து ,இந்த நாகரீகம் மிக்க இனத்தை கொன்று அந்த நாட்டை கைப்பற்றிவிடுவார்கள்.வரலாறை படித்துப் பாருங்கள்.இந்தியா வீழ்த்தப்பட்டது இப்படித்தான். விலங்குகளுக்குகூட மருத்துவமனைகளை அமைத்தவர் அசோகச்சக்கரவர்த்தி என்று நீங்கள் வரலாற்றில் படித்ததில்லையா? எந்த உயிர்களையும் கொல்லக்கூடாது என்று சட்டம் இயற்றினார்கள். மூட்டைப்பூச்சியைக்கூட கொல்ல மாட்டார்கள் .தினமும் அவைகளுக்காக சிறிது இரத்தத்தை கொடுத்து மகிழ்வார்கள்.கொசுக்களை கொல்வதே இல்லை. அவைகள் ரத்தம் குடிக்க வேண்டும் என்பதற்காக கொசுவலையைக்கூட பயன்படுத்தமாட்டார்கள்,சமணர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்
-
ஆகவே நீங்கள் வாழவேண்டுமா? சாகவேண்டுமா? இதுதான் கேள்வி. வாழவேண்டுமானால் போராடுங்கள்.உயிர்களை கொல்வதை தடுக்க முடியாது.அப்படியானால் உயிர்களை கொன்று கொண்டெ இருக்க வேண்டுமா? கூடாது. ஒரு உயிரை கொன்றால்.பத்து உயிரை வாழ வை. உணவு உற்பத்தியை பெருக்கு. மிருங்களை அதிக எண்ணிக்கையும் கொண்டு வா. அதிக தாவரங்களை உருவாக்கு. அவைகளும் வளரட்டும்.நாமும் வளர்வோம். இவ்வாறு செய்தால் இந்த போரட்டத்தில் நாமும் வாழ்வோம். மற்றவைகளும் வாழும்.
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர் (5-5-2018)
No comments:
Post a Comment