Wednesday, 30 May 2018

வள்ளலாரை பின்பற்றுபவர்கள்.இது தவறான வாதம்.இதை சற்று விளக்க விரும்புகிறேன்


வள்ளலாரை பின்பற்றுபவர்கள்.கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ் ஜோதி !வள்ளலார் என்கிறார்கள்.இது தவறான வாதம்.இதை சற்று விளக்க விரும்புகிறேன்
-
வள்ளலார் தனது உடலை வெள்ளை துணியால் எப்போதும் மறைத்துக்கொண்டிருந்தார்.இதற்கு காரணம் என்ன? நமது உடல் அணுக்களால் ஆன ஒரு தொகுதி.நமது உடலில் உள்ள அணுக்கள் உலகத்தில் உள்ள மற்றவர்ககளின் உடலுக்கு செல்கிறது.மற்றவர்களின் உடலில் உள்ள அணுக்கள் நமது உடலுக்குள் வருகிறது..இதனால் சிலவேளைகளில் நமது உடலில் தேவையற்ற அணுக்கள் புகுந்துவிடுகின்றன.அது மனத்தையும் உடலையும் பாதிக்கிறது(இது விஞ்ஞானம்)
-
ஒவ்வொரு உடலும் தமஸ்,ரஜஸ்,சத்வம் என்ற மூன்று அடிப்படை அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் சத்வம் என்பது ஒளி பொருந்தியது.தமஸ் என்பது இருள்பொருந்தியது என்கிறார் விவேகானந்தர்.உடலில் உள்ள தமஸ் மற்றும் ரஜஸ் அணுக்களை குறைத்து சத்வ அணுக்களை அதிகப்படுத்திவிட்டால் உடல் ஒளி உடலாக மாறிவிடும்.இவ்வாறு உடல் ஒளியாக மாறிவிட்டால் பிறர் கண்களுக்கு தெரியாது.அது தேவ உடலாகிவிடும்.அவ்வாறு தேவ உடலாகமாறிவிட்டால் இந்த பிரபஞ்சத்தின் காட்சியே அவர்களுக்கு மாறிவிடும்
-
வள்ளலார் பிற அணுக்கள் தன் உடலில் புகுத்து மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க உடலை எப்போதும் மூடிக்கொண்டார்.தனது உடலில் உள்ள தமஸ் மற்றும் ரஜஸ் அணுக்களை முற்றிலும் நீக்கியவுடன் அவரது உடல் ஒளி உடலாக மாறிவிட்டது.அதன்பிறகு யார் கண்களுக்கும் அது தெரியாது.இதுதான் அவரது வாழ்வில் நடந்தது.
-
இதே போன்று இந்திய மகான்கள் பலர் ஒளி உடலாக மாறிவிட்டார்கள்.உதாரணத்திற்கு ஆண்டாளை குறிப்பிடலாம்.இன்னும் பலர் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள்.எதிர்காலத்திலும் இதேபோல பலர் வருவார்கள்.ஆகவே வள்ளலாரைபோல வேறு யாரும் இல்லை என்று கூறுவது தவறான கருத்து
-
இனி தற்போது ஜோதி ஆண்டவர் எப்படிப்பட்ட நிலையில் இருப்பார் என்பதை ஆராய்வோம். ஒளியாக மாறிவிட்டவர்களுக்கும் ஒரு உடல் இருக்கும்.அது சத்துவ துகள்களால் ஆனது என்பதை பார்த்தோம்.அவர்களால் இந்த உலகத்தில் உள்ளவர்களின் பிரார்த்தனைகளை கேட்க முடியும். இந்த உலகத்தையும் பார்க்க முடியும்.ஆனால் நாம் பார்ப்பதுபோல அல்ல,அதைவிட உயர்ந்த நிலையில் அது இருக்கும்.நமது எண்ணங்களை அறிய முடியும்.
-
அவர்கள் உடல் அற்ற நிலையை அடையவில்லை,ஒளி உடலில் இருக்கிறார்கள்.அவ்வாறு ஒளி உடலில் ஆயிரக்கணக்கான ரிஷிகள் இருக்கிறார்கள்.இனியும் எதிர்காலத்தில் அப்படி பலர் இருப்பார்கள்.
-
இனி கடவுளுக்கு வேதங்கள் கூறும் விளக்கத்தை பார்ப்போம். ஒருவன் சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்றையும் ஒடுக்கும்போது பிரம்மமாகிறான்.அவனைப்பொறுத்தவரை பிரபஞ்சம் என்பது இல்லை.ஏனென்றால் சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்றால் உருவாக்கப்பட்ட பிரபஞ்சம் ஒடுங்கிவிட்டது.ஆகவே பிரபஞ்சம் தொடர்பான அதையும் அறிவதில்லை.உடல் என்பதே ஒடுங்கிவிட்டது.உடல் அற்றநிலை.அவ்வாறு பிரம்மமானவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
-
ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் போன்றவர்கள் முற்றிலும் பிரம்மத்தில் ஒடுங்காமல் மீண்டும் உடலுக்குள் வந்துவிடுவார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இப்படிப்பட்ட சமாதிநிலை அடிக்கடி ஏற்படும்.ஆனால் கடைசி காலத்தில் அவர் பிரம்மத்தில் ஒன்றுகலக்கவில்லை. ஒரு ஒளியுடலில்தான் வாழ்ந்துவருகிறார்.அதனால்தான் அவரால் பக்தர்களின் பிரார்த்தனைகளை கேட்க முடிகிறது.மீண்டும் பிறப்பதாகவும் கூறியுள்ளார்
-
ஒளி உடலில் வசித்துவருபவர்கள்,வள்ளலாராக இருந்தாலும் சரி,ஏதாவது ஒரு காலத்தில் மீண்டும் பிறக்க வேண்டும்.ஏனென்றால் ஒளிஉடல் தேயவும்,வளரவும் செய்யும்.ஆயிரம் ஆண்டுகளோ அல்லது லட்சம் ஆண்டுகளோ கூட ஒளி உடலில் வாழலாம்.ஆனால் மறுபடியும் பிறக்கவேண்டும்.பிரம்மத்தில் ஒன்று கலந்தவர்கள் மட்டுமே மீண்டும் பிறப்பதில்லை.வள்ளலார் பிரம்மத்தில் ஒன்றுகலக்கவில்லை என்பதை விளக்கியிருக்கிறேன்.
-
ஆண்டவர் என்றால் ஆள்பவர் என்று அர்த்தம்.நாட்டை ஆளும் அரசர்களுக்கும் ஆண்டவர் என்றுதான் பெயர்.பிரம்மம் என்பது இந்த உலகத்தை ஆள்வதில்லை.ஆகவே ஆண்டவர் என்பது அதற்கு பொருந்தாது.உடலோடு வாழ்பவர்களுக்குதான் ஆணடவர் என்ற அடைமொழி பொருந்தும். வள்ளலாரை ஜோதிஆண்டவர் என்று கூறுவது சரிதான்.ஆனால் கடவுள் என்று கூறுவது தவறு.
-
வள்ளலாராக இருந்தாலும்சரி, ராமகிருஷ்ணராக இருந்தாலும் சரி,ரமணராக இருந்தாலும் சரி அவர்கள் தற்போது ஏதோ ஒரு உடலில் வசித்து வருகிறார்கள்.அவர்களை குருவாக வழிபடலாம்.இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும் கடவுளாக வழிபடலாம் என்ற கோட்பாடின்படி அவர்களை கடவுளாக வழிபடலாம்.ஆனால் அவர்கள் மட்டுமே கடவுள் மற்றவர்கள் கீழானவர்கள் என்று கூறுவது தவறான கருத்து.வள்ளலாரை பின்பற்றினால் முக்தி கிடைக்குமா என்றால்,அவரது அருளால் கிடைக்கும்.அவர்களை வழிபடாவிட்டாலும் கிடைக்கும்.ஏனென்றால் மனிதனுக்குள்ளேயே அனைத்து ஆற்றலும் உள்ளது. மனம் தூய்மையானால் அதுவே குருவாக மாறிவிடும்.
-
இதே கருத்துதான் ஏசுநாதருக்கும்,அல்லாவுக்கும் பொருந்தும். இருவரும் ஒளி உடலில் வாழ்பவர்கள்தான்,கடவுள் அல்ல.
-
இந்த கருத்தில் வாதம் செய்ய விரும்புபவர்கள் விஞ்ஞான பூர்வமாக வாதம் செய்ய வேண்டும்.நம்பிக்கை அடிப்படையில் பேசக்கூடாது.உங்கள் விஞ்ஞனப்பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(30-5-2018)
-

Monday, 28 May 2018

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்றால் என்ன?


கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்றால் என்ன?
-
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் பிரபலமான உபதேசம்.இதை படித்துவிட்டு சிலர் என்னிடம் கேட்டது இதுதான்.வேலை செய்துவிட்டு சம்பளம் வாங்காமல் இருகக் வேண்டுமா?சும்மா வேலை செய்ய வேண்டுமா? 
-
கடமை என்பது என்ன? நீங்கள் யாரிடமிருந்தாவது எதையாவது பெற்றால் அதற்கு பிரதியாக திரும்பச்செய்வது கடமை.அதை சுயநலத்தோடு செய்தால் பந்தம்.சுயநலம் இல்லாமல் செய்தால் பற்றின்மை.முக்திக்கு வழி.ஒரு தந்தை மகன் உறவை வைத்து இதை விளக்குகிறேன்
-
நீங்கள் தந்தை என்ற நிலையை அடைய காரணமாக இருந்தது குழந்தைதான்.குழந்தைகள் இல்லாத வீட்டில் மகிழ்ச்சி இருப்பதில்லை.சமுதாயம் அவர்களை முழுமனிதர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.இந்த உலகத்தில் உள்ள இன்பங்களை இழந்துவிட்டதுபோல நிலை ஏற்படுகிறது.எதற்காக கஷ்ப்பட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலை ஏற்படுகிறது.வாழ்க்கையே பெரும் சுமையாக தோன்றுகிறது ஒருவிதத்தில் உங்களை மகிழ்சியுடனும்,திருப்தியுடனும் வாழவைப்பதற்கு,குழந்தைகள் தேவை.
-
தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய மகனை தந்தை வளர்க்கிறார்.பதிலுக்கு மகன் தந்தையை காப்பாற்ற வேண்டும்.அது கடமை.அப்படியானால் பலனை எதிர்பார்க்காதே என்றால் என்ன? தந்தை மகனை காப்பாற்ற வேண்டியது அவரது கடமை.மகன் தந்தையை காக்க வேண்டியது கடமை ஆனால் நமக்கு வயதாகும்போது மகன் தன்னை காப்பாற்றுவான் என்று நினைத்தால் அது பலனை எதிர்பார்ப்பது.அது தவறு. ஒருவேளை மகன் எதிர்பாராதவிதத்தில் இறந்துபோகலாம் அல்லது கெட்டவனாக மாறி கடமையை செய்ய தவறலாம்.இப்படியெல்லாம் மகன் தவறும்போது.தந்தை வருந்துகிறார்.நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இவனை வளர்த்தேன்,எனக்கு வயதானபோது என்னை கவனிக்காமல் விட்டுவிட்டானே என்று வேதனைப்படுகிறார்.
-
மகனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டு திருப்தியடைந்துவிட வேண்டும். பலனை ஒருபோதும் எதிர்பார்க்ககூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சுயநலம்.பதிலுக்கு எனக்கு கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக செயல்படுவது சுயநலம்.மகன் நிறைய சம்பாதித்து தன்னை வசதியாக வாழவைப்பான் என நினைத்து படிக்க வைக்கிறார்கள்.கிட்டத்தட்ட மகனை பணம் சம்பாதிக்கும் இயந்திரம்போல பார்க்கிறார்கள்.இது சுயநலம்.எங்கெல்லாம் பலனை எதிர்பார்க்கும் தன்மை காணப்படுகிறதோ அதுவெல்லாம் சுயநலம்.அதன் விளைவு துன்பம்.
-
குழந்தைகள் பிறப்பதே தந்தைக்கும்.தாய்க்கும் மகிழ்ச்சியை கொடுப்பதற்காக,அவர்கள் வாழ்க்கையை பூரணமாக்குவதற்காக,அவர்கள் சந்தோசமாக உழைப்பதற்கு. ஒரு தூண்டுசக்தியாக இருப்பதற்காக.அப்படிப்பட்டவர்கள் உயர்ந்து நல்ல நிலையை அடையும்வரை உங்கள் கடமையை செய்ய வேண்டும்.ஆனால் பதிலுக்கு பலனை எதிர்பார்க்க்கூடாது
-
கடமையைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.சிறு அணுமுதல் அண்டம்வரை அனைத்திலும் இந்த கடமை பிணைக்கப்பட்டுள்ளது.முற்றும் துறந்த துறவிக்குகூட கடமை உள்ளது அதுபற்றி பின்பு விளக்குகிறேன்
-
சுவாமி வித்யானந்தர்(28-5-2018)

சிவலிங்கம் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து என்ன?











சிவலிங்கம் பற்றி பல்வேறு ஊகங்களும் கருத்துக்களும் நிலவுகின்றன.இதுபற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து என்ன?
-
அதர்வணவேத சம்ஹிதையில் யூகஸ்தம்பம் பற்றிய வர்ணனை காணப்படுகிறது.இது முதலும் முடிவுமற்ற ஒரு தூணைப்பற்றி விளக்குகிறது.பௌத்தர்கள் நினைவுச்சின்னமாக ஸ்தூபிகளை பிரதிஷ்டை செய்வது வழக்கம்.சிலர் பெரிய ஸ்தூபிகளை நாட்டமுடியாமல் சிறியதாக நாட்டினார்கள்.வட இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட சிறிய ஸ்தூபிகளைக் காணலாம்.இதுவே பிற்காலத்தில் லிங்கவழிபாடாக மாறியது -சுவாமி விவேகானந்தர் புத்தகம்11-466
-
பழைய காலத்தில் சித்தர்கள் சமாதி அடைந்தால் அவர்களின் நினைவிடத்தில் ஸ்தூபிகள் நடுவது வழக்கம்.அதனை சுற்றி நினைவு மண்டபம் கட்டப்பட்டது. பிற்காலத்தில் அந்த ஸ்தூபிகள் வழிபாட்டிற்குரிய பொருளாக கருதப்பட்டு,அடிப்பாகத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
-
லிங்கம் என்ற சமஸ்கிருத சொல்லிற்கு உடல் என்ற அர்த்தமும் உண்டு.ஆண்குறி என்ற அர்த்தமும் உண்டு.இரண்டையம் சேர்த்து குழப்பிக்கொள்ளக்கூடாது.இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் மூன்றுவித உடல்களாக பிரிக்கிறார்கள் வேதகாலத்தவர்கள்.அவை பும்லிங்கம்(ஆண்உடல்) ஸ்திரீலிங்கம்(பெண்உடல்) இவை இரண்டும் இல்லாமல் நபூம்சக லிங்கம்(ஜடப்பொருளாலான உடல்) வெறும் லிங்கம் என்று இந்த உலகத்தில் எதுவுமே இல்லை.அப்படி உள்ளது ஒன்றே ஒன்றுதான் அது பிரபஞ்சத்தின் அவ்யக்த நிலை.அதாவது ஒடுக்கநிலை. இந்த பிரபஞ்சம் ஒட்டுமொத்தமும் ஒடுங்கும்போது, பும்லிங்கம்,ஸ்திரீலிங்கம்,நபூம்சகலிங்கம் மூன்றும் ஒடுங்கி லிங்கமாகிறது.
-
ஆகவே லிங்கம் என்பது இந்த உலகத்தை சார்ந்தது அல்ல. சித்தர்கள் தனது உடலை, லிங்கமாக மாற்றுகிறார்கள்.அதாவது இயக்கமற்ற நிலைக்கு கொண்டுவருகிறார்கள்.அவ்வாறு லிங்க நிலைக்கு அவர்கள் வந்தால் பிரம்மஞானம் ஏற்படுகிறது.அதுதான் முக்தி
-
இவ்வாறு சித்தர்கள் சமாதி அடையும்போது அவர் லிங்கமாக மாறிவிட்டார் என்பதை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காக அவர் சமாதியடைந்த இடத்தில் ஒரு ஸ்தூபியை நடுவார்கள்.அதற்கு லிங்கம் என்று பெயர்.
-
சித்தர்கள் சமாதியடைந்த இடத்தில் புனிதமான சூழல் நிரம்பியிருப்பதால் அந்த இடம் வழிபடும் இடமாக மாற்றப்பட்டது.அந்த லிங்கம் வழிபடும் பொருளானது.பிற்காலத்தில் இந்த லிங்கம் பல மாறுதல்களை பெற்று,பல பெயர்களையும் பெற்றுள்ளது.
-
உண்மையில் நாம் இப்போது பயன்படுத்தும் லிங்கம் என்பது ஆண்குறியை குறிக்க பயன்படுத்தப்பட்ட சின்னம் அல்ல. பிரபஞ்சத்தின் ஒடுக்கநிலையை குறிக்க,உடலின் இயக்கமற்ற நிலையை குறிக்க பயன்படுத்தப்பட்ட ஒன்று
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர்(28.5.2018)
-

Friday, 25 May 2018

ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரமா?



ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரமா?
---------------
யார் ராமனாக வந்தாரோ,யார் கிருஷ்ணனாக வந்தாரோ அவரே இந்த முறை ராமகிருஷ்ணராக வந்திருக்கிறார் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார்.ஆனால் அதை அப்போது பலரும் நம்பவில்லை.அவருடன் கூடவே இருந்த சுவாமி விவேகானந்தர்கூட இதை கடைசிவரை நம்பவில்லை.ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் அவரிடம் நீங்கள் அவதாரமா? என்று தன்னடைய சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.ஸ்ரீராமகிருஷ்ணர் அவரது சந்தேகத்தை தெளிவுபடுத்திய பின்னரே விவேகானந்தர் நம்பினார். விவேகானந்தரின் வாழ்க்கையில் பிற்காலத்தில் பல தவங்கள் புரிந்தபிறகுதான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்பதை ஏற்றுக்கொண்டார்.
-
ஸ்ரீராமர் ஒரு அவதாரபுருஷர் என்று அவரது காலத்தில் வெறும் 12 முனிவர்கள் மட்டுமே நம்பினார்கள்.மற்றவர்கள் அவர் ஒரு சாதாரண மனிதன் என்றே நினைத்தார்கள்.ஸ்ரீகிருஷ்ணர் ஒரு அவதாரம் என்பதை அர்ஜுனனும்,விதுரரும்,பீஷ்மரும் வேறு சிலரும்தான் நம்பினார்கள். மற்றவர்கள் அவரை சாதாரணமானவர் என்றே நினைத்தார்கள். ஸ்ரீராமகிருஷ்ர் ஒரு அவதாரம் என்பதை அவரது காலத்தில் சிலர்தான் நம்பினார்கள்.
-
மற்ற மகான்களுக்கும் இந்த அவதாரபுருஷர்களுக்கும் அப்படி என்ன வேறுபாடு? இவர்கள் என்ன ஆன்மீகத்தில் யாரும் அடையாத உயரத்தை அடைந்தவர்களா? எத்தனையோ மகான்கள் உயர்ந்த நிலையை அடையவில்லையா? அவர்களை போல ஸ்ரீராமகிருஷணரும் ஒரு மகான்தானே அவரை ஏன் உயர்த்திப்பிடிக்க வேண்டும்?என்று நீங்கள் கேட்கலாம்.
-
இவர் இந்த உலகத்திற்கு வராவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும் என்ற நிலை வரும்போது,அதை சரிசெய்ய யார் வருகிறார்களோ அவர்கள்தான் அவதாரம்.இதுதான் அவதாரத்தைப்பற்றிய சுருக்கமான முடிவு.அப்படி வருபவர்கள் மிகசிலரே.ராமர்,கிருஷ்ணர்,புத்தர் என்று இந்த எண்ணிக்கை மிகக்குறைவுதான்.இவர்கள் வெறும் மகான்களாக இருப்பவர்கள் அல்ல,உலகத்தையே ஆட்டிவைக்கும் அளவு திறமையானவர்கள்.உலகம் அவர்கள் கைப்பிடியுள் அடங்கி கிடப்பதுபோல இருக்கும்.ஸ்ரீராமகிருஷ்ணரின் சக்தி என்ன என்பதை உலகம் இனிமேல்தான் காண இருக்கிறது.
-
இந்த முறை அவதாரம் சத்வ குணத்தில் வந்துள்ளது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறியிருக்கிறார்.அதனால்தான் அதன் செயல்பாடு கிருஷ்ணர் மற்றும் ராமரின் செயல்பாடு போல இல்லாமல்,கண்ணுக்கு தெரியாத வகையில் வேலைசெய்கிறது.
-
ஸ்ரீராமகிருஷ்ணர் அடைந்த பிரம்மஞானத்தை இந்தியாவில் உள்ள எத்தனையோ மகான்கள் அடைந்திருக்கிறார்கள்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.அந்த மகான்கள் காட்டிய பாதையில் சென்றால் முக்தி நிச்சயமாக கிடைக்கும் அதிலும் சந்தேகம் இல்லை.அவர்களை பலர் பின்பற்றி வருகிறார்கள்.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.அந்த மகான்கள் வந்தாலும் வராவிட்டாலும்  உலகத்தில் எந்த பெரிய மாற்றமும் நிகழாது,அது எப்போதும் போலவே நடந்துகொண்டிருக்கும். ஆனால் அவதாரபுருஷர்கள் வராவிட்டால் இந்த உலகம் அழிந்துவிடும்.
-
அப்படி ஸ்ரீராமகிருஷணர் என்ன செய்துவிட்டார்?
-
இந்த உலகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் ஆபத்தாக கருதப்படுவது மதமோதல்கள்.மதமோதல்கள் காரணமாகவே அடுத்த உலகப்போரும் வர இருக்கிறது.இதுவரை நடந்துகொண்டிருக்கும் குண்டுவெடிப்புகளுக்கு காரணம் மதம்தான். இந்த உலகத்தில் நடக்கும் இனமோதல்களுக்கு பின்னணியில்கூட மதம் இருக்கிறது.அது தற்போது இன்னும் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
-
பொதுவாக மக்கள் என்ன நினைக்கிறார்கள்? எங்கள் மதத்தை பின்பற்றுங்கள் அப்போதுதான் சொர்க்கம் கிடைக்கும் அல்லது முக்தி கிடைக்கும் இல்லாவிட்டால் நரகம்தான் கிடைக்கும் என்பது பொதுவாக சொல்லப்படும் கருத்து.இது மதமோதல்களுக்கு காரணமாக இருக்கிறது. தற்காலத்தில் தோன்றிய பிரிவுகளாக இருந்தால்கூட எங்கள் நெறியே அல்லது எங்கள் சங்கமே எங்கள் சபையே சுத்தமானது.அதை பின்பற்றினால்தான் முக்தி கிடைக்கும்.மற்றவை சரியில்லை என்றே பேசுகின்றன.இதற்கு காரணம் அந்த பிரிவை சேர்ந்தவர் ஒரு பாதை வழியாக சென்று ஞானம் பெற்றிருப்பார்.பிறகு அதையே மற்றவர்களுக்கும் போதிப்பார்.அவர் மறைந்த பிறகு அவரது சீடர்கள் இது ஒன்றே சிறந்தது.மற்றது ஒன்றும் உதவாது.எங்கள் மகானே உயர்ந்தவர் இவர்தான் சற்குரு,இவரே ஒளிக்கெல்லாம் ஒளி, என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
-
எங்கள் நெறியில் சேருங்கள்.அப்போதுதான் காப்பாற்றப்படுவீர்கள் என்றே உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் மதற்பிரிவுகளும் பேசுகின்றன.இதை ஏற்காதவர்களை வெறுக்கவும்.முடிந்தால் குண்டுவைத்து கொல்லவும் அவைகள் முனைந்து ஈடுபடுகின்றன.இதுதான் தற்போதுள்ள நிலைமை.
-
ஸ்ரீராமகிருஷ்ணர் முதலில் காளிதேவியின் தரிசனத்தைப் பெற்றார். அதன்பிறகு வைணவ மதத்தை பின்பற்றி அதில் கூறப்பட்டுள்ள பயிற்சிகளை முறையாக கைக்கொண்டு அதன் அறுதி நிலையை மிக குறுகிய காலத்தில் அடைந்தார்.அதன்பிறகு சாக்த மதத்தை பின்பற்றி தந்திர சாதனைகள் மேற்கொண்டு அதில் உச்சத்தை அடைந்தார்.ராமரை முழுமுதற் தெய்வமாக பின்பற்றும் ராமபிரிவை மேற்கொண்டார்.அத்வைதத்தை பயிற்சி செய்து அதன் நிறைவை அடைந்தார்.இவ்வாறு இந்தியாவில் அந்த காலத்தில் இருந்த எல்லா மதங்களையும் அவர் பயிற்சி செய்தார்.புத்தகத்தை படித்து இதை பயிற்சி செய்யவில்லை. அந்த அந்த மதத்தை சார்ந்த குருமார்களை குருவாக ஏற்று அவர்கள் காட்டிய வழியில் சென்று பயின்றார்
-
அத்தோடு நிற்காமல் வெளிநாட்டு மதங்களான கிறிஸ்தவம்,முஸ்லீம் மதங்களையும் உரிய குருவின் மூலம் பயின்றார்.தனக்கென்று புதிய பிரிவை அவர் உருவாக்கவில்லை.தனக்கென்று புதிய பாதையை காட்டவில்லை. ஏற்கனவே இருந்த அனைத்தையும் பயிற்சி செய்து இவைகள் அனைத்தும் உண்மைதான் என்று அனுபவத்தில் அறிந்தார்.
-
அனைத்து மதங்களும் உண்மையை நோக்கியே செல்கின்றன.இதில் எனது மதமே உயர்ந்தது மற்ற மதங்கள் தாழ்ந்தது என்று கூறுவது தேவையற்றது என்பதை அவர் அனுபவப்பூர்வமாக அறிந்தார். மற்ற மதங்களும் உண்மைதான் என்று எல்லா மகான்களும் கூறுகிறார்கள்.ஆனால் அவர்கள் அதை பயிற்சி செய்யவில்லை.அந்த மதங்களை கடைபிபடிக்கவில்லை.இதுதான் ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் மற்ற மகான்களுக்கும் உள்ள வேறுபாடு
-
மற்ற மகான்கள் தங்களை பின்பற்றுபவர்களுக்கு ஒரு புதிய பாதையை காட்டுகிறார்கள்.பழைய பாதைகள் ஒத்துவராது,இனிமேல் நான் காட்டிய புதிய  பாதையில் செல்லுங்கள் என்று சீடர்களுக்கு கட்டளையிடுகிறார்கள்.ஆனால் இங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் புதிய பாதை எதையும் கூறவில்லை.ஏற்கனவே இருக்கின்ற அனைத்து மதங்களும் உண்மைதான்.அதை உரிய சிரத்தையோடு முறையாக பின்பற்றினாலே போதும் என்று கூறுகிறார்.இது மிகப்பெரிய வேறுபாடு இல்லையா?
-
இங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் மத சண்டைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறார் உலகில் மதம் தொடர்பான சண்டைகள் இனிதேவையில்லை. உனது மதம் உயர்ந்தது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை மற்ற மதங்களும் உயர்வானதுதான்.மதச்சண்டைகளை அவர் கண்டிக்கிறார்.அதற்கான முழு உரிமையும் அவரிடம் இருக்கிறது.ஏனென்றால் அவர் அனைத்தையும் முறையாக பயின்று கடைபிடித்தபின்  கூறுகிறார்.
-
இந்த உலகத்தை காத்துக்கொண்டிருக்கும் அந்த சக்தி இந்த முறை ஸ்ரீராகிருஷ்ணராக அவதரித்து,இந்த உண்மையை உலகிற்கு போதித்துள்ளது.இனி வரும் காலம் அமைதியாக இருக்க வேண்டுமானால்,இது பின்பற்றப்பட வேண்டும். உலகம் அமைதி பெறட்டும். வெறுப்பு வேண்டாம். உன் மதத்தை பெருமைப்படுத்த இன்னொரு மதத்தை வெறுக்காதே.இன்னொரு மனிதனை வெறுக்காதே .
-
சில பக்தர்கள் ஸ்ரீராமகிருஷ்ணரை தனிபிரிவாக கருதுகிறார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணர்-சாரதாதேவி பிரிவு,ராமகிருஷ்ண சங்கம் என்று தங்களுக்குள் ஒரு பிரிவை ஏற்படுத்திக்கொண்டு,மற்ற பிரிவினரிடம்  வேறுபாட்டை காட்டுகிறார்கள்.இது முற்றிலும் தவறு.ஸ்ரீராமகிருஷ்ணர் எந்த பிரிவையும் ஏற்படுத்தவோ,தனக்கென்று புதிய மதத்தை ஏற்படுத்தவோ வரவில்லை என்பது சுவாமி விவேகானந்தரின் ஆணித்தரமான கருத்தாகும். ஸ்ரீராமகிருஷ்ணரை குருவாகவோ,கடவுளாகவோ ஏற்றுக்கொண்டு அதை பின்பற்றலாம்.ஆனால் எக்காலத்திலும் அது மற்ற நெறிகளைப்போல தனிநெறி தனி பிரிவு என்று கருதினால் நீங்கள் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.அது மட்டுமல்ல அவரது அவதார நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
-
வெறும் ஒருசெய்தியை மட்டும் சொல்லிவிட்டு ஸ்ரீராமகிருஷ்ணர் என்ற அவதாரம் மறைந்துவிட வில்லை. அவரது செய்தியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக சுவாமி விவேகானந்தர் என்ற ஒரு மகானை தோன்றுவித்தார் அந்த சக்தி. அத்துடன் அது முடிந்துவிட்டதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் தொடர்ந்து வேலைசெய்துகொண்டே இருப்பார்.எங்கெல்லாம் அமைதியும் சமாதானமும் தேவையோ அங்கெல்லாம் உன்னதமான மனிதர்களை உருவாக்கி அனுப்பிக்கொண்டே இருப்பார். இனி உலகத்தில் மதச்சண்டை என்பதே இல்லை என்ற நிலை வரும்வரை பலரை அவர் உருவாக்குவார்.அவர்களை உலகமெங்கும் அனுப்பிவைப்பார். அவதாரம் என்பதே உலகத்தை அழிவிலிருந்து காப்பதுதான்.
-
அவரது கருவியாக இருக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அது பெரும்பேறு.நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் அதனால் மிகுந்த பலனை அடைவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர்(25-5-2018)
-

Tuesday, 22 May 2018

இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?


இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?
-
சிலர் எதிர்காலத்தை கணித்து சொல்வதை பார்க்கிறோம்.சிலர் 500 ஆண்டுகளுக்கு முன்பே பலவற்றை கணித்திருக்கிறார்கள்.அதன்படிதான் நடக்கவும் செய்கிறது.எதிர்காலத்தில் நடப்பதை அவர்கள் எப்படி அறிந்துகொண்டார்கள்?
-
இந்த உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன.ஒடுக்கம் அல்லது கல்பம் முடிய இன்னும் பலகோடி ஆண்டுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.உதாரணமாக நாம் இதை 10 கோடி ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்வோம்.ஏற்கனவே பாதி முடிந்துவிட்டது.கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அப்படியே யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருக்குமா?
-
பழைய காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் முற்றிலும் யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருந்தால் எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை சொல்ல முடிகிறது. எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு பின்பு நடக்க இருப்பதை சொல்ல முடிகிறது?
-
எப்படியென்றால் இவைகள் பிரபஞ்சமனம் அல்லது மஹத் என்ற நினைவுகளில் இருக்கும்.இந்த கல்பத்தின் 10 கோடி ஆண்டுகள் ழுழுவதும் அந்த நினைவுகளில் இருக்கும்.அவைகளில் பாதியை நாம் கடந்திருக்கலாம்.மீதி என்ன நடக்க வேண்டும் என்பது அங்கே இருக்கும்.அதன்படி எதிர்காலத்தில் நடக்கும்
-
ஒரு உதாரணம் பார்ப்போம்...ஒன்றாம் வகுப்பு படிக்க சிலர் செல்வதாக வைத்துக்கொள்வோம்.அங்கு இதற்கு முந்தைய வருடம் எப்படி சொல்லிக்கொடுத்தார்களோ,அதேபோல் இந்த வருடமும் சொல்லிக்கொடுப்பார்கள்.அடுத்த வருடமும் அதேபோல்தான்.ஆனால் ஆனால் பாடம் படிக்க வரும் மாணவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.பாடம் நடத்துபவர்கூட மாறலாம்.ஆனால் ஒன்றாம் வகுப்பு எப்படி நடக்கவேண்டும் என்று ஏற்கனவே நிச்சயிக்கப்ட்டுள்ளதோ அதேபோல்தான் எப்போதும் நடக்கும்.
-
அதேபோல் இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே ஏற்கனவே நிச்சயிக்கப்ட்டுள்ளன.அதில் வந்திருக்கும் ஆன்மாக்கள் மட்டும் வேறு.சம்பவங்கள் அதேதான்.இந்த 10 கோடி ஆண்டுகளில் நடக்கக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவைதான்
-
தனி மனிதனின் எதிர்காலம் முழுவதும் ஏற்கனவே விதிக்கப்பட்டதுபோல்தான் நடக்கிறதா?சுயமுயற்சி என்பது வீணானதா? இது பற்றி தனியாக ஒரு கட்டுரை பின்பு தருகிறேன்.
-
நாம் மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மைதான்,கற்பனை கதையல்ல என்பது எப்படி தெரியும்? ஒரு மனிதன் யோகப்பாதையின் வழியாக சென்று முக்தியடையவேண்டுமானால் பிரபஞ்சத்தின் வாழ்க்கை முழுவதையும் ஒரே ஆயுளில் வாழ்ந்து முடிக்க வேண்டும்.ஏற்கனவே நடந்து முடிந்த 5 கோடி ஆண்டுகளையும்.இனி நடக்க இருக்கின்ற 5 கோடி ஆண்டுகள் வாழ்க்கையையும் அவன் இந்த ஒரே பிறவியில் வாழ்ந்து முடித்திருக்க வேண்டும்.இதன் மூலம் அவன் இவைகளைபற்றி தெரிந்துகொள்கிறான்.அவரது வாழ்க்கை அனுவத்தை அடிப்படையாக கொண்டே இந்த கருத்து உண்மை என்பதை நாம் அறிகிறோம்.
-
இவ்வாறு 10 கோடி ஆண்டுகள் வாழ்க்கையையும் முழுவதும் வாழ்ந்தபின்தான் இறைவனாகின்ற தகுதியை அந்த யோகி பெறுகிறான்.பிரபஞ்ச மனத்தை பற்றி தெரிந்தவனாகிறான்.அப்படிப்பட்டவன்தான் 500 ஆண்டுகளுக்கு பின்பு என்ன நடக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை சொல்ல முடியும்.ஆனால் இந்த விபரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினால் அவனால் முக்திபெற முடியாது.உயரத்தை எட்டமுடியாது.எனவே சூட்சுமமாக சில குறிப்புகளை எழுதிவைத்துவிட்டு இறந்துபோகிறார்கள்.மற்றவர்கள் ஏதோ அதிலிருந்து சிலவற்றை தெரிந்துகொள்கிறார்கள்
-
இந்த கல்பத்தின் ஆயுள் 10 கோடி என்று ஒரு உதாரணத்திற்கு கூறினேன்.இந்த கல்பம் முடியும்போது.இந்த பிரபஞ்சம் ஒடுங்கிவிடும்.பிறகு அடுத்த கல்பம் துவங்கும் 10கோடி ஆண்டுகள் நடக்கும்.பின் அது ஒடுங்கும்.இப்படி லட்சக்கணக்கான முறை நடந்திருக்கிறது.இன்னும் லட்சக்கணக்கான முறை நிகழும்.இதற்கு ஒரு முடிவே இல்லை.
-
இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கல்பம் என்பது ஏற்கனவே லட்சக்கணக்கான கல்பங்களுக்கு முன்பு இருந்த ஒரு கல்பத்தின் மறுஉருவாக்கம்தான். இப்போது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முன்பு உள்ள சில கல்பத்தில் ஏற்கனவே நடந்ததுதான்.ஆனால் இதில் பயணம்செய்யும் ஆன்மாக்கள்தான் வேறுபடுகின்றன.
-
ஒரு ராட்டினம் இருக்கிறது.அதில் பல தொட்டில்கள் இருக்கின்றன.அது எப்படி சுழலவேண்டும் என்பதும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதில் பயணம் செய்பவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.தொட்டில்கள் மாறாது.உடல் என்பது தொடடில். உங்கள் உடம்பும் என் உடம்பும் ஒரு தொட்டில்.தொட்டில் மாறாது பயணிப்பவர்கள் மாறுகிறார்கள்.உங்களது உடலும் எனது உடலும் புதிதாக இப்போது படைக்கப்பட்டதல்ல. இதேபோன்ற உடல் ஏற்னகவே பலமுறை இந்த உலகத்தில் பிறந்துள்ளது.ஆனால் அந்த உடலுக்குள்ளே பயணம் செய்த ஆன்மாக்கள்வேறு
-
இந்த உலகத்தின் கடந்த காலம் எதிர்காலம் அனைத்தையும் அறிந்தவர் யார்?இந்த உலகத்தின் பதிவுகள் அனைத்தும் ஒரு பெரிய ஹார்ட் டிஸ்க்-ல் ஏற்கனவே பதியப்பட்டுள்ளது.அதற்கு பிரபஞ்சமனம் அல்லது மஹத் என்று பெயர்.. அந்த ஹார்ட்டிஸ்க்-ல் என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.இவை அனைத்தையும் அறிய வேண்டிய அவசியம் இல்லை.ஒருவன் அவ்வாறு அதை அறிவதில் ஆர்வம்காட்டினால் .அதுவே அவனுக்கு ஒரு தடையாகமாறிவிடும்.ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.
-
சுவாமி விவேகானந்தரின் கருத்தை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை
-
சுவாமி வித்யானந்தர்(23-5-2018)
-

Monday, 21 May 2018

கங்கையில் குளித்தால் புனிதம், முக்தி என்றெல்லாம் பேசப்படுகிதே! இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா?


கங்கையில் குளித்தால் புனிதம், முக்தி என்றெல்லாம் பேசப்படுகிதே! இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா?
-
இதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்துக்கள் குறிப்பிடும் தன்மாத்திரைகள் என்ற ஒரு கருத்தை பற்றி சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
-
ஒரு பூவிலிருந்து நறுமணம் அதன் அருகில் நிற்கும் ஒருவனுக்கு வருகிறது. அது எப்படி வருகிறது? காற்றில் வருகிறது என்று எளிதாக சொல்வீர்கள். ஆனால் இன்னும் ஆழமாக விவரிக்க வேண்டும். பூவின் மீதுள்ள நுண்துகள்கள் காற்றில் கலந்து மனிதனின் மூக்கை அடைந்து, அவனது மூக்கில் உள்ள நுண்பகுதிக்குள் செல்கிறது. அதன் பின்னர் தான் மனிதன் அதை உணர்கிறான்.
-
பாடல் எவ்வாறு மனிதனை அடைகிறது. இசைக்கருவியிலிருந்து எழும் அதிர்வு அலைகள் காற்றை அதிரவைக்கின்றன.அவைகள் தொடர்ந்து அதிர்ந்து அதிர்ந்து மனிதனின் காதில் படுகிறது. அங்கே காதின் நுண்உறுப்பு அதிர்கிறது, அந்த பாடலை உணர்கிறது.
-
சூரியனிலுள்ள ஒளிக்கதிர்கள் எவ்வாறு நமது கண்களை அடைகின்றன? அதிலிருந்து புறப்படும் வெப்பம் அருகில் உள்ள அணுக்களை ஒளிரச்செய்கிறது,அது அடுத்த அணுவை ஒளிரச்செய்கிறது.இப்படியே நுண்ஒளிகள் பல லட்சம் மைல்கள் பயணம் செய்து நமது கண்ணை அடைகின்றன. 
-
இவ்வாறு கண்களுக்கு ஒளியும், காதுகளுக்கு ஒலியும், மூக்கிற்கு மணமும், நாக்கிற்கு சுவையும், தோலிற்கு உணர்ச்சியும் என்று ஐந்து தன்மாத்திரைகள் உள்ளன. இந்த ஐந்தும் மனிதனை அடைகிறது.
-
இவைகளை சாதாரண கண்களால் காணமுடியாது. ஒளி ஒரு பொருளில் படும்போது தான் அதை நம்மால் காணமுடியும். ஒலி காதுகளை அடைந்த பிறகு தான் அதை கேட்க முடியும், அதை போல் மணமும் மூக்கை அடைய வேண்டும். இவ்வாறே மற்றவையும். இவ்வாறு இந்த பிரபஞ்சம் முழுவதும் ஐந்து தன்மாத்திரைகள் நிறைந்துள்ளது.
-
அதே போல் ஒவ்வொரு மனிதனும், ஐந்து தன்மாத்திரைகளை தன்னிடமிருந்து வெளியிடுகிறான். அவன் ஒளியை வெளியிடுகிறான். காற்றை வெளியிடுகிறான், ஒலியை, மணத்தை அதேபோல் உணர்ச்சியை வெளியிடுகிறான். அவைகள் பிரபஞ்சத்தில் கலந்து மற்றவர்களை அடைகிறது. இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் அதே போல் தன்னை சுற்றி இவ்வாறு வெளியிடுகின்றன.இவைகளை யாராலும் தடுக்க முடியாது.
-
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தொடும்போதோ, அல்லது இவன் எச்சில் இன்னொரு மனிதனில் படும்போதோ, ஒருவனது உடல் அணுக்கள் இன்னொருவனை அடைகிறது. ஒரு மனிதனின் உடலில் உள்ள தோல்களிலிருந்து லட்சக்கணக்கில் அணுக்கள் வெளிப்பட்டு பிரபஞ்சத்தில் கலக்கின்றன. இவ்வாறே உலகிலுள்ள எல்லா உயிர்களிலுமுள்ள அணுக்கள் பிரபஞ்சத்தில் கலந்து பயணிக்கின்றன. 
-
இவைகள் ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலை அடைகின்றன. நல்லவன் வாழும் இடத்தில் ஒரு தீயவன் சில நாட்கள் வாழ்ந்தால், அவன் படிப்படியாக நல்லவனாக மாறுகிறான்.இவன் அவர்களிடம் எதையும் பேசவேண்டியதில்லை.அவர்களும் இவனிடம் எதையும் பேச வேண்டியதில்லை.நல்லவர்களது உடல் அணுக்கள் தீயவனின் உடலில் கலந்து,அவனது குணத்தை மாற்றுகிறது.அதேபோல் தீயவனின் உடல் அணுக்களால் நல்லவனுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.அளவுக்கு அதிகமாக இதை நீட்டியதன் விளைவாக தீண்டாமை என்ற கோட்பாடு உருவாகியது.
-
இப்போது கங்கை விசயத்திற்கு வருவோம்.
-
கங்களை நதி ஆரம்பமாகும் இடங்களில் பல துறவிகளும், புண்ணியவான்களும் வாழ்கிறார்கள்.அது மட்டுமல்ல கங்கை நதி பாய்ந்து வரும் பல்வேறு இடங்களில் பல்வேறு புனித இடங்கள் இருக்கின்றன.இங்கேயும் பலர் தவ வாழ்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் தினமும் கங்கையில் குளிப்பது வழக்கம். இவர்களது உடல் அணுக்கள் கங்கையில் கலந்து பயணிக்கிறது. 
-
ஒரு மனிதனின் கண்களால் காணமுடியாத நுண்அணுக்களை, DNA வை எடுத்து பல மனிதர்களை உருவாக்க முடியும் என்பது தற்கால விஞ்ஞானம். அப்படியானால் இந்த ஒவ்வொரு செல்களிலும் ஒரு மனிதனின் குணங்கள் படிந்துள்ளன என்று ஏற்றுக்கொள்வதில் என்ன சிக்கல்? கங்கையில் குளிக்கும் மகானின் உடலிலிருந்து வெளிப்படும் உடல்அணுக்களில் அவரது குணம் இருக்காது என்று நீங்கள் எதை வைத்து கூறுகிறீர்கள்? ஆகவே விஞ்ஞானத்தின் படி பார்த்தால், ஒவ்வொரு மனிதலிருந்தும் கோடிக்கணக்கான அணுக்கள் உடலிலிருந்து வெளிப்படுகிறது. அவைகளில் அவனது குணமும் படிந்திருக்கிறது.
-
புண்ணியவான்களின் உடலிலிருந்து வெளிப்படும் அணுக்களில் புண்ணியமும், பாவிகளின் உடலிலிருந்து வெளிப்படும் அணுக்களில் பாவமும் நிறைந்திருக்கும் என்று நமது முன்னோர்கள் சொல்வது சரிதான்.
-
அப்படியானால் கங்கையில் வாழும் மீன்களும் மற்ற உயிர்களும் புண்ணியவான்களாகியிருக்க வேண்டுமே என்று நீங்கள் கேட்கலாம்.
-
இந்த உலகில் எத்தனையோ தன்மாத்திரைகள் பயணம் செய்கின்றன. அவைகள் தங்களுக்கு ஏற்ற இடத்தை அடையும் வரை தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கும். ஒரு பூச்சியின் ஓசைகளையோ, மணத்தையோ மனிதனால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம், அல்லது அவனது காதுகளுக்கு எட்டாமல் இருக்கலாம். ஆனால் அதை சார்ந்துள்ள இன்னொரு பூச்சி அதை அறிந்து கொள்ளும். ஒரு மனிதனின் உணர்வுகளை இன்னொரு மனிதன் தான் அறந்துகொள்ள முடியுமே தவிர மற்ற விலங்குகளால் புரிந்துகொள்ள முடியாது. 
-
கங்கையில் தொடர்ந்து பயணிக்கும் புனித தன்மாத்திரைகள்,அதில் குளிக்கும் மனிதர்களை அடைந்து அவர்களை புனிதப்படுத்துகிறது.
-
ஆனால் இங்கே தற்போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் ஒன்று உள்ளது.
-
கங்கையால் எப்படி புனிதத்தை தாங்கி செல்ல முடியுமோ, அதே போல் பாவத்தையும் தாங்கி செல்ல முடியும். புண்ணிவான்கள் எண்ணிக்கையில் குறைந்து பாவிகள் எண்ணிக்கையில் அதிகரித்தால், கங்கையில் குளிப்பதால் புண்ணியம் கிடைப்பதற்கு பதிலாக பாவம் கிடைக்கலாம். ஏனென்றால் கோட்பாடு ஒன்று தான். கங்கை மனித உடல் அணுக்களை சுமந்துவருகிறது. அதில் குளிப்பவர்கள் எப்படியோ அவர்களை பொறுத்து அதன் தன்மை மாறுகிறது.
-
தற்போது கங்கையில் பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் கலக்கின்றன. குப்பைகள் கொட்டப்படுகின்றன. இயற்கை சூழ்நிலை மாசுபட்டுள்ளது. இந்த நிலையில் கங்கையின் புனிதத்தன்மை கெட்டுபோய் உள்ளது. தற்போது கங்கையில் குளிப்பவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. முற்காலத்தில் இருந்தது போல அதன் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட்டால், அதில் குளிப்பவர்களுக்கு புண்ணியம் கிடைக்கலாம். முக்திகூட கிடைக்கலாம். ஆனால் அதற்கு கங்கை காரணமல்ல. அதில் நீராடும் புண்ணியவான்கள் தான் காரணம்.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(15-12-2016)

இனிமேல் எதிர்காலத்தை கணித்து பிறரிடம் கூறக்கூடாது

இனிமேல் எதிர்காலத்தை கணித்து பிறரிடம் கூறக்கூடாது 

அப்படி கூறினால் அவைகள் நிறைவேறாமல் போகலாம்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சில நேரம் காளியிடம் கோபித்துக்கொள்வார்


ஸ்ரீராமகிருஷ்ணர் சில நேரம் காளியிடம் கோபித்துக்கொள்வார். உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று கேட்கும் அளவுக்கு அவரது கோபம் அதிகமாக இருக்கும்.
-
இதை எப்படி புரிந்துகொள்வது?
-
ஸ்ரீராமகிருஷ்ணர் மூன்று நிலைகளில் வாழ்ந்தார். நான் காளியின் குழந்தை,அவளது கருவி,அவன் இயக்குவதுபோல் இயங்குகின்றேன் என்ற நிலை ஒன்று. இது துவைதநிலை. இந்த நிலை என்பது தாயை சார்ந்து வாழும் குழந்தையின் நிலைபோன்றது
-
சில நேரங்களில் அவரை பக்தர்கள் காளியாக நினைத்து வழிபடுவார்கள்.அவரது பேச்சு காளியின் பேச்சு என்றே கருதுவார்கள்.. மிக உயர்ந்த ஞானம் அதிலிருந்து வெளிப்படும்.அந்த நிலையில் மற்றவர்களுக்கு ஆன்மீக விழிப்பை உண்டாக்குவார்.நானும் காளியும் ஒன்றுதான் என்ற நிலை.யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய். இந்த நிலையை புரிந்துகொள்ள விசிஷ்டாத்வைத தத்துவத்தை படிக்க வேண்டும்
-
மூன்றாவது நிலையில், உடலில் எந்த அசைவும் இருக்காது.மூச்சுகூட நின்றிருக்கும்.சக்தி மொத்தமும் ஒடுங்கியிருக்கும்.அப்போது சமாதி நிலையில் இருப்பார்.அப்போது காளியையும் கடந்து மேலே சென்றிருப்பார்..இது அத்வைத நிலை.
-
காளியிடம் ஏன் கோபப்பட்டார்? ஸ்ரீராமகிருஷ்ணரின் உடலை காளி ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டாள்.சிலருக்கு உதவவேண்டும் என்று ராமகிருஷ்ணர் நினைப்பார்,காளி அதை தடுத்துவிடுவாள். சிலருக்கு உதவக்கூடாது என்று நினைப்பார்,ஆனால் உதவும்படி ஆகிவிடும்.சிலரிடம் ஏதாவது பேச நினைப்பார் காளி அவரது வாயை மூடிவிடுவாள்.இப்படி காளியின் கட்டளையை மீற முடியாமல் இருப்பார்.
-
காளி அவரை ஓய்வுகொள்ளவிடவில்லை.தொடர்ந்து பக்தர்களை அனுப்பிக்கொண்டே இருந்தாள்.அவர்களிடம் பேசி பேசியே அவருக்கு தொண்டையில் புண் வந்துவிட்டது. நீ அளவுக்கு அதிகமாக வேலைவாங்கினால் இந்த உடலை வீழ்த்திவிட்டு பிரம்மத்தை அடைய தன்னால் முடியும் என்று கோபித்துக்கொள்வார்.மறுகணமே நீயே எல்லாம்,நீ எப்படி இயங்குகிறாயோ அப்படியே இயங்குகிறேன் என்பார்.
-
இந்த உடலை இறைப்பணிக்கு என்று அர்ப்பணித்துவிட்டால்.பின்னர் திரும்பப்பெற முடியாது.நமது விருப்பப்படி நடந்துகொள்ள முடியாது.தியானத்தில் மூழ்கியிருக்கலாம் என நினைத்தால்,அந்த சக்திவிடாது. உடலிலன் மூலம் ஏதாவது பணிகளை செய்ய வற்புறுத்திக்கொண்டே இருக்கும்.
-
ராஜயோகிகள் யாருடைய பாவத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்பதால் நோய் வராது.ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் போன்றவர்கள் காளி யாரை அழைத்துவருகிறாளோ,அவர்களது பாவத்தை ஏற்றுக்கொண்டு துன்பப்பட வேண்டியிருக்கும்.காளியின் கட்டளையை மீற முடியாது.
-
காளயின் கட்டுப்பாட்டில் இனி இயங்க முடியாது என்று கூறினால்,அதன்பிறகு வாழமுடியாது. வாழ்க்கை முடிந்துவிடும். முக்தி கிடைத்துவிடும்.
-
யாருக்கு முக்தியில் நாட்டம் இல்லையோ அவர்களைதான் அந்த சக்தி பயன்படுத்திக்கொள்ளும்.ஆனால் அந்த உடல் புனிதமாக,இறைவன் வந்து விளையாடும்,பக்தர்களை சந்திக்கும் வரவேற்பறையாக இருக்க வேண்டும்.
-
சுவாமி வித்யானந்தர்
-

எந்த கோவிலுக்கும் சென்றதில்லை.


இந்துமதத்தில் உள்ள எல்லா தெய்வங்களும் உண்மை என்று நம்புகிறேன்.பிற மதத்தில் உள்ள ஏசுவும்,அல்லாவும்கூட இருப்பதாக நம்புகிறேன்.ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்த வழிபாடுகளும்,பூஜைகளும் செய்ததில்லை.எந்த கோவிலுக்கும் சென்றதில்லை.இனிவரும் காலங்களிலும் இந்த நிலைதான் நீடிக்கும்.கோவிலுக்கு சென்று வழிபடாததால் பல இந்துக்கள் என்மேல் கோபப்படலாம்.அவர்களை திருப்திசெய்ய விரும்பவில்லை.
-
யாரும் கோவிலுக்கு சென்று வழிபடுவதை நான் தடுக்கவில்லை.தவறு என்றும் கூறவில்லை.எனக்கு அதில் ஈடுபாடு இல்லை அவ்வளவுதான்.வாழும் தெய்வங்களான மனிதர்களிடம் அன்பு செய்வதையே விரும்புகிறேன்.எனது பிரச்சாரமும் அதுசார்ந்தே இருக்கும்.
-
சுவாமி வித்யானந்தர்

மனித இனத்தில் மட்டும் பெண் ஏன் அழகாக படைக்கப்பட்டுள்ளது?


விலங்குகளில் ஆண் இனம் அழகாக படைக்கப்பட்டுள்ளபோது, மனித இனத்தில் மட்டும் பெண் ஏன் அழகாக படைக்கப்பட்டுள்ளது? ஒரு காரணம் இருக்கிறது
-
மயிலை எடுத்துக்கொள்ளுங்கள்,சிங்கத்தை பாருங்கள்,குரங்கைகூட பாருங்கள் ஆண் இனம்தான் அழகாக படைக்கப்பட்டுள்ளது.பெண் இனத்தை கவரும்படி அது படைக்கப்பட்டிருக்கிறது.எந்த ஆண் இனம் அதிக வீரமாகவும்,அழகாகவும்,கர்ஜனையாகவும் இருக்கிறதோ அதைத் தேடி பெண் இனம் வருகிறது.இவ்வாறு படைப்பு என்பது விலங்குகள் சாம்ராஜ்யத்தில் அமைந்திருக்கிறது.
-
ஆனால் மனித பிறவியைப் பொறுத்தவரை பெண்களைத் தேடி ஆண்கள் செல்வதையே பார்க்கிறோம்.ஆண்களை கவரும்படி பெண்இனம் படைக்கப்பட்டுள்ளது.
-
மனித இனத்தை பொறுத்தவரை ஆண்கள் தன்னில்தானே இன்பம் காண முடியும்.தனக்குள் ஆழ்ந்து மூழ்குவதன் மூலம் ஆன்மாவை நெருங்க முடியும். அப்படி அனைவரும் முயற்சித்தால்
மனித படைப்பே நடைபெறாமல் நின்றுவிடும் .அவனை உள்முகமாக செல்லவிடாமல் புறமுகமாக இருக்க செய்வதற்காக பெண்இனம் அழகாக படைக்கப்பட்டுள்ளது.அந்த அழகில் மூழ்கி,ஆண்கள் புற உலகத்தையே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.அக உலக இன்பத்தை மறந்துவிடுகிறார்கள்.
-
கணவனும் மனைவியும் ஒத்த மனம் உடையவர்களாக இருந்தால்,அகஉலகம்,புற உலகம் இரண்டிலும் இன்பம் காண முடியும்.
-
சுவாமி வித்யானந்தர்

அய்யா வழி யை தனிமதமாக்க வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்கள் கூறுகிறார்கள்.


அய்யா வழி யை தனிமதமாக்க வேண்டும் என்று முஸ்லீம் தலைவர்கள் கூறுகிறார்கள்.அது அய்யா வழியினருக்கு நன்மை செய்யவா அல்லது இந்துக்களை பலவீனப்படுத்தவா?
-
லிங்காயத்துக்களை தனி மதமாக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.அது லிங்காயத்துக்களின் நன்மைக்காகவா அல்லது இந்துக்களை பலவீனப்படுத்துவதற்காகவா?
-
ஈஷா அமைப்பினர் தங்களை இந்துக்கள் என்று கூறிக்கொள்ள தயங்குகிறார்கள்.நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்கிறார்கள்.எதிர்காலத்தில் இவர்கள் ஒரு கோடிபேர் இருப்பதாக வைத்துக்கொள்வோம் இவர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல,தனி மதத்தினர் என்பார்கள்.இதனால் இந்துமதம் மேலும் பலவீனமடையும்.
-
வள்ளலாரை பின்பற்றுபவர்கள்,நாங்கள் இந்துக்கள் அல்ல அனைத்து மதங்களையும் கடந்தவர்கள் என்கிறார்கள்.இவர்கள் எதிர்காலத்தில் தனிமதம் வேண்டும் என்று கேட்டாலும் கேட்பார்கள்.இது அவர்களுக்கு எந்த விதத்தில் நன்மை செய்யம்?
-
சிலர் உலக மக்களை கவர்வதற்காக நாங்கள் இந்துக்கள் அல்ல என்கிறார்கள்.இப்படியே தொடரந்து கூறினால் இந்தியாவில் உங்களுக்கு இருப்பிடம் இல்லாமல் போகலாம்
-
நீங்கள் இந்துக்கள் என்ற பொது அமைப்பிலிருந்து விலகிவிடாதீர்கள்.அது இந்தியாவின் அழிவிற்கே வழிவகுக்கும் என்கிறார் விவேகானந்தர்.எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரே ஒரு மதம்தான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவரது கூற்று ..அது இந்துமதம்தான்.அதன் பொதுவான தத்துவத்தின் கீழ் அனைத்து பிரிவினரும் ஒன்றுகூட வேண்டும் .அதில் உங்களுக்கு தயக்கம் இருந்தால் படிப்படியாக இந்தியாவில் அழிவை சந்திப்பீர்கள்.ஏற்கனவே சமண மற்றும் புத்தமதங்கள் இந்தியாவில் அழிவை சந்தித்துக்கொண்டிருக்கின்றன.
-
எதில்கால இந்தியாவிற்கு நிறைவேற்றப்பட வேண்டியவைகள் குறித்து சுவாமி விவேகானந்தர் கூறும்போது, அனைவருக்கும் பொதுவான ஒரே சட்டம் இருக்க வேண்டும். அனைவருக்கும் பொதுவான ஒரே மதம் இருக்கவேண்டும் என்கிறார்.அந்த மதத்திற்குள் ஆயிரம் பிரிவுகள் இருக்கலாம்,பரவாயில்லை.ஆனால் அவைகள் இந்து என்ற ஒரே பொதுமையத்தில் ஒன்று சேரவேண்டும்
-
நாம் நமக்குள் பிரிவினைகளை உருவாக்கிக்கொண்டு திரிந்தால் எதிரிக்குதான் லாபமே தவிர,நமக்கு அதனால் ஒரு லாபமும் இல்லை.அரசியல் ரீதியாக மட்டுமல்ல பல வழிகளில் உடனடியாக அழிவை சந்திப்பதுதான் அதன் விளைவாக இருக்கும்
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர்.(21-5-2018)
-

சுவாமி வித்யானந்தரின் சிந்தனைகள்-3



சுவாமி வித்யானந்தரின் சிந்தனைகள்-3
-
பிறர் முக்தி பெற நீ உதவினால்,உனது முக்திக்கு இறைவன் உதவுவார்
-
1.துவைதம்,2.விசிஷ்டாத்வைதம்,3.அத்வைதம் முன்று படிக்கட்டுகள்.முதல் படியை புரிந்துகொள்ளாதவனால்,மூன்றாவது படியில் ஏறமுடியாது
-
யாரை ஆட்சியில் அமர்த்தவேண்டும்.யாரை ஆட்சியிருந்து அகற்ற வேண்டும் என்று முடிவுசெய்வது மக்கள் அல்ல.அதற்கும் மேலே உள்ள சக்தி
-
உலகத்தின் சமநிலை குலைந்தால்,அதை இயற்கை சில அழிவுகளை உருவாக்கி மீண்டும் சமன்செய்துவிடும்.law of balance.3rd world war?
-
யோகிக்கு பிரபஞ்சத்தின் ரகசியம் எல்லாம் புரியும்.ஆனால் அதில் மாற்றம் செய்ய நினைத்தால், எதிர்விளைவுகளை ஏற்கவேண்டியிருக்கும்
-
விவேகானந்தரின் கருத்துக்களை முற்றிலும் புரிந்துகொள்ள யாரால் முடியும்?இன்னொரு விவேகானந்தரால் மட்டுமே முடியும்.முயற்சி செய்யுங்கள்..
-
விவேகானந்தரின் ஞானயோக கருத்துக்களை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதென்றால்,ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்
-
நீ வாழவேண்டுமானால், பிறரை வாழ வை. ஏனென்றால் அந்த பிறராக இருப்பதும் நீதான்
-
ஒரு ஆணும் பெண்ணும் உண்மையிலேயே அன்பு செய்ய முடிந்தால்,அவர்கள் உடலும்,மனமும் அழிந்துவிடும்.இருஉயிர் ஒன்றாக கலந்துவிடும்.முக்தி
-
நமது உடலை பிரபஞ்சம் அளவு விரிவு படுத்தினால் அனைத்து உலகங்களும்,உயிர்களும்,தேவர்களும் நமக்குள்ளேயே வந்துவிடுவார்கள்
-
இந்த உலகத்தில் மிகவும் இனிமையானதும்,உயர்ந்ததும் எது? அன்பு.அதற்கு உருவமில்லை. அன்பே கடவுள்
-
ஆண் புருஷன்,பெண் பிரகிருதி என்று பெயர்.புருஷன் பிரகிருதியில் கலந்தால் படைப்பு,பிரகிருதி புருஷனில் ஒடுங்கினால் முக்தி-சாங்கியம்
-
நமது மனத்திலுள்ள சந்தேகங்கள் அகல அகல நாம் அமைதியடைகிறோம் உண்மையின் பக்கத்தில் வந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்.
-
தானமாக யாரிடமிருந்தாவது எதையாவது பெற்றால் கொடுப்பவன் பாவமும் சேர்ந்து வருகிறது. ஆகவே பெறுபவன் பாக்கியசாலி அல்ல.
-
உங்களிடமிருந்து புறப்படும் தீய எண்ணங்கள் கூட்டு வட்டியுடன் மீண்டும் உங்களிடமே திரும்பி வரும்.அதை யாராலும் தடுக்க முடியாது.-விவேகானந்தர்
-
இயற்கையிலிருந்து விலகி நின்றால் அது உங்களை தொடர்ந்துவரும். நீங்கள் அதைப் பொருட்படுத்தாவிட்டால் உங்களுக்கு அடிமையாகும்-விவேகானந்தர்
-
பிரம்மச்சர்யத்தை கடைபிடித்தால் சங்கல்பம் வலிமையுள்ளதாகும். சங்கல்பம் வலிமையானால் நினைத்ததை சாதிக்க முடியும்.-விவேகானந்தர்
-
காலம் என்ற ஒன்றே மறைந்துபோனால், மனம் ஒருமைப்பட்டுவிட்டது என்று புரிந்துகொள்ளலாம்.-விவேகானந்தர்
-
பூமிக்குள் தங்களை புதைத்துக்கொண்டு, சுவாசிக்காமலே உயிர்வாழும் உயிர்கள்போல,சில மனிதர்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
-
அணுவை பிளக்கும்போது வரும் மாபெரும் சக்தி அதற்குள் ஒடுங்கி இருந்ததுதான். இதேபோன்ற எல்லையற்ற சக்தி ஒவ்வொரு அணுவுக்குள்ளும் உள்ளது.
-
உடல் அணுக்களால் ஆனது.அது தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கும். நேற்று நம் உடலில் இருந்த அணு இன்று இன்னொரு உடலுக்கு மாறியிருக்கும்-விவேகானந்தர்
-
அனைத்து ஜடப்பொருளுக்கும் பின்னால் ஒரு எண்ணம் இருக்கிறது.அந்த எண்ணத்தை நீக்க முடிந்தால் ஜடப்பொருள் மறைந்துவிடும்
-
ஒருவன் தன்மனத்தை முற்றிலும் அடக்க முடிந்தால்,உலகிலுள்ள அனைவரது மனத்தையும் அடக்க முடியும். அனைத்தும் மையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
-
ஜடப்பொருளை பொடியாக்கி அதன் மூலக்கூறுகளாக மாற்றலாமே தவிர,அதை முற்றிலுமாக அழித்து இல்லாமல் செய்ய முடியாது.
-
இருக்கின்ற ஒரு சக்தியைதான் இன்னொரு சக்தியாக மாற்ற முடியுமே தவிர,புதிதாக ஒரு சக்தியை உருவாக்க முடியாது.
-
ஒவ்வொரு அணுவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு அணுவின் இயக்கத்தை நிறுத்த முடிந்தால் இந்த பிரபஞ்சமே அழிந்துவிடும்
-

Sunday, 13 May 2018

புதிய மதங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?



புதிய மதங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?
-
ஒரு மனிதன் இறைவனைக்காண வேண்டி பல்வேறு தவங்களை செய்கிறார். அவன் சிவனையோ அல்லது,கிருஷ்ணரையோ வழிபடுபவனாக இருக்கலாம்.படிப்படியாக முன்னேறி கடைசியில் மிகஉயர்ந்த நிலையாகிய உருவமற்ற நிலையை அடைந்துவிடுகிறான்.அப்போது அவனுக்கு பிரபஞ்சத்தின் ரகசியம் முழுவதும் தெரிந்துவிடுகிறது.அதன்பிறகு மனிதர்களுக்கு வழிகாட்டும் குரு என்ற நிலையை அடைகிறான்.
-
அவ்வாறு புதிதாக தோன்றிய குரு, ஏற்கனவே அவர் வழிபட்டுவந்த கடவுளுக்கு வேறுவிதமாக பொருள் கொடுத்து,வேறு விதமான தத்துவங்களை சொல்லி,புதிய பாதையை காட்டுகிறார். அந்த பாதையில் செல்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்கிறார். அந்த கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சில சீடர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மக்களிடம் அனுப்பி மக்களை தங்கள் நெறியில் சேர்க்கிறார்
-
இதற்கு முன்பு அவர் வழிபட்டு வந்து சிவனுக்கும்,கிருஷ்ணனுக்கும் அங்கே இரண்டாம் இடம்தான்.அந்த குருவுக்குதான் முதல் இடம்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவரை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே அவர் காட்டிய அந்த பாதையில் முன்னேற முடியும்.
-
இவ்வாறு படிப்படியாக அந்த மதம் மக்களிடையே பரவ ஆரம்பிக்கும். அவரது சீடர்கள் இதேபோன்ற வேறு பிரிவுகளை வெறுப்பதிலும்,அலட்சியம் செய்வதிலும் ஈடுபட்டிருப்பார்கள்.அந்த பிரிவை பின்பற்றும் மக்களும் மதவெறியர்களாக இருப்பார்கள்.
-
இவ்வாறு பிரம்மஞானத்தை அடைந்த பிறகு சாதாரண நிலைக்கு வரும் ரிஷிகள் புதிய மதத்தை துவக்குகிறார்கள்.இவைகள் சிலவேளைகளில் இதற்கு முந்தைய தாய் மதத்தை ஆதரிக்கும்.பலவேளைகளில் தாய் மதத்தை எதிர்க்கும். உதாரணமாக சொல்வதென்றால் புத்தமதம்,சமணமதம்,சீக்கியமதம் உட்பட பல மதங்கள் தாய்மதங்களை எதிர்க்கின்றன
-
இந்தியாவில் ஆண்டுதோறும் இவ்வாறு ஒரு மதம் உருவாகிறது. ஒரு நூற்றாண்டில் 100 புதிய மதங்கள் உருவாகின்றன.இவ்வாறு கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் கணக்கற்ற மதங்கள் உருவாகியுள்ளன.பல மதங்கள் காணாமல் போயிருக்கின்றன. நாம் இப்போது படிக்கும் பல்வேறு உபநிடதங்கள் என்பவை முற்காலத்தில் உள்ள பல்வேறு மதபிரிவுகளாககூட இருந்திருக்கலாம்.அதனால்தான் ரிக்வேத காலத்திலேயே கடவுள் ஒருவர்தான் மகான்கள் அவரை பல பெயர்களில் அழைக்கிறார்கள் என்ற கருத்து உருவாகியது
-
இதனால்தான் இந்துமதத்தை புரிந்துகொள்வதில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் ஒரே உண்மையை தங்களுக்கு ஏற்ற விதத்தில் கூறுவார்கள். ஒருவர் பிரம்மம் என்பார்.இன்னொருவர் சூன்யம் என்பார்,மற்றொருவர் வெட்டவெளி என்பார்.அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை
-
இவைகள் நல்லதா?கெட்டதா? 
-
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துமதம் வாழ்ந்துவருவதற்கு காரணம் இந்த பிரிவுகள்தான்.பழைய மதங்களில் நிலவும் மூடநம்பிக்கைகளை இந்த ரிஷிகள் கண்டிக்கிறார்கள் புதிய பாதையை காட்டுகிறார்கள். சில நூற்றாண்டுகளுக்கு பின் இதிலும் மூடநம்பிக்கை ஏற்பட்டுவிடும் .அப்படி பல மாறுதல்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். 5000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் பின்பற்றி வந்த எந்த பழக்கமும் இப்போது நம்மிடம் இல்லை.ஆனாலும் நமது மதம் வாழ்ந்து வருகிறது. அதற்கு காரணம் இந்த ரிஷிகள் கொண்டுவரும் மாற்றங்கள்தான்
-
உண்மையை உணர்ந்த ரிஷிகள் ஒருபுதிய பிரிவை தோற்றுவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த ரிஷிகள் முக்தி அடைவதில்லை. சூட்சும நிலையில் வாழவிரும்புகிறார்கள்.அந்த நிலையில் வாழும்போது செய்வதற்கு ஏதாவது வேலை வேண்டுமே.அதனால் புதிய மதபிரிவை உருவாக்கி அவரை வழிபடுபவர்களை.வழிநடத்துகிறார்கள். அவர்கள் புதிய சொர்க்கத்தையும் உருவாக்குவதுண்டு. சிலர் அந்த சொர்க்கத்தில் அவர்களுடன் வசிப்பார்கள்.எதுவரை மக்கள் அந்த ரிஷியை வணங்குவார்களோ அதுவரை அவர் சூட்சும உலகில் வாழ்வார். அந்த பிரிவை மக்கள் ஒதுக்கிவிட்டால் அந்த மதம் அழிந்துவிடும். அவர் மனிதனாக மறுபடி பிறப்பார்.
-
பல நேரங்களில் இந்த ரிஷிகளுக்கும் சுயநலம் ஏற்படுவதுண்டு. தங்கள் மதப்பிரிவுகள்தான் அதிக அளவில் வளரவேண்டும். தங்களைத்தான் அதிக மக்கள் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அதனால் அவர்கள் வாழும்போதே அதற்கான சில உபதேசங்களை கூறிவிட்டு செல்கிறார்கள். நான் கூறுவதுதான் இறைவேதம் மற்றவைகள் இனிபலன்தராது அதுமட்டுமல்ல நான்தான் கடைசி தீர்க்கதரிசி எனக்கு பிறகு யாரும் வரமாட்டார்கள் இப்படி பல விஷயங்களை சொல்லலாம்.. அவரது காலத்திற்கு பிறகு யாராவது ஒரு தீர்க்கதரிசி வந்தால் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.அது மட்டுமல்ல மற்ற மதபிரிவுகளை ’சேர்ந்தவர்களை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள். இதற்கு காரணம் அந்த பிரிவை உருவாக்கியவர்தான். பலரை கொன்றதற்கான பாவமும் அவரையே சாரும்.அந்த மதப்பிரிவு படிப்படியாக அழிவையே சந்திக்கும்
-
சுவாமி விவேகானந்தர் இதுபற்றி என்ன கூறுகிறார்? நாம் ஒவ்வொருவரும் ஒரு மதப்பிரிவை உருவாக்க வேண்டும். அதாவது நாம் ஒவ்வொருவரும் ரிஷிகளாக வேண்டும். உண்மையை உணரவேண்டும் என்கிறார்.
-
இருப்பது ஒரே கடவுள்தான் அவரை அடைவதற்கான பாதைகள் வெவ்வேறு என்பது இந்தியாவின் கருத்து.இதை பின்பற்றாத மதப்பிரிவுகள் எதுவாக இருந்தாலும் அது இந்தியாவிற்கு ஆபத்தானதுதான்.அதை இந்தியாவிலிருந்து நீக்கிவிடவேண்டியது நமது கடமை. 
-
எங்கள் மதம்தான் உண்மை மற்றவை பொய் அல்லது கீழானது என்று கூறும் மதங்களையும்,மதப்பிரிவுகளையும் இந்தியாவிலிருந்து அகற்றிவிட வேண்டும். இவ்வாறு இந்தியா முழுவதும் மத ஒற்றுமையை கொண்டுவர வேண்டும்.
-
கட்டுரை...சுவாமி வித்யானந்தர் (8-5-2018)