ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரமா?
---------------
யார் ராமனாக வந்தாரோ,யார் கிருஷ்ணனாக வந்தாரோ அவரே இந்த முறை ராமகிருஷ்ணராக வந்திருக்கிறார் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்.ஆனால் அதை அப்போது பலரும் நம்பவில்லை.அவருடன் கூடவே இருந்த சுவாமி விவேகானந்தர்கூட இதை கடைசிவரை நம்பவில்லை.ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் அவரிடம் நீங்கள் அவதாரமா? என்று தன்னடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.ஸ்ரீராமகிருஷ்ணர் அவரது சந்தேகத்தை தெளிவுபடுத்திய பின்னரே விவேகானந்தர் நம்பினார். விவேகானந்தரின் வாழ்க்கையில் பிற்காலத்தில் பல தவங்கள் புரிந்தபிறகுதான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்பதை ஏற்றுக்கொண்டார்.
-
ஸ்ரீராமர் ஒரு அவதாரபுருஷர் என்று அவரது காலத்தில் வெறும் 12 முனிவர்கள் மட்டுமே நம்பினார்கள்.மற்றவர்கள் அவர் ஒரு சாதாரண மனிதன் என்றே நினைத்தார்கள்.ஸ்ரீகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்பதை அர்ஜுனனும்,விதுரரும்,பீஷ்மரும் வேறு சிலரும்தான் நம்பினார்கள். மற்றவர்கள் அவரை சாதாரணமானவர் என்றே நினைத்தார்கள். ஸ்ரீராமகிருஷ்ர் ஒரு அவதாரம் என்பதை அவரது காலத்தில் சிலர்தான் நம்பினார்கள்.
-
மற்ற மகான்களுக்கும் இந்த அவதாரபுருஷர்களுக்கும் அப்படி என்ன வேறுபாடு? இவர்கள் என்ன ஆன்மீகத்தில் யாரும் அடையாத உயரத்தை அடைந்தவர்களா? எத்தனையோ மகான்கள் உயர்ந்த நிலையை அடையவில்லையா? அவர்களை போல ஸ்ரீராமகிருஷணரும் ஒரு மகான்தானே அவரை ஏன் உயர்த்திப்பிடிக்க வேண்டும்?என்று நீங்கள் கேட்கலாம்.
-
இவர் இந்த உலகத்திற்கு வராவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் என்ற நிலை வரும்போது,அதை சரிசெய்ய யார் வருகிறார்களோ அவர்கள்தான் அவதாரம்.இதுதான் அவதாரத்தைப்பற்றிய சுருக்கமான முடிவு.அப்படி வருபவர்கள் மிகசிலரே.ராமர்,கிருஷ்ணர்,புத்தர் என்று இந்த எண்ணிக்கை மிகக்குறைவுதான்.இவர்கள் வெறும் மகான்களாக இருப்பவர்கள் அல்ல,உலகத்தையே ஆட்டிவைக்கும் அளவு திறமையானவர்கள்.உலகம் அவர்கள் கைப்பிடியுள் அடங்கி கிடப்பதுபோல இருக்கும்.ஸ்ரீராமகிருஷ்ணரின் சக்தி என்ன என்பதை உலகம் இனிமேல்தான் காண இருக்கிறது.
-
இந்த முறை அவதாரம் சத்வ குணத்தில் வந்துள்ளது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.அதனால்தான் அதன் செயல்பாடு கிருஷ்ணர் மற்றும் ராமரின் செயல்பாடு போல இல்லாமல்,கண்ணுக்கு தெரியாத வகையில் வேலைசெய்கிறது.
-
ஸ்ரீராமகிருஷ்ணர் அடைந்த பிரம்மஞானத்தை இந்தியாவில் உள்ள எத்தனையோ மகான்கள் அடைந்திருக்கிறார்கள்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.அந்த மகான்கள் காட்டிய பாதையில் சென்றால் முக்தி நிச்சயமாக கிடைக்கும் அதிலும் சந்தேகம் இல்லை.அவர்களை பலர் பின்பற்றி வருகிறார்கள்.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.அந்த மகான்கள் வந்தாலும் வராவிட்டாலும் உலகத்தில் எந்த பெரிய மாற்றமும் நிகழாது,அது எப்போதும் போலவே நடந்துகொண்டிருக்கும். ஆனால் அவதாரபுருஷர்கள் வராவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும்.
-
அப்படி ஸ்ரீராமகிருஷணர் என்ன செய்துவிட்டார்?
-
இந்த உலகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் ஆபத்தாக கருதப்படுவது மதமோதல்கள்.மதமோதல்கள் காரணமாகவே அடுத்த உலகப்போரும் வர இருக்கிறது.இதுவரை நடந்துகொண்டிருக்கும் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் மதம்தான். இந்த உலகத்தில் நடக்கும் இனமோதல்களுக்கு பின்னணியில்கூட மதம் இருக்கிறது.அது தற்போது இன்னும் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
-
பொதுவாக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? எங்கள் மதத்தை பின்பற்றுங்கள் அப்போதுதான் சொர்க்கம் கிடைக்கும் அல்லது முக்தி கிடைக்கும் இல்லாவிட்டால் நரகம்தான் கிடைக்கும் என்பது பொதுவாக சொல்லப்படும் கருத்து.இது மதமோதல்களுக்கு காரணமாக இருக்கிறது. தற்காலத்தில் தோன்றிய பிரிவுகளாக இருந்தால்கூட எங்கள் நெறியே அல்லது எங்கள் சங்கமே எங்கள் சபையே சுத்தமானது.அதை பின்பற்றினால்தான் முக்தி கிடைக்கும்.மற்றவை சரியில்லை என்றே பேசுகின்றன.இதற்கு காரணம் அந்த பிரிவை சேர்ந்தவர் ஒரு பாதை வழியாக சென்று ஞானம் பெற்றிருப்பார்.பிறகு அதையே மற்றவர்களுக்கும் போதிப்பார்.அவர் மறைந்த பிறகு அவரது சீடர்கள் இது ஒன்றே சிறந்தது.மற்றது ஒன்றும் உதவாது.எங்கள் மகானே உயர்ந்தவர் இவர்தான் சற்குரு,இவரே ஒளிக்கெல்லாம் ஒளி, என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
-
எங்கள் நெறியில் சேருங்கள்.அப்போதுதான் காப்பாற்றப்படுவீர்கள் என்றே உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் மதற்பிரிவுகளும் பேசுகின்றன.இதை ஏற்காதவர்களை வெறுக்கவும்.முடிந்தால் குண்டுவைத்து கொல்லவும் அவைகள் முனைந்து ஈடுபடுகின்றன.இதுதான் தற்போதுள்ள நிலைமை.
-
ஸ்ரீராமகிருஷ்ணர் முதலில் காளிதேவியின் தரிசனத்தைப் பெற்றார். அதன்பிறகு வைணவ மதத்தை பின்பற்றி அதில் கூறப்பட்டுள்ள பயிற்சிகளை முறையாக கைக்கொண்டு அதன் அறுதி நிலையை மிக குறுகிய காலத்தில் அடைந்தார்.அதன்பிறகு சாக்த மதத்தை பின்பற்றி தந்திர சாதனைகள் மேற்கொண்டு அதில் உச்சத்தை அடைந்தார்.ராமரை முழுமுதற் தெய்வமாக பின்பற்றும் ராமபிரிவை மேற்கொண்டார்.அத்வைதத்தை பயிற்சி செய்து அதன் நிறைவை அடைந்தார்.இவ்வாறு இந்தியாவில் அந்த காலத்தில் இருந்த எல்லா மதங்களையும் அவர் பயிற்சி செய்தார்.புத்தகத்தை படித்து இதை பயிற்சி செய்யவில்லை. அந்த அந்த மதத்தை சார்ந்த குருமார்களை குருவாக ஏற்று அவர்கள் காட்டிய வழியில் சென்று பயின்றார்
-
அத்தோடு நிற்காமல் வெளிநாட்டு மதங்களான கிறிஸ்தவம்,முஸ்லீம் மதங்களையும் உரிய குருவின் மூலம் பயின்றார்.தனக்கென்று புதிய பிரிவை அவர் உருவாக்கவில்லை.தனக்கென்று புதிய பாதையை காட்டவில்லை. ஏற்கனவே இருந்த அனைத்தையும் பயிற்சி செய்து இவைகள் அனைத்தும் உண்மைதான் என்று அனுபவத்தில் அறிந்தார்.
-
அனைத்து மதங்களும் உண்மையை நோக்கியே செல்கின்றன.இதில் எனது மதமே உயர்ந்தது மற்ற மதங்கள் தாழ்ந்தது என்று கூறுவது தேவையற்றது என்பதை அவர் அனுபவப்பூர்வமாக அறிந்தார். மற்ற மதங்களும் உண்மைதான் என்று எல்லா மகான்களும் கூறுகிறார்கள்.ஆனால் அவர்கள் அதை பயிற்சி செய்யவில்லை.அந்த மதங்களை கடைபிபடிக்கவில்லை.இதுதான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் மற்ற மகான்களுக்கும் உள்ள வேறுபாடு
-
மற்ற மகான்கள் தங்களை பின்பற்றுபவர்களுக்கு ஒரு புதிய பாதையை காட்டுகிறார்கள்.பழைய பாதைகள் ஒத்துவராது,இனிமேல் நான் காட்டிய புதிய பாதையில் செல்லுங்கள் என்று சீடர்களுக்கு கட்டளையிடுகிறார்கள்.ஆனால் இங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் புதிய பாதை எதையும் கூறவில்லை.ஏற்கனவே இருக்கின்ற அனைத்து மதங்களும் உண்மைதான்.அதை உரிய சிரத்தையோடு முறையாக பின்பற்றினாலே போதும் என்று கூறுகிறார்.இது மிகப்பெரிய வேறுபாடு இல்லையா?
-
இங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் மத சண்டைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார் உலகில் மதம் தொடர்பான சண்டைகள் இனிதேவையில்லை. உனது மதம் உயர்ந்தது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை மற்ற மதங்களும் உயர்வானதுதான்.மதச்சண்டைகளை அவர் கண்டிக்கிறார்.அதற்கான முழு உரிமையும் அவரிடம் இருக்கிறது.ஏனென்றால் அவர் அனைத்தையும் முறையாக பயின்று கடைபிடித்தபின் கூறுகிறார்.
-
இந்த உலகத்தை காத்துக்கொண்டிருக்கும் அந்த சக்தி இந்த முறை ஸ்ரீராகிருஷ்ணராக அவதரித்து,இந்த உண்மையை உலகிற்கு போதித்துள்ளது.இனி வரும் காலம் அமைதியாக இருக்க வேண்டுமானால்,இது பின்பற்றப்பட வேண்டும். உலகம் அமைதி பெறட்டும். வெறுப்பு வேண்டாம். உன் மதத்தை பெருமைப்படுத்த இன்னொரு மதத்தை வெறுக்காதே.இன்னொரு மனிதனை வெறுக்காதே .
-
சில பக்தர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை தனிபிரிவாக கருதுகிறார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணர்-சாரதாதேவி பிரிவு,ராமகிருஷ்ண சங்கம் என்று தங்களுக்குள் ஒரு பிரிவை ஏற்படுத்திக்கொண்டு,மற்ற பிரிவினரிடம் வேறுபாட்டை காட்டுகிறார்கள்.இது முற்றிலும் தவறு.ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த பிரிவையும் ஏற்படுத்தவோ,தனக்கென்று புதிய மதத்தை ஏற்படுத்தவோ வரவில்லை என்பது சுவாமி விவேகானந்தரின் ஆணித்தரமான கருத்தாகும். ஸ்ரீராமகிருஷ்ணரை குருவாகவோ,கடவுளாகவோ ஏற்றுக்கொண்டு அதை பின்பற்றலாம்.ஆனால் எக்காலத்திலும் அது மற்ற நெறிகளைப்போல தனிநெறி தனி பிரிவு என்று கருதினால் நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.அது மட்டுமல்ல அவரது அவதார நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
-
வெறும் ஒருசெய்தியை மட்டும் சொல்லிவிட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற அவதாரம் மறைந்துவிட வில்லை. அவரது செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக சுவாமி விவேகானந்தர் என்ற ஒரு மகானை தோன்றுவித்தார் அந்த சக்தி. அத்துடன் அது முடிந்துவிட்டதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் தொடர்ந்து வேலைசெய்துகொண்டே இருப்பார்.எங்கெல்லாம் அமைதியும் சமாதானமும் தேவையோ அங்கெல்லாம் உன்னதமான மனிதர்களை உருவாக்கி அனுப்பிக்கொண்டே இருப்பார். இனி உலகத்தில் மதச்சண்டை என்பதே இல்லை என்ற நிலை வரும்வரை பலரை அவர் உருவாக்குவார்.அவர்களை உலகமெங்கும் அனுப்பிவைப்பார். அவதாரம் என்பதே உலகத்தை அழிவிலிருந்து காப்பதுதான்.
-
அவரது கருவியாக இருக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது பெரும்பேறு.நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் அதனால் மிகுந்த பலனை அடைவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர்(25-5-2018)
-
No comments:
Post a Comment