கேள்வி... சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? இந்துமதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
-
சுவாமி வித்யானந்தர்...
-
இந்துமதம் என்பது இந்தியாவில் தோன்றிய பல மதங்களை உள்ளடக்கிய ஒரு பொது பெயர்.
-
சைவம் என்பது தனிமதம்.ஒரு மனிதன் முக்தியடைய தேவையான அத்தனை கருத்துக்களும் அதில் இருக்கின்றன. அதே போல வைணவம் என்பதும் தனி மதம்.அதிலும் ஒருவன் முக்தியடைய தேவையான அனைத்து கருத்துக்களும் உள்ளன. அதேபோல் சாக்தம் எனப்படும் தேவி வழிபாடு பற்றிய மதமும் தனிமதமாகும். அதிலும் முக்தியடைவதற்கு தேவையான அனைத்து கருத்துக்களும் உள்ளன.
-
சைவமதத்தை பொறுத்தவரை சிவன் தான் முழுமுதற் கடவுள். வைணவத்தை பொறுத்தவரை விஷ்ணுவும். சாக்தத்தை பொறுத்தவரை காளியும் முழுமுதற் கடவுள்.
-
ஒவ்வொரு மதத்திலும் பிற மதங்களை இகழ்ந்து பேசி மட்டம் தட்டும் கருத்துக்கள் உள்ளன. சைவமதத்தினர்,திருமாலை ,சிவனின் கீழ் உள்ளவராக கருதுகிறார்கள். அதே போல் வைணவத்தில் விஷ்ணுவுக்கு கீழ் சிவன் இருப்பதாக கருதுகிறார்கள். சாக்த மதத்தில் சிவனும்,விஷ்ணுவும் , தேவிக்கு கீழ் உள்ளவர்கள்.
-
தற்காலத்தில், பாமர மக்கள் இந்த மூன்று வழிபாட்டுமுறைகளையும்,தனித்தனியாக ஏற்றுக்கொள்ளாமல் மொத்தமாக பார்க்கிறார்கள்.அதனால் தான் குழப்பம் ஏற்படுகிறது.
-
நீங்கள் சைவ சித்தாந்தம் தெரிந்த சைவராகவோ, வைணவ சாஸ்திரம் கற்ற வைணவராகவோ, தந்திரசாஸ்திரம் கற்ற சாக்தராகவோ இருந்தால் உங்களுக்கு எந்த குழப்பமும் வராது. எதையுமே முறையாக கற்றுக்கொள்ளாததால் தான் சந்தேகம் வருகிறது.
-
அப்படியானால் இந்து மதம் என்பது என்ன?
-
இந்துமதம் என்பது இந்த தனித்தனி மதங்களின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதில் பிற மதங்களை இகழ்ந்து பேசும் கருத்துக்களை மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை.
-
இந்துமதம் மேலே கூறப்பட்ட மூன்று முக்கிய மதங்களையும் துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்ற மூன்று கோட்பாடுகளின் கீழ் கொண்டுவருகிறது. இந்த கோட்பாடுகளை வேதாந்தம் என்கிறோம். இந்த வேதாந்த கோட்பாடுகளை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால், மதங்களிடையே உள்ள சச்சரவுகள் நீங்கி அமைதி பெறமுடியும்.
-
No comments:
Post a Comment