Thursday, 9 February 2017

சில சமுதாயத்தில் ஒரே கடவுள் கொள்கை உள்ளது, சில சமுதாயத்தில் பல கடவுள் கொள்கை உள்ளது


கேள்வி....சில சமுதாயத்தில் ஒரே கடவுள் கொள்கை உள்ளது, சில சமுதாயத்தில் பல கடவுள் கொள்கை உள்ளது. இதில் எது சரி? எது தவறு?
-
சுவாமி வித்யானந்தர்...
-
கேள்வி சிறியதாக இருந்தாலும் இதற்கான பதில் பெரியதாக இருக்கலாம். இந்த கேள்வியை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் நமது மூதாதயரின் வாழ்க்கையையும்,வழிபாடுகளையும் ஆராய வேண்டும். நீங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்நோக்கி செல்ல வேண்டும்.
-
பண்டைய மனிதன் விலங்குகளை வேட்டையாடி அவைகளை உண்டும். இயற்கையாக கிடைக்கும் பழங்களை,கிழங்குகளை உண்டும் வாழ்ந்தான். அப்படி வாழ்ந்த மனிதன் கூட தன்னை காக்க உயர்ந்த தெய்வம் இருப்பதாக எண்ணினான். தனக்கு கிடைக்கும் இறைச்சியையும் அந்த தெய்வத்திற்கு படைத்த பிறகே உண்டான்.அதே போல் வேட்டையாடும் போது அந்த தெய்வம், விலங்குகளை பிடித்து தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். இவர்கள் ஒரு குழுவாக வேட்டையாடுவதும். பின்பு அவைகளை பங்கிட்டு சாப்பிடுவதும் வழக்கம். இந்த குழுவுக்கு ஒரு காவல் தெய்வம் இருக்கும். அவ்வப்போது இந்த காவல் தெய்வத்திற்கு விழா எடுப்பார்கள்.சிறந்த மாமிசத்தை படைத்து மகிழ்வார்கள்.
-
இதேபோல் பல காட்டுவாசி குழுக்கள் இருந்தன. இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் மரணம்தான் முடிவாக இருக்கும்.வேறு குழுவில் உள்ளவர்கள் இங்குள்ள ஆண்களை கொன்று,இவர்களது பெண்களை கடத்தி சென்றுவிடுவார்கள். கொல்லப்பட்ட ஆண்களின் தலையை துண்டித்து மாலையாக கோர்த்து, தங்கள் தெய்வத்திற்கு சமர்ப்பிப்பார்கள். இவ்வாறு அதிக அளவில் மனிதர்களை கொன்று மாலையாக போடுபவன் சிறந்தவீரனாக மதிக்கப்பட்டான்.அவனே குழுவின் தலைவனாகவும் இருந்தான்.
-
நாளடைவில் காட்டுவிலங்குகளை கொல்வதை குறைத்துக்கொண்டு.அவைகளை பயிர்தொழில் செய்ய பயன்படுத்திக்கொண்டான். இவ்வாறு பயிர்தொழிலில் ஈடுபட்ட சமுதாயம் சற்று முன்னேற்றம் அடைந்தது. மனிதர்களை கொல்வது தவறு என்று புரிந்துகொண்டார்கள். இதுவரை நரமாமிசம் கேட்ட தெய்வத்தின் மதிப்பு குறைந்தது. மனிதஉயிர்களை விரும்பாத தெய்வம் உயர்ந்த தெய்வமானது, உயிர்பலி கேட்ட தெய்வம் சிறு தெய்வமானது.
-
இதே போல் ஆறுகள் இருக்கும் பகுதிகளில் மனித நாகரீகம் வளர ஆரம்பித்தது.இங்கேயும் மனிதர்கள் பல குழுக்களாக பிரிந்திருந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் பல தெய்வங்கள் இருந்தன. ஆனாலும் குழுக்களிடையே உள்ள சண்டை மட்டும் ஓயவில்லை. அவ்வப்போது வேறு குழுக்களில் உள்ளவர்கள், இங்குள்ளவர்களை கொன்று இங்குள்ள பெண்களை கடத்தி சென்றுவிடுவார்கள். இப்போது இன்னும் கூடுதலாக இங்குள்ள விலங்குகளையும், சேமித்துவைத்த உணவுகளையும் கொள்ளையடித்து சென்றுவிடுவார்கள்.
-
இதை தடுப்பதற்காக அவர்களுக்குள்ளே முடிவு செய்து, இவர்களை காக்க போர்வீரர்களை உருவாக்கினார்கள். இந்த வீரர்களில் சிறந்தவன் மன்னராக இருப்பான்.இவர்கள் எதிரி நாட்டிலிருந்து யாராவது வந்தால் அவர்களை கொன்று இந்த நாட்டு மக்களை காப்பார்கள். தற்போது அந்த குழுவின் தெய்வம் மன்னரின் பொறுப்பில் சென்றது. மன்னரே அந்த தெய்வத்தின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.மன்னர் சட்டங்களை இயற்றினார்.மக்கள் தங்களுக்கு கிடைக்கும் உணவில் ஒரு பகுதியை மன்னருக்கு வழங்கினார்கள். நாட்டு மக்களுக்கு உயிர்பயம் குறைந்தது.
-
இப்போது பிரச்சினைக்கு உள்ளானது, மன்னரும் போர்வீரர்களும்,அவரது சட்டங்களும்,அவர்கள் பொறுப்பில் உள்ள தெய்வமும் தான். எதிரி நாட்டு மன்னன் போரிட்டு வந்து இந்த நாட்டில் உள்ள மன்னரை கொன்று,இந்த நாட்டு தெய்வத்தை தூர எறிந்து, தன்நாட்டு தெய்வத்தை அனைவரின் தெய்வமாக மாற்றினான்.தன்நாட்டு சட்டத்தை இந்த நாட்டில் பின்பற்றும் படி கட்டளையிட்டான். இந்த மக்களையும் தன் நாட்டுடன் இணைத்துக்கொண்டான். இப்போது தெய்வங்கும்,சட்டங்களும், மன்னரும் மட்டும் மாற்றப்பட்டார்கள். மக்கள் சாகவில்லை.
-
இவ்வாறு அரசர்கள் பேரரசர்களாக மாறினார்கள். தெய்வங்கள் பெரிய தெய்வங்களாக பலர் வழிபடும் தெய்வங்களாக மாறின. அவைகளுக்கு பிரம்மாண்டமான கோவில்கள் கட்டப்பட்டன. ஏற்கனவே மக்கள் வழிபட்டவந்த தெய்வங்கள், பெரிய தெய்வத்தின் ,கீழ் உள்ள சிறு தெய்வங்களாக மாற்றப்பட்டன.
-
மனிதர்கள் நாளடைவில் நாகரீகம் அடைய ஆரம்பித்தார்கள். அதே போல் அவர்கள் வழிபட்டுவந்த தெய்வமும் நாகரீகம் அடைய ஆரம்பித்தது.அன்பும்,கருணையும் கொண்டவராக தெய்வங்கள் உருவாக்கபட்டன.தெய்ங்கள் மிருகத்தை பலிகேட்கவில்லை. விலைஉயர்ந்த வாசனை திரவியங்களும், பழங்களும்,உயர்ந்த உணவுகளும் படைக்கப்பட்டன.ஆனாலும் மக்கள் தங்களுக்குள் அவர்கள் ஏற்கனவே வழிபட்டு வந்த சிறுசிறு தெய்வங்களையும் வழிபடுவதை நிறுத்தவில்லை.அவைகள் மிருகபலியை தொடர்ந்து கேட்டுவந்தார்கள்.சிலநாடுகளில் இந்தசிறுசிறு வழிபாடுகளுக்கு தடைவிதிக்கப்ட்டது.மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் மீது ஒரே தெய்வகொள்கை புகுத்தப்பட்டது.
-
பல நேரங்களில் சிலைகளாக வணங்கப்படும் தெய்வங்கள் எதிரி நாட்டினரால் அடித்து உடைக்கப்படும்.ஆகவே மக்கள் இந்த தெய்வங்களால் தங்களை தாங்களே காத்துக்கொள்ள முடியவில்லையே என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். இதை நிவர்த்தி செய்ய தெய்வத்திற்கு உருவம் வைக்கும் பழக்கம் நிறுத்தப்பட்டது. நமது தெய்வம் உங்கள் பிராத்தனைகளை கேட்கிறார், உங்களுக்கு உதவுகிறார், உங்களை எப்போதும் கண்காணிக்கிறார்.ஆனால் அவரது உருவத்தை உங்களால் காணமுடியாது. அவர் உங்களைவிட மிகப்பெரியவர். அவருக்கு ஈடுஇணை இல்லை.அவரை குறித்து கேள்வி கேட்டாலோ, சந்தேகப்படாலோ, அவருக்கு பிடிக்காது.அவர் மிகக்கடுமையானவர். அவர் சொன்னதை நம்பினால் இறந்த பிறகு சொர்க்கம் கிடைக்கும்.அங்கே பல பெண்களும், பலவித உணவுகளும் கிடைக்கும். மாறாக சந்தேகப்பட்டால் இறந்த பிறகு நரகம் கிடைக்கும். அங்கே எரிகின்ற தீயில் உங்களை வாட்டி வதக்குவார்கள்.. ஆகவே கேள்வி கேட்டகாதீர்கள் என்று உபதேசிக்கப்பட்டது.இப்போது தெய்வத்தை பற்றி கேள்வி கேட்ட மக்களுக்கு தடைவிதிக்கபட்டது. நரக பயத்தாலும், சொர்க்கத்து ஆசையாலும் மக்கள் கேள்வி கேட்கும் எண்ணத்தைவிட்டுவிட்டு வாழஆரம்பித்தார்கள்.
-
ஆனால் இவ்வாறு மிரட்டலுக்கு பயப்பாடாத மனிதர்கள் சிலர் இருந்தார்கள்.
-
இதுநாள்வரை தெய்வங்களின் செயல்கள் பற்றி கேள்வி கேட்க பயந்து வாழ்ந்த மனிதன்,தற்போது கேள்வி கேட்க ஆரம்பித்தான். இந்த உலகில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை இந்த தெய்வங்களால் ஏன் தடுக்க முடியவில்லை? மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளை இந்த தெய்வங்களால் ஏன் தடுக்க முடியவில்லை? பிற நாட்டினர் இங்குள்ள மக்களை கொல்லும் போது,இந்த தெய்வங்களால் ஏன் அதை தடுக்க முடிவில்லை? இவ்வாறு மனிதன் கேட்ட கேள்விகள் ஏராளம். ஆனால் தெய்வங்களிடமிருந்து உரிய பதில் வரவில்லை. உனது மரணத்திற்கு பிறகு தெய்வம் உன்னை தண்டிக்கும் என்று மக்கள் பயமுறுத்தினர். 
-
தற்போது தெய்வம் மனிதனின் மனசாட்சி முன்பு குற்றவாளி கூண்டில் நிறுத்ப்பட்டது. மனிதனின் மனம் நீதிபதியாகியது.
இந்த தெய்வங்களை வழிபடுவதால் நமது துன்பங்கள் தீரப்போவதில்லை. இந்த தெய்வங்களை வழிபடுவதால் இயற்கை சீற்றங்கள் மாறப்போவதில்லை. இந்த தெய்வங்கள் மனிதனை சாவிலிருந்து காப்பாற்றப்போவதில்லை. ஆகவே இவைகளை வழிபடாதீர்கள்,இவைகளை வழிபடுவது நமக்கு கேடு என்று மனிதர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.
-
நான் சொல்லிக்கொண்டிருப்பது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த சம்பவங்கள்.
-
மனிதனின் துன்பங்களுக்கு யார் காரணம்? இறைவன் என்று ஒருவர் உண்டா?மனிதனினால் மரணத்தை தடுக்க முடியுமா? என்ற கேள்விகளுடன் சிலர் சமுதாயத்தை விட்டு விலகி தனிமையை நாடி,காடுகளிலும்,மலைகளிலும்,குகைளிலும் வாழ ஆரம்பித்தார்கள். 
இவ்வாறு பதில் கிடைக்காமல் அலைந்து,சோர்ந்து,உடலே இயங்காத நிலையில் மனமே வேலைசெய்ய முடியாத நிலையில், மனிதனுக்கு திடீரென்று ஒரு காட்சி கிடைத்து. அது இந்த மனத்தை கடந்ததாக இருந்தது.அங்கே அவன் கேட்ட கேள்விகளுக்கான பதில் இருந்தது.
-
அப்போது அந்த மனிதன் சத்தமிட்டு கத்தினான். ஏ மனிதர்களே! எனக்குள்ளே எழுந்த கேள்விக்கான பதிலை நான் கண்டுகொண்டேன். மனிதனால் மரணத்தை வெல்ல முடியும், மனிதனால் இயற்கையை வெல்ல முடியும். மனிதனால் துன்பங்களை வெல்ல முடியும். அதற்கு நாம் இந்த உடலையும், மனத்தையும் கடந்து அதற்கு அப்பால் செல்ல வேண்டும். மரணமற்ற நிலை என்பது மனத்தை கடந்து உள்ளது என்று சொன்னான். 
-
மக்களிடம் ,தான் கண்டது பற்றி விவரித்தான்.,மக்கள் இவரை ரிஷி என்று அழைத்தார்கள்.பல்வேறு உவமைகள் மூலம் அதை விளக்கினான். அதை சீடர்கள் குறித்துக்கொண்டார்கள். இந்த ரிஷி கூறியதை வேதம் என்று அழைத்தார்கள்.இந்த வேதத்தை சீடர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள்.
-
ஆனால் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் உண்மையை உணர்ந்த ரிஷிகள் உருவானார்கள். அவர்கள் சொல்லியவைகளும் வேதம் என்று அந்த நாட்டினர் ஏற்றுக்கொண்டார்கள்.இப்போது யார் சொல்வது உண்மை? எந்த வேதத்தை ஏற்பது? ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக விளக்கியிருக்கிறார்கள் எதை ஏற்பது என்று மக்கள் குழம்பினார்கள்.
-
அப்போது ஒரு ரிஷி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுகொண்டார். அவர் தெளிவாக கூறினார். ஏற்கனவே உண்மையை உணர்ந்த அந்த ரிஷிகள் அனைவரும் கண்டுகொண்டது ஒரே உண்மையை தான்.ஆனால் அதை வெளிப்படுத்தும் போது தங்களுக்கு தெரிந்த மொழியில், தங்களுக்கு தெரிந்த உவமானத்தில் மூலம்,மக்களுக்கு புரியும் படி சொன்னார்கள். இருப்பது ஒரு உண்மை தான், மகான்கள் அதை பலவாறு அழைக்கிறார்கள். ஆகவே உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள் என்றார்.
-
இவ்வாறு இந்த பல்வேறு காலங்களில்,பல்வேறு நாட்டில்,ரிஷிகள் கண்டுகொண்ட உண்மைகளான உபநிடதங்களை மக்கள் தொகுத்து ஒரே இடத்தில் கொண்டுவந்தார்கள். அவைகளை வேதத்தின் சாரம் என்று அழைத்தார்கள். வேதத்தின் சாரம் வேதாந்தம்.அது தான் இந்துமதம்.
-
இவ்வாறு ஆயிரக்காணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களால் தொகுக்கபட்ட வேதாந்தத்தை உலகமெங்கும் பரப்பி, இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர் சுவாமி விவேகானந்தர்.
-
மக்கள் மதத்தின் பெயரால் சண்டையிடாமல் ஒற்றுமையாக வாழ வேண்டுமானால் ஒவ்வொருவரும் வேதாந்தியாக மாறவேண்டும்.

No comments:

Post a Comment