Wednesday, 30 May 2018

வள்ளலாரை பின்பற்றுபவர்கள்.இது தவறான வாதம்.இதை சற்று விளக்க விரும்புகிறேன்


வள்ளலாரை பின்பற்றுபவர்கள்.கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ் ஜோதி !வள்ளலார் என்கிறார்கள்.இது தவறான வாதம்.இதை சற்று விளக்க விரும்புகிறேன்
-
வள்ளலார் தனது உடலை வெள்ளை துணியால் எப்போதும் மறைத்துக்கொண்டிருந்தார்.இதற்கு காரணம் என்ன? நமது உடல் அணுக்களால் ஆன ஒரு தொகுதி.நமது உடலில் உள்ள அணுக்கள் உலகத்தில் உள்ள மற்றவர்ககளின் உடலுக்கு செல்கிறது.மற்றவர்களின் உடலில் உள்ள அணுக்கள் நமது உடலுக்குள் வருகிறது..இதனால் சிலவேளைகளில் நமது உடலில் தேவையற்ற அணுக்கள் புகுந்துவிடுகின்றன.அது மனத்தையும் உடலையும் பாதிக்கிறது(இது விஞ்ஞானம்)
-
ஒவ்வொரு உடலும் தமஸ்,ரஜஸ்,சத்வம் என்ற மூன்று அடிப்படை அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் சத்வம் என்பது ஒளி பொருந்தியது.தமஸ் என்பது இருள்பொருந்தியது என்கிறார் விவேகானந்தர்.உடலில் உள்ள தமஸ் மற்றும் ரஜஸ் அணுக்களை குறைத்து சத்வ அணுக்களை அதிகப்படுத்திவிட்டால் உடல் ஒளி உடலாக மாறிவிடும்.இவ்வாறு உடல் ஒளியாக மாறிவிட்டால் பிறர் கண்களுக்கு தெரியாது.அது தேவ உடலாகிவிடும்.அவ்வாறு தேவ உடலாகமாறிவிட்டால் இந்த பிரபஞ்சத்தின் காட்சியே அவர்களுக்கு மாறிவிடும்
-
வள்ளலார் பிற அணுக்கள் தன் உடலில் புகுத்து மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க உடலை எப்போதும் மூடிக்கொண்டார்.தனது உடலில் உள்ள தமஸ் மற்றும் ரஜஸ் அணுக்களை முற்றிலும் நீக்கியவுடன் அவரது உடல் ஒளி உடலாக மாறிவிட்டது.அதன்பிறகு யார் கண்களுக்கும் அது தெரியாது.இதுதான் அவரது வாழ்வில் நடந்தது.
-
இதே போன்று இந்திய மகான்கள் பலர் ஒளி உடலாக மாறிவிட்டார்கள்.உதாரணத்திற்கு ஆண்டாளை குறிப்பிடலாம்.இன்னும் பலர் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள்.எதிர்காலத்திலும் இதேபோல பலர் வருவார்கள்.ஆகவே வள்ளலாரைபோல வேறு யாரும் இல்லை என்று கூறுவது தவறான கருத்து
-
இனி தற்போது ஜோதி ஆண்டவர் எப்படிப்பட்ட நிலையில் இருப்பார் என்பதை ஆராய்வோம். ஒளியாக மாறிவிட்டவர்களுக்கும் ஒரு உடல் இருக்கும்.அது சத்துவ துகள்களால் ஆனது என்பதை பார்த்தோம்.அவர்களால் இந்த உலகத்தில் உள்ளவர்களின் பிரார்த்தனைகளை கேட்க முடியும். இந்த உலகத்தையும் பார்க்க முடியும்.ஆனால் நாம் பார்ப்பதுபோல அல்ல,அதைவிட உயர்ந்த நிலையில் அது இருக்கும்.நமது எண்ணங்களை அறிய முடியும்.
-
அவர்கள் உடல் அற்ற நிலையை அடையவில்லை,ஒளி உடலில் இருக்கிறார்கள்.அவ்வாறு ஒளி உடலில் ஆயிரக்கணக்கான ரிஷிகள் இருக்கிறார்கள்.இனியும் எதிர்காலத்தில் அப்படி பலர் இருப்பார்கள்.
-
இனி கடவுளுக்கு வேதங்கள் கூறும் விளக்கத்தை பார்ப்போம். ஒருவன் சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்றையும் ஒடுக்கும்போது பிரம்மமாகிறான்.அவனைப்பொறுத்தவரை பிரபஞ்சம் என்பது இல்லை.ஏனென்றால் சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்றால் உருவாக்கப்பட்ட பிரபஞ்சம் ஒடுங்கிவிட்டது.ஆகவே பிரபஞ்சம் தொடர்பான அதையும் அறிவதில்லை.உடல் என்பதே ஒடுங்கிவிட்டது.உடல் அற்றநிலை.அவ்வாறு பிரம்மமானவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
-
ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் போன்றவர்கள் முற்றிலும் பிரம்மத்தில் ஒடுங்காமல் மீண்டும் உடலுக்குள் வந்துவிடுவார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இப்படிப்பட்ட சமாதிநிலை அடிக்கடி ஏற்படும்.ஆனால் கடைசி காலத்தில் அவர் பிரம்மத்தில் ஒன்றுகலக்கவில்லை. ஒரு ஒளியுடலில்தான் வாழ்ந்துவருகிறார்.அதனால்தான் அவரால் பக்தர்களின் பிரார்த்தனைகளை கேட்க முடிகிறது.மீண்டும் பிறப்பதாகவும் கூறியுள்ளார்
-
ஒளி உடலில் வசித்துவருபவர்கள்,வள்ளலாராக இருந்தாலும் சரி,ஏதாவது ஒரு காலத்தில் மீண்டும் பிறக்க வேண்டும்.ஏனென்றால் ஒளிஉடல் தேயவும்,வளரவும் செய்யும்.ஆயிரம் ஆண்டுகளோ அல்லது லட்சம் ஆண்டுகளோ கூட ஒளி உடலில் வாழலாம்.ஆனால் மறுபடியும் பிறக்கவேண்டும்.பிரம்மத்தில் ஒன்று கலந்தவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை.வள்ளலார் பிரம்மத்தில் ஒன்றுகலக்கவில்லை என்பதை விளக்கியிருக்கிறேன்.
-
ஆண்டவர் என்றால் ஆள்பவர் என்று அர்த்தம்.நாட்டை ஆளும் அரசர்களுக்கும் ஆண்டவர் என்றுதான் பெயர்.பிரம்மம் என்பது இந்த உலகத்தை ஆள்வதில்லை.ஆகவே ஆண்டவர் என்பது அதற்கு பொருந்தாது.உடலோடு வாழ்பவர்களுக்குதான் ஆணடவர் என்ற அடைமொழி பொருந்தும். வள்ளலாரை ஜோதிஆண்டவர் என்று கூறுவது சரிதான்.ஆனால் கடவுள் என்று கூறுவது தவறு.
-
வள்ளலாராக இருந்தாலும்சரி, ராமகிருஷ்ணராக இருந்தாலும் சரி,ரமணராக இருந்தாலும் சரி அவர்கள் தற்போது ஏதோ ஒரு உடலில் வசித்து வருகிறார்கள்.அவர்களை குருவாக வழிபடலாம்.இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும் கடவுளாக வழிபடலாம் என்ற கோட்பாடின்படி அவர்களை கடவுளாக வழிபடலாம்.ஆனால் அவர்கள் மட்டுமே கடவுள் மற்றவர்கள் கீழானவர்கள் என்று கூறுவது தவறான கருத்து.வள்ளலாரை பின்பற்றினால் முக்தி கிடைக்குமா என்றால்,அவரது அருளால் கிடைக்கும்.அவர்களை வழிபடாவிட்டாலும் கிடைக்கும்.ஏனென்றால் மனிதனுக்குள்ளேயே அனைத்து ஆற்றலும் உள்ளது. மனம் தூய்மையானால் அதுவே குருவாக மாறிவிடும்.
-
இதே கருத்துதான் ஏசுநாதருக்கும்,அல்லாவுக்கும் பொருந்தும். இருவரும் ஒளி உடலில் வாழ்பவர்கள்தான்,கடவுள் அல்ல.
-
இந்த கருத்தில் வாதம் செய்ய விரும்புபவர்கள் விஞ்ஞான பூர்வமாக வாதம் செய்ய வேண்டும்.நம்பிக்கை அடிப்படையில் பேசக்கூடாது.உங்கள் விஞ்ஞனப்பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(30-5-2018)
-

No comments:

Post a Comment